Wednesday, May 11, 2016

இவர்களால் எப்படி சாத்தியம்?

ஊழல், மது விலக்கு இவற்றைத் தாண்டி இந்த தேர்தலில் உள்ள முக்கியமான மூன்றாவது அம்சம் சமூக நல்லிணக்கம்.

கோகுல்ராஜ், சங்கர் ஆகியோருக்கு காலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அறிக்கையிலும் எழுதப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் நான் சமீபத்தில் கேட்ட உரையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த மாதம் கோவையில் டாக்டர் அம்பேத்கர் 125 வது பிறந்தநாள் கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ்

 “வெறி பிடித்தவர்களால் வெட்டப்பட்டதால் மட்டும் என் கணவன் இறந்து போகவில்லை. உடனடியாக முதலுதவி கொடுத்திருந்தால் சங்கர் பிழைத்திருக்கலாம். ஆம்புலன்ஸில் போகையில் “கௌசல்யா, எனக்கு ஒன்றும் ஆகாது. நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன்” என்று சொன்ன சங்கரின் குரல் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கிக் கொண்டிருந்தது. சரிந்த தலையை நிமிர்த்த முடியவில்லை. அங்கிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது” 

என்று கௌசல்யா தன்னிடம் பகிர்ந்து கொண்ட செய்தியை சொன்னபோதும்

“இன்னொரு மகன் மட்டும் இல்லாவிட்டால் நானும் செத்திருப்பேன்”

என்று ஜாதி ஆணவப் படுகொலைக்கு உள்ளான கோகுல்ராஜின் தாயார் சொன்னதையும் 

பகிர்ந்து கொண்டபோது உள்ளம் உருகியது.

தமிழகத்தை மீண்டும் காட்டுமிராண்டிக்காலத்திற்கு அழைத்துச் செல்வது யார்? இது நம்முடைய அரங்கம். வெளிப்படையாகவே சொல்கிறேன். பல தேர்தல்களில் தோற்றுப் போய் இழந்து போன செல்வாக்கை மீட்க பாட்டாளி மக்கள் கட்சி ஜாதி வெறியை தூண்டி விடுவதன் விளைவுதான் தமிழகத்தில் இன்று அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கான காரணம்.

ஜாதி ஆணவக் கொலைகள் தொடர்பாக இரண்டு பிரதான கழகங்கள் என்ன நிலைப்பாடு கொண்டுள்ளன?

தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலைகள் என்பதே கிடையாது என்று தமிழக சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வமும் நத்தம் விஸ்வநாதனும் சத்தியம் செய்து சொல்கிறார்கள்.

சங்கர் கொலையை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டுமே திமுக பார்க்கிறது. ஆதிக்க ஜாதிகளின் வாக்குகள் மீது அவர்களுக்கு அவ்வளவு அக்கறை!

தமிழகத்தில் உண்மையான சமூக நல்லிணக்கம் என்பது இரண்டு கழகங்களால் சாத்தியமே கிடையாது. இடதுசாரிகள் இருக்கிற அணியால் மட்டுமே சாத்தியம்.

தமிழகத்தில் இடதுசாரிகள் பங்கேற்கும் ஒரு கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு இருக்கிறபோது அதை ஆதரிப்பதும் அதனை வலிமையாக்குவதும் நம்மைப் போன்ற தொழிற்சங்கங்களின் முக்கியக் கடமை.

பன்னாட்டுக் கம்பெனிகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவதை பெருமையோடு பேசிக் கொண்டவர்கள், நோக்கியாவும் ஃபாக்ஸ்கானும் கம்பெனியை மூடி தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்திய போது வாய் திறக்கவேயில்லை.

மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களுக்கு ஜல சமாதி உருவாக்கியவர்கள், பாக்ஸ்கான் போராட்டத்தில் தோழர் அ.சவுந்தரராஜன் கையில் விலங்கு மாட்டியவர்கள், தமிழக அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், சத்துணவு ஊழியர்கள் மீது தடியடி நடத்தியவர்கள், இந்த இரண்டு கழகங்கள்தான் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

ஐம்பது தொகுதிகளில் போட்டியிடும் இடதுசாரிகளால் என்ன மாற்றத்தை உருவாக்க முடியும் என்று சில புத்திசாலிகள் கேட்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு விஷயத்தை மட்டும் நினைவு படுத்துகிறேன். நீங்களும் சொல்ல வேண்டும்.

