Friday, July 17, 2020

கொரோனா - மந்தை தடுப்பு சக்தி

இன்றைய தேதியில் மிகவும் அவசியமான பதிவை அளித்த  தோழர் ரமணன் அவர்களுக்கு நன்றி சொல்லி பகிர்கிறேன்.




*நாளொரு கேள்வி: 16.07.2020*

இன்று நம்மோடு தீக்கதிரில் அறிவியல் பகுதியை தொடர்ந்து எழுதி வரும் *திருமிகு இரமணன்* ( எல்.ஐ.சி அதிகாரி, பணி ஓய்வு, சென்னை)
************************************

*கேள்வி*

மந்தை தடுப்பு சக்தி (Herd Immunity) என்றால் என்ன? கொரொனா முடிவுக்கு வருவதற்கான ஓர் வழியாக அதை பேசுகிறார்களே!

 *இரமணன்*    

இந்த சொற்றொடரில் உள்ள *மந்தை* எனும் வார்த்தைக்கு கூட்டமாக இருக்கும்போது வெளிப்படும் செயல்பாடுகள் என்று பொருள் கொள்ளலாம். அடுத்து *தடுப்பு சக்தி* எனும் பொருள்படும் இம்மியூனிட்டி என்ற மருத்துவ  வார்த்தைக்கு, பேக்டீரியா, வைரஸ் போன்ற  நுண்கிருமிகள் நம் உடலில் புகும்போது நம் உடலிலுள்ள *நோய் தடுப்பு மண்டலம்* (Immune sysstem) செய்யும் எதிர்வினை என்று புரிந்து கொள்ளலாம்.

 *நோய் தடுப்பில் நான்கு வகைகள் இருக்கின்றன.*

1. நோய் தொற்று ஏற்பட்டு கிருமிகளின் ஆன்டிஜென்னால் நமது இம்மியூன் அமைப்பு  தூண்டப்பட்டு அதற்கேற்ற ஆன்டிபாடிகளை உருவாக்குவது; அதை இம்மியூன் அமைப்பு தன் நினைவில் வைத்துக்கொண்டு எதிர்காலத்திலும் தடுப்பு சக்தியைப் பெறுவது. இதை *இயற்கை செயலூக்க தடுப்பு சக்தி (Active Natural)* என்கிறார்கள்.   

2. செயலிழக்க வைக்கப்பட்ட கிருமிகளை உடலில் செலுத்துவதன் மூலம் பெறுவது. அதாவது தடுப்பூசி (Vaccine). இதை *செயற்கை செயலூக்க சக்தி(Active Artificial)* என்கிறார்கள். 

3. தாய்க்கு ஏற்பட்ட தொற்றிற்கு எதிராக அவரது உடலில் உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகள், குழந்தையின் தொப்புள் கொடி மற்றும் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு பாதுகாப்பு தருவது. இந்த முறையில் ஆன்டிபாடிகள் விரைவாக சிதைக்கப்படுவதால் இது குறுகிய காலத்திற்கே பலன் தரும். இது *இயற்கை மந்த(மந்தை அல்ல) தடுப்பு சக்தி (Passive Natural)* 

4. உள்நுழைந்த கிருமிகளுக்கு எதிராக ஆன்டிபாடி செலுத்தப்பட்டதால் கிடைக்கும் உடனடி தற்காலிக பாதுகாப்பு. இது *செயற்கை மந்த((மந்தை அல்ல)) தடுப்பு சக்தி (Passive artificial).*

 (Ref - A* Biology on June 2, 2017)

*மந்தை தடுப்பு என்றால் என்ன?*

ஒரு சமுதாயத்தில் அதிகமான சதவீதத்தினர் ஒரு குறிப்பிட்ட கிருமிக்கெதிராக தடுப்பு சக்தியை பெற்றுவிட்ட சூழலில்,  அதைப் பெறாதவர்களை அந்தக் கிருமி தொற்றுவது கடினம். ஏனெனில்  தடுப்பு சக்தி உள்ளவர்களைத் தாண்டிக் கொண்டு அது இல்லாதவர்களிடம் பரவ இயலாது. இதுவே *மந்தை தடுப்பு சக்தி* என்கிறார்கள்.

