Friday, May 6, 2016

வெறும் கதை மட்டுமல்ல24.04.2016 அன்றைய வண்ணக்கதிரில் வெளியான எனது சிறுகதை கீழே உள்ளது. இதற்கான ஓவியம் தோழர் ஸ்ரீரசா அவர்களின் கைவண்ணம்.  இதனை வெறும் கற்பனை என்று மட்டும் சொல்லி விட முடியாது. இரண்டாம் வகுப்பு ஏ.சி பெட்டியில் பயணிக்கையில் எனக்கு கிடைத்த, நான் பார்த்த அனுபவங்களும் கூட அடங்கியிருக்கிறது.

டெல்லியிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் வருகையில் ஒரு ராணுவ பிரிகேடியர் என் விபரங்களைக் கேட்டார். உயர்நிலை உதவியாளர் என்றால் அவருக்கு புரியவில்லை. ஹெட் கிளார்க் என்று சொன்னேன். அதன் பிறகு மனிதன் என்னோடு பேசவேயில்லை. பயங்கர கடுப்போடே முணுமுணுத்துக் கொண்டிருந்தார். 

ஒரு மாநில அமைச்சரோடு பயணித்த அனுபவத்தை பிறகு எழுதுகிறேன்.


பசி பகையறியாது.
வேலூர் சுரா


என்னுடைய கம்பார்ட்மெண்ட் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து எனது இருக்கையில் அமர்ந்தேன். எதிர் இருக்கையில் இருந்த பெண்மணி ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பது போல சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். அந்தப் பெண்மணியின் கணவரும் ஒரு நாளிதழுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டார். நானும் என் மனைவியும் ஒரு புன்னகையை மட்டும் பறிமாறிக் கொண்டோம்.

இந்த புறக்கணிப்பு  ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. விடுமுறைப் பயணச் சலுகையை பயன்படுத்தி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இரண்டாம் வகுப்பு ஏ.சி பெட்டியில் பயணிக்கிற போது நிகழ்வதுதான். வண்டி புறப்படும் போது பரஸ்பர அறிமுகம் செய்து கொள்கிற போது எங்கே என்ன வேலை செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு வங்கியில் கிளார்க் என்று பதில் சொல்லும் போதே மற்றவர்களுக்கு ஒரு அலட்சியம் வந்து விடுகிறது. ஓ! கம்பெனி காசில் வருபவனா? சொந்தப்பணம் கிடையாதா? நீயெல்லாம் என்னோடு பயணம் செய்ய தகுதி உள்ளவனா என்று அவர்கள் பார்க்கிற பார்வையே பல கேள்விகளை கேட்டு விடும்.

இருபது வருடத்திற்கு முதன் முதலாக கொல்கத்தா போன போது நடந்த சம்பவம்தான் இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை. எதிர் இருக்கையில் ஒரு ராணுவ அதிகாரி வந்து உட்கார்ந்தார். என் இரண்டு வயது மகளின் கன்னத்தை தட்டி “நைஸ் கிட்” என்று சொல்லி மடியில் அமர்த்திக் கொண்டு “ஐயம் பிரிகேடியர் சந்திரபால்” என்று கை கொடுத்து அறிமுகம் செய்து கொண்டவர், நான் ஒரு குமாஸ்தா என்று தெரிந்து கொண்ட அடுத்த நொடியே குழந்தையை கீழே தடால் என்று இறக்கி விட்டார்.

அது மட்டுமா அதன் பின்பு அரசாங்கத்திற்கு ஒரே திட்டு.

 “யாருக்கு என்ன சலுகை கொடுக்கனும்னு தெரியாதவங்க. ஒரு தராதரம் வேண்டாமா? ஓட்டு வேணுங்கறதுக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்களா? இப்படி கண்டவங்களும் வந்தா ட்ரெய்ன் எப்படி சுத்தமா இருக்கும்?”

