Monday, May 9, 2016

ஒரு அற்புதமான தலைவர் பற்றி

தமிழகத்தின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவரான தோழர் வி.பி.சிந்தன் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் வே.மீனாட்சிசுந்தரம் அவர்கள் நிகழ்த்திய உரையினை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். இதனை மின்னஞ்சலில் அனுப்பிய தோழர் விமலாவித்யா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

தோழர் வி.பி.சிந்தன் அவர்களுக்கு செவ்வணக்கம்


வி.பி.சிந்தன்---ஒரு அறிமுகம்
---
வே.மீனாட்சிசுந்தரம்


--
தமிழ் மண்ணில் கம்யூனிசத்தை விதைத்த முன்னோடிகளில் ஒருவரான வி.பி.சிந்தனைப் பற்றி பேச வாய்ப்பு கொடுத்த, சமூக விஞ்ஞான கழகத்திற்கு, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் பற்றி என்னை விட சிறப்பாகப் பேசுபவர்கள் பலர் இருக்கும் போது, என்னைப் பேச அழைத்து இருப்பது, எனது தகுதிக்கு மீறிய பெருமையாகக் கருதுகிறேன்.--
சிந்தனைப் பற்றி கூறுவதற்கு முன்பு, கம்யூனிச முன்னோடிகளைப் பற்றி, ஒரு சில வார்த்தைகள் கூற வேண்டியுள்ளது.

--‘
வி.பி.சி., பி.ராமமூர்த்தி, சீனிவாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணின், ஏ.நல்லசிவன், பி.ராமச்சந்திரன் போன்ற தமிழகத்தின் சுதந்திர போராட்ட காலத்துக் கம்யூனிஸ்ட் முன்னோடிகளை நாம் ஏன் நினைவில் கொள்ள வேண்டும், அவர்களை நினைவு கூர்வதால் என்ன பலன்?’ என்று சிலர் கேட்கலாம்.


--
என்னைப் பொருத்த வரை, இத்தருணத்தில் புரட்சிக் கவிஞர் விளாதிமிர் மாயக்கோவஸ்கி சொன்னதையே, திரும்ப கூற விரும்புகிறேன். அவர்,''I go to Lenin to clean off mine to sail on with revolution’' என்றார்.


அதாவது, “என்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு, புரட்சியோடு பயணிக்க, நான் லெனினை நாடுகிறேன்,” என்றார்.

--
அதுபோல என்னைப் போன்றவர்கள், இளமையில் ஆர்வத்தோடு ஏற்ற, புரட்சிகர லட்சியத்தைக் கடைசி வரை பற்றி நிற்கவும், தோல்வியால் மனதில் திரளும் சோர்வையும் அழுக்கையும் போக்கவும், எனது இந்த முன்னோடிகளின் நினைவுகளை நாடுகிறோம்.

--
இவர்களை நினைவு கூற, இவர்கள் என்ன சாதித்தார்கள் எனச் சிலர் கேட்கலாம். இது மார்க்சும், ஏங்கெல்ஸிம் என்னச் சாதித்தார்கள் என்று கேட்பதைப் போல் கொச்சையான கேள்விதான்

--
மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் போன்ற மார்க்சிய ஆசான்களைக் கூட, அவர்களது மறைவுக்குப் பிறகுதான் உலகம் முழுமையாகப் புரிந்து கொண்டது. அதுபோலவே நமது தமிழக மார்க்சிய ஆசான்களை, இன்னும் முழுமையாக, நாம் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

--
இந்த முன்னோடிகள்தான் சோசலிசத்தை லட்சியமாகக் கொண்டு அரசியலிலும் பொதுவாழ்விலும் இங்கு ஈடுபட்டனர். அரசியலில் புதிய கலாச்சாரத்திற்கு வித்திட்டனர். விடுதலைப் போராட்ட காலத்தில், அரசின் ஆயுதப்படை, காவல்துறை ஆகியவற்றின் தாக்குதலில் இருந்து தப்ப, தற்காப்பு உத்திகளை மக்கள் கற்க வழிவகுத்தனர்.

--
விடுதலைக்குப் பிறகு, பூர்ஷ்வாவின் தந்திர அரசியலுக்கு மாற்றாக, மானுட பாசத்தையும், மக்களின் ஒழுங்கமைந்த இயக்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட அரசியல் கலாச்சாரத்தைப் புகுத்தி, வாழ்ந்து காட்டினர். நாடாளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும், ஜனநாயகத்தை மேன்மைப்படுத்தும் போர்முனையாக மாற்றினர்.