மந்தை தடுப்பு சக்தி ஒவ்வொரு நோயிற்கும் பிரத்யேகமானது. தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் வேகத்தை, அதாவது தொற்றின் வீரியத்தைப் பொறுத்தது. *நாவல் கொரோனா வைரசின் குறிப்பான பரவும் தன்மையும் அதற்கெதிராக மந்தை தடுப்பு சக்தி பெறுவது குறித்தும் இன்னும் தெளிவாகவில்லை.* ஆனால் ஒருவருக்கு தொற்று ஏற்படுவது, அவர் அதிலிருந்து குணமடைவது, தடுப்பு சக்தி பெறுவது என்ற இந்த தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் மந்தை தடுப்பு சக்தி பெறுவதற்கு பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகலாம் என்கிறார் மருத்துவர் *எட்வர்டோ சான்செஸ்* (Dr. Eduardo Sanchez, American Heart Association Chief Medical Officer for Prevention

(www.heart.org/en/news/2020/03/25/covid-19-science-understanding-the-basics-of-herd-immunity) 

*ஆய்வுகள் என்ன சொல்கின்றன?*

கொரோனா தொற்றிற்கு சிகிச்சையும் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படாத இந்த நிலையில் மந்தை தடுப்பை அடைவது சாத்தியமில்லை என்கிறது *லான்செட்* என்கிற இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு. *பாதிப்புக்கு உள்ளாகும் சமுதாயத்தில் ஏராளமான இறப்புகளையும் பொது சுகாதாரத் துறைக்கு மிகுந்த சுமையையும் இந்த அணுகுமுறை ஏற்படுத்தும் என்கிறது அந்த ஆய்வு.* இந்த ஆய்வு குறித்து அதே இதழில் கருத்து தெரிவித்துள்ள *ஜெர்மன் நாட்டு கிருமியியல் நிபுணர்கள்* இசபெல்லா எக்ரேல் மற்றும் பெஞ்சமின் மேயர்  *‘இந்த ஆய்வின் முடிவின்படி, மந்தை தடுப்பு சக்தியை இயற்கை தொற்றின் மூலம் அடைவது என்பது தார்மீக நெறியற்றது மட்டுமல்ல சாத்தியமற்றதும் ஆகும். பெரும்பாலான மக்கள் தொற்று குறித்து தெளிவில்லாமலிருப்பதால், ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் கிருமி தொற்று முதலில் இருந்த கொள்ளைநோய் அளவுக்கு இரண்டாவது அலையின் மூலம் ஏற்படும்.’* என்கிறார்கள். அதாவது தகுந்த சிகிச்சையையும், தடுப்பூசியையும் கண்டுபிடிப்பதுதான் சரியானது. மந்தை தடுப்பு இயல்பாக ஏற்படும் என்பது தவறானது.

*இந்த ஆய்வு ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்டது. அங்கு நோய் தொற்று சமுதாயப் பரவல் ஆனபோதிலும் 5% மக்கள் உடலில் மட்டுமே ஆன்டிபாடி உருவாகியிருந்தது.* ஆகவேதான் மந்தை தடுப்பு சாத்தியமில்லை என்று முடிவுக்கு வந்தனர். *சீனாவின் வூஹான் நகரில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் 17368 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 3.2% இலிருந்து 3.8% பேருக்கே ஆன்ட்டிபாடி உருவாகியிருந்தது.* இது ஜூன் ஐந்தாம் தேதி நேச்சர் இதழில் வெளிவந்துள்ளது. இதுவும் மேற்கண்ட முடிவை வலுப்படுத்துகிறது.
(Kaunain Sheriff M | New Delhi | Updated: July 9, 2020 new Indian express).

*மந்தை தடுப்பு நுழைவாயில் புள்ளி(Threshold) என்பது என்ன?*

சாதாரண காலங்களில், தடுப்பூசி மூலம் எத்தனை சதவீதம் பேர் தடுப்பு சக்தி அடைவது என்ற அடிப்படையில் மந்தை தடுப்பு நுழைவாயில் புள்ளி கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அம்மை நோய்க்கு எதிராக 90% பேர் தடுப்பூசி போடப்பட்டால், அவர்களில் சிலருக்கு ஆன்டிபாடிகள் காலப்போக்கில் குறைவது, நபருக்கு நபர் வேறுபடும் இம்மியூன் தூண்டல்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு, 60 அல்லது 70 சதவீதம் மக்கள் பாதுகாப்பு பெற்றுவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்தக் கருதுகோள் வேகமாகப் பரவிவரும் ஒரு நோயிற்கு எதிராக இம்மியூனிட்டி அளவு சீரோவாக இருக்கும்  மக்கள் தொகைக்கு பொருந்தாது.    

