Monday, September 2, 2019

உனக்கு என்ன தகுதி இருக்கிறது?



புகழ் பெற்ற வரலாற்று நிபுணர் ரொமிலா அவர்களை ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் கௌரவ பேராசியராக தொடர வைப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்வதற்காக அவரது தகுதிச் சான்றிதழ்களைக் கேட்டது தொடர்பாக ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் எழுதிய முக நூல் பதிவு இது.




ரொமிலா தாப்பர்
பிரண்ட்லைன் இதழில் சில மாற்றங்களைச் செய்து செபடம்பர் 2012இல் மறு வெளியீடு செய்தோம். இதழை அன்றைய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி வெளியிட ரொமிலா தாப்பர் பெற்றுக் கொண்டார். 



அன்று இரவு டெல்லியில் உள்ள இந்தியா இண்டர்நேஷனல் சென்டரில் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். இரவு எத்தனை மணிக்கு அங்கு வர வேண்டும் என்று ரொமிலா தாப்பர் கேட்டார். ஏழு மணி என்றேன். ஆனால் நான் அங்கு 7.05க்குத்தான் செல்ல முடிந்தது. அது ஒரு நீண்ட ஹால். ரொமிலா தாப்பரும் பிராபாத் பட்னாயக்கும் ஏற்கெனவே அங்கு வந்துவிட்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். எங்கள் ஆசிரியர் குழுவினர் அதே ஹாலில் வேறு ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். 

தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும் என்று ரொமிலா தாப்பரிடம் நான் சொல்ல அவர், பரவாயில்லை ஆனால் நான் உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் என்றார். அவர் கேட்டது இதுதான்: உங்கள் ஆசிரியர் குழுவில் ஜாதி அமைப்பு இருக்கிறாதா? சற்றே அதிர்ச்சிக்குள்ளான நான் ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் என்றேன். ஏன் அவர்கள் ஹாலின் மூலையில் தள்ளி அமர்ந்திருக்கிறார்கள் என்றார். “உங்களிடம் ஒரு பயம் கலந்த மரியாதை காரணத்தினால்தான்” என்றேன். 

உடனே இருக்கையில் இருந்து எழுந்த அவர் நாம் அனைவரும் வட்டமாக அமர்ந்து பேசுவோம் என்றார். அவரே நாற்காலிகளை நகர்த்தத் துவங்கினார். சிறிது நேரத்தில் கோள வடிவத்தில் அமர ஒரு இனிமையான நீண்ட உரையாடல் துவங்கியது. மறக்க முடியாத அனுபவம்.

பின்னர் ஒரு முறை அவரது நீண்ட நேர்காணலை கவர் ஸ்டோரியாக வெளியிட முடிவு செய்தோம். அட்டைப் படத்தில் என்ன போடப் போகிறாய் என்றார். உங்களது படத்தை அட்டையில் போடுவது என்பது என் கனவு என்றேன். முடியவே முடியாது என்று மறுத்து விட்டார். 

அட்டைப் படத்தில் வேறு என்ன போடுவது என்று நான் கேட்க இந்திய வரலாறு தொடர்பான படங்களை அனுப்பச் சொன்னார். அவற்றில் சிலவற்றை எடுத்து collage செய்யச் சொன்னார். அதுவே அட்டைப் படமானது. எனது கனவை ஒரு விதத்தில் நிறைவேற்றும் விதமாக அவரது படத்தை இதழில் உள்ளே முழுப் பக்கத்தில் வெளியிட்டேன். 



எளிமை, அறிவின் மறு உருவம் ரொமிலா தாப்பர்.

அவரிடம் தகுதி கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது?

No comments:

Post a Comment