Tuesday, September 24, 2019

சுவையாய், சுலபமாய் பருப்புப் பொடி




இன்று காலை தயார் செய்யும் போதுதான் நீண்ட காலமாக சமையல் குறிப்பு எதுவும் எழுதவில்லை என்பது நினைவுக்கு வந்ததால் தயாரிக்கும் போதே புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

மிகவும் சுலபமாய் தயாரிக்கலாம் .

மனைவி வெளியூரில் இருக்க தனியே சமைத்து சாப்பிட்டு சிரமப்படுவதாக சொல்லிக் கொள்ளும் ஆண்களுக்கு உதவிகரமாக இருக்கும். (யாரையும் குறிப்பாக சொல்லவில்லை என்று சொன்னாலும் சிலர் அதை ஏற்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்)

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டும் தலா அரை டம்ப்ளர், கால் டம்ப்ளர் பொட்டுக் கடலை மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக நிறம் மாறத் தொடங்கும் வரை அப்படியே வறுக்கவும். எண்ணெய் எல்லாம் சேர்க்கக் கூடாது. கொஞ்சம் அசந்தால் கறுகி விடும் அபாயம் உண்டு. நன்றாக வறுபட்ட பிறகு அதை தனியாக எடுத்து வைத்து விடவும்.

பிறகு அதே வாணலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் ஏழெட்டு மிளகாய் வற்றல் (கிள்ளிப் போடவும்) ஒரு ஸ்பூன் அளவு மிளகு, ஒரு ஸ்பூன் அளவு சீரகம் ஆகியவற்றை வறுக்கவும். ஒன்றரை ஸ்பூன் அளவு உப்பு சேர்க்கவும். எப்போது உங்கள் மூக்கில் நெடி அடிக்க தொடங்குகிறதோ அப்போது எடுத்து வைத்து விடவும். பிறகு ஒரு ஸ்பூன் கறுப்பு எள் வறுக்கவும். வெடிபடும் சப்தம் கேட்கையில் எடுத்து முந்தைய கலவையிலேயே சேர்த்து விடவும்.

அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு, வறுத்த பருப்பு வகைகளை மிக்ஸியில் நன்றாக பொடி செய்து கொள்ளவும். மிளகாய், மிளகு வகையறாக்களை சின்ன மிக்ஸியில் பொடி செய்து அதனை பருப்பு வகையறாவுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக சேர்த்து ஒரு ஐந்தாறு சுற்று சுற்றவும். இப்போது அனைத்தும் நன்றாக கலந்து விடும்.

இதுதான் சுவையான பருப்புப் பொடி சுலபமாக தயாரிக்கும் வழி.

பிகு:

பொதுவாக பருப்புப் பொடியை சாதத்தில் பிசைந்து சாப்பிட ஹோட்டல்களில் நெய் ஊற்றுவார்கள்.

என்னுடைய சாய்ஸ் எப்போதுமே நல்லெண்ணெய் . . .



No comments:

Post a Comment