--
பாட்டாளி வர்க்கத்தை அரசியலில் ஈடுபட தூண்டினர். புரட்சிகர சித்தாந்தத்தை கற்க வழிவகுத்தனர். சமூகத்தின் உழைப்புச் சக்தி வீணாக போகாமல், மானுட ஆக்கத்திற்குப் பயன்பட பொருத்தமான விவசாய தொழில்நுட்பங்களை, மக்கள் கண்காணிப்புடன் உருவாக்க, திறந்த மனதோடு போராடினர். அவர்கள் வகுத்த பாதையில்தான், புரட்சி பீடுநடையைப் போடமுடியும் என்பதைக் காலம் சீக்கிரம் உணர்த்தும்.

--
இந்த முன்னோடிகளின் வாழ்க்கையில் இருந்து, பொதுவான இரண்டு அம்சங்களை மட்டுமே நேரம் கருதி சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். முதலாவது அவர்களது Simplicity. அதாவது எளிமை. இரண்டாவது அவர்கள் வருந்திப் பெற்ற மனஅழகு.

--
நான் குறிப்பிடும் எளிமை காந்திய எளிமையல்ல, லெனினிய எளிமை. காந்திய எளிமை கதராடையோடு நின்று விடும். மக்களுக்கும், அந்தக் கதராடை கோமகனுக்கும் உள்ள இடைவெளி அதிகம். கதராடைக்குள் இருப்பது காந்தியவாதியா அல்லது கிரிமினலா என்பதை மக்களால் அறிந்து கொள்ளவே முடியாது.

--
ஆனால் லெனினிய எளிமையோ, மக்களோடு நெருக்கத்தைக் கொண்டு வரும். நடைமுறைகளை வெளிப்படையாக வைத்திருக்கும்.

--
நான் குறிப்பிடும் மனஅழகு, இங்கே அழகு என்று பிறர் பாராட்டும் ஒன்று என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்வது சரியல்ல. இதை மக்கள் புழங்கும் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ‘நல்ல மனதுஎன்று சொல்லலாம். மனஅழகு அல்லது நல்ல மனது என்பது உடல்அழகு போல இயற்கையிலேயே வாய்த்து விடாது. குழந்தைப் பருவத்திற்குப் பிறகு அழகிய மனதை அல்லது நல்ல மனதைப் பெறுவதற்குப் பயிற்சி தேவை.

--
நாம் அக்கறை காட்டுகிற உடல்அழகை ஓரளவுக்குதான், நாம் மேன்மைப் படுத்த முடியும். ஆனால் கம்யூனிஸ்டுகள் அக்கறைப் படுகிற மனஅழகை, எல்லை வகுக்க முடியாத அளவுக்கு மேன்மைப் படுத்திக் கொண்டே போகலாம். யார் வேண்டுமானாலும் மனசுத்தியான பயிற்சியின் மூலம் அதைப் பெற முடியும்.


--
விமர்சனம்=சுயவிமர்சனம் என்ற கருவியைப் பயன்படுத்தி மனஅழகை மேன்மைப் படுத்துவது கம்யூனிஸ்டுகளின் இயல்பு. இது தோழமை உணர்வு கலந்த கூட்டு முயற்சியினாலும், தனிநபர் பயிற்சியினாலும் அடைய கூடியது. விமர்சனங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள,  னப்பக்குவம் தேவைப்படுகிறது.


--
பிறரோடு உறவாடுகிற போதும், வாதிக்கிற பொழுதும், மனது எந்தப்பக்கம் செல்கிறது, மனது எப்படி உணர்கிறது என்பதைப் பொறுத்தே மனஅழகை மேன்மைப் படுத்த இயலும். தகவல்களைத் தேடவும், அவைகளிலிருந்த உண்மையைத் தேடவும், தவறுகளைத் திருத்தவும் மனது தயாராகும் போதுதான், மனம், அழகைப் பெறுகிறது.

