Wednesday, May 11, 2016

ஒரு அருமையான தலைவரின் அரசியல் தரிசனம்

தீக்கதிர் நாளிதழில் வெளியான ஒரு சிறப்பான கட்டுரை. 2006 சட்டமன்றத் தேர்தலில் குடியாத்தம் தொகுதி பிரச்சாரத்திற்கு வந்தபோது அவரது அணுகுமுறை கண்டு அனைவரும் வியந்ததும் நினைவுக்கு வருகிறது. சற்று நீண்ட கட்டுரைதான். ஆனாலும் முழுமையாக படியுங்கள். 

கீழேயுள்ள படங்கள் 2006 ல் தோழர்  பிருந்தாவுடன் எங்கள் சங்கத் தோழர்கள்
அரசியல் தரிசனத்திற்காக வந்தேன்...

தோழர் பிருந்தா நடைமேடைக்கு வந்தார். அப்பொழுது அங்கு வந்த வடஇந்திய குடும்பத்தினர் பிருந்தா அவர்களிடம் அறிமுகப்படுத்தி கொண்டனர். பலமுறை தொலைக்காட்சியில் அவரை பார்த்திருப்பதாக கூறினர். “ஆன்மீக தரிசனத்திற்காக வந்தீர்களா?” எனக்கேட்டனர். “இல்லை! அரசியல் தரிசனத்திற்காக வந்தேன்” என்று பிருந்தா சிரித்துக்கொண்டே பதில் கூறினார். தமது குழந்தைகளுடன் ஒரு புகைப்படம் எடுக்க அனுமதி கோரினர். தோழர் பிருந்தா உடனடியாக சம்மதித்தார்.ரயில் வந்தது. பயணச்சீட்டு பரிசோதகர் பிருந்தாவிடம் வேகமாக வந்து வணக்கம் தெரிவித்தார். “நான் பயணச்சீட்டு பரிசோதிக்கும் பெட்டியில் தாங்கள் பயணம் செய்வது எனது பெரிய பாக்கியம்” என்று கூறினார். தோழர் பிருந்தாவும் வணக்கம் தெரிவித்துவிட்டு வண்டியில் ஏறினார். சில நொடிகளில் வண்டி சென்றது. தோழர் பிருந்தா அவர்கள், தனது மூன்று நாள் பயணத்தில் எங்கும் சிறிது கூட கோபம் கொள்ளவில்லை. முகம் சுளிக்கவில்லை. எளிமையாக இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக நகரம், கிராமம் என வேறுபாடு இல்லாமல் மக்களால் அறியப்பட்ட தலைவராக திகழ்ந்தார் என்பதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. பல இடங்களில் குறிப்பாக நமது இயக்கத்தின் தளங்களில் மக்கள், தோழர் பிருந்தா மீது வெளிப்படுத்திய அன்பு அசாதாரணமானது என்கிறார் அ.அன்வர் உசேன்.பிருந்தா காரத்தின் உரையை மொழியாக்கம் செய்யும் பொருட்டு 3 நாட்கள் அவருடனே பயணித்த தீக்கதிர் நாளிதழின் கட்டுரையாளரும், பெல் தொழிற்சங்க தலைவர்களில் ஒருவருமான அன்வர் உசேன் தனது அனுபவங்களை இங்கே தருகிறார்.


