விசாகப்பட்டிணம்
அகில இந்திய மாநாட்டின் ஒரு சிறப்பம்சம் சேர்ந்திசைக்குழு. ஒவ்வொரு நாளும் பல்வேறு
மொழிகளில் சிறப்பாக பாடி பாராட்டுக்களை பெற்றார்கள். “தோழர்களே, தோழர்களே, தூக்கம்
நமக்கில்லை வாருங்கள்” என்ற தமிழ்ப்பாடலும் அவர்களின் பட்டியலில் உண்டு.
மாநாட்டின்
இறுதி நாள் காலையில் அகில இந்திய தலைவர் தோழர் அமானுல்லாகான், சேர்ந்திசை துவங்கும்
முன்பாக அவர்கள் பாடப்போகும் ஒரு பாடலைப் பற்றி அறிமுகம் செய்தார்.
“ஃபைஸ்
அகமது ஃபைஸ் இந்திய துணைக்கண்டத்தின் மகா கவிகளில் ஒருவர். விடுதலைக்குப் பின்பு பாகிஸ்தானில்
வசித்த அவர் ஜியாவுல் ஹக்கின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஹம் தேகேங்கே என்ற பாடலை
எழுதுகிறார். அந்த பாடல் உலகெங்கும் “எதிர்ப்பு கீதம்” ஆக மதிக்கப்படுகிறது.
இக்பால்
பானு என்ற பாடகர் அப்பாடலுக்கு இசை வடிவம் அளித்து ஒரு நிகழ்ச்சியில் பாடுகிறார். கறுப்பு
சேலை அணிந்து அவர் அந்த பாடலை பாடுகிறார். கறுப்பு சேலை அணிந்து கொண்டு பாடுவதிலும்
ஒரு எதிர்ப்பு அடங்கியுள்ளது. சேலை இந்துக்களின் உடை என்பதால் அதை பாகிஸ்தான் பெண்கள்
அணிந்து கொள்ளக் கூடாது என்று ஜியா உல் ஹக் தடை விதித்திருந்தார்.
ஐந்து
நிமிடப் பாடலை இக்பால் பானு நிறைவு செய்ய முப்பது நிமிடங்கள் ஆனது. அந்த அளவிற்கு பார்வையாளர்கள்
உற்சாகக் கரவொலி எழுப்பினார்கள்.
அந்த
எதிர்ப்பு கீதத்தை குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஐ.ஐ.டி
கான்பூர் மாணவர்கள் பாட, அப்பாடல் இந்துக்களுக்கு எதிரானது என்று திசை திருப்பும் முயற்சி
நடக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாடல்
ஜியா உல் ஹக்கின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரானது. அதிலே அவர் அல்லாவை ஒரு உருவகமாக
பயன்படுத்தியிருப்பார். அதை வைத்துக் கொண்டு இப்பாடலை இந்துக்களுக்கு எதிரானது என்று
சொல்வது கொஞ்சமும் சரியல்ல.
நம்
சேர்ந்திசைக்குழுவை இப்பாடலைப் பாடச் சொல்லலாமே என்று ஒரு ஆலோசனை வந்தது. அவர்கள் இப்பாடலை
பயிற்சி செய்யவில்லை. ஆனாலும் ஒரு நாள் அவகாசத்தில் தயாராகி உள்ளார்கள்
என்று அறிமுகம் செய்து வைக்க அற்புதமாக பாடினார்கள். துரதிர்ஷ்டவசமாக அந்த காணொளிதான் கிடைக்கவில்லை.
இருப்பினும்
மாநாட்டு
அறிக்கையில் அப்பாடலின் ஆங்கில வடிவம் அளிக்கப் பட்டிருந்தது. அதனை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்.
அவ்வளவு திருப்திகரமான மொழி பெயர்ப்பாக அமையவில்லை என்று நானே சுய விமர்சனம் செய்து
கொள்கிறேன்.
ஆட்சியாளர்களுக்கு(அது
யாராக இருந்தாலும்) எதிரான பாடல்தான் இது என்பதையும் நிச்சயமாக இந்துக்களுக்கு எதிரானது
அல்ல என்பதையும் நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
நாங்கள் பார்க்கத்தான்
போகிறோம்
ஆண்டவனால் நிச்சயிக்கப்
பட்ட நாளில்
மலையளவு குவிந்துள்ள
கொடுங்கோன்மை
பஞ்சாய் பறக்கப் போவதை
நாங்களும் கூட
பார்க்கத்தான் போகிறோம்
என்பது நிச்சயம்.
எங்களின் பாதங்களின்
கீழே
ஒடுக்கப்பட்ட எங்களின்
பாதங்களின் கீழே
பூமி துடிப்பாய் சுற்றும்
வேளையில்
எங்கள் ஆட்சியாளர்களின்
தலை மேல்
இடியும் மின்னலும் இறங்குவதை
நாங்கள் பாஎக்கதான்
போகிறோம்.
ஆண்டவனின் உறைவிடத்திலிருந்து
பொய்மையின் அடையாளங்கள்
அகற்றப்படுவதை,
புனிதமான இடங்களுக்குள்
அனுமதி
மறுக்கப்பட்டு புறக்கணிக்கப்படும்
உண்மையான விசுவாசிகள்
நாங்கள்
உயர் பீடங்களில் அமர்த்தப்படுவதையும்
நாங்கள் பார்க்கத்தான்
போகிறோம்.
மகுடங்கள் நிலை குலையும்
அரியணைகள் தகர்ந்து
வீழும்
கண்களுக்குப் புலப்படாது
ஆணால் எங்கும் இருக்கிற
ஆண்டவன் பெயர் மட்டுமே
நிலைக்கும்.
உண்மையின் குரல் மேலெழும்,
ஆண்டவனின் படைப்பே ஆட்சி செய்யும்
என்பதை நீயும் பார்க்கப்
போகிறாய்,
நாங்களும் பார்க்கப்
போகிறோம்.
நாங்கள் பார்க்கத்தான்
போகிறோம்,
நிச்சயமாய் நாங்களும்
கூட
பார்க்கத்தான் போகிறோம்.
பிகு : இக்பால் பானு பாடிய பாடல் கிடைக்குமா என்று யுட்யூபில் தேடிய போது இப்பாடலை ஷாகீன் பாக் போராட்ட களத்தில் டி.எம்.கிருஷ்ணா பாடிய பாடல் கிடைத்தது.
அந்த இணைப்பு இங்கே
No comments:
Post a Comment