மதுரைக் கோட்டத்தின் மூத்த தலைவரும், தீக்கதிர் நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியவருமான தோழர் எம்.எஸ்.அருள்தாஸ் நேற்று முன் தினம் இரவு காலமானார்.
மிகவும் நேசமாக பழகக் கூடிய தோழர். கடந்த ஜனவரி மாதம் தென் மண்டல மாநாடு தஞ்சையில் நடைபெற்ற போதுதான் அவரை இறுதியாக சந்தித்தேன். கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டு, தனது அழுத்தமான குரலில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அவர் பற்றி தீக்கதிர் நாளிதழில் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் எழுதிய அஞ்சலியை கனத்த இதயத்தோடு பகிர்ந்து கொள்கிறேன்.
செவ்வணக்கம் தோழர்.
ஒரு விக்கெட் விழுந்துவிட்டது
- மதுக்கூர் இராமலிங்கம்
பத்திரிகையில் வேலைக்கு சேரும் சிலருக்கு விளையாட்டுச் செய்திகள்
பகுதியை ஒதுக்கிவிடுவார்கள். அவரும் வேண்டா வெறுப்பாக எதையாவது எழுதிக்
கொடுத்து கொண்டிருப்பார். ஆனால், தீக்கதிரின் விளையாட்டு செய்திகள் பகுதியை
தோழர் தாஸ்தான் கடந்த பல ஆண்டுகளாக எழுதி வந்தார். அனைத்துவிளையாட்டுகளும்
அவருக்கு அத்துப்படி. எனவே, எந்தவொரு விளையாட்டு குறித்தும் அவரால்
மேதமையோடும், ரசனையோடும் எழுத முடிந்தது.குறிப்பாக, கிரிக்கெட் குறித்து
அவரிடம் ஏராளமான தகவல்கள் இருந்தன. எதையும் தனக்கென வைத்துக் கொள்ளாமல்
அத்தனையையும் தீக்கதிர் வாசகர்களுக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டே
இருந்தார். திடீரென ஒரு விக்கெட் விழுந்தது போல அமைந்துவிட்டது அவரது
மறைவு.தீக்கதிருக்கும் மதுரை காப்பீட்டு ஊழியர் சங்கத்திற்கும் ஒரு
ஆயுள்கால தோழமை இருந்தது. எல்ஐசியில் பணியாற்றிக் கொண்டே தோழர்கள்
சியாமளம், இ.எம்.ஜோசப், டேவிட், தாஸ் போன்றவர்கள் மாலை நேரத்தில்
தீக்கதிருக்கு வந்து பணியாற்றுவார்கள்.கட்சியின் காப்பீட்டு அரங்கத்தினால்
தயார் செய்யப்பட்ட தோழர்களிடம் ஒரு கம்பீரம் இருக்கும். கட்சிக்
கட்டுப்பாட்டை உயிராக நினைப்பார்கள். எதிலும் ஒரு நேர்த்தியை
எதிர்பார்ப்பார்கள்.
தோழர் தாஸிடமும் அது இருந்தது. கட்சிக்
கிளைகூட்டமானாலும், ஆசிரியர் குழு கூட்டமானாலும் குறிப்பிட்ட நேரத்தில்
துவங்க வேண்டுமென்பதை தாஸ் வலியுறுத்திக் கொண்டே இருப்பார்.காப்பீட்டு
அரங்கத்தில் சங்கப் பொருளாளர், இணைச் செயலாளர் என்று பல்வேறு பொறுப்புகளை
அவர் வகித்துள்ளார். நான் எல்ஐசி அரங்கக் கட்சியால் உருவாக்கப்பட்டவன் என்ற
பெருமிதம் எப்போதும் அவருக்கு உண்டு. ஒரு அர்ப்பணிப்புமிக்க சங்க ஊழியர்
அவர். அவருடைய முதல் மகனின் திருமணத்தன்று எல்ஐசி அலுவலகங்களில்
ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது சங்கம். இரண்டும் எதேச்சையாக அமைந்தவை.