ஒரு கட்டத்தில் நானும் பொறுமை இழந்து

“அரசாங்கம் ஒன்னும் எங்களுக்கு பிச்சை போடலை. இதுவும் எங்களோட சம்பளத்தில ஒரு பகுதிதான். அனைவரும் சமம்னு அரசியல் சாசனத்துல சொல்லியிருக்கிறதுக்கு எதிரா ஒரு பெரிய அதிகாரியே பேசறது சரியல்ல. இது ஜனநாயக நாடு” என்று சத்தம் போட

வாக்குவாதம் முற்றி டி.டி.ஆர் வந்து சமாதானம் செய்து வைக்க வேண்டியிருந்தது. சென்னை வந்து இறங்கும் வரை உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு இருந்தார் அந்த உயரதிகாரி.

இந்த முறை புதுடெல்லியிலிருந்து வந்து கொண்டிருந்தோம். நானும் மனைவியும் மட்டும்தான். ஒரு முக்கியமான திருமணத்தில் கலந்து கொண்டு திரும்புகிறோம். கல்லூரி இருந்ததால் மகனும் மகளும் வரவில்லை. மதுரைக்கு நேரடியாகச் செல்கிற சம்பர்க் கிராந்தி வண்டியில் டிக்கெட் வாங்கியிருந்தோம். எங்கள் இருக்கைக்கு கீழே பொருட்களை வைக்கலாம் என்று பார்த்தால் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள். கணவனும் மனைவியுமாக இரண்டு இருக்கைகளிலும் படுத்துக் கொண்டு எழுவேனா என்று அழிச்சாட்டியம் செய்தார்கள். இவருமே எங்களை விட இளம் வயதினர்தான். இத்தனைக்கும் இரண்டு லோயர் பெர்த்துகளுமே எங்களுடையதுதான். கொஞ்சம் கடுப்பாக பேசிய பின்பு எழுந்து கொண்டார்கள். அப்போது அந்த பெண் தன் கணவனிடம்

“இதுக்குதான் ப்ளைட்டில போயிடலாம்னு சொன்னேன். பாருங்க கச்சடா ஆட்களோட போக வேண்டியிருக்கு”

என்று சொல்ல  

“மேடம், வார்த்தையை அளந்து பேசுங்க, எங்க இடத்துல படுத்துக்கிட்டு எழுந்திருக்காம அடம் பிடிச்ச நீங்க கச்சடா ஆளுங்களா, நாங்களா?  நானும் பேச ஆரம்பிச்சா நல்லா இருக்காது. நாற்பத்தி எட்டு மணி நேரம் ஒன்னா போகனும்கறதனால பிரச்சினை வேண்டாம்னு பார்க்கறேன்”

என்று பதிலளித்த பின்பு மயான அமைதி நிலவியது. அந்த இரவு முடிந்து மறு நாளும் அமைதிதான். மாலை விஜயவாடா ரயில் நிலையம் வந்தது. அதற்காகத்தான் என் மனைவி ஆவலோடு காத்திருந்தார்கள். அவர்களின் அக்கா அங்கேதான் இருக்கிறார்கள். ஸ்டேஷனில் சந்திப்பதாகச் சொல்லி இருந்தார்கள். சொன்னது போலவே வந்திருந்தார்கள். கையில் இரண்டு மிகப் பெரிய பைகளோடு வந்திருந்தார்கள்.

“என்ன இது? இவ்ளோ பெரிய பை?”

“எல்லாம் உங்களுக்கு சாப்பாடுதான். சப்பாத்தி, தக்காளி தொக்கு புளி சாதம். ”

“நாங்க இரண்டு பேர்தானே, ஒரு ஊருக்கே கொண்டு வந்திருக்கீங்க”

“வீட்டுக்கு போனதும் அவசரம் அவசரமா சமைக்க வேண்டாம்ல. அதுக்குதான் கொஞ்சம் கூட கொண்டு வந்தோம்”

அந்த அன்பில் நெகிழ்ந்து போனாலும் கெத்தை விட்டுக் கொடுக்காமல்

“சரி நாளைக்கு எங்க அபார்ட்மெண்டில யாருக்குமே சமையல் கிடையாது” என்று சொல்ல எல்லோருமே சிரித்து விட்டார்கள்.

ரயில் விஜயவாடாவைக் கடந்தது. சூரியன் அஸ்தமனமாகும் நேரத்தில் கிருஷ்ணா நதியைப் பார்ப்பது கண் கொள்ளா காட்சி. அதை நழுவ விடாமல் பெட்டியிலிருந்து வெளியே வந்தேன். சூரியனின் கதிர்கள் தண்ணீரில் பிரதிபலிக்க  அழகோ அழகு. வைகை நதியின் நிலையை நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டு உள்ளே வந்தேன். இரவு உணவு முடிந்து படுத்துக் கொண்டோம்.

