Wednesday, February 5, 2020

இந்த எசப்பாட்டிற்கு ஏது பதில் பாட்டு?

எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடர்பாக பாஜக ஆதரவாளர்கள் செய்து வரும் விஷமப் பிரச்சாரத்தை தகர்க்கும் கட்டுரை இது.

எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் எழுதிய கட்டுரை இன்று தீக்கதிர் நாளிதழ் பிரசுரித்துள்ளது.

அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும் அவர்களால் பதில் சொல்ல இயலாது. "தேச விரோதி" என்ற  வழக்கமான முகாரியை வேண்டுமானால் பாடலாம். 

மிக முக்கியமான கட்டுரை. அவசியம் முழுமையாக படியுங்கள்


எல்.ஐ.சி பங்குகளை விற்காதே... இது மக்களின் எசப்பாட்டு!

“பூமி திருத்தி உண்” என்று அழகான தமிழில் ஆத்திச் சூடியை சொன்ன இந்திய நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில், “பூமி திருத்தி உண்டு உணவளித்தும் வருகிற” எல்.ஐ.சியின் பங்குகளை விற்கப் போகிறோம் என்ற அறிவிப்பு பொருளாதாரத்தின் அரிச்சுவடிக்கு கூட பொருந்தாததாக அமைந்து விட்டது என்பது வேதனைதான். இது நாடு முழுவதும் எதிர்ப்பையும் கண்டனங்களையும் சந்தித்துள்ளது. இருந்தாலும் சிலர் சமூக வலைத்தளங்களில் அரசின் முடிவை நியாயப்படுத்தி சில பதிவுகளை செய்து வருகிறார்கள். அவர்கள் முன் வைக்கிற வாதங்களுக்கு உள் நோக்கங்கள் இருக்கலாம். இருப்பினும் கருத்துப் போராட்டத்தில் அவற்றை எதிர்கொண்டு அதன் மூலம் மக்களோடு தொழிற்சங்கங்கள் உரையாடும். அதன் மூலம் உருவாகிற மக்கள் கருத்து அரசின் முடிவை தடுத்து நிறுத்தும்.
எல்.ஐ.சி யில் உள்ள அரசின் ஒரு பகுதி பங்குகள் மட்டுமே விற்கப்படவுள்ளன. இதை ஏன் எதிர்க்க வேண்டும்?


முதலில் பங்கு விற்பனைக்கு என்ன தேவை என்பதே கேள்வி. கடந்த காலங்களில் பொதுத் துறை பங்குகள் விற்கப்பட்ட போதெல்லாம் நட்டம், நிர்வாகத் திறமையின்மை, மக்கள் வரிப்பணம் பாழ்... போன்ற காரணங்கள் சொல்லப்பட்டன. எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவுக்கு என்ன காரணம்? என்ன தேவை? ஒரு பகுதி பங்குகள்தானே என்கிறார்கள். அந்த ஒரு பகுதி என்பதற்கே என்ன தேவை? இப்படி அரசு எந்த நியாயமும் இன்றி இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதால்தான் எல்.ஐ.சி ஊழியர்கள் மட்டுமின்றி பொது மக்கள் மத்தியிலேயே கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

அரசு வங்கிகளில் பங்கு விற்பனை நடந்திருந்தாலும் அவை அரசு நிறுவனங்களாக தொடரவில்லையா?


