Sunday, July 19, 2020

கோயில்கள் யாரிடம் இருந்திட வேண்டும்?




திருவனந்தபுரம் கோயில் தீர்ப்பு பற்றி சில நாட்கள் முன்பு எழுதிய பதிவிற்கு எதிர்வினையாக “இந்துக் கோயில்களின் சொத்துக்கள் அரசின் வசம் செல்லக் கூடாது. மாற்று மதத்தினரோ அல்லது மத நம்பிக்கை இல்லாதவர்கள் கோயில் சொத்துக்களை நிர்வாகம் செய்யக்கூடாது “ என்று எங்கள் தோழர் ஒருவர் எழுதியிருந்தார்.

அவருக்கு அளிக்க வேண்டிய பதிலையே தனியான பதிவாக விரிவாக போடலாம் என்று நினைத்தே இப்பதிவு.

முதலில் நாம் பார்க்க வேண்டிய ஒரு விஷயம்.

கோயில்களுக்கு சொத்து எப்படி வருகிறது?

அரசர்கள் காலத்தில் அரசர்களே கோயில்களை கட்டுகிறார்கள். அவர்களே கோயில்களுக்கு நகைகள் போன்றவற்றை வழங்குகிறார்கள். மானியங்களாக நிலங்களை எழுதி வைக்கிறார்கள். அரசு கஜானாவிலிருந்து அள்ளி விடுகிறார்கள்.

அரசர்களுக்கு அந்த நிதி எங்கிருந்து வருகிறது?

அரசர்கள் என்ன உடலாலும் கருத்தாலும் உழைத்தார்களா? கட்டபொம்மன் கேட்டது போல வயலுக்கு வந்தார்களா? நீர் பாய்ச்சினார்களா? நாற்று நட்டார்களா? களை பறித்தார்களா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. மக்களை வதைத்து ஈட்டிய செல்வம்தானே இது! எந்த ஒரு அரசன் கடை வைத்து வணிகம் செய்தும் பொருள் ஈட்டியதாக வரலாறு சொல்லவில்லை. 

அரசன் அள்ளிக் கொடுத்தான் என்றால் அது அவனின் உழைப்பால் வந்தது அல்ல. மக்களிடமிருந்து சுரண்டிப்பிடுங்கியதுதான்.

இது இந்தியாவிற்கும் இந்து மதக் கோயில்களுக்கும் மட்டும் பொருந்துவது அல்ல. உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் எல்லா வழிபாட்டுத் தளங்களுக்கும் பொருந்துகிற ஒன்றுதான்.

இப்போதும் பல கோயில்களுக்கு வருமானம் வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வருமானம் என்ன அக்கோயில்களின் தக்கார்களோ, தர்மகர்த்தாக்களோ திரட்டுகிற வருமானமா என்ன? பழனி முருகன் கோயிலோ திருப்பதி வெங்கடாசலபதியோ அங்கே மக்கள் பல விதங்களிலும் செலுத்துகிற காணிக்கைகள்தானே!

கடந்த கால கோயில்களை விடுங்கள். இப்போதும் புதிய புதிய கோயில்கள் புதிய புதிய கடவுள்களுக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. தெருவோரப் பிள்ளையார் கோயில்கள் தொடங்கி பாபா கோயில்கள் வரை எத்தனை கோயில்களை தமிழகம் சமீபத்தில் மட்டும் கண்டிருக்கிறது!

சின்னச்சின்னக் கோயில்களும் உண்டு, பெரிய பட்ஜெட்டில் ஆதி யோகி, அக்சர்தம், வேலூர் பொற்கோயில் என ஏராளமான கோயில்களை உதாரணம் சொல்ல முடியும். ஹைதராபாத்திலும் டெல்லியிலும் கோயிலைக் கட்டிய பிர்லாவின் பெயரில் பிர்லா மந்திர் என்று அழைக்கப்படுகிறதே தவிர உள்ளே இருக்கும் கடவுளின் பெயரில் அல்ல. கான்பூரில் உள்ள ராதாகிருஷ்ணர் கோயிலை ஜே.கே கோயில் என்று சொன்னால்தான் உள்ளூர்வாசிகளுக்குப் புரியும்.

