Tuesday, May 10, 2016

வெற்றிகரமான அல்வா – அரசியல் பதிவல்ல





ஒரு மாதத்திற்கு முன்பாக சமையலறை அனுபவம் பற்றி பேசும் போது என் மனைவி “நீங்கள் ஏன் கோதுமை அல்வா, அதுவும் வெல்லம் போட்டு செய்யக் கூடாது?” என்று கேட்க, ஆஹா இவர்களே கேட்கும் போது அதை செய்யாமல் இருப்பதா என்று உற்சாகத்தோடு அதற்கான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தேன், சமையலறைக்குள் இனி நுழையாமல் இருக்கச் செய்வதற்கான மிகப் பெரிய வலை அது என்பது புரியாமல்.

புத்தகத்தில் படித்துத்தான் ஞாயிறு அன்று தயாரித்தேன்.

முதல் நாளே சம்பா கோதுமை வாங்கி இரவு தண்ணீரில் ஊற வைத்துக் கொண்டேன்.

ஞாயிறு காலை அதை மிக்ஸியில் அறைத்து அந்த பாலை வடிகட்டி எடுத்துக் கொண்டேன். மீண்டும் இரு முறை அதே போல் செய்தேன்.

இரண்டு வரியில் சுலபமாக எழுதினாலும் வியர்த்து விறுவிறுக்க வைத்து விட்டது. முதலில் ஒரு துணியில் வடிகட்டினால் பால் வருவதற்கு முன்பாக அறைத்து வைத்த கோதுமையும் பாத்திரத்தில் விழுந்து விட்டது. இன்னொரு பெரிய துணியை தேடிக் கண்டுபிடித்து பிழிந்தால் பால் வந்து விட்டது. அடுத்த முறை அறைப்பதற்கு வராமல் கோதுமை துணியோடு ஒட்டிக் கொண்டு அடம் பிடித்தது. ஒரு வழியாக கோதுமைப்பாலை தயார் செய்து புத்தகத்தில் சொன்னது போலவே ஒரு மூன்று டம்ப்ளர் தண்ணீர் ஊற்றிக் கலந்து வைத்துக் கொண்டேன்.

ஏலக்காய் பொடி தீர்ந்து போயிருந்தது. ஏலக்காயை தோளோடு வறுத்து மிக்ஸியில் போட்டால் அளவு அதிகமாகி விட்டதால் மிக்ஸி சுற்ற மாட்டேன் என்று ஸ்ட்ரைக் செய்கிறது. முந்திரியை வறுக்கும்போதுதான் ஒரு அலைபேசி, கடன் வேண்டுமா என்று கேட்டு. அதற்குள் சில பருப்புக்கள் கூடுதலாகவே சிவந்து விட்டது. 


இது என்ன வேலூருக்கு வந்த சோதனை என்று “நெக்ஸ்ட், ரெஸ்ட்” என்று கொஞ்ச நேரம் புத்தகம் படிக்கப் போய் விட்டேன்.

அதன் பிறகு வெல்லம் பாகு வைத்து அது நன்றாக பொங்கி வந்ததும் இந்த கோதுமை பாலையும் கலந்து கிளறு, கிளறு, கிளறு என்று கிளறிக் கொண்டே இருந்தேன். அல்வா பதம் வந்ததும் நெய் ஊற்றி மீண்டும் கிளறு ப்ராஸஸ் தொடர்ந்தது. நெய் கக்கிக் கொண்டு வரும் வரை அவ்வப்போது நெய் ஊற்றிக் கிளறவும் என்பது புத்தகத்தில் சொல்லப்பட்ட வழிமுறை.

அப்படியெல்ல்லாம் உடனடியாக கக்கிக் கொண்டு வந்து விட மாட்டேன் என்று நெய்யும் அடம் பிடித்தது. என் காலில் வலி தொடங்கியதை அது உணர்ந்து கொண்டதோ என்னமோ, பரிதாபப்பட்டு விட்டது. 


அப்பாடா என்ற விடுதலை உணர்வோடு அதை தட்டில் கொட்டி விட்டு பாண்டிச்சேரியில் ஒரு திருமணத்திற்கு புறப்பட்டு விட்டேன்.

தட்டில் கொட்டப்பட்ட அல்வாவை விள்ளை போட்டு வைத்திருந்தார்கள். அப்படி வந்ததே அல்வா வெற்றிகரமாக வந்ததன் அடையாளமல்லவோ!


சாப்பிட்டுப் பார்த்தேன். சுய விமர்சனமாக சொல்ல வேண்டுமென்றால் வெல்லத்தின் அளவை சிறிது குறைத்திருக்கலாம். மற்றபடி சூப்பர்.

ஆனால் இன்னொரு முறை செய்ய மாட்டேன். ஒரு முறை கிடைத்த அனுபவமே போதும்.



1 comment:

  1. அல்வா வெற்றிகரமாக வந்தது எனக்கும் மகிழ்ச்சியே.

    ReplyDelete