--
நிலவரங்களை ஆய்வு செய்யாமல், கண்ணை மூடிக் கொண்டு, உளறுவாயாக ஆவதை, இந்த மனஅழகு தடுத்து விடுகிறது. நுணங்கிய கேள்வியரல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது என்பதால், மனம் தேடுவதிலும், கண்டுக் கேட்பதிலும், நாட்டம் கொண்டு விழைகிறது.
அப்படிப்பட்ட எளிமையும் மனஅழகும் தோழர் வி.பி.சிந்தனுக்கு இருந்தது. இந்த இரண்டும் இயற்கையாகவே அவருக்கு வாய்த்ததல்ல.

---
சகதோழர்களின் தோழமை உறவாலும், தீவிர மனபயிற்சியாலும் அவர் அதைப் பெற்றார். அடுத்தவர் மனதில் இடம் பிடிக்க, இந்த அழகிய மனது அவருக்குப் பெரிதும் உதவியது.


--
வி.பி.சி என்று எங்களால் அன்போடு அழைக்கப்படுகிறத வி.பி.சிந்தன் அவதார புருசரல்ல. அவர் சாமான்யர்களில் ஒருவராக வழ்ந்தவர். உங்களுக்கும் எனக்கும் இருக்கிற பலவீனங்களும், விருப்பு வெறுப்புகளும் அவருக்கும் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்ததால், எளிமையும் அழகிய மனதும் கொண்ட அரசியல் தொண்டராக அவர் உயர்ந்தார். இறுதி மூச்சு உள்ள வரை, மக்களுக்குச் சேவை செய்யும் அரசியல் தொண்டனாகவே மகிழ்வுடன் வாழ்ந்தார். அவரது நெருக்கம் எங்களை உற்சாகப் படுத்தியது.
விடுதலைப் போராட்டக் காலத்தில், மார்க்சிய கருத்துகளை விதைக்கும் அரசியல் தொண்டனாக அவர் கால் பதிக்காத இடமே தமிழகத்தில் இல்லை.

---
எல்லா தரப்பு மக்களிடையேயும் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டினார். பாரதிதாசனுடன் அவருக்கு இருந்த நெருக்கம், சிண்டன் என்று அவருக்கு இருந்த மலையாளப் பெயரை சிந்தன் என்று மாற்றிக் கொள்ள தூண்டியது.

---
நண்பர் எம் ஆர் ராதா, சிறைவாசத்தின் போது அவரது நண்பரானார். கத்திகுத்துப் பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று போது, எம். ஆர்.ராதா அவரை நலன் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர் வேடிக்கையாக, “யோவ்!! நீர் கத்திக்குத்துக்குப் பலியாகி இருந்தால், தமிழகமே உன் கட்சி பின்னர் வந்து, உனது லட்சியத்தை நிறைவேற்றி இருந்திருப்பார்கள்,” என்றாராம். சிந்தனுக்கும் அவருக்கும் இருந்த மிகுந்த நெருக்கத்தினால், அவர் அப்படிச் சொன்னார் என்று இதை விளங்கிக் கொள்ள வேண்டியதில்லை.
சிந்தன் துப்புரவு தொழிலாளர்களின் விட்டிற்குச் சென்று குடும்பநலன் விசாரிப்பார். அவர்கள் வீட்டில் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்.

--
அதே போல் அரண்மனைக்கு ராஜா சர் முத்தையா செட்டியாராலும் அழைக்கப் படுவார். அங்கும் கட்சியின் லட்சியத்தை விளக்கிப் பேசுவார். முத்தையா செட்டியார் விருந்தோம்பலில் நாட்டம் உள்ளவர். விருந்து படைப்பதற்கு அவர் ஒரு பட்டியலே வைத்திருந்தார். அந்தப் பட்டியலில் பிரபல விஞ்ஞானிகள் இலக்கிய வித்தகர்கள் அரசியல் தலைவர்கள் என பலரது பெயர் இடம் பெற்றிருக்கும். அப்பட்டியலில் அவர் சிந்தனின் பெயரையும் வைத்திருந்தார்.

--
சென்னை நகரிலுள்ள பிரபலமான மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள் என அனைவரிடமும் அரசியல் தத்துவ சமூகப் பிரசினைகளை விவாதிக்கிற அளவுக்கு, சிந்தன் நெருக்கத்துடன் இருந்தார்.   கல்லூரி விடுதிகளுக்குச் சென்று மாணவர்களுடன் அளவாளவுவது சிந்தனின் வழக்கம்.

அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி வி.பி.சி.யை பகலிலே மார்க்சிஸ்ட் என்றும், இரவில் மாணவர்களை வன்முறைக்குத் தூண்டும் நக்ஸலைட் என்றும் அவதூறு செய்தார். உண்மையில் வி.பி.சி. வன்முறையையோ, தனிநபர் சாகத்தையோ நம்புபவர் அல்ல. இந்த இடத்தில், எனது அனுபவம் ஒன்றை வாக்குமூலமாகச் சொல்லியே ஆக வேண்டும்.

---
சிந்தன் இரவு மாணவர்கள் விடுதிகளுக்குச் செல்லும் போது, நானும் கூடச் சென்றிருக்கிறேன். ஒருமுறை விக்டோரியா ஹாஸ்டலில் மாணவர்களுடன் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மாணவன், கொடூரமான நிலப்பிரபுக்களுக்கும் காவல்துறையினருக்கும் பாடம் கற்பிக்க தனிநபர் பயங்கரவாதம்தான் பொருத்தமானதுதான் என்றார்.

--
அது மக்களின் பயத்தைப் போக்க அவசியமானது என அந்த மாணவர் வாதிட்டார். மக்களின் ஒருங்கிணைந்த இயக்கத்தின் மூலமே புரட்சி பூக்கும் என்று விளக்கிய வி.பி.சி., அக்டோபர் புரட்சியை எடுத்துக் காட்டியும், 1848ல் ஐரோப்பாவில் நடந்த எழுச்சிக்குப் பிறகு கொடுமைகள் நர்த்தனம் ஆடிய போது கிட்டிய மார்க்ஸின் படிப்பினைகளுடன் எடுத்துக்காட்டியும், நமது தெலங்கானா அனுபவங்களையும் விளக்கிப் பேசியும், தனிநபர் பயங்கரவாதம் உதவாது என விவரித்தார்.


----
அந்த அறையில் ஏழெட்டு மாணவர்களே இருந்தனர். உரையாடல் சுவாரசியமாக போனதால், நேரம் போனதே தெரியவில்லை. இரவு மணி 12 ஆகிவிட்டது. ஒருவழியாக வாதத்தை முடித்து விட்டு ஹாஸ்டலை விட்டு வெளியேறினோம்.


---
அவர் வீடு சாந்தோமில் இருந்தது. எனது வீடோ சிந்தாரிப்பேட்டையில் இருந்தது. தனியே நடந்தே வீடு சென்றோம். சில வாரங்கள் கடந்து, மீண்டும் மாணவர்களைச் சந்திக்கச் சென்ற போது, சிந்தனோடு வாதிட்ட மாணவரைக் காணவில்லை. விசாரித்த போது, அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்து மாணவர் என்பதும், நக்சலிசம் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிந்தது.


---
அச்சந்திப்புக்குப் பிறகு, அந்த மாணவர் இந்த மாணவ விடுதி  மாணவர்களைத் தொடர்பு கொள்வதில்லை என்று அங்கிருந்த  மாணவர்கள்  தெரிவித்தார்கள்.


--
அந்த மாணவர் வேறு யாருமில்லை. கடலூர் மாவட்டத்தில், ஒரு முந்திரி தோட்டத்தில், கைக்குண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் கணேசன் ஆவார். விசயம் தெரிந்த வி.பி.சி., மிகவும் வருந்தினார். தன்னால் லட்சியப் பிடிப்பு கொண்ட ஒரு மாணவனைச் சரியான திசைக்குக் கொண்டு வர முடியவில்லையே என்று மிகவும் வருந்தினார்.


---
அவனோடு தொடர்பு கொண்ட மாணவர்கள் அவனைப் பின்பற்றி தவறான பாதையில் சென்று விடாமல் தடுத்தே நமக்குக் கிடைத்த வெற்றியென சந்தோசப்படுங்கள் என்று நாங்கள் கூறியதை, அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த மாதிரியான வெற்றி எனக்குத் தேவையில்லை, இதில் அந்த மாணவனைச் சரியான திசைக்கு வழிநடத்திக் கொண்டு செல்வதில் நான் அடைந்த தோல்விதான் எனக்குப் பாடம் என்றார். இதுதான் அவரது மனஅழகு.