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், நாடே போற்றும் மகத்தான போராளியுமான தோழர் பிருந்தா காரத் அவர்களின் தேர்தல் பிரச்சாரப் பயணம் மே 4 அன்று மாலை மதுரை மேற்குத் தொகுதியில் ஆரம்பித்தது. மேடையில் பல குழந்தைகள் தோழர் பிருந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். அதனை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். புதுகை பூபாளம் கலைக்குழுவின் சிறப்பான நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் சிபிஎம் வேட்பாளர் வாசுகியை ஆதரித்து பேசினார். மேடையில் மதுக்கூர் இராமலிங்கம், இரா.விஜயராஜன், என்.நன்மாறன், இரா.ஜோதிராம், சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை ஆகியோர் இருந்தனர்.தமிழகத்தில் திமுக - அதிமுகவிற்கு மாற்றாக ஆறுகட்சிகள் கூட்டணி உருவாகியிருப்பதை விரிவாக விளக்கினார். பெரியாரின் சமூக சீர்திருத்த கொள்கைகளுக்கு திமுகவும் அதிமுகவும் துரோகம் இழைத்துவிட்டன எனக் குற்றம் சாட்டினார். வாசுகி, மக்கள் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடும் போராளி எனக் கூறி அவருக்கு வாக்களிக்க வேண்டினார். மதிமுகவின் மதுரை தெற்குவேட்பாளர் பூமிநாதன் அவர்களுக்கும் வாக்குச் சேகரித்தார். வாகனத்தில் வரும் பொழுது உடன் பயணித்த மாதர்சங்கத் தலைவர் பொன்னுத்தாயிடமும், மற்றொரு தோழரிடமும் தொகுதி நிலவரம் குறித்தும் மாதர் சங்கத் தோழர்களின் தேர்தல் பணி பற்றியும் விரிவாக கேட்டு அறிந்தார்.இரவில் எப்படித் திரும்பி உங்கள் வீட்டிற்கு செல்வீர்கள் என்பதை கவலையுடன் வினவினார். வாடிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாளை ஆதரித்துப் பேசினார்.

பாலபாரதிக்கு பொன்னாடை

திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிபிஎம் வேட்பாளர் பாண்டியை ஆதரித்துப் பேசினார். அங்கு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், பிருந்தாவை வரவேற்றார். தன் உரையை தொடங்குவதற்கு முன்பு 15 ஆண்டுகாலம் திண்டுக்கல் மக்களுக்கு அயராது உழைத்த சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதிக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். திண்டுக்கல் நகரம் மக்கள் ஒற்றுமைக்கும் மத ஒற்றுமைக்கும் பாரம்பரியம் கொண்ட ஊர் என்பதை விளக்கிய பிருந்தா, அத்தகைய பாரம்பரியத்தை சீர்குலைக்க முயலும் சக்திகளை முறியடிக்க வேண்டினார். பாலபாரதி போலவே,தோழர் பாண்டி அவர்களும் மக்களின் ஊழியர் என்பதைஅழுத்தமாக கூறிய அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் பணி திண்டுக்கல் தொகுதியில் தொடர பாண்டியை வெற்றி பெறச்செய்யுமாறு வலியுறுத்தினார். தான் தவ வாழ்வு வாழ்வதாகவும் தன்னை துறவி எனவும் ஜெயலலிதா அழைத்துக் கொள்கிறார். துறவிக்குஏன் இவ்வளவு சொத்து எனவும் செல்வம் சேர்க்க ஏன்ஊழல் செய்ய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியபொழுது மக்கள் ஆரவாரத்துடன் அதனை ஆமோதித்தனர். திமுகவும் ஊழலில் புரள்வதை சுட்டிக்காட்டிய அவர்இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஆறு கட்சிகளின் கூட்டணியை ஆதரிப்பீர் என வேண்டினார்.

வறண்ட காவிரியும் கொள்ளிடமும்

மே 5 அன்று திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து அவரது பிரச்சாரம் தொடங்கியது. அதற்கு முன்னதாக அவரைச் சந்தித்த மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதரிடம் லால்குடி தொகுதியின் நிலவரங்களை கேட்டு அறிந்தார். குறிப்பாக விவசாய நிலைமை குறித்தும் நூறுநாள்வேலைத்திட்டம் குறித்தும் விவரங்கள் சேகரித்தார்.மாலை 6 மணி அளவில் கூட்டத்திற்கு செல்லும் வழியில் இரு மிகப்பெரிய நதிகளான காவிரி மற்றும் கொள்ளிடம் வறண்டு கிடப்பதை கண்ணுற்ற அவர் இந்த ஆறுகளில் தண்ணீர் இல்லையெனில் விவசாயம் எப்படி நடக்கும் என கவலையுடன் வினவினார். லால்குடியில் சிபிஎம்வேட்பாளர் ஜெயசீலனை ஆதரித்துப் பேசினார். தோழர்ஜெயசீலனின் எளிமையான வாழ்வை பத்திரிகைகள் பாராட்டியுள்ளதை சுட்டிக்காட்டினார். விவசாயம் வீழ்ந்துவருவதை சுட்டிகாட்டிய அவர் காவிரிப்பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதற்கும் மோடி அரசாங்கம் காரணம் என்பதை விளக்கினார். ஆனால் தம் மீது உள்ள ஊழல் வழக்குகள் காரணமாக திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளுமே மோடி அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை கண்டித்து எதுவுமே பேசுவதில்லை என்பதை அம்பலப்படுத்தினார்.

