Saturday, May 21, 2016

எச்சரிக்கை. அத்து மீறி பிரவேசிக்காதே. . .



கடந்த 15.05.2016 அன்று வண்ணக்கதிரில் பிரசுரமான எனது சிறுகதை. ஓவியம் தோழர் ஸ்ரீரசா.

அத்து மீறி பிரவேசிக்காதே. . .
வேலூர் சுரா



“சுதா, சுதா” என்று சந்தோஷமாய் குரல் கொடுத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் சங்கர்.

“என்னங்க, குரல்லயே ஒரு குஷி தெரியுது?” என்று கேட்ட மனைவியிடம் ஒரு கவரைக் கொடுத்தான்.

கவரைப் பிரிக்காமலேயே “என்னங்க பேங்க் லோன் சாங்ஷன் ஆர்டர் வந்திடுச்சா?”  என்று  சுதா கேட்க

“எப்டிம்மா, இவ்வளவு கரெக்டா சொல்ற?”

என்று ஆச்சர்யமாய் வினவினான் சங்கர்.

“கையில பேங்க் கவர், உங்க குரலில் சந்தோஷம். வேற என்னவா இருக்கும்?”

“அஞ்சு மாச அலைச்சல் ஒரு வழியா முடிஞ்சுது. இனிமே சீக்கிரமா வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபடியே சங்கர் கூறினான்.

அவர்களின் பத்து வருடக் கனவு சொந்த வீடு. இருவருமே தனியார் கம்பெனி ஊழியர்கள்தான். கொஞ்சம் கொஞ்சமாய் சேமித்து ஊருக்கு சற்று வெளியே ஆறு வருடங்களுக்கு முன்பாக வாங்கிப் போட்ட அடிமனையில் வீடு கட்டலாம் என்று முடிவு செய்து ஒரு வங்கியிடம் வீட்டுக்கடன் விண்ணப்பித்திருந்தார்கள்.

நோட்டீஸில் இருந்த  எளிமையான கடன் வழங்கல், நிஜத்தில் இல்லை. இது வேண்டும், அது வேண்டும் என்று பல முறை அலைய விட்டார்கள். அவர்கள் கேட்கும் ஒரு ஆவணத்தை கஷ்டப்பட்டு தயார் செய்து கொடுத்தால் இன்னொன்று கேட்பார்கள். வங்கியின் வக்கீலும் இஞ்சினியரும் நம்மை வைத்து காமெடி செய்கிறார்களா என்று கூட சங்கருக்கு தோன்றும்.  முனிசிபாலிட்டி அப்ரூவல் மிகவும் சிரமம் என்று வேறு பயமுறுத்தினார்கள். இப்போதைய சேர்மன் கவுன்சிலராக இருந்த போது போட்ட பிளாட்டுக்கள் என்பதால் அது அவ்வளவு காலம் பிடிக்கவில்லை.

 “இதுதாங்க என் தொழில் தர்மம்” என்று தங்கப்பல் தெரிய சிரித்தபடியே அவனுக்கு அப்ரூவலைக் கொடுத்தார். அதற்காக பணத்தில் ஒன்றும் குறைத்துக் கொள்ளவில்லை என்பது வேறு விஷயம். எல்லாம் கொடுத்தும் இழுத்தடித்தார்கள். “கொடுக்கிற கடன் திரும்பி வருமா என்பதை உறுதி செய்யனுமில்லையா?” என்று வங்கி மேனேஜர் சொல்லும் போதெல்லாம் “அப்புறம் ஏங்க அந்த மல்லய்யாவுக்கு கொடுத்த பணம் மட்டும் வரல” என்று மனதில் தோன்றும் கேள்வியை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொள்வான்.

எப்போது வேலையை ஆரம்பிப்பது, ஏற்கனவே திட்டமிட்டபடியே கட்டுவதா இல்லை ஏதாவது மாற்றம் செய்வதா, தரைக்கு டைல்ஸே போதுமா இல்லை மார்பிள் போடுவோமா? கையிருப்பும் வங்கிக் கடனும் போக எவ்வளவு துண்டு விழும், அதை எப்படி எதிர்கொள்வது, ஈ.எம்.ஐ பிடிக்கத் தொடங்கிய பின் மாதாந்திர செலவுகளை எப்படி சமாளிப்பது என்று இரவு முழுதும் விவாதித்துக் கொண்டே இருந்தார்கள்.