இந்த கோயில்கள் எல்லாமும் பக்தர்களிடம் பெறப்பட்ட காணிக்கைகளால் உருவாக்கப்பட்டதுதான். அந்த காணிக்கை பெறப்பட்ட வழிகள் என்ன என்பது இங்கே அவசியம் இல்லை. மேலும் சில கோயில்களின் நோக்கம் என்பது இடத்தை ஆட்டை போடுவதற்கான சதிகளும் அடங்கியதுதான்.

தற்போதைய ராணிப்பேட்டை மாவட்டத்தில் முந்தைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வாலாஜாவில் உள்ள படவேட்டம்மன் ஆலய பின்னணியை இந்த இணைப்பில் படியுங்கள்.


வேலூர் பொற்கோயிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக ஜீவரத்தினம் நகர், விஸ்வநாதன் நகர் என்ற இரண்டு தலித் குடியிருப்புக்களை ஆக்கிரமிக்க நடந்த முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முறியடித்து அந்த மக்களுக்கு பட்டா வாங்கிக் கொடுத்த வீரம் செறிந்த போராட்டமும் நினைவுக்கு வருகிறது.

ஆக கோயில்களில் உள்ள செல்வம் என்பது அடிப்படையாக மக்களின் செல்வம். அந்த செல்வத்தை நிர்வகிக்கும் உரிமை அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகளிடம் இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அரசின் கைவசம்  கோயில்கள் இருப்பதால் அக்கோயில்களின் நிதி எல்லாம் அரசுக்குப் போய் விடுகிறது என்று ஒரு பிரச்சாரம் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. அவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு எழுதிய “இந்துக் கோயில்கள் யார் கையில்?” என்ற நூலை தயவு செய்து படித்து விட்டு பேசுங்கள். இந்து அறநிலையத்துறையின் இணை ஆணையராக இருந்த திரு ஜெயராமன் அவர்களோடு நடத்திய நேர்காணல்தான் அந்த புத்தகம். இந்து கோயில்களை மீட்க வேண்டும் என்ற கூக்குரல் எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை என்னை கேள்வி கேட்ட தோழரும் அந்த புத்தகத்தைப் படித்தால் ஒப்புக் கொள்வார். கோயில்களின் நிதியையெல்லாம் அப்படி அரசுகள் பொது நிதிக்கு மாற்றிக் கொள்வதில்லை. ஏன் வறுமையில் இருக்கும் கோயில்களை புனரமைக்கக் கூட பயன்படுத்தப்படுவதில்லை.

ஆதினங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிற கோயில்களில் நிலவும் ஊழல்கள் பற்றியும் அந்த நூல் பேசியிருக்கும்.  சங்கர மட சொத்துக்கள் பற்றி ஜெயேந்திரருக்கும் விஜயேந்திரருக்கும் நடந்த மோதல்கள், சங்கர மட முறைகேடுகளை அம்பலப்படுத்திய சங்கரராமனின் படுகொலை ஆகியவை மனதில் வந்து போகிறது. மதுரை ஆதீனமும் நித்தியும் அடித்த கூத்துக்களை மறந்திட முடியுமா?

கோயில்களை மீட்போம் என்று ஆவேசமாக வசனம் பேசிய எச்.ராசா, சிலை திருட்டு விஷயத்தில் கள்ள மவுனம் சாதித்தது ஏன்? சிலைத் திருட்டு வழக்கில் என்னை கைது செய்யக்கூடாது என்று டி.விஎஸ் முதலாளி வேணு சீனிவாசன் முன் ஜாமீன் வாங்கி வைத்துக் கொண்டது எவ்வளவு பேருக்கு நினைவில் உள்ளது? திருவண்ணாமலை மாவட்டம் படவேட்டில் உள்ள கோயில்களை புனரமைக்கிறோம் என்று வந்த அந்த முதலாளி பழங்கால கற்சிலைகளைக் கூட ஆட்டையை போட்டுக் கொண்டு போய் விட்டார்கள் என்று என் பிரிவிலேயே பணியாற்றிய படவேட்டைச் சேர்ந்த தோழர் பல முறை சொல்லியுள்ளார்.

தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிதம்பரம் கோயிலில்தான் “காதலன்” பட ஷூட்டிங் நடந்தது. இப்போது கூட ஆயிரங்கால் மண்டபத்தில் செட்டிங் போட்டு ஒரு கோடீஸ்வரத் திருமணம் நடந்தது. அங்கே காணாமல் போன நகைகள் குறித்து தீட்சிதர்களுக்குள் நடந்து வரும் சண்டைகள் தனிக்கதை.  

அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால்தான் தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் ஆவியை பேயோட்டப் போகிறேன் என்று வந்த சீ.சீ.ரவிசங்கர் சாமியாரை துரத்த முடிந்தது.

கோயில்கள் அரசின் வசம் இருக்கிற காரணத்தால்தான்  அங்கே எல்லா பக்தர்களும் உள்ளே நுழைய முடிகிறது. நடராஜனின் அம்பலத்துக்கு அருகே வர முடியாமல் நடராஜரின் செவிகளுக்குக் கேட்காதபடி தமிழில் பாடப்பட்ட தேவாரமும் திருவாசகமும் தடுக்கப்பட்டது போல கோயிலை உருவாக்க உழைத்த எளிய உழைப்பாளி மக்கள் இப்போதும் கூட வெளியேதான் நிறுத்தப்பட்டிருப்பார்கள். கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்பது தொடர்ந்து கேலிக் கூத்தாகவே இருந்திருக்கும். 

ஆகம முறையில் தேர்ச்சி பெற்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்பது கேரளாவில் ஒரு கம்யூனிஸ்ட் அரசில்தானே சாத்தியமானது! கடவுள் மறுப்பைக் கொள்கையாகக் கொண்டிருந்தாலும் திருவாரூர் தியாகராஜர் தேரின் சக்கரங்களை பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தின் துணை கொண்டு செப்பனிட்டு ஓட வைத்தது கலைஞர்தானே!

சிறிது நேரம் முன்பாகத்தான் மதுரைத் தோழர் பகத்சிங் அவர்களின் முக நூலில் இன்னொரு பதிவை படித்தேன். அது.

*திருச்செந்தூர் முருகன் கோயிலில் நீண்டநாள் பிரச்சனையான கடல் அரிப்பை தடுத்து நிறுத்த

*முதல்வரான இரண்டே வருடத்தில் தடுப்பு சுவர் கட்டிக்கொடுத்தார் அன்றைய முதல்வர் கலைஞர் (1971)*
*ஆலயத்தை சுற்றிவரும் பக்தர்கள் அனைவரும் இந்த கல்வெட்டை காணலாம்..




மக்களின் பங்களிப்பால் உருவான ஒரு நிறுவனம், அது கோயிலோ இல்லை எல்.ஐ.சி போன்ற நிறுவனமோ, அதன் கட்டுப்பாடு அரசிடம் இருப்பதுதான் பொருத்தமாக இருக்கும். அப்போதுதான் ஒரு அக்கவுண்டபிலிட்டி என்பது இருக்கும்.  அது முறைகேடு செய்யப்பட்டாலும் கேள்வி கேட்கும் உரிமை என்பது மக்களிடத்தில் இருக்கும்.

இல்லையென்றால்

கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகத்தான் மீண்டும் மாறி விடும்.

இன்னொன்று கேள்வியும் நிச்சயம் வரும். இது ஏன் மற்ற மதங்களுக்கு பொருந்துவதில்ல்லை?

இஸ்லாமிய மத நிறுவனங்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் வக்ப் வாரியமும் இந்து அறநிலையத் துறை போன்றதொரு அமைப்புதான்.

கிறிஸ்துவ மத நிறுவனங்கள் கமிட்டிகள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. அங்கே ஊழல் நடக்கும் போது அதற்கு எதிரான குரல் வலிமையாக எழுகிறது என்பதும் யதார்த்தத்தில் காணக்கூடியதுதான்.