காவிரி பிரச்சனையை ஆய்வு செய்த வேட்பாளர்

அடுத்து திருவையாறு தொகுதியில் உள்ள திருக்காட்டுப்பள்ளிக்கு பயணித்தார். பயணத்திற்கு இடையேஉடன் வந்த சிபிஎம் திருவரம்பூர் ஒன்றிய செயலாளர்நடராசனிடம் (தோழர் நடராசன் தோழர் என்.வெங்கடாசலம் அவர்களது சகோதரரின் புதல்வர்) தொகுதி நிலவரம்குறித்து பல விவரங்களை கேட்டார். 100 நாள் வேலைத்திட்டத்தில் எவ்வளவு நாட்கள் வேலை கிடைக்கின்றன? ஒரு நாள் வேலை என்பதன் அளவு என்ன? ஊதியம் எவ்வளவு தரப்படுகிறது? என்பதை கேட்டார்.திருக்காட்டுப்பள்ளி கிராமப்புறமாக இருந்தாலும் ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர். அவரை வரவேற்ற தமிழ்செல்வி உட்பட மாதர்சங்கத் தோழர்களிடம் நலம் விசாரித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் என். சீனிவாசன், நீலமேகம் மற்றும் மாவட்ட செயலாளர் மனோகரன் ஆகியோரின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். அங்கு வேட்பாளர் ஜீவக்குமாரை ஆதரித்து பேசினார். தோழர் என்.வெங்கடாசலம் அவர்களின் போராட்ட தியாகக் குடும்பத்தில் வந்த ஜீவகுமார்,காவிரி பிரச்சனை குறித்து ஆய்வுக் கட்டுரைகளையும் நூலையும் எழுதியுள்ளார் என்பதை மக்களுக்கு எடுத்துக்கூறினார். எனவே தகுதி வாய்ந்த ஜீவகுமாரை ஆதரிக்க வேண்டினார்.ஆறு கட்சிக்கூட்டணியை வானவில்லுடன் பிருந்தா அவர்கள் ஒப்பிட்டார். இருண்ட மேகங்களுக்கு பிறகு வானவில் தோன்றுவது போல தமிழகத்தின் இருண்ட மேகங்களான திமுகவையும் அதிமுகவையும் அகற்றி ஆறுகட்சிகளின் வானவில் தோன்றும் என அவர் கூறியபொழுது மக்கள் கைதட்டி அமோதித்தனர். காவிரியில் தண்ணீர் இல்லை! ஆனால் தமிழகத்தில் பத்தடிக்கு ஒரு டாஸ்மாக் கடை உள்ள இழிவான நிலையைச் சொன்ன பொழுதுமக்கள் வேகமாக தலையாட்டி அந்த உண்மையை அங்கீகரித்தனர்.

கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்

திருக்காட்டுப்பள்ளியிலிருந்து கந்தர்வக்கோட்டை தொகுதியைச்சார்ந்த கீரனூருக்கு பயணம் தொடர்ந்தது. உடன் பயணித்த புதுக்கோட்டை தோழர் சங்கரிடம் தொகுதியின் நிலவரங்களை விரிவாகப் பேசினார். அத்தொகுதியில் 40 சதவீதம் தலித் வாக்காளர்கள் என்பதையும் தண்ணீர் பற்றாக்குறை கடுமையாக உள்ள பகுதி என்பதையும்உள்வாங்கிக்கொண்டார். புதுக்கோட்டை மூன்று ஆண்டுகளாக வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறிந்தார். 100 நாள் வேலைத்திட்டத்தில் 72 நாட்கள் வேலைவழங்கப்படுவதாக சங்கர் கூறினார். தமிழக சராசரியான 47 நாட்கள் என்பதை ஒப்பிடும் பொழுது இது உயர்வுதானே என கூறிய பொழுது அதனை மறுத்தார். வறட்சி பகுதிக்கு 150 நாட்கள் வேலை தரப்படவேண்டும் என்பதேசட்டம். 72 நாட்கள் என்பது குறைவுதான் என்று பிருந்தாவிளக்கினார்.பிருந்தாகாரத் கீரனூர் வந்தடைந்த பொழுது நேரம் இரவு 9 மணியை கடந்துவிட்டது. எனினும் பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் காத்திருந்தனர். மாவட்டச்செயலாளர் கவிவர்மனிடம் தொகுதி குறித்த சில விவரங்களை கேட்டறிந்தார். சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னதுரை பேசி முடித்ததும் அவரது சிறந்த உரையை பாராட்டிகை குலுக்கி வாழ்த்தினார். பிருந்தா பேசும் பொழுது “தோழர் சின்னதுரையின் பெயரில் ‘சின்ன’ என்று வார்த்தை இருக்கலாம். ஆனால் அவரது இதயம் பரந்தது.அந்த இதயம் துடிப்பது புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்காக” என்று கூறியபொழுது மக்கள் ஆமோதித்து வரவேற்றனர்.இந்தியாவில் 1200 பதிவு செய்யப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உள்ளன. அதில் சரிபாதி 600 தமிழகத்தில் உள்ளன. இவற்றின் ஒரு ஆண்டு வருமானம் 1000 கோடி ரூபாய். ஆனால் மக்களுக்கு தண்ணீர் தரவேண்டிய அரசாங்கம் டாஸ்மாக் கடைகளை திறந்தவண்ணம் உள்ளதுஎன பேசிய பொழுது தங்களது தலையாய பிரச்சனையை பிருந்தா பேசியதை மக்கள் மிகவும் வரவேற்றனர். புதுக்கோட்டை மூன்று ஆண்டுகளாக வறட்சி மாவட்டம் என அறிவிக்கப்பட்டது. ஒரு மாவட்டம் வறட்சி எனஅறிவிக்கப்பட்டால் எத்தகைய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என பட்டியல் இட்ட அவர் புதுக்கோட்டை மக்களுக்கு வறட்சி நிவாரணம் முழுமையாக கிடைக்கவில்லை என்பதை அம்பலப்படுத்தினார்.அம்பேத்கார் அவர்களின் 125வது பிறந்த ஆண்டில் சாதி ஆணவக்கொலைகள் தொடர்வதை குறிப்பிட்டபிருந்தா, இப்பிரச்சனையில் திமுகவும் அதிமுகவும் வாய்மூடி மவுனிகளாக இருப்பது ஏன் எனவும் அவர்கள் தலித் மக்களின் வாக்குகளுக்கு தகுதியானவர்கள்தானா எனவும் கேள்வி எழுப்பினார். அனைத்து சாதியினரின் ஒற்றுமை அடிப்படையில் தலித் மக்களின் பிரச்சனை தீர்க்க நாம் பாடு படுகிறோம் என்பதை குறிப்பிட்ட அவர் ஒரு அரசியல் மாற்று உருவாக்கிட எம்.சின்னதுரையை ஆதரிக்க வேண்டினார்.கூட்டம் முடிந்து மேடைக்கு கீழே வந்த பொழுது ஒரு வெளிநாட்டு ஆராய்ச்சி மாணவர் வந்து தம்மை அறிமுகப் படுத்திக்கொண்டார். தான் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் பிருந்தாவின் உரையைக் கேட்கவே இங்கு வந்ததாகவும் கூறினார். அவரது ஆராய்ச்சி பற்றி சிறிதுநேரம் விவாதித்த பிருந்தா அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு இரவு நேர உணவுக்காக சென்றார்.சாலையோர உணவு விடுதியில் உணவு உண்ட அவர் தொகுதி பொறுப்பாளரான மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கண்ணனிடம் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தார். உடன் இருந்த மாதர்சங்க தோழர்கள் சலோமி,கண்ணம்மா ஆகியோரிடமும் தேர்தல் பணியில் பெண்களின் பங்கு பற்றி விவாதித்தார். கண்ணம்மாவின் குழந்தைகள் பற்றியும் அக்கறையுடன் விசாரித்தார். விடுதிக்கு வெளியே வந்த பொழுது விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சிலர் பிருந்தாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

எங்கள் அணியே முதல் அணி!