மறுநாள் மாலை அலுவலகத்திலிருந்து நேரே காண்ட்ராக்டர் அலுவலகத்திற்கு போய் விட்டார்கள். அவர் வரும் வரை அங்கே டீப்பாயில் இருந்த புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த கலரில் பெயிண்ட் அடிக்கலாமா? இது போல அலமாரி வைக்கலாமா என்று முந்தைய நாள் விவாதத்தை தொடர அந்த புத்தகங்கள் தூண்டியது.

“போர் போட்டு கரெண்ட்டுக்கு ஏற்பாடு செஞ்சு கொடுத்திருங்க, ஆறு மாசத்தில கிரஹப்பிரவேசம் செய்யறதுக்கு நான் கியாரண்டி” என்று உத்தரவாதம் கொடுத்து அட்வான்ஸ் வாங்கிக் கொண்டார். முன் கூட்டியே பேசியபடி அக்ரிமெண்டிலும் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

“சார் மனை பூஜை போட்டுட்டு போர் போடலாமா” என்று சங்கர் அவரிடம் கேட்க

“ஆமாம். அப்பத்தான் எந்த வில்லங்கமும் இல்லாமல் வேலை நல்லபடியா நடக்கும்”

“வாஸ்து புருஷன் கண் திறக்கும் நல்லதொரு நாள்” பார்த்து புரோகிதர் கணித்துத் தந்தார்.

“நவ தானியம், நவ ரத்தினம் எல்லாம் போட்டுதான் பூஜை செய்யனும். நீங்க ஒன்னும் சிரமப்பட வேண்டாம். மொத்தமா ஐயாயிரம் ரூபாய் கொடுங்க. நானே எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து திவ்யமா செஞ்சு கொடுத்திடறேன்”

ஞாயிறு காலை மனைக்குச் சென்றார்கள். காண்ட்ராக்டர் அனுப்பிய ஆட்கள் முன்பே வந்து புதர்களை அகற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். இப்போதே வீடு கட்டி முடித்த உணர்வு வந்திருந்தது. அந்த தெருவில் இவர்கள் மனைக்கு நான்கு ப்ளாட்டுக்கள் தள்ளி சின்னதாக ஒரு வீடு இருந்தது. எதிர் வாடையில் இரண்டு வீடுகள் அவ்வளவுதான். இவர்கள் மனைக்கு நேர் பின்னால் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டுக்காரர்கள் கரெண்ட் கொடுக்க ஒப்புக் கொண்டிருந்தார்கள். “பரவாயில்லை. நாட்டில நல்லவங்களுக்கும் இருக்கத்தான் செய்யறாங்க” என்று பேசிக் கொண்டிருந்த போது  

“என்ன சார், வீட்டு வேலைய ஆரம்பிக்கப் போறீங்களா?”

என்ற குரல் கேட்டு திரும்பினார்கள்.

பைக்கில் அமர்ந்தபடியே வேட்டி கட்டிய ஒரு மனிதர் இவர்களை அழைத்தார்.

“நான் ராஜவேலு. இரண்டு தெரு தள்ளிதான் இருக்கேன். இதே தெருவில கூட இன்னொரு பளாட் இருக்கு. நமக்கு மெக்கானிக்கல் ஸ்பேர்ஸ் கடை இருக்கு”

என்று சுய அறிமுகமும் செய்து கொண்டார்.

“தண்ணிப் பிரச்சினை இல்லாத ஏரியா. தேவைப்படற பொருள் வாங்க பக்கத்துல கடை இருக்கு. உங்கள மாதிரி நாலு பேர் வீடு கட்டிட்டு வந்தா ஏரியா கொஞ்சம் டெவலப் ஆகும்”

என்று சொல்லி விட்டுப் போனார்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் மனை பூஜை போட்டோம். அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்களும் கலந்து கொண்டார்கள். அந்த ராஜவேலுவும் கூட அந்த வழியாக போனவர் வண்டியிலிருந்து இறங்கி வந்து தீபாராதனை காட்டுகையில் கண்ணில் ஒற்றிக் கொண்டு போனார்.