அவை அரசின் கைகளை விட்டு போயிருக்கும். அதைப் போக விடாமல் தடுத்தது தொழிற்சங்கங்கள்தான். இப்படி பங்கு விற்பனையாகவே (ஐ.பி.ஓ) அங்கு துவங்கினார்கள். ஸ்டேட் வங்கியில் அரசின் பங்குகள் எந்த அளவிற்கு குறைந்தது தெரியுமா? 58 சதவீதம். ஸ்டேட் வங்கி மட்டுமல்ல. பல வங்கிகளில் இதே நிலைமை. பஞ்சாப் நேஷனல் பேங்க் 62 சதவீதம்.பேங்க் ஆப் பரோடாவில் 64 சதவீதம். அலகாபாத் பேங்க் 65 சதவீதம். யூனியன் பேங்க் ஆப் இந்தியா 67 சதவீதம். கனரா வங்கியில் 70 சதவீதம். இப்படியாக குறைந்த பிறகும் அரசு வங்கிகளாக அவை நீடிப்பதற்கு காரணம் அரசின் பங்குகள் 51 சதவீதம் இருப்பதுதான். ஆனால் வங்கிகளில் அரசின் பங்குகளை 33 சதவீதத்திற்கு குறைப்பதற்கான சட்ட வரைவு 15 ஆண்டுகளுக்கு முன்பு தயார் செய்யப்பட்டது. தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு, போராட்டங்கள், மக்கள் ஆதரவு காரணமாகவே அந்த முயற்சி தடுக்கப்பட்டது. இல்லையென்றால் எல்.ஐ.சி பங்கு விற்பனையை நியாயப்படுத்த மேற்கோள் காட்டுகிற நிலைமையில் அந்த வங்கிகள் இருந்திருக்காது. அவை அரசு வங்கிகள் என்ற அந்தஸ்தை இழந்திருக்கும். ஆட்சியாளர்களை பொறுத்த வரையில் பங்கு விற்பனை என்பது தனியார் மயத்தின் முதற்படி. பல துறைகளின் அனுபவத்தை கொண்டுதான், இப்போது எல்.ஐ.சியில் முதற்படியிலேயே தடுத்து நிறுத்த முனைகிறோம். 

எல்.ஐ.சி பங்கு விற்பனை பாலிசிதாரர்கள் மத்தியில் ஒரு வகையான அச்சத்தை உருவாக்கியிருக்கிறதா?


அச்சம் என்று சொல்ல முடியாது. ஆனால் கேள்விகள் எழுந்திருக்கின்றன. நாங்கள் பதில் சொல்கிறோம். 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 1956 க்கு பின்னால் வணிக களத்திற்கு வந்துள்ளன. ஆனாலும் கடந்த நிதியாண்டில் எல்.ஐ.சி மொத்த புதிய பாலிசிகளில் 72 சதவீதத்தை வைத்திருந்தது. இவ்வாண்டு டிசம்பர் வரை 76 சதவீத சந்தைப் பங்கை கையில் வைத்திருக்கிறது. மொத்தம் எல்.ஐ.சியில் 40 கோடி பாலிசிகள் உள்ளன. உலகிலேயே முதல் இடம். ஆகவே பாலிசிதாரர்களிடம் இயல்பாகவே இவ்வளவு சிறப்பான நிறுவனத்தில் பங்கு விற்பனைக்கு என்ன தேவை வந்தது என்று திகைக்கிறார்கள். ஆனால் எங்கள் போராட்டம் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அவர்களோடு இந்தியா முழுவதும் எங்கள் ஊழியர்கள் உரையாடுகிறார்கள். இன்று அரசு முன்மொழிகிற ஒரு பகுதி பங்கு விற்பனை தனியார் மயம் நோக்கிய நகர்வுதான் என்றாலும் இந்த கட்டத்திலேயே அதை மக்கள் கருத்தால் தடுத்து நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையை தருகிறோம். 

அரசின் அறிவிப்பை தடுத்து நிறுத்த முடியும் என்று எப்படி சொல்கிறீர்கள்?