மே 6 அன்று காலை புதுக்கோட்டையிலிருந்து நாகைக்கு பயணம் தொடர்ந்தது. புதுக்கோட்டை வாலிபர்சங்க மாவட்டச் செயலாளர் நாராயணன் வாகனத்தை ஓட்டினார். நகரச் செயலாளர் உடன் வந்தார். வாகனம்திருவாரூர் நெருங்கிய பொழுது கழிப்பறை பயன்படுத்தவேண்டும் என கூறினார். ஒரு பெரிய தங்கும் விடுதிக்குசென்ற நாங்கள் தோழர் பிருந்தா காரத் அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்வதையும் கழிப்பறை பயன்படுத்த தேவை உள்ளதாகவும் பொது கழிப்பறை இருந்தாலும் பாதகமில்லை எனவும் கூறினோம். விடுதியின் மேலாளர் “பிருந்தா காரத் அவர்களுக்கு பொது கழிப்பறை அளித்தால் எங்களுக்கு அவமானம். எனவே நாங்கள் ஒரு தங்கும் அறையை தருகிறோம் என கூறி அறைச்சாவியை அளித்தார். தேவை எனில் ஓரிரு மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்” எனவும் கூறினார். எனினும் தோழர் பிருந்தா அவர்கள் ஐந்து நிமிடங்களில் வந்துவிட்டார். விடுதி ஊழியர்களுக்கு நன்றி செலுத்தினார். அவர்கள் வாசல் வரை வந்து வழி அனுப்பினர். அப்பொழுது அங்கு ஏராளமான பாதுகாப்பு காவல்துறையினர் இருந்தனர். பாமக தலைவர் ராமதாஸ் அங்கு தங்கியிருப்பதாக தெரிவித்தனர். காவலர்களில் பலர் பிருந்தாவை சூழ்ந்துகொண்டு நலம் விசாரித்தனர். “இடைப்பட்ட நேரத்தில் வெண்மணிக்கு செல்ல முடியுமா?” என பிருந்தா கேட்டார். அதனை நாகை கட்சியின் மாவட்ட செயலாளருக்கு தெரிவித்தோம். அதற்கானஏற்பாடு செய்யப்பட்டது. கீழ்வேளூர் சாலையில் உள்ளகட்சி அலுவலகத்திற்கு வந்தோம். தோழர்கள் ஏ.வி.முருகையன், வேட்பாளர் நாகை மாலி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் இருந்தனர். வெண்மணிக்கு பயணித்தோம். அந்த தியாக பூமியில் உணர்ச்சிப்பூர்வமாக இருந்த பிருந்தா புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.தோழர்கள் மாரிமுத்து, முருகையன் ஆகியோரிடமும்தொகுதி பிரச்சனைகள் குறித்து கேட்டு அறிந்தார். பிருந்தாதங்கியிருந்த விடுதியில் சில திமுகவினரும் தங்கியிருந்தனர். அவர்களில் சில இளைஞர்கள் பிருந்தாவிடம் வந்து“உங்களைப்போன்ற தலைவர்களை பார்ப்பது எங்களின் பாக்கியம்” என்று கூறி அவரை வாழ்த்திச் சென்றனர். மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்கள் கூட்டம் நாகை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடந்தது. பலகேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு நிருபர் மூன்றாவது அணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்றுகேட்ட பொழுது, “உங்கள் கூற்று தவறானது; எங்கள் அணிதான் முதல் அணி” எனவும் பட்டென பதில் அளித்தார்.

