Monday, September 2, 2019

வினாயகரை புலம்ப வைக்காதீர் . . .


இரண்டு நாட்களாக எங்கள் பகுதியில் காணும் காட்சிகள் கவலையாக உள்ளது. 

வழக்கமாக வினாயகர் சதுர்த்தியின் போது ஒரு பரபரப்பு இருக்கும். சிறுவர்கள் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். மிஞ்சிப் போனால் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

இந்த வருடம் எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் மட்டும் நான்கு பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பந்தல் அமைப்பது தொடங்கி அலங்காரம் செய்வது வரை பதினைந்து, பதினாறு வயது சிறுவர்கள்தான்.

ஆனால் நான் கவனித்த சில விஷயங்கள் 

ரோட்டில் குழி வெட்டி பந்தல் போடும் போது தாராளமாக பயன்படுத்தப்பட்ட கெட்ட வார்த்தைகள்,

சாலையில் வேகமாக வரும் வாகனங்களை மறித்து பணம் கேட்பது, கொடுக்காதவர்களை பார்க்கும் முறைப்பான பார்வை, 

நான் பார்த்த நான்கு இடங்களில் மூன்று இடங்களில் அவர்கள் சிறுவர்களாகவே நடந்து கொள்ளவில்லை. வினாயகர் சிலை வைப்பது என்ற பெயரில் சங்கிகள் ரௌடிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றியது. 

நேற்றிரவு கடைசியாக பார்த்த ஒரு காட்சிதான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

ப்ளெக்ஸ் பேனர் கொண்டு மூடப்பட்டிருந்தாலும் முழுமையாக மூடப்படாமல் இருந்த பிள்ளையார் சிலைக்கு அருகே இருந்த பாட்டிலில் இருந்த கருந்திரவம் பானகம் என்றும் அதைத்தான் இரண்டு பேர் யூஸ் அன்ட் த்ரோ  டம்ப்ளரில் அருந்திக் கொண்டு இருந்தார்கள் என்று நம்புகிறேன்.

PLEASE, NOT IN MY NAME என்று 
உயிர் இருந்தால் பிள்ளையார் சிலைகளும் கண்டிப்பாகக் கூறும் . . .

No comments:

Post a Comment