Saturday, May 21, 2016

இப்போது படித்தாலும் கூட.





பல வருடங்களுக்கு முன்பு படித்த நூல் ஆயிஷா. தோழர் இரா.நடராஜன் அவர்கள் எழுதிய முதல் நூல் இதுதான் என்று நினைக்கிறேன். அறிவியலையும் இன்றைய கல்வி முறையையும் இணைத்து எழுதிய நூல். புனைவு என்று சொல்ல முடியாத அளவிற்கு, இது ஒரு உண்மைச் சம்பவமோ என்று பதற வைக்கும். இன்று வாட்ஸப்பில் டிஜிட்டல் வடிவில் வந்தது. மீண்டும் ஒரு முறை முழுமையாக படித்தேன். அதனை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆயிஷா வேண்டுமானால் கற்பனைப் பாத்திரமாக இருக்கலாம். ஆனால் நிஜத்தில் ஆயிரமாயிரம் ஆயிஷாக்கள், இந்த கல்வி முறையால், ஆணாதிக்க சமூக அமைப்பால் மலரும் முன்பே இளமையிலேயே கருகிப் போயிருக்கிறார்கள், இல்லையில்லை கருக்கப் பட்டிருக்கிறார்கள்.

முதல் முறை படித்த போது உருவான சோகமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எழுந்த உணர்வும் இப்போதும் ஏற்படுகிறது. எதுவும் செய்யவில்லையே என்ற குற்ற உணர்வும் கூட.

பொறுமையோடு முழுமையாக படியுங்கள் என்ற வேண்டுகோளை நான் முன்வைக்கப் போவதில்லை. ஏனென்றால் படிக்கத் தொடங்கியவுடனேயே உங்களை ஆயிஷா காந்தம் போல தன் பால் கவர்ந்து விடுவாள்.



ஆயிஷா கதை














ஆயிஷா

இந்த விஞ்ஞான கேள்வி பதில் நூலையும், இவ்வரிசையில் வர இருக்கும் இன்ன பிற  பன்னிரண்டு நூல்களையும் தமிழில் எழுதத் தூண்டியது ஆயிஷாதான். இந்த நூலுக்குள் நுழையும் முன்னர் என் ஆயிஷாவைத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்தப் புத்தகமெங்கும் வார்த்தைகளாக வாழ்பவள் அவள்தான்.

உங்களிடம் சொல்வதில் என்ன இருக்கிறது?

இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில் என் விழிகள் கனத்துப்போகுமாறு கண்ணீர் கொப்பளிக்கிறது. இந்த நூலை எழுதிய ஒரு தேர்ந்த விஞ்ஞானவாதிக்கும், ஆயிஷாவின் கதையை எழுதிக்கொண்டிருக்கும் ஒருத்திக்கும் இடையில்தான் எத்தனை வித்தியாசம்? என் ஆயிஷாவை நினைக்கும்போது மட்டும் இப்படி குழந்தை மாதிரி, துக்கம் கொப்பளிக்க அழ நேர்கிறது எனக்கு.

எனக்கு முதன் முதலில் தெரியவந்த ஆயிஷாவுக்கு 15 வயது. நான் அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் பத்தாம் வகுப்பு _-பி பிரிவில் ஐம்பத்தாறு மாணவிகளில் ஒருத்தி. அப்பள்ளி மாணவியர் விடுதியின் காப்பாள யுவதிகளில் ஒருத்தியாக அங்கேயே தங்கியிருந்த எனக்கு சற்றேறக்குறைய ஒரு செக்கு மாட்டு வாழ்க்கை பழகிப்போயிருந்தது. நாங்கள் எட்டு பேர் அவ்விதம் காப்பாள யுவதிகளாக நியமிக்கப்பட்டிருந்தோம். திருமணமாவதன் மூலம் இந்தச் சுழல் வாழ்விலிருந்து தப்புவோர், அவர்களுக்குப் பதிலாய் வரும் புதியோர் -தங்கள் திருமணத்திற்காகக் காத்திருக்கத் தொடங்கும் அப்பணியிடத்தில் சற்றேறக்குறைய நிரந்தர  யுவதிகளாக நானும் ஆஸ்துமாக்காரி ஒருத்தியும் திருமணமாகாமல் தங்கிப்போனோம்.

நீண்ட பகலும் நிம்மதியற்ற இரவுகளும் என்னைத் தின்று கொண்டிருந்த அந்த  நாட்களில் எனக்கு அறிமுகமானாள் அவள். அதிகம் கவர்கிற விதமில்லை ஆயிஷா. பற்கள் துருத்தியபடி முகத்தில் வந்து விழுகிற கேசத்தைப் பற்றிய  அக்கறையின்றி நாலாவது வரிசையில் குச்சியாக அமர்ந்திருக்கும் ஒருத்தி  ஆசிரியையின் அபிமானத்தைப் பெற வாய்ப்பில்லை. தவிர நான் அவர்களது     வகுப்பாசிரியையும் இல்லை. வருகைப் பதிவேட்டை சரிசெய்யவும், ஒவ்வொரு   மாணவியையும் நெருக்கமாக அறியவும் வாய்ப்பில்லை. ஆகையால் முதலில் எனக்கு
ஆயிஷா யாரோ ஒருத்தி.

முதன் முதலில் அவளை அறிய நேர்ந்த சந்தர்ப்பத்தை நினைக்கிறேன். எனக்கு    சிலிர்க்கிறது. பல ஆண்டுகளாக ஒரு வகுப்பில் ஒரு குறிப்பிட்ட பாடத்தையே   தொடர்ந்து போதிக்கும் எல்லா ஆசிரியைகளையும் போலவே நானும் ஒரு எந்திரமாய் ஆகிப் போயிருந்தேன். சில வேளைகளில் சில பாடங்களை நடத்தினோமா என்ற ஞாபகமே   இல்லாமல் கூட நடத்தியிருக்கிறேன்.