திருக்குவளையில் மக்கள் வெள்ளம்

கீழ்வேளூர் தொகுதிக்குள் உள்ள திருக்குவளையில் (திமுக தலைவரின் ஊர்) 6.30 மணிக்கு கூட்டம்தொடங்கியது. மேடையிலிருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம்வரை மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது. மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள்! அடுத்த நாள் திரிபுரா முதல்வர் மாணிக்சர்க்கார் கீழ்வேளூரில் பேச இருப்பதால் ஒருபகுதிதான் திரட்டினோம் என தோழர்கள் கூறினர்.அங்கு உரையை தொடங்கிய பிருந்தா, பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த பெண்களைப்பார்த்து “நாள்முழுவதும் உழைத்துவிட்டு இக்கூட்டத்திற்கு வந்துள்ளசகோதரிகளுக்கு விசேட வணக்கம் செலுத்துகிறேன்” என்று கூறியபொழுது பெண்கள் எழுந்து ஆரவாரத்துடன் வணக்கம் கூறினர். நாகைமாலியின் சாதனைகளை, குறிப்பாக ஏராளமான பாலங்களையும் புதிய நியாயவிலைக் கடைகளையும் தொகுதிக்குள் உருவாக்கியதை பட்டியல் இட்டார். அப்பணி தொடர்ந்திடவும் மாற்றுஅரசியல் அணி உருவாக்கவும் நாகை மாலியை மீண்டும்தேர்ந்தெடுக்க வேண்டினார். பெண்களிடம் அவர்கள் சமையல் அறையை விளக்குமாறு கொண்டு சுத்தம் செய்வது போல இரவில் உங்கள் வாக்குகளை விலைபேச வரும் அரசியல்வாதிகளின் அரசியலை அகற்றி சுத்தப்படுத்துங்கள் என்று வலியுறுத்தினார்.கூட்டத்தை முடித்துவிட்டு கீழே இறங்கிய பொழுது உழைப்பாளி பெண்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். 
ஒவ்வொருவரிடமும் கைகுலுக்கினார். அடுத்த கூட்டம் நடக்கும் திருவாரூருக்கு பயணம் தொடர்ந்தது. அங்குவேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் மாசிலாமணி என்பதையும் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் தொகுதி என்பதையும் கேட்டு அறிந்தார். வாகனம்திருவாரூர் அடைந்தபொழுது இரவு மணி 8.30. மொத்தகூட்டமும் பிருந்தாவிற்காக காத்திருந்தது. சில பெஞ்சுகளைக் கொண்ட சிறு மேடையில் ஏறிப் பேசினார். தமிழகத்தில் மாசில்லா அரசியலை உருவாக்க மாசிலாமணியை ஆதரிக்குமாறு வேண்டியபொழுது கூட்டம் பெரும் கைதட்டல்களுடன் ஆமோதித்தது. கலைஞரின் பாசம் பெற்ற பிள்ளை மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதும் பிறகு அது என்ன என்று தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டதாக சால்ஜாப்பு செய்ததையும் பிருந்தா அவர்கள், எள்ளி நகையாடிய பொழுதுகூட்டத்தில் சிரிப்பலை அடங்க சிறிது நேரம் பிடித்தது.கூட்டம் முடிந்த பின், பத்தடி தூரத்தில் இருந்த வாகனத்திற்கு வருவதற்கு பிருந்தாவிற்கு 15 நிமிடங்கள் தேவைப்பட்டன.
ஏனெனில் கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்துபெண்களும் அவரை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்கவும் கைகுலுக்கவும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் அன்றைய கடைசிக் கூட்டமான நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பேரளம் சென்றோம். அங்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஜி.சுந்தரமூர்த்தி போட்டியிடுகிறார். 