இக்கேள்வி திருவனந்தபுரம் கோயில் தீர்ப்பிலிருந்து எழுந்தது!

ஏற்கனவே திறக்கப்பட்ட நிலவறைகளிலில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் தங்கமும் வைரமும் கொட்டிக் கிடந்தது தெரிய வந்தது. நிலவறை பி யில் என்ன இருக்கிறதோ?

அவை அனைத்தும் அப்படியே அங்கேயே இருப்பதால் யாருக்கு என்ன பயன்? மன்னர் முறை ஒழிக்கப்பட்ட பின்பு, மன்னர் மானியமும் அகற்றப் பட்ட பின்பு, ஜனநாயக ஆட்சி முறையில் அரச குடும்பத்திற்கு எங்கிருந்து வருகிறது கோயிலை நிர்வகிக்கும் உரிமை? அரச குடும்பத்தால் கட்டப்பட்டதுதானே அக்கோயில் என்று புளிச்ச மாவை மீண்டும் தூக்கி வராதீர்கள். மக்களிடமிருந்து சூறையாடிய சொத்துக்கள் மூலம் கட்டப்பட்டதுதான் திருவனந்தபுரம் கோயில்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த வங்கி ஊழியரும் பல வரலாற்றுத் தகவல்களைத் தொடர்ந்து தருகின்ற தோழர் ஷாகுல் அகமது மூன்று நாட்களுக்கு முன்பாக முகநூலில் செய்த பதிவு திருவனந்தபுரம் கோயிலும் மக்கள் நிதி கொண்டே உருவாக்கப்பட்டது என்ற உண்மையை விளக்குகிறது.

கொல்ல வருடம்781ல்(கிறிஸ்து வருடம்1606),வேணாட்டு மன்னர் வீர ரவி வர்மா குலசேகர பெருமாள் ஆட்சி காலத்தில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை சீரமைக்க, பெரும் தொகை அரண்மனை கஜானாவுக்கு தேவைப்பட்டது. அந்த தொகையை 72 1/2(எழுபத்து இரண்டரை)பங்குகளாகப் பிரித்து, ஒவ்வொரு பங்கும் 9000 பணம் என்று நிர்ணயித்து அறிவித்தது அரண்மனை நிர்வாகம்..

திருவனந்தபுரத்தின் மிகப்பெரிய வணிக மையமான சாலை பஜார், அன்றும் பெரும் வணிக மையமாகவே திகழ்ந்தது. அவ்வளவு செல்வச் செழிப்புடன் திகழ்ந்த சாலை வணிக மையத்தின் வணிகர்கள் அனைவரும் சேர்ந்து, பத்மநாபசுவாமி கோவில் சீரமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கியது, ஒரு பங்கான 9000 பணம் மட்டுமே..

நாட்டின் பெரிய அதிகார மையமாக திகழ்ந்த, கோவில் நிலங்கள், சொத்துக்கள் அனைத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த "போற்றிகள்"மற்றும் "எட்டு வீட்டில் பிள்ளைகள்"ஆகியோர் இணைந்து கோவில் சீரமைப்புக்கு அளித்த அன்பளிப்பு, இரண்டு பங்குகளான 18000 பணம் மட்டுமே.

ஆனால், ஒரு சமூகம் என்ற முறையில், நாடார் சமூகம் அளித்த அன்பளிப்பு இரண்டு பங்குகளான 18000 பணம்!வேறு எந்த சமூகமும் இவ்வளவு பெரிய தொகையை கோவில் சீரமைப்பு பணிகளுக்கு அளிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது..இந்த நன்கொடை விபரங்கள், இன்றும் கோவில் திருப்பணிக்குழுவின் குறிப்புகளிலும், Mathilagam Records என்ற ஆவணங்களிலும் காண முடியும்..

இந்த தகவல்களை, T.K.வேலுப்பிள்ளை, Travancore State Manual, Volume 2ல், 105, M 106, Appendix Page 76-77ல் குறிப்பிட்டுள்ளார்..