இத்தனை வருடத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் என்ன பெரிதாக மாறிவிட்டது? காலையில் எழுந்து பல் துலக்குவதை உற்சாகத்தோடவா செய்கிறோம்?   எப்போதாவது புதிய பிரஷ் அல்லது பேஸ்ட்! இங்கே அதுவும் இல்லை. அதே ஓம்ஸ்  விதி; ஒரே செல் பிரிதல். புதிதாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வமற்று ஓர்  எந்திரமாய் கிரீச்சிட்டுக் கொண்டிருந்த என்னை என் முகத்தில் கேள்விகளால்  ஓங்கி அறைந்தாள் ஆயிஷா.

அன்று காந்தவியல் குறித்து பாடம். பூமி எப்படி ஒரு காந்தமாக உள்ளதென  விளக்கிக்கொண்டிருந்தேன். ஒரு காந்தம் அதுவும் செவ்வக வடிவக் காந்தம்,  அதைக் கையில் உயர்த்திக் காட்டினேன். சிரமமே இல்லை. காந்தத்தின் வட  நோக்கு அம்சம் குறித்து வழக்கமான எந்திரத்தனத்துடன் யாவரையும் உறங்க  வைத்துவிடும் என் தொனியில் கரும்பலகையில் சில கிறுக்கல்களுடன்  நடத்திக்கொண்டே போனேன். எவ்வளவு நேரமோ?

மிஸ் என்றொரு குரல்.

கரும்பலகையிலிருந்து திரும்புகிறேன். எதற்காகவோ திடுக்கிட்டபடி எழுந்து  நிற்பவளை வழக்கமான எங்கள் அக்கறையற்ற பார்வையுடன் என்னவாந்தி வருதா?   என்றேன். வகுப்பே கொல்லெனச் சிரித்தது. சரியான முட்டாள் நான்.

எப்பேர்ப்பட்டவள்? என் ஆயிஷாவைப் போய் எப்படி சொல்லி இருக்கிறேன்.

இல்ல மிஸ்சந்தேகம்

இது நிச்சயம் ஆச்சரியமான ஒன்றுதான். சராசரி ஆசிரியை யாரையும் இது
எரிச்சலூட்டுவது. சட்டென முகம் சுருக்கி சுள்ளென எரிந்துவிழும் குரலில்
என்ன? என்றேன். கடைசி வரிசையில் யாரோ சிரித்தார்கள். அப்பெண்ணின் இளைத்த  தேகம் நடுங்குவதைக் காண முடிந்தது. பக்கத்து இருக்கைக்காரி அவளது சட்டையை  இழுக்கிறாள். காப்பாற்றி உட்காரவைக்கும் முயற்சி. பின் மறுபடியும் என்ன?  என்றேன்.

மிஸ்அந்தக் காந்தத்தை ரெண்டா வெட்டினா என்ன ஆகும்மிஸ்?

நெடுநாள் தூக்கத்திலிருந்து எழுந்தவள் போலானேன். இதுவரை இல்லாத
அர்த்தத்தில் அவள் என்னைப் பார்த்தாள். நான் அறிவியல் போதினியாக
வந்துவிட்ட இந்த ஆறு ஆண்டுகளில் காந்தவியல் பற்றி நான் சந்திக்கும் முதல்  சவால். காந்தத்தைப் பற்றி யோசித்து மூன்று நிமிட அவகாசத்திற்குப் பிறகு  சற்று பொறி தட்டியது.

ரெண்டு காந்தம் கிடைக்கும். சரி, பதில் சொல்லியாகிவிட்டது. ஆனால் அவள்  உட்காரவில்லை. மிகக் கடினப்பட்டு புன்னகைக்க முயற்சி செய்தாள்.

அந்தக் காந்தத்தை வெட்டிக்கிட்டே போனா? உதாரணமாக நமக்கு இந்தக்
காந்தத்தைத் துண்டாக்கிக் கிடைத்த காந்தங்களின் எண்ணிக்கை ஒரு முடிவுறா  எண் என்று வெச்சிட்டா…?

ரொம்ப சிம்பிள்மாமுடிவுறா எண்ணிக்கையில் காந்தம் கிடைக்கும்.

மீண்டும் நிசப்தம். லேசாக வியர்க்கிறது அவளுக்கு. வகுப்பு உற்சாகத்தில்
ஒரு போட்டியை ரசிப்பது போல் உணர்ந்தேன். உடனே உட்காரு என்றேன். பின்  நடந்துகொண்டிருந்தேன். ஏதேதோ பாவனையாகப் பேசிக்கொண்டு குறுக்கு நெடுக்காக மணி அடிக்கும்வரை அலைந்துவிட்டு வகுப்பிலிருந்து வெட்கமில்லாமல்  மிடுக்காக வெளியேறினேன்.

அடுத்த வகுப்பறையைத் தாண்டியிருக்க மாட்டேன். கூடவே வந்தது நிழல். மிஸ்  ப்ளீஸ், மிஸ். ஒரே ஒரு நிமிஷம்

மிஸ்

அப்படி சொல்லும்போது அவள் முகத்தை பார்க்க வேண்டும் நீங்கள்! அதற்கு  மேலும் புறக்கணிக்க முடியவே முடியாது. என்ன சொல்லு?

காந்தம் பத்திதான்மிஸ்

சொல்லும்மாடயம் ஆச்சில்ல?

முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை ஒரே நேர் கோட்டில் வெச்சாஎதிர்  துருவங்களைக் கவரும் அதன் இயல்பு என்ன ஆகும்.