காலையில் எழுந்திருக்கும் போது வண்டி நின்று கொண்டிருந்தது. தமிழக எல்லைக்குள் நுழைந்திருப்போம், விழுப்புரம் ரயில் நிலையமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வெளியே வந்தால் வண்டி ஏதோ ஒரு காட்டுக்குள் நின்று கொண்டிருந்தது. நிறைய பயணிகள் ரயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.

நெல்லூருக்கு பக்கத்தில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டதால் நள்ளிரவில் எல்லா வண்டிகளையும் நிறுத்தி விட்டார்களாம். ஏசி பெட்டியில் சுகமாக தூங்கிக் கொண்டிருந்ததால் தெரியவில்லை.  ரயில் கிளம்ப  இன்னும் ஆறு மணி நேரமாகும் என்றார்கள். தண்ணீரை சிக்கனமாக செலவழிக்கச் சொன்னார்கள்.

நாமும் கொஞ்ச நேரம் கீழே நிற்கலாம் என்று பார்த்தால் படிக்கட்டுக்கும் தரைக்கும் இருந்த இடைவெளி பயம் கொடுத்தது. இந்த வயதில் எதற்கு தேவையில்லாத ரிஸ்க் என்று மீண்டும் இருக்கைக்கே வந்து விட்டேன். பேன்ட்ரி கார் பையனிடம் டீ வாங்கிக் கொண்டு மனைவிக்கும் கொடுத்தேன். மேல் பெர்த் ஆசாமிகள் காலை உணவுக்கு என்ன இருக்கிற போது என்று கேட்டபோது

“எதுவுமே இல்லை சார். நெல்லூரில்தான் டிபனும் மளிகை சாமானும் ஏத்துவோம். பால் பவுடர் இருக்கிறவரைக்கும் டீ போடுவோம். அதுவும் தீந்து போச்சினா, ட்ரெய்ன் நெல்லூர் போற வரைக்கும் எதுவும் கிடையாது. தண்ணி பாட்டில் ஸ்டாக் கூட குறைச்சலா இருக்கு.”

என்று சொல்ல அவர்கள் முகம் வாடிப் போனது.

“ஏம்பா, பிஸ்கெட்டாவது இருக்கா?”

“இப்பதான் சார் அதுவும் தீர்ந்து போச்சு”

“இதுக்குதான் ப்ளைட்டில போயிருக்கலாம்னு சொன்னேன்” என்று அந்த பெண்மணி மீண்டும் ஆரம்பித்தார்.

அந்த வாக்குவாதம் காதில் விழாதது போல நானும் என் மனைவியும் ஆளுக்கொரு புத்தகத்திற்குள் முகத்தை புதைத்துக் கொண்டோம்.

நிமிடங்கள் ஓடிக் கொண்டிருந்தன. பசிப்பது போல இருந்ததால்

 “சாப்பிடலாமா” என்று மனைவியிடம் கேட்டேன்.

அவரும் பையைத் திறந்தார். சுற்றி முற்றி பார்த்தார்.

இரண்டு பேப்பர் ப்ளேட்டுகளில் மூன்று சப்பாத்திகளும் கொஞ்சம் தக்காளி தொக்கும் வைத்து  அந்த தம்பதியிடம் கொடுத்தாள்.

அவர்கள் வாங்கிக் கொண்டார்கள்.

எங்களைப் பார்த்த பார்வையில் சிறிதாய் நேசம் தெரிந்தது.


3 comments:

  1. நேசங்கள் கூட வேசங்கள் ஆகிவிட்ட தேசமாகிவிட்டது!

    ReplyDelete
  2. சூழ்நிலை மனிதர்களை மாற்றிவிடுகிறது அல்லவா?

    ReplyDelete
  3. உண்மை கலந்த கதை நன்றாக இருந்தது. ரெயில் வண்டியில் எனக்கும் கொஞ்சம் தக்காளி தொக்கும், தயிர் சாதமும் நீங்க தந்த மாதிரி இருந்தது.

    ReplyDelete