இது எங்கள் போராட்ட அனுபவம். எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு முயற்சிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 1994 ல் அரசால் அமைக்கப்பட்ட மல்ஹோத்ரா குழு தனது அறிக்கையில் எல்.ஐ.சி யின் 50 சதவீத அரசு பங்குகளை விற்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் 65 லட்சம் கையெழுத்தியக்கம் உள்ளிட்ட தொடர் இயக்கங்களை பல ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியது. இடதுசாரிக் கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இடையறாது போராடின. தொழிற்சங்க இயக்கங்களும் இதில் இணைந்தன. ஐக்கிய முன்னணி அரசு ஆட்சியில் இருந்த போது எல்.ஐ.சி பங்குகள் விற்கப்படாது; மாறாக அது பலப்படுத்தப்படும் என்ற உறுதி மொழி தரப்பட்டது. இது முதல் முறை. 
அடுத்து மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 1 காலத்தில் எல்.ஐ.சி திருத்த குறு மசோதா கொண்டு வரப்பட்டது. அதில் பங்கு விற்பனை மட்டுமின்றி, எல்.ஐ.சிக்குள்ள அரசு உத்தரவாத பறிப்பும் சேர்த்து முன் மொழியப்பட்டது. ஆனால் கடும் எதிர்ப்பு, மக்கள் கருத்தின் காரணமாக அந்த இரு அம்சங்களுமே அம் மசோதாவில் இருந்து கைவிடப்பட்டன. இது இரண்டாவது முறை. 

தனியார்களை அனுமதிக்கிற ஐ.ஆர்.டி.ஏ சட்டத்தின் மூல வரைவில் அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதம் என்று இருந்தது. ஆனால் ஒன்றரைக் கோடி கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட தொடர் பிரச்சாரத்தின் தாக்கத்தில் 26 சதவீதமாக அந்நிய முதலீட்டு வரையறை குறைக்கப்பட்டது. 2015 ல் அந்த சட்டம் திருத்தப்பட்டு 49 சதவீதமாக உயர்த்துவதற்கு 16 ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டது. அப்போதும் “இந்தியர் கட்டுப்பாடு” என்ற நிபந்தனை உள்ளே சேர்க்கப்பட்டது. அது மூல சட்ட வரைவில் இல்லாத ஒன்று. இப்படி போராட்டங்கள் மக்கள் ஆதரவோடு அரசின் முடிவுகளை மாற்றிய அனுபவம் உள்ளது. இந்த முறையும் மக்களிடம் செல்வோம். சொல்வோம். கருத்தை திரட்டுவோம்.இதற்கிடையில் பிப்ரவரி, மார்ச் வணிக மாதங்கள் என்பதால் பாலிசிதாரர்களை முகவர்களின் துணையோடு சந்திப்போம். எல்.ஐ.சியின் சந்தைப் பங்கை உயர்த்த பாடுபடுவோம். வணிக களத்தில் நடந்தேறுகிற முயற்சிகளும் இப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதி என்பதே எங்கள் பார்வை. 
இதுவெல்லாம் இருந்தும் அரசு இத்தகைய முன் மொழிவை பட்ஜெட்டில் கொண்டு வர என்ன காரணம்?


இரண்டு மிக முக்கிய காரணங்கள். ஒன்று நீண்ட கால நோக்கம். இன்னொன்று சம காலத் தேவை. இது அரசின் வர்க்க குணம். பொருளாதார வளங்களை பெரும் தொழிலதிபர்களுக்கு மடைமாற்றம் செய்யும் வழிகளில் பொதுத் துறை பங்கு விற்பனையும் ஒன்று. அவர்கள் மிக சாதகமான சூழல் என்று கருதும் போது கேந்திர விற்பனை (Strategic Sale) நோக்கி நகர்வார்கள். வாஜ்பாய் காலத்தில் பங்கு விற்பனைக்கென்றே தனி அமைச்சர் போடப்பட்டார். 26 சதவீத அரசு பங்குகளை ஒரே அடியில் தனியாருக்கு தந்து நிறுவனத்தையே கைமாற்றினார்கள். டாட்டாவுக்கு வி.எஸ்.என்.எல் இப்படி தாரை வார்க்கப்பட்டது. சற்று எதிர்ப்பு உள்ள இடங்களில் படிப்படியாக “தனியார் மயம்” நோக்கி நகர்ந்தார்கள். எங்கு எதிர்ப்பு கடுமையாக இருக்குமோ அங்கு பங்கு விற்பனைதானே என்று நாடகம் ஆடுவார்கள். அதுதான் இப்போது நடக்கிறது. இது அவர்களின் வர்க்க அணுகுமுறை. 

