Sunday, July 5, 2020

புகைப்படம், ஓவியம், கவிதை -அற்புத உணர்வு


நேற்று ஓவியர் தோழர் ரவி பாலேட் அவர்களின் முக நூல் பக்கத்தில் பார்த்த புகைப்படமும், அதனால் உந்தப்பட்டு அவர் வரைந்த ஓவியமும் அதற்கு சமர்ப்பணமாக மனுஷ்ய புத்திரனால் இன்று பகிர்ந்து கொள்ளப்பட்ட கவிதையும் அற்புதமான உணர்வுகளின் வெளிப்பாடு. நெகிழ்சியாகவும் இருந்தது. 

அவற்றை அனைவரும் அறிய வேண்டும் என்ற ஆவலில் ஓவியர் தோழர் ரவி பாலேட் மற்றும் கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஆகியோருக்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொள்கிறேன்



சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு வெண்குதிரையின் கடிவாளப்பட்டையை Abdul Hameed Sheik Mohamed மனுஷ்யபுத்திரன் பற்றிக்கொண்டிருக்கும் அந்தப்படம் ஏனோ என்னை நாளெல்லாம் தொந்தரவு செய்துகொண்டேயிருக்கிறது.

இந்த மனிதனின் புன்னகை வழியாக உள்ளே அமிழ்ந்திருக்கும் உள்ளத்தின்கதியினை உணர்கையில் நெஞ்சம் ஆதரவாய் அன்பில் கசிகிறது.

அந்தப்படத்தை நான் புறக்கணித்துக்கொண்டேயிருந்தாலும், விடாமல் என்னைத் துரத்திக்கொண்டிருத்தலிலிருந்து தப்பித்தலுக்காகவும், என் ஆசுவாசத்திற்காகவும் அந்த மனுஷ்யபுத்திரனை ஒரு ஓவியத்தின் வழியாக கடக்க முயல்கிறேன்.


இது மனுஷ்ய புத்திரனின் சமர்ப்பணக் கவிதை


ஓவியர் Ravi Palette வுக்கு பின் வரும் இந்தக் கவிதையை சமர்ப்பணம் செய்கிறேன், அவர் வரைந்த இந்த ஓவியம் என்பால் அன்பு கொண்ட நண்பர்கள் பலரையும் மனம் கசியச் செய்துவிட்டது. எனக்கு நெருக்கமான நண்பர்கள் அனைவரும் நான் நடப்பதுபோல கனவு கண்டதாக அடிக்கடி கூறியிருக்கின்றனர். பலர் கண்ட ஒற்றைக்கனவு அது. நான் ஒரு கல்யாண குதிரையை சக்கர நாற்காலியிலிருந்து பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தைக் கண்டு உந்தப்பட்டு ரவி இந்தப்படத்தை வரைந்திருக்கிறார். மிக மோசமான ஒரு மனநிலை கொண்டிருந்த நாளில் இந்தக் குதிரை வந்து என் அருகில் நின்று ’வா போகலாம்’ என்று அழைக்கிறது. எனக்கு அடிக்கடி ஒரு கனவு வரும், நான் ஒரு புல்லட் வாகனத்தை வேகமாகச் செலுத்திக்கொண்டு செல்வதுபோல. என் கவிதைகளால் எத்தனையோ பேரின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறேன். இன்று ரவி என் கனவுக்கு ஒரு வண்ணம் தீட்டியிருக்கிறார். நாம் எல்லோரும் குதிரையேறிச் செல்லும் ஒரு பொன்னான காலம் வரும்.
- மனுஷ்ய புத்திரன்
சித்திரக் குதிரையேற்றம்
………………………………………..

கால்களில்லாத இளவரசனை
புரவியிலேற்றி அனுப்ப
விரும்பினான் சித்திரக்காரன் ஒருவன்


புரவியேறும் கனவில்
வாழ்நாளெல்லாம்
தூங்காதிருந்த
கால்களற்ற இளவரசன்
லாயத்துக் குதிரைகளின்
கடிவாளங்களை தினமும் முத்தமிட்டு
கண்ணீர் சிந்தினான்
அந்த துக்கம் சித்திரக்காரனையும்
மனம் உடையச் செய்துவிட்டது


காதலின் உன்மத்தவேகம் கொண்ட
சித்திரக் குதிரையொன்றை
இரவெல்லாம் தீட்டி முடித்தான்
கால்களற்ற இளவரசனுக்காக


நிஜக்குதிரைகள் போலல்ல
சித்திரக் குதிரைகள்
அவை செல்லும் வேகம்
ஒரு சொல்லின் வேகத்தைவிடவும் அதிகம்
மனதின் வேகத்தைவிடவும் அதிகம்
அவன் இழந்த நடை அனைத்தும்
சித்திரக் குதிரையின் கால்களில்
பாய்ந்து பெருகியது
அவனது உடைந்த கனவுகளின் பாழ்நிலங்களை
அந்தக் குதிரை மின்னலென கடந்து சென்றது


சித்திரக்குதிரையிலேறி
மேகக்கூட்டங்களினூடே
செல்லும் கால்களற்ற இளவரசனை
ஒரு அதிசயம் போல
அன்ணாந்து பார்க்கின்றனர்
ஊர் மக்கள்
கால்களற்ற மனிதர்கள் எது செய்தாலுமே
அது ஆச்சரியம்தான்


பாதிவழியில் திரும்பிப்பார்த்த
கால்களற்ற இளவரசனுக்கு
அப்போதுதான் உறைத்தது
தனக்குப்பின்னால்
இளவரசி இல்லையே என்று


இளவரசியற்ற இந்த பயணம்
பாதிப்பயணமே எனும் துக்கம் மேலிட
குதிரையின் வழியை திசை மாற்றி
சித்திரக்காரனிடம் பாய்ந்து சென்று
’ ஏனிந்த அநீதியை இழைத்தாய் ?’ என்றான்
கண்கள் சிவக்க


சித்திரக்காரன்
கால்களற்ற இளவரசனை
சமாதானம் செய்தான்
’ நீ இப்பிறவியில்
தனித்திருந்து சண்டையிட்டு
அழிய விதிக்கபட்டவன்
சண்டைக் குதிரைகளின் பின்னே
இளவரசிகள் அமரமாட்டார்கள்’


4.7.2020
மாலை 5.27
மனுஷ்ய புத்திரன்

1 comment:

  1. Arumai. Unarchhi thoguppu. Azhiya can be replaced by amaranaaga.

    ReplyDelete