தோழர் மாரிமுத்துவிடம் வேட்பாளர் பற்றியும் தொகுதிபிரச்சனைகள் பற்றியும் கேட்டறிந்தார். குறிப்பாக 2013ல்டெல்டா மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்ககோரி நடைபெற்ற இரவு பகல் முற்றுகைப் போராட்டத்திற்கு திருவாரூரில் தோழர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கியதும் அதன் விளைவாக மாவட்டத்திற்கு ரூ.400கோடிநிவாரணம் பெற்றதும் கேட்டு அறிந்தார். பேரளத்தில் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் உட்பட பலர் வரவேற்பு அளித்தனர். மேற்கண்ட பிரச்சனைகளை வலுவாக பிருந்தா எடுத்துரைத்தார். மீத்தேன் வாயு மற்றும் ஷேல் வாயு பிரச்சனைகள் குறித்தும்பேசினார். தோழர் நாவலன் அவர்களின் தியாகத்தினை குறிப்பிட்டார். அவருக்கு உண்மையான அஞ்சலி என்பதுசுந்தரமூர்த்தியை வெற்றி பெறவைப்பதுதான் எனவும்கூறினார். கூட்டத்திற்கு வந்திருந்த தோழர் நாவலன் அவர்களின் மனைவி மேடைக்கு வந்து தோழர் பிருந்தாவை சந்தித்தார். அவர் கண்கள் கலங்கின. பிருந்தா, அவரைத்தேற்றி சிறிது நேரம் உரையாடினார். ஒரு சிறிய மெஸ் உணவகத்தில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிருந்தா உணவு அருந்த அமர்ந்தார். அப்பொழுது சமையல் அறையில் இருந்து வியர்வையுடன் ஒருவர் பிருந்தாவிடம் வந்தார். தான் அந்தக்கடையின் உரிமையாளர் எனவும் தோழர் பிருந்தாவிற்காக தனது கைகளால் செய்ததாக கூறி இட்லி வைத்தார்.இதுவரை தான் சாப்பிட்டதில் இவ்வளவு சுவையானதாகவும் மென்மையாகவும் இட்லி இருந்தது இல்லை என்று பிருந்தா பாராட்டினார். பாதுகாப்பிற்காக வந்திருந்த காவலர்களை அழைத்து சாப்பிடுமாறு வற்புறுத்தினார். பல காவலர்கள் பிருந்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இரவு சுமார் 11 மணி அளவில் கும்பகோணம் ரயில்நிலையம் அடைந்தோம். ஓய்வு அறை உள்ளதா என்பதைவிசாரித்தோம். அப்பொழுது சுமார் 10 இரு சக்கர வாகனங்களில் சில இளைஞர்கள் அங்கு வந்தனர். பிருந்தாவின் கார் நோக்கி சென்றனர். காரிலிருந்து இறங்கிய பிருந்தாஅவர்களுடன் பேசினார். புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்பொழுது நேரம் இரவு 11.15!பின்னர் ஓய்வு அறைக்கு சென்றோம்.அங்கு ஒருஉயர்நீதிமன்ற நீதிபதி இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர். பிருந்தாவை பார்த்த நீதிபதி தனது மனைவியை அழைத்து கூறினார்: “இவர்தான் பெண்களுக்காக போராடுபவர்”.----------------THEEKKATHIR

5 comments:

 1. [[பயணச்சீட்டு பரிசோதகர் பிருந்தாவிடம் வேகமாக வந்து வணக்கம் தெரிவித்தார். “நான் பயணச்சீட்டு பரிசோதிக்கும் பெட்டியில் தாங்கள் பயணம் செய்வது எனது பெரிய பாக்கியம்” என்று கூறினார். தோழர் பிருந்தாவும் வணக்கம் தெரிவித்துவிட்டு வண்டியில் ஏறினார். சில நொடிகளில் வண்டி சென்றது.]]

  குளு குளு முதல் வகுப்பு தானே! ஹி! ஹி!! காம்ரேடுகளின் தலைவர்கள் எல்லாம் சொகுசு பயணம் தானே! குடும்ப அரசியல் தலை திரு. காரத் வரவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. கொத்தடிமை பினாமியே, இப்படியெல்லாம் எழுத உமக்கு கூச்சமே கிடையாதே? கொடநாட்டு ராணியிடம் போய் சொகுசு, உல்லாசம் என்பதைப் பற்றியெல்லாம் எழுது. சொந்தப் பெயரில் வர துப்பில்லாத நீரெல்லாம் . . .

   Delete
  2. நல்லவர்களை எள்ளி நகையாடினால், அது நாம் நம் சமூகத்துக்குச் செய்யும் துரோகம். அவர்களுக்கு வாக்களிக்காமல் இருப்பது நம்முடைய முடிவு ஆனால், விளைவுகளுக்கு நாமும்தான் பொறுப்பு. Yesterday.and.youவின் கருத்து அவரின் தரத்தைத்தான் காண்பிக்கிறது. ('நான் கம்யூனிஸ்டுகளின் ஆதரவாளன் அல்ல. அவர்களுக்கு வாக்களித்ததும் இல்லை. அவர்களிடமும் குறைகள் உண்டு. அது வெள்ளை வேட்டியில் உள்ள மைக் கறைகளைப் போல). கம்யூனிஸ்டுகளின் பங்கைக் குறைத்து மதிப்பிட்டு, 'நம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டாம்.

   Delete
  3. சார், அது ஒரு டுபாக்கூர் ஃபேக் ஐடி

   Delete
 2. Nature of Left Party Leaders-- the simplicity!C0m.Brindha cannot be an exemption.Your reply to the comment of kothadimai is more interesting.

  ReplyDelete