நூறு நாள் வேலை என்று சொல்லப்படுகிற ஊரக வேலை உத்தரவாதச் சட்டம் யாரால் வந்தது? வனப் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது யார்? அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிற தகவல் உரிமைச் சட்டம் எப்படி வந்தது? பெட்ரோல் விலை கட்டுக்குள் இருந்ததே, யார் அதற்குக் காரணம்?

இடதுசாரிகளின் ஆதரவோடு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சிக் காலம் இருந்தபோது இடதுசாரிகள் அளித்த அழுத்தம் காரணமாக இவையெல்லாம் வந்தது என்பதை நாம் உரக்கச் சொல்ல வேண்டும்.

உங்கள் மாவட்டச் சங்கம் வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுகிறது. உங்களது எல்லைக்குள் வருகிற போளூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் பி.செல்வன் போட்டியிடுகிறார். எளிமையான உழைப்பாளி, இளைஞர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளராக களத்தில் நிற்கும் போராளி.

அவரின் வெற்றிக்கு நீங்கள் முழுமையாக உதவ வேண்டும். உங்களால் முடிந்த நிதியும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

{கடந்த சனிக்கிழமை வேலூரில் நடந்த பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் பேசியதில் இன்னொரு பகுதி)


3 comments:

  1. யார் பேசியது இது?

    ReplyDelete
  2. மிக அவலமாக ஜெ செய்து வந்துள்ள அத்தனை கொடுமை இழி செயல்களுக்கு சட்ட மன்றத்தில் ஆதரவு தந்து, மிக மென்மையாக பேருக்கு கண்டித்து சொல்லி விட்டு நாடகமாடுபவை கமுனிஸ்ட் கட்சிகள். தா.பாண்டியன் மற்றும் இன்றும் பலர் ஜெவின் கால்கள் கிடைக்காத என்று ஏங்கி கொண்டு தானே உள்ளனர். ஜெவை போற்றி துதிக்கும் இந்த கூட்டத்திற்கு மக்கள் ஒரு பொருட்டா? இவர்கள் எதற்கு கம்யூனிஸ்ட் கொள்கைகளை இழிவு செய்ய வேண்டும். போய் ஜெவின் கட்சியில் சேரலாமே. எல்லா கட்சியிலும் சில நல்லவர்கள் உண்டு( நல்லகண்ணு..), ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லையே. ஜெவை பற்றி கேட்டல் உடனே திமுக பற்றி பேசி திசை திருப்பும் அற்பர்கள். முதலில் ஜெவின் அவல ஆட்சி பற்றி பேசி பிறகு திமுக பற்றி பேசலாம்.அப்படி பேசிவிட்டால் ஜெவின் மனம் நோகும் என்று பேசுவதில்லை. இந்த இழி செயல்கள் நடக்க விட்ட அரசை பற்றி கடும் கண்டனம் செய்யாமல் இருப்பதே இவர்களின் நோக்கத்தை சொல்லும்.

    ReplyDelete
  3. நீ எப்படி கோழையாய் அனானியாய் தைரியமில்லாமல் ஒளிந்து கொண்டிருக்கிறாயோ அது போல ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தந்தையும் மகனுமாக உங்கள் தலைவர்கள் பயந்து, அடங்கி, நடங்கி இருந்தது கூட தெரியாத முட்டாள் நீ எல்லாம் கம்யூனிஸ்டுகள் பற்றி எழுத வந்து விட்டாய். போய் டி.ஆர்.பாலு சாராய பேக்டரியின் குவார்ட்டர் அடித்து விட்டு ஓடிப் போ. ஜெயலலிதாவுக்கு எதிராக சட்டமன்றத்திலும் தமிழகத்திலும் எதிர்த்து பேசியவர்கள், போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. நீயெல்லாம் போதையில் இருந்திருப்பாய். உனக்கெல்லாம் எப்போது தெளியப் போகிறதோ?

    ReplyDelete