மேற்சொன்ன நூலில்,"புல்லூர்யான ராஜாக்கமங்கலம் தேசத்து பெருமாள் அடியன் சாணான்மார் பேரில், மதிலகம் பணிக்கு, பத்தி(பங்கு)ரண்டுக்கு பணம் 18000"என்று குறிப்பிடப்பட்டுள்ளது.....

இப்படி மக்களிடம் பணம் திரட்டி பத்மநாபர் ஆலயத்தை அமைத்த  இதே  திருவாங்கூர் சமஸ்தானம்தான் எவ்வளவு மோசமான ஆட்சிமுறையும் அடக்குமுறையும் கொண்ட ஒன்றாக இருந்திருந்தது என்பதற்கு அங்கே பெண்கள் மேலாடை அணிவதைக் கூட தடை செய்ததுதான் சாட்சி. நிழல் விழுந்தால் கூட தீட்டு என்று  சொல்கிற பிராந்தன்களின் தேசம் என்று விவேகானந்தர் சொன்னதும் இவர்களைத்தானே!

சங்கிகளால்தான் இந்து மதத்தை பாதுகாக்க முடியும், அவர்களால்தான் கோயில்களை பாதுகாக்க முடியும் என்ற மாயத்தோற்றத்தை பக்தர்களிடம் உருவாக்குவதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

அவர்களிடம் நாம் சொல்ல வேண்டிய உண்மை ஒன்றுதான். இந்து மதத்திற்கும் சங்கிகள் பின்பற்றுகிற கோழை சவர்க்கர் உருவாக்கிய இந்துத்துவத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர்கள் ஆட்சியைப் பிடிக்க உங்கள் மத உணர்வுகளை தூண்டி விடுகிறார்கள். அவர்களுக்கு தீனி போடும் விதத்தில் சிலர் செயல்படுகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. சாத்தான் குளம் படுகொலைகள், பொதுத்துறை தனியார் மயம், பெருகும் வேலையின்மை,  அழிக்கப்படும் இட ஒதுக்கீடு, பிஎம் கேர்ஸ் மர்ம நிதி ஆகிய அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் மக்கள் கவனத்தை திசை திருப்ப வைத்ததே கருப்பர் கூட்டத்தின் சாதனையாகி விட்டது. தேவையற்ற ஆணியை பிடுங்கி சுத்தியலை அவர்கள் கையில் கொடுத்து விட்டார்கள்.

கருப்பர் கூட்டத்தை கண்டிக்கிறவர்கள் பலரும் அதே பாணியில் செயல்படுகிற மாரிதாஸ் போன்றவர்களை பாராட்டுகிறவர்கள் என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய உண்மை.

நேற்று முன் தினம் ராமன், நேற்று ஐயப்பன், இன்று முருகன் என்று கடவுளை கையிலெடுப்பவர்கள், மனிதனின் பிரச்சினைகளைப் பற்றி என்றுமே கவலைப்படுபவர்கள் கிடையாது. உங்களை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக உசுப்பேத்தி விடுபவர்கள் நாளை கருவேப்பிலை போல  தூக்கியெறியும் நாள் தூரத்தில் இல்லை என்பதைத்தான் நாம் சொல்ல வேண்டும்.

பிகு: இந்துக் கோயில்களின் கட்டுப்பாடு சங்கி ஆட்சியாளர்களிடம் சென்றால் அப்போது நிச்சயமாக கோயில் சொத்துக்களுக்கு ஆபத்துதான். ரிசர்வ் வங்கியின் 165000 கோடி ரூபாயை சுருட்டி முதலாளிகளுக்கு கொடுத்தது போல, பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பதுக்கி வைத்துள்ளது போல, கோயில் சொத்துக்களையும் அதானி, அம்பானிக்கு வாரி வழங்கிடுவார்கள்.



3 comments:

  1. நிறைய தகவல்கள் தோழர். அருமை சிறப்பான/ தேவையான பதிவு.

    ReplyDelete
  2. Many useful informations to understand the issue in the correct sense.

    ReplyDelete
  3. நேர்த்தியான தொகுப்பு

    ReplyDelete