ஒரு காந்தத்தின் வடக்கு மறு காந்தத்தின் தெற்கை இழுக்கும். ஆனால்  இழுபடும் காந்தத்தின் வடக்கே அடுத்துள்ள காந்தம் ஏற்கனவே  இழுத்துகிட்டிருக்கும் இல்லையாமிஸ்?

ஆமாஅதுக்கென்னன்ற?

என் சந்தேகமே அங்கதான் இருக்கு. எல்லாக் காந்தங்களின் கவர்திறனும்
ஒன்றெனக் கொண்டால் அவை ஒட்டிக்கொள்ளத் தான் வாய்ப்பே இல்லையேஎப்புறமும் நகராமல் அப்படியே தானே இருக்கும்.

ஏன் நாம இந்தப் பிரபஞ்சம் முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை
நேர்க்கோட்டில் வைத்தது போல் அமைக்கப்பட்டதா வெச்சிக்கக் கூடாது? அந்தக்  கோணத்தில் பூமிங்கற காந்தத்த ஆராயலாம் இல்லையா? 

பதிமூன்று வருடப் பள்ளி வாழ்க்கை. பின் மூன்றாண்டு இயற்பியல் -_ பல்கலைக்கழகத்தில். இப்படியொரு கேள்வியை நான் கேட்டுக்கொண்டதாக நினைவில்லை. எங்கோ படித்ததாக ஞாபகம் என்றேன். ஏதாவது சொல்ல வேண்டுமே!.

Truth of magnets. வெட்ரோட் ஸ்டூடண்ட் கிங்லீங் எழுதியதுஅருமையா இருக்குபடிக்கிறீங்களா மிஸ்இந்த புத்தகமெல்லாம் நீ படிக்கிறாயா? அவ்வளவுதான் _ என் ஆயிஷா  கிடைத்துவிட்டாள். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்றுவரை மீள முடியவில்லை. அறை வாங்கியவளைப் போல புத்தகத்தை வாங்கிக்கொண்டு சரசரவென ஆசிரியர்  அறைக்கு நடந்தேன்.

இப்போதும் சொல்கிறேன். அந்த நிமிடத்திலேயே ஆயிஷா என்னை முழுதாக வென்றுவிட்டாள். எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்திலும் அதன்பின் அவளை நான்  வெறுத்ததே இல்லை. ஒரு செக்கு மாட்டிற்கு இதைவிட அமர்க்களமாய் யார்தான்  சூடு போட முடியும்?

இரவில் எனது விடுதி அறையில் புத்தகத்தைப் புரட்டியபோது மேலும் பல
அதிர்ச்சிகள். முதலில் அது மாவட்ட மைய நூலகத்தின் முத்திரை  பெற்றிருந்தது. பின் அதில் ஆயிஷா அடிக்கோடிட்டிருந்த முறை. ஆங்காங்கே   காணப்பட்ட அடிக்குறிப்புகள். எல்லாமே அவளைக் குறித்த எனது எண்ணத்திற்கு  மேலும் மேலும் ஆச்சரியக் குறிகளை கூட்டிக் கொண்டிருந்தன. ஆயிஷா ஒரு  குழந்தை இல்லை. அவள் யாரோ மனுஷி கூட இல்லை. வேறு ஏதோ ஒரு பிறவி. கடவுளே

நான் ஒரு நிமிடம் கூடத் தூங்கவில்லை.

விடுதியில் காலை வேளையில் அவள் வகுப்புப் பெண்களை அழைத்துப் பேசத்  துடித்தேன். அவளைப் பற்றி அறிய வேண்டும். இத்தனை நாட்கள் அவளை  அறியாதுபோனது ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்தியிருந்தது. புத்தகமோ என் அறையே கனத்துப்போகும்படி என்னை திடுக்கிட வைத்துக் கொண்டிருந்தது. வேலைகள் ஓடவில்லை. இத்தனைக்கும் எல்லாவற்றையும் படிக்கவில்லை. அப்பெண் அடிக்கோடிட்டிருந்த வரிகளையும் அவளது அடிக்குறிப்புகளையுமே படித்து விழி பிதுங்கிப் போயிருந்தேன்.

முதல் பாடவேளையில் வகுப்பேதும் இன்றி ஆசிரியர் ஓய்வறையில் அமர்ந்து  இருந்தேன். கையில் புத்தகம். ஓய்வறையில் ஆசிரியைகள் புதிய புடவை டிசைன்களைப் பற்றி நீண்ட விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். சரோஜினிக்கும் ரெஜினா மிஸ்ஸுக்கும் இதேதான் வேலை. இல்லையென்றால் நடிகைகளின்  வித்தியாசங்கள், ஒரு நாள் புருவம், மறுநாள் மச்சம். இப்படிப் பேசிப் பேசிக் களைத்து பாடம் நடத்த வேண்டிய வகுப்பறையில் ஓய்வெடுப்பார்கள். ஆரம்பத்தில் இது எரிச்சலூட்டுவதாக இருந்தது. பிறகு மரத்துப்போனது. இப்போது புதியவளாக இருந்தேன். அவர்களைப் பார்த்து எனக்கு அளவற்ற  அருவருப்பு உண்டாகி இருந்தது.  திடீரென்று மாணவியர் பக்கம் பேச்சு சென்றது. ரெஜினா ஒவ்வொரு பெண்ணாகக் கேலி செய்துகொண்டிருந்தாள். அவளது கொண்டை குலுங்க அவள் அதைச் செய்தாள். குதிரைமூஞ்சி, நரிவால், எலிவால் என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் வைத்திருந்தாள். அவளது அருவருப்பான வேடிக்கைகளை சரோஜினி ரசித்துக் கொண்டிருந்தாள். ரெஜிரெஜிமாகொன் னுட்டடி என்ற ஆராதனைகள் வேறு.