திருமண அரங்கத்தில் உறவினர்கள் முழுமையாக கூடியிருந்தார்கள். ஆனால், தோழர்
தாஸ்கோட்ட சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று
முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார். அவருடைய மகன் தாலி கட்டும்
நேரத்தில் அவர் இருந்தது போராட்டக் களத்தில் என்பதை நெகிழ்ச்சியுடன் நினைவு
கூர்கிறார் அவரின் சகபயணியும், எல்ஐசி ஊழியர் சங்கத்தின் வைரத் தூண்களில்
ஒருவருமான தோழர் இ.எம்.ஜோசப்.எல்ஐசியில் பணி ஓய்வு பெற்ற அடுத்தநாளே
தீக்கதிர் பணிக்கு முழுமையாக நான் வந்துவிடுவேன் என்று அவர்
உறுதியளித்திருந்தார்.
அதுபோலவே அடுத்த நாள் காலை 10 மணிக்கு
தீக்கதிர் அலுவலகத்தில் அவர் தனது பணியை துவக்கியிருந்தார். பணி ஓய்வு
பெற்ற பிறகுபத்தாண்டு காலம் தீக்கதிரின் மூத்த துணையாசிரியராக அவர்
பணியாற்றினார். தம்முடைய குடும்ப நிலை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு
குறிப்பிட்ட நாளில்தீக்கதிர் பணியிலிருந்து விடைபெறுவேன் என்று முன்னதாகவே
கூறியிருந்தார். அதுபோலவே செய்தார். ஆனாலும், தீக்கதிரின் விளையாட்டுக்
கதிர் பகுதியை அவர் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.சட்டமன்றத் தேர்தல்
அறிவிக்கப்பட்டவுடன் முதல் பொதுத் தேர்தல் துவங்கி 2011 தேர்தல் வரை
நடந்ததை தீக்கதிரில் விரிவாக பதிவு செய்தார். அதுபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த வாரம்வண்ணக்கதிரில் கூட விளிம்புநிலை விளையாட்டு வீராங்கனை ஒருவர்
குறித்தஅவரது படைப்பு இடம் பெற்றுள்ளது. அவருடைய திருமணம் சாதி -மத மறுப்பு
திருமணம். அவரும் அவருடைய துணைவியாரும் மணமொத்த மணவாழ்க்கை நடத்தியவர்கள்.
அந்த அன்பும், பிரியமும் கடைசி வரை குறையவே இல்லை. கட்சி கேட்டுக்
கொண்டதற்கேற்ப அவருடைய துணைவியார் நாகலெட்சுமி விளாங்குடி பேரூராட்சி
கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க
போட்டிகளில் நடுவராக தாஸ் சென்றிருக்கிறார்.எல்ஐசி பென்ஷனர் சங்கத்தின்
முக்கிய நிர்வாகிகளில் அவரும் ஒருவராக இருந்து வந்தார். கட்சியின் மதுரை
மாநகர்மாவட்டக் குழு அலுவலகத்தில் சிங்காரவேலர் நூலகத்தை உருவாக்குவதிலும்
அவருக்கு பெரும் பங்கு இருந்தது.
கடைசியாக அவரை நேற்றைக்கு முன்தினம்
மருத்துவமனையில் பார்த்துவிட்டு திரும்பும்போது அடுத்த முறைவரும்போது
எனக்கு அறுவை சிகிச்சைநடந்திருக்கும். எனவே, பேச முடியாதுஎன்று கூறினார்.
ஆனால் அறுவை சிகிச்சை நடைபெறவில்லை. ஆனாலும் அவரை பார்த்தபோது பேச
முடியவில்லை.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது கூட அவர் படிப்பதை
நிறுத்தவில்லை. அவருடைய படுக்கையில் ஒரு ஆங்கில புத்தகம் பாதி படிக்கப்பட்ட
நிலையில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. தாஸ் என்கிற புத்தகத்திலிருந்து
இன்னமும் படிக்க வேண்டிய பக்கங்கள் இருந்தன. ஆனால் காலம் அதை
கிழித்தெறிந்துவிட்டது.
அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என்று ஜாதிவெறிக்காக கொலையே செய்யும் மக்களைகொண்ட நாட்டில் சாதியை மறுத்து திருமணம் செய்த பெரியவரின் மறைவு வருத்தத்தை தருகிறது.
ReplyDelete