நீர் மட்டம் பார்ப்பவரும் அன்றே வந்தார். கையில் நான்கைந்து பாட்டில்களை கயிறு போட்டு மேலே தொங்க விட்டிருந்தார்.  மெது மெதுவாக பாட்டில்களை சுற்றிக் கொண்டே நடந்தார்.

“என்னங்க, வழக்கமா குச்சி வைச்சுதானே பார்ப்பாங்க, இவர் என்ன வித்தியாசமா இருக்காரு?”

என்று மெல்லிய குரலில் சங்கர் கேட்க

“இவர் டெக்னிக்கே தனி. இவர் சொல்ற இடத்துல கண்டிப்பாக தண்ணி இருக்கும்” என அதே மெல்லிய குரலில்  காண்ட்ராக்டர் பதில் சொன்னார்.

ஒரு இடத்தில் அவர் நிற்க பாட்டில்கள் தானாக சுழன்றது போல ஒரு தோற்றம் கிடைத்தது.

“இங்க போர் போடுங்க. அறுபதிலேருந்து எண்பது அடிக்குள்ள தண்ணி கிடைக்கும். முன்னூறு அடி வரைக்கும் போர் போடுங்க”

என்று சொல்லி ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு அவர் போய் விட்டார்.
ஞாயிற்றுக் கிழமை. காலை ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுவதாகச் சொன்ன போர்வெல்காரர்கள் ஏழு மணிக்குக் கூட வரவில்லை. போனையும் எடுக்கவில்லை. நிதானமாக ஒன்பது மணிக்கு வந்தார்கள்.

“என்ன சார் பண்றது. நேத்து நைட் முடிக்கையில் ஒரு மணி ஆயிடுச்சு. ஆயிரம் அடி போட்டும் தண்ணி வரல. இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்னு சொல்லி இருநூறு அடி போட்டும் கதைக்காவலை. அதான் பசங்க எழுந்திருக்க லேட்டாயிடுச்சு. உங்க அதிர்ஷ்டம் எப்படினு பார்ப்போம்”

என்று அவர் சொல்ல சங்கருக்கு வயிற்றில் அமிலம் ஊறத் தொடங்கியது.

கம்ப்ரஸர் மெஷினை ஒழுங்கு படுத்தவே ஒரு மணி நேரம் ஆயிற்று. கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைத்து வேலையை ஆரம்பித்தார்கள். மண்ணைக் கிழித்துக் கொண்டு ட்ரில்லர் உள்ளே இறங்கியது. பேரோசையோடு புழுதிப்படலமாக அந்த இடமே மாறியது. சின்னச் சின்ன கற்கள் மட்டும் வந்து கொண்டிருந்தது. அறுபது அடி இறங்கும் வரை சங்கருக்கும் எந்த எதிர்பார்ப்பும்  இல்லை. ஏழாவது பைப் முடிந்தும் தண்ணீர் வருவதற்கான அறிகுறி தெரியவில்லை.

“கவலைப்படாத சார், உங்க ப்ளாட்டு ஆத்துக்கு பக்கத்துலதான் இருக்கு. ஆறுல இப்போ தண்ணி இல்லைனாலும் ஆயிரம் வருஷம் ஓடினதுதானே” என்று போர்வெல்காரர் நம்பிக்கை கொடுத்தார்.

அடுத்த பைப் இறக்குகையில் வெளியே வந்த மண்ணில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்தது. நம்பிக்கையும் கொடுத்தது. நூறு அடி வரை அப்படித்தான் இருந்தது. அதற்குப் பின்பு தண்ணீர் பீறிட்டு கிளம்பியது. ஓவென்று அங்கே உள்ளவர்கள் கூச்சலிட அந்த உற்சாகத்தில் சங்கரும் இணைந்து கொண்டான்.

