முதல் வகுப்பில் கல்லூரிப்
படிப்பில் தேர்ச்சி பெற்றதாக கடிதம் வந்த,
எல்.ஐ.சி நிறுவனத்திலிருந்து
பணி நியமனக் கடிதம் வந்த,
திருமணம் செய்து கொண்ட,
மகன் பிறந்த
தருணங்கள்
வாழ்வின்
உன்னதமான தருணங்களாக இது நாள் வரை அமைந்திருந்தது.
அது போன்றதொரு உன்னதமான
தருணம் 28.01.2020 மதியம் அமைந்தது.
அகில
இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட
ஒரு நிகழ்வு அறுபதுகளின் இறுதியில் இயந்திரமயமாக்கலுக்கு எதிராக நடைபெற்ற “இலாகோ விஜில்”
போராட்டம்.
கல்கத்தாவில்
சூப்பர் கம்ப்யூட்டரை நிறுவுவதென்ற முடிவிற்கு எதிராக அந்த கம்ப்யூட்டர் நிறுவ திட்டமிடப்பட்டிருந்த
“இலாகோ” கட்டிடத்தை முற்றுகை போல சுற்றி அமர்ந்து இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணித்த
வீரஞ்செறிந்த போராட்டம் அது. ஒன்றரை வருடங்கள் உறுதியுடன் நடந்த வீர காவியம் அது. பத்தாயிரம்
ஊழியர்கள் செய்யும் வேலையை ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் செய்வது போல வடிவமைக்கப் பட்டிருந்தது.
நான்கு மையங்களில் அதனை நிறுவுவது என்பது நிர்வாகத்தின் திட்டம். வேலையின்மை பெருகிக்
கொண்டிருந்த காலக்கட்டத்தில் அப்படிப்பட்ட திட்டங்கள் மோசமானது என்பதுதான் போராட்டத்திற்கான
காரணம்.
எல்.ஐ.சி
ஊழியர்களுடைய போராட்டமாக மட்டுமல்லாமல் கல்கத்தா நகரத்து தொழிலாளர்களின் போராட்டமாகவே
மாறியது. அது மட்டுமல்ல அப்போது நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைக்கான தேர்தலில்
முக்கியமான பிரச்சினையாக மாறிய போராட்டமும் அது.
அப்போராட்டத்தை
சில புனைவுப் பாத்திரங்களோடு நிஜ நாயகர்களோடு ஒரு நாவல் வடிவத்தில் உருவாக்க வேண்டும்
என்பது நீண்ட நாள் கனவு. அதற்காக கல்கத்தா
சென்று வந்து அப்போராட்டத்தினை வழி நடத்திய எங்களின் பிதாமகர் தோழர் சந்திரசேகர போஸ்
அவர்களுடன் உரையாடி, பல தகவல்களைப் பெற்று, சில வினாக்களுக்கு விளக்கங்களையும் பெற்று
வந்தேன்.
அப்போராட்டம்
தொடர்புடைய முக்கிய இடங்களுக்குச் செல்ல கிழக்கு மண்டலத் தோழர்கள் முழுமையாக உதவினார்கள்.
நாவலின் உள்ளடக்கம் குறித்து மனதில் ஒரு வடிவம் கிடைத்தாலும் அது எழுத்தாக, நூலாக மலர
கால தாமதம் ஆனது. எட்டாயிரம் புதிய ஊழியர்களை
பணி நியமனம் செய்வதென்ற நற்செய்தி நூலை எப்படி நிறைவு செய்வது என்ற குழப்பத்தைப் போக்கி
தெளிவு அளித்தது. “முற்றுகை” என்ற பெயரில்
உருவானது.
நாவல்
முழுமை பெற்றதும் அதை நூலாக்கும் பெரும் பொறுப்பை எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர்
கே.சுவாமிநாதன் எடுத்துக் கொண்டார், பாரதி புத்தகாலயத்தோடு பேசி அதனை நூலாக அச்சிட
வைத்தது, தமிழகத்தின் இதர கோட்டங்களோடு பேசி நூல்களை வாங்க வைப்பது, அட்டைப்பட வடிவமைப்பு,
பிழை திருத்தம் போன்ற பணிகளை அவர் மேற்கொண்டார். நல்லதொரு அணிந்துரையையும் அவர் வழங்கினார்.