பள்ளிக்கூடங்கள் பலிக்கூடங்கள் ஆகிவிட்டன. நானும் அவர்களது கூட்டத்தில்  ஒருத்தியா? எல்லாமே முன் தயாரிக்கப் பட்டவை. ரெடிமேட் கேள்விகள், அவற்றிற்கு நோட்ஸ்களில் ரெடிமேட் பதில்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கிறார்கள். வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரமாய் (அதுவும் முக்கிய கேள்விகளுக்கு விடைகளை மட்டும்) மாணவர்கள் உருமாற்றம் அடைந்துவிட்டனர்.

எல்லா மாணவர்களுக்கும் எண்கள் தரப்பட்டுள்ளன. வகுப்பு, வரிசை, எண்,
தேர்வு எண், பெற்றெடுக்கும் மதிப்பெண்கள். எங்கும் எண்கள், எண்களே  பள்ளிகளை ஆள்கின்றன. எல்லா ஆசிரியர்களுமே ஏதாவது ஒரு வகையில் மாணவரின்  அறிவை அவமானப்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டேன். அவர்களில் ஒருத்தியா  நான்? என் மீதே எனக்கு வெறுப்பு உண்டாயிற்று. ஒரு பெண், அறிவார்த்தமான ஒரே ஒரு கேள்வியால் என்னை எப்படி யோசிக்க வைத்து விட்டாள்?

ஒரு கேஸ் இன்னிக்கு பிடிபட்டுதுஇத கேட்டியோ என்று அங்கலாய்த்தபடி என்னிடம் வந்தாள் சுகுணா மிஸ். மேல்நிலைக்கு கணக்கு நடத்துபவள். விடுதிக் காப்பாள யுவதிகளில் ஒருத்தி. எந்த உற்சாகமுமின்றி என்ன? என்றேன்.

விநோதமான கேஸ்லெவன்த் வீட்டுக் கணக்கு திருத்திக்கிட்டிருந்தப்போ
கஷ்டப்பட்டு பிடிச்சேன். பாதிப் பேர் நோட்ல ஒரே கையெழுத்து _- அதுவும்
ஒரு லாஜிக் சம். முதல்ல காப்பினு நெனச்சேன். அப்புறம் ஒருத்திய பிடிச்சி செமத்தியா குடுத்தேன். உண்மையைக் கொட்டிட்டா

கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அவள் என்னைக் காத்திருக்க வைத்தாள். நான் திடுக்கிட வேண்டுமென விரும்புபவள் போலிருந்தாள். ம்சொல்லுஎன்றேன்.

நம்ப மாட்டஒரு டென்த் ஸ்டாண்டர்டு படிக்கிற பெண் லெவன்த்துக்கு  வீட்டுக் கணக்கு போட்டுத் தந்திருக்குடென்த்தா…? எழுந்து  நின்றிருந்தேன்.

ஆமாம்கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன்நேராஸிஸ்டர்ட்ட போயிட்டேன்எனக்கு ஊர்ஜிதமாகிவிட்டது போலானது. என்னாபண்ணினாங்க அந்தப் பெண்ண…?

அது ஒரு ஆயி அப்பன் இல்லாத கேஸ்

அர்பன்ஸ் ஹோமா?

சித்தி வீடோ என்னமோகார்டியனை வரச் சொல்லியிருக்காங்கமோஸ்ட்லி  டி.சி.யாத்தான் இருக்கும். 

நான் எப்படித் தவித்தேன் என்பதை என்னால் இங்கு எழுத முடியாது.  பிரின்ஸ்பால் அறைக்கும் ஓய்வறைக்கும் இருப்புக் கொள்ளாமல் நான்  அலைந்தேன். பதினொன்றாம் வகுப்பு மாணவியர்க்கு டென்த் மாணவி வீட்டுக் கணக்குச் சொல்லித் தருகிறாள் என்றால் அவள் என்ன நம்ப முடியாத பிறவி? இங்கு வந்து ஏன் பிறந்து தொலைத்தாள்? அம்மா அப்பா இல்லாதவளாமேகடவுளே எங்கள் குழந்தைகளை ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்றும்.

அவளது வகுப்பிற்கு நான் போன நேரத்தில் அவளது இடம் காலியாக இருந்தது. விசாரித்தேன். செம அடி மிஸ் என்று கலங்க அடித்தார்கள். ஏதோ ஆகிப்போயிருந்தேன். எதுவும் நடத்தப் பிடிக்காதவளாய் இருக்கையில்  அமரப்போனேன்.

மேஅய்கம்இன்மிஸ் ஆயிஷா நின்றிருந்தாள். கலைத்தெறியப்பட்ட கனவு  போல், வெள்ளைப் படுதாவுடன் இரண்டு இசுலாமியப் பெண்கள் உடன்  நின்றிருந்தனர். ஒருத்தி எனக்கு முகமன் செய்தாள்.

நான் ஆயிஷாவோட சித்தி

வாங்க எப்படி படுத்தறா பார்த்தீங்களாஇவ என்னோட அக்கா பொண்ணு. இவப் பொறந்த நேரமே சரியில்லே. இந்தச் சனியன் வேணும்னு யார் அழுதாதறுதல மக

என் கண் முன்னால் ஆயிஷாவை அடிக்க முயன்றாள்.

கொஞ்சம் பாத்துக்கங்கபுத்தி சொல்லுங்கஎன் புருஷன் கூட இங்க இல்லதுபாயில இருக்காருதனியா அவஸ்தைப்படறேன்இது இப்படி இருக்கு. படிப்ப நிறுத்திடலாம்னாசரி இவ்வளவு வருசம் படிச்சது படிச்சாச்சு. ஒரு எசெல்சி  முடிச்சிடட்டுமேனு பாக்கேன்.

அன்று வகுப்பிலிருந்து கிளம்பும்போது சொன்னேன்.
ஆயிஷாஈவினிங் ஹாஸ்டல்ல வந்து என்னப் பாரு

எஸ்மிஸ்

என் ஆயிஷா அப்படிப்பட்டவளாக இருந்தாள். ஆம், ஒரு விஞ்ஞானியின் தேர்ந்த  குணத்தோடு கேள்விகள் அவளுக்குள் ளேயிருந்து வந்தன. ‘‘ஒரு  மெழுகுவர்த்தியில் ஒளி அதிகமாகவும் வெப்பம் குறைவாகவும் உள்ளது. ஆனால்  ஒரு அடுப்பில் எரியும் நெருப்பில் ஒளி குறைவாகவும், வெப்பம் அதிகமாயும்  இருக்குதே. ஏன் மிஸ்? நான் கேட்டுக்கொண்டேன். இந்தக் கேள்வி கேட்கும்  மாபெரும் வித்தையை அவள் எங்கேயிருந்து கற்றாள்? அது அவளது உதிரத்தில்  உள்ளதா?

வகுப்பறை என்றல்ல. ஒரு நாள் நான் எனது ஆடைகளை  துவைத்துக்கொண்டிருக்கும்போது கேட்டாள். துணி துவைக்கிற சோப் அழுக்கை  அகற்றுவதற்கும், குளியல் சோப் அழுக்கை அகற்றுவதற்கும் இடையிலான  வித்தியாசம் என்ன? கடவுளே, இந்தப் பெண்கேள்விகளால் இந்தப் பிரபஞ்சத்தை  உலுக்கவே பிறந்திருக்கிறாள்.

ஒரு நாள் The Most Dangerous Man In America என்ற பெஞ்சமின் பிராங்க்ளின்  வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தைக் கொண்டு வந்தாள். அதிசயிக்கத்தக்க   வகையில் என்னையும் ஒரு புத்தகப்புழுவாக மாற்றிக்கொண்டிருந்தாள்.  மின்னலில் மின்சாரம் உள்ளதை நிரூபித்த பிராங்க்ளின் பட்டம் ஒரு பட்டுக் கைக்குட்டையால் செய்யப்பட்டது மிஸ். என்றாள். எனக்கு அதுவரை தெரியாது. ஒரு கேள்வியை எழுப்பிக்கொள்வது, பிறகு அதற்கொரு விடை தெரியும்வரை ஓயாது  தேடுதல் என்கிற தேர்ந்த விஞ்ஞானியின் தகுதி ஆயிஷாவிடம் இயல்பிலேயே  இருந்தது.

மிஸ்நியூட்டன் அறிவியல் சோதனைகள் நடத்த ஆரம்பிச்சப்போ அவருக்கு வயது  பன்னிரண்டு. பிராங்க்ளின் தன் முதல் சோதனையை 40 வயசுலதான்  செய்திருக்காரு. வயதா பிரச்சினைரெண்டு பேரும் விஞ்ஞானிகள்தான்.

மிஸ்…. இந்தப் புத்தகத்துல சில பக்கங்கள் நல்லா புரியுது. சிலது புரிய  மாட்டேங்குது.

போகப் போகப் புரியும். அது அதுக்கு ஒரு வயது வேண்டாமா

என்ன மிஸ்நீங்கஎனக்கு இங்கிலீஷ்தான் பிரச்சினை

அதுவும் ஒரு பிரச்சினைதான் ரொம்பக் கஷ்டமாயிருக்கு மிஸ்நம் மொழியிலேயே  வரணும் யாரு எழுதறாங்கசொல்லு நீங்க எழுதலாமே மிஸ்.

இப்படிப் புத்தகங்களைத் திருடிட்டு வர்றியேமாட்டிக்கிட்டா?

நான்தான் படிச்சிட்டு எடுத்த இடத்திலேயே வெச்சிடறேனே

தப்பும்மா

சொல்லுங்க மிஸ்

என்ன சொல்லணும்?

நீங்க ஏன் தமிழ்ல இதையெல்லாம் எழுதக் கூடாது?…

பாக்கலாம்அதுக்கெல்லாம் நிறைய விஷயம் தெரியணும் பிறகு வழக்கமான  வேகத்தோடு கேட்டாள்.

மிஸ்மின்னலிலிருந்து மண்ணை மின்சாரம் தாக்கும் இல்லையா? மரம் கூட  விழுவதுண்டு. கம்பியிலுள்ள மின்சாரத்திற்கும் அதுக்கும் என்ன   வித்தியாசம்? எப்படி மின்சாரம் பரவுது?

என் ஆயிஷா அப்படிப்பட்டவளாக இருந்தாள். என் பழைய ரெக்சின் பையில் அவளது  சின்ன ஆய்வுக்கூடப் பொருட்கள் இருந்தன. ஒரு லென்சுக் கண்ணாடி, வட்ட  வடிவக் காந்தம்மருத்துவரின் ஊசி சிரிஞ்சு ஒன்று மற்றும் ஒரு பழுதடைந்த  டிரான்சிஸ்டர் வானொலி. அதனைச் சரிசெய்யும் முயற்சியிலேயே அவளின் பல  விடுமுறை நாட்கள் கழிந்தன.

நானே நிறைய மாறிக்கொண்டிருந்தேன். எவ்வளவு மோசமானவளாக இருந்திருக்கிறேன்?

எனது சொந்தத் துறை மீதே எவ்வித அக்கறையும் இல்லாமல் சொரணையற்ற பிண்டமாக  ஆறு ஆண்டுகள் வெறுமனே தள்ளியிருக்கிறேன்.

ஆயிஷாவின் உறவில்தான் நான் உணர ஆரம்பித்தேன். எவ்வளவு தூரம் விஞ்ஞானமற்ற  முறையில் நாம் நம் குழந்தைகளுக்கு விஞ்ஞானம் போதிக்கிறோம் என்று. நாம்  எங்கே குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தை உணர்ந்து கேள்வி கேட்க அவகாசம் தருகிறோம்? அவர்கள் கேட்கத் தொடங்கும் முன்னரே நாமாக முன் தயாரிக்கப்பட்ட கேள்விகளால் அவர்களை மூழ்கடித்து விடுகிறோம். அறிவும்  வளருவதில்லை. பள்ளியில் ஆசிரியர்கள் அதிகம் சொல்வது எதை? கையக் கட்டுவாயைப் பொத்து

விரைவில் புரிந்துகொண்டேன். என் ஆயிஷாவுக்கு நாலுபுறமிருந்தும்  பிரச்சினைகள் முளைத்தன. ஆனால் பயித்தியக்காரி நான். உணரத் தலைப்படவில்லை.  அவளை, அவளின் அறிவை, அது எந்தத் திசையில் செலுத்தும் என்று. ஒரு நாள்  சட்டென்று கண்ணில் பட்டது அது. ஆயிஷாவின் பின்காலில் பட்டை பட்டையாக  வீக்கம் தடித்துப் போகுமளவு அடி வாங்கியிருந்தாள். இப்போது அவள் என்னிடம்  மிகவும் நெருங்கியிருந்தாள். அவளைத் தொடாமல் என்னால் பேசவே முடியாது.  அவள் மீது அவ்வளவு அன்பூறும்படி அவள் செய்திருந்தாள். அருகில் அழைத்து  விசாரித்தேன்.

கெமிஸ்ட்ரி மிஸ் அடிச்சாங்க என்றேன்.

ஏன்ஏன் ஆயிஷா?

பேப்பர் வந்தது. மார்க் சரியா போடல. கேட்டேன்சொந்த சரக்குக்கெல்லாம்  மார்க் கிடையாதாம். நோட்ஸ்ல இருக்கிறத அப்படியே எழுதணுமாம். டென்த்துன்னு  மிரட்டுறாங்க. மிஸ்நோட்ஸ்ல தப்பாயிருந்தா என்ன பண்றதுனுட்டு கேட்டேன்

பேச முடியவில்லை, அவளால். காணச் சகிக்கவில்லை. அழும் போது அவள் குழந்தையாக இருக்கிறாள். முன்பு ஒரு முறை சரோஜினியிடம் வாங்கிக்கொண்டு வந்தாள். இதே நோட்ஸ் பிரச்சினைகடவுளேஅவரவர் அறிவைப் பயன்படுத்த அனுமதியுங்களேன். எப்பேர்ப்பட்ட பெண். அவளை அடிப்பது என்றால் எப்படி மனசு வருகிறதோராட்சசிகள்.

தவிர வேறுவிதச் சிக்கல்கள். டியூசன், கிட்டத்தட்ட எல்லா ஆசிரியைகளுமே  வீட்டில் தனியாக டியூசன் நடத்தி வந்தனர். பணம், எல்லாம் அது படுத்தும்  பாடு. போட்டா போட்டி சண்டை, வீட்டிற்கு படிக்க வருவோர்க்கு விசேஷச் சலுகை, சட்டங்கள், வகுப்பில் ராஜ மரியாதைவினாத்தாள்கள் முன்பே அறியும்  உரிமை. எவ்வளவு குமட்ட வைப்பது அது. வெட்கமில்லாமல் இதை அவர்கள் செய்தே  வருகிறார்கள். வருமான வரியில் சேராத வருமானம். யார்தான் விடுவார்கள்?

ஆயிஷா யாரிடமும் டியூசன் படிக்காதவள் என்பதால் பழி வாங்கப்பட்டாள். வகுப்பிலும் கேள்விகள் கேட்டு குழப்பி விடுபவளாக இருக்கிறாள் அல்லவா? தொழிலைக் கடினமாக ஆக்குபவளை யார்தான் விரும்புவார்கள்? விரைவில் எனது  போராளி தினமும் உதை வாங்கிவரத் தொடங்கினாள்.

வரலாற்றுப் பாடவேளையில் ஜெர்சி மிஸ் என்ன செய்தாள்?

அசோகரை புத்த மதத்துக்கு மாற்றியது யார் மிஸ்?

புத்த பிட்சு ஒருத்தர் இல்ல, அவர் பெயர்?

அவரது பெயர் உபகுப்தர் மிஸ்

தெரிஞ்சு வெச்சிக்கிட்டு டெஸ்ட் பண்றயாவாடி இங்க.

ஒரு காலில் நிற்க வைத்து உதைத்திருக்கிறாள். இப்படி ஆயிஷா முன் எல்லா  ஆசிரியைகளுமே தனது பிரம்புப் பிரயத்தனத்தால் அறிவை நிலைநாட்டத் தொடங்கி  விட்டார்கள். டீச்சர் அடிச்சா வலிக்காம இருக்க ஏதாவது மருந்து இருக்கா?  என்று கேட்கிறாள் ஆயிஷா.

அடிஅசட்டுப் பெண்ணே என்று கட்டிக்கொண்ட என்னால் அப்போது எந்தப்  புதிரையும் உணர முடியவில்லை. எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்துவிட்டேன்  நான்.

ஓர் இரவு அவசரமாக வீட்டுக்குக் கிளம்பியபோது தனது சிறிய குறிப்பு நோட்டை விட்டுச் சென்றுவிட்டாள். அன்றைக்குத்தான் என் ஆயிஷாவின் இன்னொரு பக்கம் தெரிய வந்தது. நூற்றுக்கணக்கான கேள்விகளின் தேவையை விட இந்த என் ஆயிஷா வித்தியாசமானவள். முதலில் அந்த நோட்டு கண்ணில் பட்டபோது அதை எடுத்து மேஜையில் வைத்துவிட்டு, வழக்கமான விடை திருத்தும் வேலையில் இறங்கிவிட்டேன். பிறகு ஏதோ ஓர் உந்துதலின் பேரில் அதை எடுத்துப்  புரட்டினேன்.

முதல் பக்கம்இரண்டு, மூன்று, நான்காவது பக்கத்தில் எனக்கு முதல்  அதிர்ச்சி. ஒரு பக்கம் முழுவதும் ஆயிஷா நூற்றுக்கணக்கான முறை என் பெயரை  எழுதி வைத்திருந்தாள். நீண்ட நேரம் அந்தப் பக்கத்தை நோக்கிய எனக்கு  கண்ணீர் முட்டியது. பின் சில பக்கங்கள், வகுப்பில் எழுதப்பட்ட ஆங்கிலப்  பாட்டு மூன்று முறை. பின் அந்தப் பக்கம் என்னை மேலும் அதிர்ச்சியடைய  வைத்து கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விழ வைத்தது.

அந்தப் பக்கம் என் பெயரை எழுதியிருந்த ஆயிஷா அதற்கு கீழே என் தாயார்; என் முதல் ஆசிரியை; என் முதல் உயிர் என்று ரத்தத்தால் எழுதியிருந்தாள்.

ஆம்; அது ரத்தம்தான். அய்யோஇது என்ன பெண்ணேஉனக்கு என்ன நான் செய்துவிட்டேன். உனது கேள்விகள் சிலவற்றைக் காது கொடுத்து. கேட்டதைத் தவிர. அதற்காகவா இத்தனை அன்பு பொழிகிறாய்? அம்மா, நீ பெரும் மனுஷி.

எனக்குள்ளே யாரைத் தேடுகிறாய் நீ? பார்க்காமல் போன அப்பாவையா, அம்மாவையா? அல்லது யாரையடி என் உயிரே.

நீ இல்லாது போயிருந்தால் நான் மட்டும் யாரடி? ஒரு எந்திரத்தைவிட கேவலமான ஆசிரியையாகவே செத்துப் போய்க் கிடந்த என்னை மீட்டெடுத்தவளல்லவா நீ. என் பொக்கிஷமே, இத்தனை நாட்கள் எங்கேயடி இருந்தாய்? எனக்கு உடல் சிலிர்த்துப்போனது. நான் சொல்லிக்கொண்டேன். அவளுக்கு, என் உயிரான  ஆயிஷாவுக்கு எப்படியாவது நன்றியாக எதையாவது செய்ய வேண்டும். உன்னை எப்படி  ஆக்குகிறேன் பாரடி…?

கடவுளேஅப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

சம்பவத்திற்கு முதல் நாள் வகுப்பில் சர். ஹம்ப்ரி டேவியைப் பற்றிச்  சுருக்கமாய் சிலவற்றைச் சொன்னேன். அறுவைச் சிகிச்சையின்போது உடலை  மரத்துப் போக வைக்கிற நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை அவர் கண்டுபிடித்தது  குறித்து பாடம் நடத்தினேன்.

நைட்ரஸ் ஆக்சைடு தண்ணீரில் கரையுமா?… மிஸ்

தண்ணீரில் மட்டுமல்ல அது எத்தனாலிலும், சல்பியூரிக் அமிலத்திலும் கூடக் கரையும்.

இப்படித்தான் நான் மோசம் போனது. எப்படி மறப்பது அதை?

அன்று பள்ளியில் குழந்தைகள் தினம். மாவட்ட ஆட்சித் தலைவர் வருவதாய்  இருந்தது. மதியம் விழா இருந்தமையால் காலையில் பள்ளி. விடுமுறை நாட்களில்  வீட்டில் எவ்வளவுதான் வேலைகள் என்றாலும் பத்துப் பதினொரு மணிக்கு என்  ஆயிஷா ஓடோடி வந்துவிடுவாள். அன்றைக்கு என்று ஆளைக் காணோம்.
எனது சொந்த வேலைகளில் மும்முரமாக இருந்தபோது உச்சி வெயிலில் ஒரு மாணவி  வந்து அழைத்தாள். ஆயிஷா அனுப்பியதாகவும், வேதியியல் ஆய்வுக்கூடத்திற்கு  பின்புறம் அவள் இருப்பதாகவும் கூறினாள்.

ஏன் அவ இங்க வர வேண்டியதுதானே?

தெரியல மிஸ் அவளை அனுப்பிவிட்டுக் கிளம்பினேன். மனசுக்குள் ஏதோ எங்கோ  பிசகிப்போனதை உணர்ந்தேன். கடவுளேஇதை எழுதும் தருணத்தில் எனக்கு எப்படி  உடல் நடுங்குகிறது.

லேசான களைப்பில் இருப்பவளைப் போலிருந்தாள் ஆயிஷா.

இன்னிக்குஎக்ஸ்பரிமண்ட் சக்சஸ் மிஸ்

என்னஎன்ன எக்ஸ்பரிமண்ட்?

இந்தாங்க ஸ்கேல்என்னை அடியுங்க பாப்போம்.

ஏன் ஆயிஷா என்ன சொல்றே நீ

மருந்து மிஸ்மரத்துப்போற மருந்துஇனிமே யாரு அடிச்சாலும் எனக்கு
வலிக்காது மிஸ்எப்படி வேணும்னாலும் அடிச்சிக்கட்டும்.

ஆயிஷா உனக்கென்ன பயித்தியமா?

லேபிலிருந்து நைட்ரஸ் எத்தனால் கரைசல் கெடச்சது மிஸ். முதல்ல இந்தத்  தவளைக்கு ஊசி போட்டேன். இரண்டு மணி நேரம் மல்லாக்கப் போட்டாலும் உணர்ச்சி  இல்லஅப்போ மரத்துப்போச்சினு அர்த்தம்

அப்புறம் அதே மருந்தை எனக்கு ஊசி போட்டுக்கிட்டேன். எப்படி ஐடியா

ஏம்மாஇப்படியெல்லாம் பண்ற பாருங்க இந்தத் தவளைதான் நான் பார்த்த  இடத்தில் வாளித் தண்ணீரில் ஒரு தவளை தலைகீழாய் மிதந்தது.

ஆயிஷாநோ

அய்யய்யோதவளை செத்துப்போச்சு மிஸ்

கடவுளே! அதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது? வேதியியல் ஆய்வுக்கூடத்தின்  பின்னால் ஆயிஷா விழுந்து கிடந்தாள். ஒரு மாலை மாதிரி விழுந்து கிடந்தாள்.  சின்னக் கூட்டம் கூடியது. பியூன் கோவிந்தன் ஆட்டோ கொண்டுவர ஓடினான்.

சிஸ்டருக்குச் சொல்லப்பட்டது. அவளை _ என் உயிருக்கு உயிரான ஆயிஷாவைச்  சுமந்துகொண்டு நான் சாலைக்கு ஓடினேன். என் கண்ணான அவளை எப்படியாவது  பிழைக்க வைத்துவிட வேண்டுமெனத் தவித்தேன்.  ஆனால் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்குப் போவதற்குள் என் ஆயிஷா  பிரிந்துவிட்டாள். எப்பேர்ப்பட்ட ஆயிஷா.

நான் தாங்கிக் கொள்ள முடியாதவளாய் குழந்தை மாதிரி அவள் மீது புரண்டு கதறி  அழுதேன். இனி என்ன? உங்களுக்கு திருப்திதானே மிருகங்களேஎன் ஆயிஷாவை,  ஒப்பற்ற அந்த அறிவுக் கொழுந்தைக் கொன்று தீர்த்துவிட்டீர்களே. போங்கள்,  இனி உங்கள் வகுப்புகள் எளிமையானவைஅறிவுக்கு அங்கே வேலை இல்லை.  ஆயிஷா என் கண்ணேஎன் கண்களைத் திறந்துவிட்டு ஏன் அவ்வளவு சீக்கிரம்  என்னைவிட்டு ஓடிப்போனாய். பார்

உனக்காக நீ கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களைத் தேடித் தேடி எழுதி  வைத்திருக்கிறேன். நீ சொன்னது போல தமிழில் எழுதியிருக்கிறேன்.

உன் மாதிரி எத்தனை ஆயிஷாக்களை நாங்கள் இழந்திருப்போம். நீ இறந்துபோனாய்.  வயசுக்கு வந்த நாளோடு பள்ளிக்கூடம் விட்டு ஓடியவர்கள், எங்கேயோ ஒரு ஊரில்  யாரோ ஒருவனுக்குத் துவைத்து, சமைத்து, பிள்ளை பெற்றுப் போடுபவர்கள்,  ஆணின் பாலியல் பசிக்காகத் தன்னை விற்பவர்கள், முப்பது ரூபாய்  சம்பளத்திற்காக வீடு பெருக்கி, சாணி மெழுகுபவர்கள், வயல்கூலிகள்,  கட்டடங்களுக்கு கல்லுடைக்கும் பெண்கள் -_ அவர்களில் எத்தனை ஆயிஷாக்கள்  உள்ளனரோ? தன் விஞ்ஞானக் கனவுகளை நாள்தோறும் அடுப்பு நெருப்பில் போட்டு  சாம்பலாக்கி விடும் அந்த நூற்றுக்கணக்கான ஆயிஷாக்களுக்கு இந்தப்  புத்தகத்தை கண்ணீரோடு சமர்ப்பிக்கிறேன்.

இந்த விஞ்ஞான நூலை வாசிப்பவர்கள் அதை ஒரு பத்துப் பெண்களுக்காவது இரவல்  கொடுப்பார்களா?

அவர்களில் ஓர் ஆயிஷாவாவது இருப்பாளா? என் பொக்கிஷமே ஆயிஷாநீ கேட்ட கேள்விகளிலேயே என்னை மிகவும் பாதித்த ஒரு கேள்வி உண்டு. அதை வாசகர்  முன்வைத்து என் முன்னுரையை முடிப்பதே பொருத்தமாக இருக்கும்.

மிஸ் கரோலின் ஏர்ஷல் போலவோ மேரி கியூரி போலவோ நம்ம நாட்டுல பெயர் சொல்ற  மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வர முடியலையே ஏன்?

இக்கேள்விக்குரிய பதிலை நான் சொல்ல வேண்டியதில்லை. தங்கள் சொந்த  வீடுகளின் இருண்ட சமையலறையில் போய் அவர்கள் அதைத் தேடட்டும்.

ஆயிஷா குறும் பட சுட்டி..



1 comment:

  1. ஆயிஷா மூலமாக குழந்தைகளின் ஏக்கங்களையும், மன உணர்வுகளையும் முன்வைத்து படிப்பவர் மனதை உறையும்படி ஆக்கிவிட்டார் நூலாசிரியர். ஆசிரியர் மாணவர் உறவு, ஆசிரியர்களின் குணநலன், மாணவர்களின் சூழல் என்ற நிலையில் பரந்துபட்ட பார்வையில் சமூக அவலத்தினை முன்வைத்துள்ள விதம் அருமை. பெரிய பதிவாக இருந்தாலும், முழுமையாக ஆழ்ந்து படித்துவைக்கும்படிச் செய்த பதிவு. நன்றி.

    ReplyDelete