*இப்பொழுது கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில் சில ஆய்வாளர்கள் கணித மாதிரிகளைக் கொண்டு இந்த நுழைவாயில் புள்ளியைக் கணக்கிடுகிறார்கள்.* அது 20 சதவீதத்திலிருந்து 60 சதவீதம்வரை மாறுபடுகிறது. இந்த கணித மாதிரிகளில் நோய் பரவும் வீதம் சீராக இல்லாமல் பல மாறிலிகளை(variables) பொறுத்து என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.  நாடு, வயது போன்றவைகள் மாறிலிகளாகக் கொள்ளப்படுகிறது. 

கொரோனா தொற்று எல்லோரையும் ஒரே போல் தாக்குவதில்லை என்றும் நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளவர்கள் (susceptibility) முதலில் தாக்கப்படுகிறார்கள் என்றும், இதனால் இந்தப் பிரிவு மக்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும் என்றும் கணித மாதிரிகளில் கணக்கிடப்படுகிறது. ஆனால் இந்த முறையானது வேறு சில நோய்களுக்குத்தான் பொருந்தும்; கொரோனாவிற்குப் பொருந்தாது என்றும் மூச்சு மண்டலத்தை தாக்கும் வைரஸ்கள் எல்லோரையும் ஒரேபோல்தான் தாக்கும் என்றும் ஒரு ஆய்வாளர் கூறுகிறார். இந்த வைரஸ் பரவும் வேகம், அரசியல் மற்றும் சமூக முடிவுகளையும் சார்ந்து இருக்கின்றது. அதை எவ்வாறு கணிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. *ஏற்கனவே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நோய்களுக்கு, மந்தை தடுப்பு சக்தி ஏற்படும் புள்ளி நிலையானதாகவும் கணிக்கக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் இப்பொழுதுதான் புதிதாக பரவிக்கொண்டிருக்கும் ஒரு நோயிற்கு அப்படிப்பட்ட மாறாத புள்ளியை முன்வைப்பது அபாயகரமானதாகவும் தவறான முடிவுகளுக்கு இட்டு செல்வதாகவும் அமையும் என்று ஒரு ஆய்வாளர் கூறுகிறார்.* அதாவது பெரும் எண்ணிக்கையிலான இறப்புகளும் அழிவுகளும் ஏற்படும் என்கிறார்கள். 

(இது குறித்து விரிவாகப் படிக்க 

https://www.theatlantic.com/health/archive/2020/07/herd-immunity coronavirus/614035/).    

*ஏன் மந்தை தடுப்பு குறித்து விவாதிக்க வேண்டும்?*

இந்த நோய் பரவத் தொடங்கியபோது *இங்கிலாந்து (UK) அரசானது* நாட்டின் மக்கள் தொகையில் 60% மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட அனுமதித்து அதன் மூலம் மந்தை தடுப்பு சக்தி பெறுவது என்ற உத்தியை முன்வைத்தது. (Kaunain Sheriff M | New Delhi | Updated: July 9, 2020 new Indian express)

இது நம் நாட்டிலும் சிலரால் எதிரொலிக்கப்பட்டது. ஆனால் இது அறிவியல்பூர்வமானது அல்ல என்று  மேற்கண்ட ஆய்வுகளில் பார்த்தோம். மந்தை தடுப்பு சக்தி என்பது இயற்கை நமக்கு வழங்கும் இறுதி ஆயுதம். அதை ஏராளமான மக்களுக்கு தொற்று ஏற்படும்வரை பொறுத்திருந்து இறப்புகளையும் மருத்துவ சிகிச்சை சுமையையும் ஏற்றுக்கொண்டு அடையலாம். அல்லது முறையான மருந்துகளையும் தடுப்பூசியையும் விரைவாகக் கண்டறிந்து அதன்மூலம் மக்களுக்கு தடுப்பு சக்தி ஏற்படுத்தி அடையலாம். *நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு சக்தி இல்லாமலும் விழிப்புணர்வு பெறாமலும் இருக்கும் நிலையில் முதல் வழி என்பது தற்கொலைக்கு சமமானது. மந்தை தடுப்பு சக்தியை இரண்டாவது வழியின் மூலம் அடைவதே அறிவியல்பூர்வமானது.*

-செவ்வானம்-

No comments:

Post a Comment