அது மட்டுமல்ல, வெளியீட்டிற்குப் பின்பு வேலூர் கோட்டச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த
நூல் அறிமுக விழாவிலும் பங்கேற்று நூல் பற்றி உரையாடி கௌரவித்தார். தென் மண்டலப் பொதுச்செயலாளர்
தோழர் டி.செந்தில்குமார் நூலுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
இந்தூலை
வெளியிட உற்சாகமளித்த எங்கள் கோட்டத்தலைவர் எஸ்.பழனிராஜ் மற்றும் இதர கோட்டப் பொறுப்பாளர்களுக்கும்
ஆதரவு அளித்த மற்ற தமிழகக் கோட்டச்சங்கப் பொறுப்பாளர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
என்னுடைய சிறுகதைகளை பிரசுரித்து எனக்கு “வேலூர் சுரா” என்று பெயரும் சூட்டிய தீக்கதிர்
நாளிதழின் பொறுப்பாசிரியராக இருந்த தோழர் அ.குமரேசன் அவர்கள் அளித்த ஊக்கமே நம்மாலும்
எழுத முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது.
இன்சூரன்ஸ்
ஊழியர்களின் பெருமையாக இருக்கிற எழுத்தாளர் தோழர் ச.சுப்பாராவ் அவர்கள் எழுதிய “வன புத்திரி” நாவலைப் பற்றி அவரோடு கருத்துப் பரிமாற்றம்
செய்கையில் நீங்களும் கூட நாவல் எழுதலாமே என்றார். அதுதான் இந்த நூலுக்கான முதல் பொறி.
அதே
போல தமிழக பள்ளி ஆசிரியர்கள் இயக்கங்களைப் பற்றி புனைவுப் பாத்திரங்களோடு பேசிய “வீழ்ச்சி”
என்ற நாவல், எல்லா தலைவர்களைப் பற்றியும் அவர்களது பெயர்களோடே எழுதி விட்டு ஜெயலலிதா
ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக உச்ச
நீதி மன்றத்தி;ல் வழக்கு தொடுத்த தோழர் டி.கே.ரங்கராஜன் பெயரை மட்டும் இருட்டடிப்பு செய்திருந்தது அந்நூல். அது மட்டுமல்லாமல் சோர்வும்
நம்பிக்கையின்மையும் தருவது போல முடிந்திருந்தது. அது போல இல்லாமல் உண்மையான கள நாயகர்களை அப்படியே
காண்பிக்க வேண்டும் என்றும் போராட்டம் எப்போதும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை அளிக்கும்
வண்ணம் எழுத வேண்டும் உந்துதல் “வீழ்ச்ச்சி” யால் வந்தது.
கொல்கத்தா சென்றது முதற்கொண்டு நூல் எழுதுவது வரை என் மனைவி ராதா மற்றும் மகன் ரகுநந்தன் ஆகியோர் முழுமையாக ஒத்துழைத்து குடும்பப் பொறுப்புக்களிலிருந்து அக்காலகட்டத்தில் விடுவிக்காவிட்டால் இந்த நூல் சாத்தியமில்லை என்பதையும் அவசியம் பதிவு செய்ய வேண்டும். நூலை படித்து முடித்தவுடன் அனுப்பிய செய்தியில் அகில இந்திய இணைச்செயலாளர் தோழர் எம்.கிரிஜா, இதனை குறிப்பிட்டிருந்ததும் முக்கியமானது.
விசாகப்பட்டிணத்தில்
நடைபெற்ற அகில இந்திய மாநாட்டின் போது அகில
இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிதாமகர்
தோழர் சந்திர சேகர போஸ் வெளியிட முதல் பிரதியை எங்கள் கோட்டத்தின் மீது மிகுந்த அக்கறை
கொண்ட, என் மீது மிகுந்த நேசம் கொண்ட தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர்
தோழர் கே.நடராஜன் பெற்றுக் கொண்டார்.
அகில
இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அன்று அப்போராட்டத்தை நடத்தியிராவிட்டால் என் போன்ற
பல்லாயிரக்கணக்கானவர்கள் எல்.ஐ.சி நிறுவனத்தில்
பணியில் சேர்ந்திருக்கவே முடியாது. அந்த வீர வரலாற்றை ஒரு ஆவணமாக உருவாக்கியது
எங்கள் அமைப்பிற்குச் செய்த நன்றிக் கடனாகவே பார்க்கிறேன்.
அப்போராட்டத்தை
வழி நடத்திய முன்னணித் தலைவரே அந்த நூலை வெளியிட இன்னொரு மூத்த தலைவர் முதல் பிரதியை
பெற்றுக் கொண்டதை வாழ்வின் உன்னத தருணம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல முடியும்!
சிறப்பு!
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே!