Tuesday, May 31, 2016

இதெல்லாமும் சினிமாதான், ஆனா வேற சினிமா


நாலு பாட்டு, மூன்று பைட், கொஞ்சம் பஞ்ச் டயலாக், கூடவே கொஞ்சம் காமெடி, வெளிநாட்டில் டூயட், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் - இப்படியாகவே நாம் காணும் பெரும்பாலான தமிழ்ப் படங்கள் இருக்கின்றன, இரண்டரை மணி நேரம்  ஜாலியாய் பொழுதைக் கழிக்கத்தான் சினிமா என்பதும் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் சூழலில்  மக்களின் பிரச்சினைகளைப் பற்றியும் அதன் உள்ளே இருக்கும் அரசியலையும் பேசுகிற திரைப்படங்கள் பற்றிய அறிமுகத்தை இந்த நூல் அளிக்கிறது. 

நூல் அறிமுகம்

நூல்                        அரசியல் பேசும் அயல் சினிமா 
ஆசிரியர்                இ.பா.சிந்தன்
வெளியீடு              பாரதி புத்தகாலயம்
                                    சென்னை 600018
விலை              ரூபாய் 140.00


பதினைந்து திரைப்படங்களைப் பற்றிய அறிமுகம் இந்த நூலில் தரப்பட்டுள்ளது. நோக்கியா தொலைபேசி தயாரிப்பதற்காக சுரண்டப்படுகிற காங்கோ நாட்டு கனிம வளம், தொழிலாளர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள், அதைப் பற்றி காங்கோ சென்று ஆய்வு நடத்துகிற பிராங்க் எனும் பத்திரிக்கையாளரின் அனுபவங்கள், அவர் எழுப்பும் கேள்விகளை அலட்சியமாக புறம் தள்ளுகிற நோக்கியா நிர்வாகம் - இதையெல்லாம் சொல்கிறது Blood in Mobile

தொழிலாளர்களின் உரிமைகளை கேட்பவர்களை கொல்லுகிற கொலைகார நிறுவனம்தான் கோகோ கோலா என்பதை The Coca Cola Case விவரிக்கிறது. போராடும் தலைவரின் அறையில் சேகுவாரா படம் இருந்த காரணத்தால் அவருக்கான நீதியை  நீதிமன்றம் மறுத்தது என்பது கூடுதல் செய்தி.

நமக்கு இனிப்பான சுவையளிக்கும் சாக்லேட்டுக்களில் குழந்தைத் தொழிலாளர்களின் குருதி இருப்பதை கண்ணீரோடு The Dark side of Chocolate பார்த்தால் உணரலாம்.  

பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும் பெண்கள் பற்றிய எகிப்து நாட்டுப்படம்  678, தண்ணீரை விற்பனைப் பொருளாக்கிய பன்னாட்டுக் கம்பெனியை துரத்தியடித்த பொலிவிய மக்களின் போராட்டத்தைச் சொன்ன Even the Rain,  தேங்காய் மூலம் தன்னிறைவை அடையத் துடிக்கும் பூகென்வில் என்ற சிறு நாட்டின் கண்ணீர் கதையான The Coconut Revolution, தனது நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று கனவுகளோடு முயற்சித்த புர்கினோ பாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டு அதிபர் தாமஸ் சங்கராவை ஏகாதிபத்தியம் கொலை செய்த சதியைச் சொல்லும் The Upright Man, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அடக்குமுறையை ஐந்து காமெராக்கள் உடைக்கப்பட்டபோதும் சளைக்காமல் பதிவு செய்கிற  5   Broken Cameras  ஆகியவை நமக்கு படிப்பினை தரும் படங்கள். 

இரான் அரசால் தண்டனை வழங்கப்பட்ட பிரபல இயக்குனர் “ஜாபர் பனாகி” தனக்கு அனுமதி மறுக்கப்பட்ட திரைப்படத்தின் திரைக்கதையை வாய் வழியாக சொல்வது “This is not a film”. இந்தப்படம், ஒரு கேக்கில் மறைத்து வைக்கப்பட்ட பென் டிரைவ் மூலம் வெளியே கொண்டு செல்லப்பட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது என்பது முக்கியமான செய்தி. க்யூபா, வெனிசுலா, அர்ஜெண்டினா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பற்றிய படங்களும் இந்நூலில் உண்டு.

இத்திரைப்படங்களின் திரைக்கதை மற்றும் அவை சொல்லும் அரசியல் செய்திகள்  பற்றி மட்டுமே இந்த நூல் விரிவாக பேசுகிறது. அழகியல் அம்சங்களான ஒளிப்பதிவு, இசை, இயக்கம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அவை பற்றியும் எழுதினால் நூலின் நோக்கம் நீர்த்துப் போகலாம் என்று ஆசிரியர் கருதி இருந்தால் அதுவும் சரிதான்.

நூலிலே விவாதிக்கப்பட்ட படங்களை பார்க்கத் தூண்டும் விதத்தில் எளிய நடையில் எழுதிய தோழர் இ.பா.சிந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

(எங்கள் சங்கச்சுடர் மே 2016 இதழிற்காக எழுதப்பட்டது)

2 comments:

  1. நல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி. ஆசிரியருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. நன்றி தோழர். தற்போது தான் தங்களின் விமர்சனத்தை வாசிக்கிறேன்.

    ReplyDelete