1970
களில் சென்னையில் நடந்த தொழிலாளர்களது ஒன்றுபட்ட போராட்டத்தைப் பார்த்து அப்போது ஆட்சியில் இருந்த முதலமைச்சர் கருணாநிதி பதைத்துப் போனார். தனது இரும்புக் கரத்தின் மூலம், வி.பி.சிந்தன், பரமேஸ்வரன் (சென்னை மாவட்ட மார்க்ஸிஸ்ட் கட்சியின் செயலாளர்) ஹரிபட், குசேலர் ஆகியோரைக் கைது செய்து, தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ், தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருந்தார்.

ஆவடி குளோதிங் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து ஆவடியில் நடந்த கூட்டத்தை, காவல்துறை தடியடி மூலம் கலைத்தது. அப்போது அங்கு ஒரு வீட்டில் இருந்த வி.பி.சிந்தனையையும், குசேலரையும், எலும்பு முறிய அடித்துத் துவைத்து, மருத்துமனையில் படுக்க வைத்தது அன்றைய காவல் துறை. அந்தத் தாக்குதலில் இருந்து அதிசயமாக இருவரும் உயிர் பிழைத்து வந்தனர்.  கடைசியாக மூலக்கடை சந்திப்பில், வி.பி.சிந்தன் பயணித்த பேருந்து நிறுத்தப்பட்டு,  முதலாளிகளின் அரவணைப்பில் இருந்த தி.மு.க.வின் கத்தி அவரது உயிரைக் குடிக்க, அவரது மார்புக்கூட்டுக்குள் பாய்ச்சப்பட்டது. ஆனால் ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் உமாபதியின் கத்தி தி.மு.க.வின் கத்திக்குத்தில் பாதிக்கப்பட்ட சிந்தனின்  உயிரைக் காப்பாற்றியது.


எங்கு விவசாயிகளும், தொழிலாளர்களும் சங்கமாக திரள்கிறார்களோ, அங்கெல்லாம் வி.பி.சிந்தன் தோன்றி விடுவார். அவர்களின் ஆதங்கங்களைக் காது கொடுத்துக் கேட்பார். அவர்களில் ஒருவராகி விடுவார். அவரது சிறப்பு என்பதே, தொழிலாளர்களை கட்சி வேறுபாடுகளை மறந்து, விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, வர்க்க உணர்வுடன் பிரசினையைப் பார்க்க வைப்பதுதான்.

--
ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்றாலும், தொழிலாளர்கள் பல கோஷ்டிகளாக பிரிந்து கிடப்பது நாம் அறிந்ததே. இந்தப் பிரிவினைதான் வர்க்க ஒற்றுமைக்கு வேட்டு வைத்து விடுகிறது. சங்கப் பொதுக்குழுவைக் கூட்டி, வேறுபாடுகளையும், மாற்று முடிவுகைளையும் வாதித்து முடிவெடுக்கும் நிலை இன்று கூட ஏற்படவில்லை. பொதுக்குழுவைக் கூட்டினால் அடிதடியில் முடியும். ஒரு கோஷ்டியின் ஆதரவோடு தலைவராக வந்தவரை, எதிர் அணியினர் விரட்டி அடிப்பது இன்றும் தொடர்கதையாக நடக்கதான் செய்கிறது. சிந்தன் இந்த நிலைக்கண்டு வருந்துவார்.

---
ஆத்திரப்படும் தொழிலார்களின் கோபத்தை மட்டுப்படுத்த வர்க்க சமரசம் பேச தலைவர்கள் ஆளாகும் போது, நாங்கள் அதைக் கண்டு நகைப்போம். சிந்தன் எங்களைக் கண்டிப்பார். தொழிலாளர்களின் ஆத்திரம் முதலாளிகளின் கையில் கிடைத்த கத்தி என்பார்.
இந்தப் பிரசினைகளுக்கு, மார்க்சியவாதியான வி.பி.சிந்தன், தான் கற்ற மார்க்சிய தத்துவப்படி, தீர்வைத் தேடினார். கோஷ்டியாகச் செயற்படுவதற்கு, தொழிலாளர்களைக் குற்றம் சாட்டுவது சரியல்ல என்பதை உணர்ந்தார். வெளியே இருக்கும் அரசியல் தலைவர்கள், போட்டி தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகம் ஆகியவர்களே வர்க்க ஒற்றுமை கட்டப்படாததற்குச் சூத்ரதாரிகள்.