“நீங்க ரொம்ப அதிர்ஷ்டக்காரர் சார். தண்ணி போர்ஸ் நல்லாவே இருக்கு” என்று போர்வெல்காரர் மனமாறக் கூறினார். இருநூற்றி ஐம்பது அடி ஆன பிறகு ‘பிரஷர் அதிகமாவே இருக்கு. இதுக்கு மேல முடியாது என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்கள். ட்ரில்லரை வெளியே எடுத்து விட்டு பி.வி.சி பைப்பை உள்ளே இறக்கினார்கள். நூற்றி இருபது அடிக்கு பைப் இறக்கியிருக்கிறோம் என்று கணக்கு சொன்னார்கள்.

ஒரு துண்டுச்சீட்டில் போர் போட ஒரு அடிக்கு அறுபது ரூபாய், பைப் ஒரு அடிக்கு நூற்றி ஐம்பது ரூபாய், சாப்பாட்டுச் செலவு ஆயிரம் ரூபாய் என்று முப்பத்தி நான்காயிரம் ரூபாய் கேட்டார்.

“பைப் கடையில வாங்கினா அடி ஐம்பது ரூபாய்தானே. நீங்க என்ன நூத்தி ஐம்பது ரூபாய் கேட்கிறீங்க”

“இதெல்லாம் முன்னாடியே சொன்னதுதான சார்! நல்லபடியா தண்ணி வந்துருச்சு, சந்தோஷமா குடு சார்”  என்று  சங்கரை பேசவே விடாமல் பணத்தை வாங்கிக் கொண்டு லாரியை கிளப்பிக் கொண்டு போய் விட்டார்கள்.

ஏதோதோ சந்தோஷக் கனவுகளோடு தூங்கிக் கொண்டிருந்த சங்கருக்கு அலைபேசியின் ஒலி இரண்டாவது முறைதான் கேட்டது. பின் பக்கத்து வீட்டுக்காரர்தான் கூப்பிட்டிருந்தார்.

“சங்கர், உடனே புறப்பட்டு உங்க ப்ளாட்டுக்கு வாங்க, எதுக்கும் கையில உங்க டாகுமெண்ட்ஸையும் கொண்டு வாங்க”

“என்ன சார், ஏதாவது பிரச்சினையா?”  என்று கேட்ட சங்கரிடம்

“அதெல்லாம் போனில் வேண்டாம். சீக்கிரமா வாங்க” என்று அவர் இணைப்பை துண்டித்தார்.

ப்ளாட்டிற்கு போன சங்கருக்கு வாழ்நாளில் இதுவரை காணாத ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய மனையைச் சுற்றி இரும்பு வேலி எழுப்பப்பட்டிருக்க, “இந்த மனைப்பிரிவு திரு ஜெயவேலு மகன் ஜே.ராஜவேலுவிற்குச் சொந்தமானது. அத்து மீறி பிரவேசிப்பவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று  சின்னதாக ஒரு ப்ளெக்ஸ் பேனரும் அட்டையில் ஒட்டப்பட்டு கட்டப்பட்டிருந்தது.

தெருவில் இருந்த ஆட்கள், பின் வீட்டுக்காரர், ராஜவேலு எல்லோருமே அங்கே இருந்தார்கள்.

“இது என்னங்க அநியாயமா இருக்கு? என் ப்ளாட்டுல நீங்க வேலி போட்டிருக்கீங்க?” என்று சங்கர் ஆவேசமாக கேட்க

“உங்க ப்ளாட்டா? கொஞ்சம் ரிகார்டை ஒழுங்காப் பாருங்க. உங்க ப்ளாட் நம்பர் என்ன? ” என்று கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் ராஜவேலு சொன்னார்.