இரண்டாவது, இன்றைய நிதி நெருக்கடியில் இருந்து அரசு வெளி வருவதற்கு இதை வழியாக தேடுகிறார்கள். பொதுவாக பொதுத்துறை பங்கு விற்பனைகளின் போது நிர்வாகத் திறமை அரசு நிறுவனங்களுக்கு இல்லை என்று குற்றம் சாட்டுவார்கள். அதற்காக வேண்டுமென்றே அதன் சுதந்திர செயல்பாட்டை கட்டுப்படுத்துவார்கள். பி.எஸ்.என்.எல் க்கு செல் சேவை, டவர் நிர்மாணம், 4 ஜி சேவை என ஒவ்வொரு கட்டத்திலும் தடைகளை ஏற்பத்தினார்கள். அங்குள்ள தொழிற்சங்கங்கள் போராடியே ஒவ்வோர் தடையையும் உடைத்தார்கள். “மயிலைப் பிடிச்சு காலை ஓடச்சி ஆட சொல்கிற உலகம்” என்பது போன்றதுதான் உலகமயம். ஆனால் இந்த உத்திகள் எல்.ஐ.சி யிடம் எடுபடவில்லை. நீண்ட கால முதலீட்டிற்கான சந்தை என்பதால் மக்கள் இரையாகவில்லை. 
ஆனால் இப்போது பங்கு விற்பனையை முன் மொழிவதற்கு காரணம் எல்.ஐ.சியின் நிர்வாகத் திறமையின்மை என்று சொல்ல முடியவில்லை. ஆனால் அரசு பட்ஜெட்டில் விழுகிற பள்ளத்தை நிரப்ப முடியவில்லை. அவர்களின் வருமான மதிப்பீடுகள் பொய்த்தும் போனதே காரணம். வரி வசூல் இலக்குகள் எட்ட முடியவில்லை. அதற்காக எல்.ஐ.சி.போன்ற லாபகரமான நிறுவனங்களின் பங்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். அரசின் பொருளாதார நிர்வாக திறமையின்மை என்பதுதான் காரணம். இது நகை முரண் இல்லையா!
இந்த பட்ஜெட் பறைசாற்றுகிற விழுமியங்களை சந்தேகிக்கிறீர்களா?

நிச்சயமாக. “ பூமி திருத்தி உண்” என்று நிதி அமைச்சர் கூறுகிறார். என்ன அர்த்தம்? சொந்தக் கால்களில் நின்று தனது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதுதான். எல்.ஐ.சி 1956 ல் அரசின் 5 கோடி மூலதனத்தோடு துவங்கப்பட்டது. அதற்கு பிறகு அரசிடம் மூலதனத் தேவைகளுக்காக போய் நின்றதே இல்லை. 100 கோடியாக அரசின் மூலதனம் சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது கூட எல்.ஐ.சிக்கு தேவை ஏற்பட்டதால் அல்ல. சட்டம் ரூ 100 கோடி குறைந்த பட்ச மூலதனம் என்று வரையறை செய்ததால்தான். அந்த கூடுதல் 95 கோடி என்பது எல்.ஐ.சிக்கு மிகச் சிறிய தொகை. கடந்த ஆண்டு எல்.ஐ.சி அரசுக்கு தந்துள்ள டிவிடெண்ட் மட்டுமே 2611 கோடிகள். இந்த சிறிய 100 கோடி என்கிற மூலதன தளத்தின் மீதுதான் எல்.ஐ.சியின் சொத்துக்கள் 32 லட்சத்திற்கு விரிவடைந்துள்ளன. எல்.ஐ.சியின் பொருளாதார நிதி பங்களிப்பு அரசு திட்டங்களில், பத்திரங்களில் ரூ 28 லட்சம் கோடி. தேசியம் பேசுகிற ஆட்சியாளர்கள் இந்திய நாட்டின் பொருளாதார தேசியத்திற்கு அடையாளமாய் திகழ்கிற எல்.ஐ.சியை பாதுகாக்க வேண்டாமா? இவர்களின் போலி தேசிய முகமூடி கிழிந்து தொங்குகிறது. 