---
இவர்களில் நிர்வாகத்தைத் தவிர மற்றவர்களை விமர்சிப்பதால், வர்க்க ஒற்றுமையைக் கட்டி விட முடியாது. வி.பி.சி வர்க்க ஒற்றுமைக்கு இடையூறாக இருப்பதை நீக்கி அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றுவதற்கு இரவுபகலாய் உழைத்தவர். அவர் மற்றவர்களைப் போல, தன்னை முன்நிறுத்த ஒரு போதும் முனைய மாட்டார்.


இதற்காகவே அவர் மெட்ராஸ் டிரேட் யூனியன் கவுன்சில் என்ற அமைப்பை உருவாக்கினார். இதற்குக் கன்வீனராக இந்திய ஆயில் தொழிற்சங்கத்தின் செயலாளர் டி.எஸ்.ஆர் என்றழைக்கப்படும் டி.எஸ்.ரெங்கராஜன் ஆனார். இவ்வமைப்பு காப்பீடு, வங்கி, அரசு போக்குவரத்து, மின்சார மற்றும் துறைமுகத் தொழிற்சங்கங்களின் முன்னோடிகளைக் கொண்ட அமைப்பாக பரிணமித்தது. இந்த அமைப்பின்
நோக்கம் வர்க்க ஒற்றுமை.இந்த அமைப்பு நடத்தும் கூட்டங்களில், தி.மு.க.வைத் தவிர மற்ற அனைத்துத் அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கு பெற்றனர். கன்வீனராக இருந்த டி.எஸ்.ஆர். திறமையாகச் செயற்பட்டு, அனைத்துத் தவலைவர்களையும் அனைத்து வேறுபாட்டையும் மறந்து ஒன்றாக நிற்க வைத்தார். அவர் வி.பி.சி.யிடம் ஆலோசனைப் பெற்று நடப்பதை, வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.

---
அவரது தொண்டும், மெட்ராஸ் டிரேட் யூனியன் கவுன்சில் என்ற அமைப்பும் இல்லை என்றால், எம்.ஆர்.எப்., சிம்சன், ஆவடி குளோதிங் ஆலை, டி.வி.எஸ். போராட்டங்களில் வர்க்க ஒற்றுமையைக் கட்டியிருந்திருக்க முடியாது. அரசும், முதலாளிகளும், தொழிலாளர்களை வஞ்சிப்பதைத் தடுத்திருந்திருக்க முடியாது.

தொழிற்சங்கப் பேரவையைச் சுமுகமாக நடத்த, கோஷ்டி தலைவரகளை அடையாளம் காண்பது முக்கியம். அதற்கான விபரங்களைச் சேகரிக்க, சிந்தன் நேரடியாக தொழிலாளர்களின் வீட்டிற்கே சென்று விடுவார். கோஷ்டி போக்கின் வேர்களை அறிந்து அதைக் களைய சிரத்தை எடுத்துக் கொண்டுச் செயற்படுவார். வர்க்க ஒற்றுமையைக் கட்டப் பாடுபடுவது என்பது புலி வாலைப் பிடித்த கதை என்பார்.


---
எனெனில் புலியைக் கட்டுக்குள்ளும் கொண்டு வர முடியாது, புலியைச் சும்மாவும் விட்டு விட முடியாது.  

இந்தப் புலி வாலைப் பிடித்தப் போராட்டத்தில், அவரது சொல்லும் செயலும் விஞ்ஞான அடிப்படையில் இருந்தது. மார்க்சிய சிந்தாந்தப் பிடிப்புடன் இருந்தது. அதுதான் அவரது எளிமைக்கும், அழகியமனதுக்கும் வழிவகுத்தது. அதுதான் மார்க்சிஸ்ட் கட்சியையும் எளிமையாகவும் அழகிய மனத்துடன் போராட்டத்தில் நிற்க வைத்தது. இதுவே அவரை மகிழ்ச்சியாக வாழ வைத்ததுடன், பிறரையும் மகிழ்விக்க வைத்தது.


விரும்பினால், நீங்களும் சிந்தனாகலாம். அதற்குத் தேவை எளிமையும், அழகிய மனதும்தான். அதைப் பயிற்சியினால் அடைய முடியும்.

1 comment:

  1. simply superb!Red salute to com.sinthan and com.meenakshi sundaram.hearty thanks to you also

    ReplyDelete