“பதினாலாம் நம்பர் ப்ளாட்டு” – சுதா

“லே அவுட் மேப்பை பாருங்க”

மேப்பைப் பார்த்தார்கள். மேப் படி பதினாலாம் நம்பர் எங்கே வருகிறது என்று பார்த்தவர்களுக்கு  ஒரு நிமிடம் இதயம் நின்று போய் விட்டது. இவர்கள் மனை பூஜை செய்து போர் போட்ட ப்ளாட்டிற்கு வலது பக்கத்தில் இருந்ததுதான் இவர்கள் வாங்கிய பதினாலாம் நம்பர் ப்ளாட்டு.

“என்னோட இடத்துல நீங்க பூஜை போட்டு வீடு கட்டுவீங்க, போர் போடுவீங்க. இது மட்டும் ரொம்ப நியாயமா?”

சங்கருக்கு வார்த்தைகள் வரவில்லை. தவறு அவர்களுடையதுதான். மனையை வாங்கிய பின்பு அந்தப் பக்கமே  வராததால் தனது ப்ளாட் எது என்பதே சரியாக நினைவில் இல்லாமல் போய் விட்டது. எவ்வளவு பெரிய இமாலய தவறு! எப்படி இதை சரி செய்வது? எதுவும் புரியாமல் குழம்பி நின்றான்.

பின் வீட்டுக்காரர்தான் பேச்சை ஆரம்பிச்சார்.

“ராஜவேலு, ஏதோ தெரியாம தப்பு நடந்து போச்சு. உனக்கென்ன பிரச்சினை. உன் ப்ளாட்டுல இப்ப போர் போட்டாச்சு. நாளைக்கு நீயே வீடு கட்டினாலும் வேலை மிச்சம். வேற யாருக்காவது வித்தாலும் கூட அவங்களுக்கு வசதி”

“நான் இவங்கள இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட தப்பா பேசலையே. என் நிலத்துல வேலி போட்டிருக்கேன். இவங்க போர் போட்டா அதுக்காக இவங்களையே வீடு கட்டிக்க விட்டுட முடியுமா?”

“சரிப்பா, செஞ்சது தப்புனாலும் உனக்குதான் நன்மையா முடிஞ்சிருக்கு. போர் போட்டதுக்கு என்ன பணமோ, அதை அவங்களுக்கு கொடுத்திடேன். சுமுகமா முடிச்சுக்கலாம்”

“எனக்கு ஒன்னும் அந்த போர் இப்ப அவசியமே இல்லையே. இவங்க தப்பா போட்டதக்கு எனக்கு அபராதமா? இந்த ஏரியாவுக்கு வரப் போறவங்கங்கறதால போனா போகட்டும்னு  சும்மா விடறேன். பணம் கொடு, அது இது அப்டில்லாம் பேசினா என்னால என் நிலத்தை ஆக்கிரமிப்பு செஞ்சாங்கனு போலீஸ் கேஸ் கூட குடுக்க முடியும். தெரியும்ல..”

“இவ்வளவு நியாயம் பேசற நீங்க, நாங்க மனை பூஜை போட்ட போதோ, போர் போட்ட போதோ, இது உங்க நிலம்னு சொல்லியிருக்கலாமே. யாருக்கும் எந்த பிரச்சினையும் இருந்திருக்காதே. கொஞ்சம் மனசாட்சியோடு யோசிங்க சார்”

என இத்தனை நேரம் எதுவும் பேசாமல் இருந்த சுதா ராஜவேலுவைப் பார்த்து கேட்டாள்.

“மனசாட்சி உள்ள மனுசனா இருக்கிறதானலதான் போர் போட்டவுடனேயே வந்திட்டேன். இல்லைனா வீடு கட்டி முடிக்கிறவரைக்கும் கூட அமைதியா இருந்திருப்பேன்”

மிகவும் தெளிவாக பதில் சொன்னார் ராஜவேலு.

2 comments:

  1. இன்றைய நிலையை சொல்லும் உண்மையான கதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. இந்த கதை முன்னமே படிச்சிருக்கேன் தோழர். சமயத்துல இந்த கதையில் சொன்னது போலவே நடந்திருக்கு. பக்கத்து ப்லாட்ல கடகால் போட்டுட்டு அத ஆடிச்ச கதை எல்லாம் இருக்கு.

    ReplyDelete