இது இன்சூரன்ஸ் துறையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?


இந்த குறிப்பிட்ட முடிவு என்ன தாக்கம் என்பதை விட அரசின் இத்தகைய திசை வழி இன்சூரன்ஸ் தொழிலின் சமூக நோக்கிற்கு எந்த வகையிலும் உதவாது என்பதே முக்கியம். 1956 ல் இந்த துறை தேசிய மயமான போது “இந்தியாவின் மூலை முடுக்குக்கு எல்லாம் இன்சூரன்ஸை பரவலாக்குவது” என்பது ஆகும். 245 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 1956 ல் இருந்தும் இன்சூரன்ஸ் பரவல் நடந்தேறவில்லை என்பதுதானே. 1999 க்கு பின்னர் இந்திய இன்சூரன்ஸ் துறையில் உள்ளே வந்துள்ள தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எத்தனை கிராமங்களுக்கு, சிற்றூர்களுக்கு, குடிசைகளுக்கு சென்றுள்ளது என்பதற்கு அரசால் ஏதேனும் ஆதாரம் தர முடியுமா? எல்.ஐ.சியின் மினி அலுவலகங்கள் ஆயிரக் கணக்கான குக்கிராமங்களில் கூட அமைந்துள்ளன. இன்சூரன்ஸ் பரவல் யாரால் நடைபெற்றுள்ளது என்பதற்கு இது சாட்சியம். 

இரண்டாவது இன்சூரன்ஸ் தொழிலின் அடிப்படை கோட்பாடான நம்பிக்கை. நீண்ட கால முதலீடுகளை கையாள்கிற நீடித்த செயல்பாடு. 1999 க்குப் பிறகு வந்த இரண்டு பன்னாட்டு நிறுவனங்கள் - அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி, ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி- 10 ஆண்டுகளுக்குள்ளாகவே இந்தியாவில் வணிகத்தை தொடராமல் வெளியேறின. ஆனால் எல்.ஐ.சி இன்றும் 98.2 இறப்பு உரிம பட்டுவாடா விகிதத்தோடு உலகில் முதலிடத்தில் உள்ளது. இன்சூரன்ஸ் துறையின் இலக்குகள் நிறைவேற யாரை அரசு பலப்படுத்த வேண்டும் என்பதே நமது கேள்வி.
இந்த போராட்டம் வெற்றி பெறுமா?


நிச்சயமாய் வெற்றி பெறும். பெற வேண்டும். பட்ஜெட் தாக்கலாகி இரண்டு நாள் கழித்து “ எல்.ஐ.சி க்கு இருக்கிற அரசு உத்தரவாதம் தொடரும்” என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இது மக்கள் மத்தியில் எழுந்துள்ள கோபத்தின் விளை பொருள். மக்களின் கோபத்திற்கு வடிவம் கொடுக்கிற எங்கள் முயற்சிகள் தொடரும். மத்திய அரசுக்கு எங்கள் கோரிக்கை என்னவெனில், இரண்டு முறை நாடாளுமன்றம் எல்.ஐ.சி.பங்கு விற்பனையை செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ளதென்றால் அது தேசத்தின் கருத்து. மக்களின் குரல். அந்த இரண்டு அரசாங்கங்கள் செவி மடுத்து மறு பரிசீலனை செய்தது போல நீங்களும் செய்ய வேண்டும் என்பதே.இது தொழிற்சங்கங்களின் கருத்து மட்டும் அல்ல. மக்களின் எசப்பாட்டு. ஆகவே வெற்றி பெறும்.

க.சுவாமிநாதன்
துணைத் தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு.

No comments:

Post a Comment