Monday, September 16, 2019

குதிரைகளும் குருவிகளும்

குதிரைகளும் குருவிகளும் 


பொருளியல் அரங்கம் 

                                                          - க.சுவாமிநாதன்




எல்லாத் துறைகளுமே நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. உங்கள் வீட்டிற்கு பேப்பர் போட வருகிறவரிடம் பேசிப் பாருங்கள்! “ எல்லா பேப்பர் விற்பனையும் விழுந்து போச்சு... 100 பேப்பர் போட்ட இடங்களில் இப்போது 60, 70 பேப்பர்தான் போடுறேன்” என்பார். சென்னையில் உள்ள லாட்ஜ்களில் நிறைய ரூம்கள் காலியாய் கிடக்கின்றன. ஹாலும் மெனுவுமாய் 48000 சொன்ன இடங்களில் பார்கைன் செய்து, மெனு மாறாமல் 23000 ரூபாய்க்கு ஒரு மாலை விருந்தை ஃபிக்ஸ் செய்ததை ஒரு நண்பர் “பெருமையாக” சொல்லிக் கொண்டிருந்தார். அறைகளின் பதிவு 50, 60 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. உணவு ஏற்பாடு உள்ள இடங்களிலேயே ஹாலை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள், வெளியில் இருந்து உணவு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று இறங்கி வந்து வணிகம் பேசுகிறார்கள். தொழில்களும் வியாபாரமும் டல் அடிப்பதால் ரூம்கள் காத்தாடுகின்றன. இவையெல்லாம் அன்றாடம் சந்திக்கிற உரையாடல்கள்.

அமைப்பு சார் நெருக்கடி என்றால் என்ன?

 

பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக்  “ இது வழமையான சுழல் நெருக்கடி (Cyclical Crisis) அல்ல... அடிக்கடி நிகழ்கி்ற (Sporadic crisis) நெருக்கடியுமல்ல... இது அமைப்பு சார் நெருக்கடி” என்கிறார். 
இதற்கு என்ன அர்த்தம்! முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடி என்பதாகும். இவர்கள் பயணிக்கிற பொருளாதார பாதை இங்கேதான் போகும், இங்கேதான் முட்டும், திக்குத் தெரியாமல் திண்டாட வைக்கும் என்பது தெரிந்தே செல்வதுதான் என்கிறார் பிரபாத் பட்நாயக். 
அதாவது நவீன தாராளமயப் பாதை என்பது பெரும்பான்மை மக்களுக்கு பயன் தராது என்பது உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டு இருப்பதே. குதிரை- குருவி கதையை உதாரணமாக சொல்வார்கள். குதிரைக்கு ஓட்ஸ் கொடுத்தால் அது தின்று கொழுத்து சாணம் போடும்; அதைக் குருவிகள் கொத்தித் தின்னலாம் என்பதே நவீன தாராளமயப் பாதை.
 குதிரைகள் யார்? இந்த பட்ஜெட்டில் கூட 25 சதவீத சலுகையை கார்ப்பரேட் வரி விகிதத்திற்கான விற்பனை வரம்பை ரூ. 250 கோடியில் இருந்து ரூ .400 கோடிக்கு நிர்மலா சீதாராமன் உயர்த்தினாரே அதன் பயனாளிகள்தான். ஒரு உதாரணம்: 2017 ல் 38 பில்லியன் டாலர் நிகர மதிப்பு சொத்து வைத்திருந்த முகேஷ் அம்பானி, ஓரே ஆண்டில் 47.3 பில்லியன் டாலர் சொத்துக்களை தொட்டுள்ளார். (ஃபோர்ப்ஸ் இதழ் - 31.8.2018). எவ்வளவு சதவீதம் ஜம்ப் பாருங்கள்! 24 சதவீதம். எவ்வளவு நெருக்கடி பொருளாதாரத்திற்கு இருந்தாலும் முகேஷ் முன்னேற்றம் மட்டும் பாய்ச்சல் வேகத்தில் உள்ளது. அசிம் பிரேம்ஜி, லட்சுமி மிட்டல், இந்துஜா சகோதரர்கள், பல்லோஞ்சி குழுமம் என முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளவர்களின் சொத்துக்களும் 10 சதவீதத்திற்கு குறைவில்லாமல் ஏறுமுகம் கண்டுள்ளது. குதிரைக்கு ஓட்ஸ் தாராளமாக கிடைத்துள்ளது. ஆனால் அது போடுகிற சாணம் கூட குருவிகளுக்கு கிடைக்கவில்லை. 
10 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகளின் உயிர் வாங்கிய உலகமயம் அதே காலத்தில் அளப்பரிய செல்வத்தை கார்ப்பரேட்டுகள் கைகளில் குவிக்கிற அபூர்வ சிந்தாமணியாகவும் இருந்துள்ளது. செல்வ மறு பங்கீட்டில் இந்த அநீதி என்பது அம்முறைமை அமலாவதில் உள்ள தவறு அல்ல. மாறாக அநீதியே முறைமையின் நோக்கம். ஆகவேதான் இது அமைப்பு சார் நெருக்கடி என்கிறார் பிரபாத் பட்நாயக்.

இன்று மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 20 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடி என அந்த துறை உற்பத்தியாளர்கள் சங்கமான “சியாம்” (Society of Indian Automobile Manufacturers) கூறுகிறது. 2.30 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது அவர்களின் கணக்கு. கார் விற்பனை 2018 ஜூலைக்கும் 2019 ஜூலைக்கும் இடையே 35 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. வணிக வாகனங்கள் 25 சதவீதம், இரு சக்கர வாகனங்கள் 16 சதவீதம் என வீழ்ச்சி தகவல்கள் தொடர்கின்றன. 300 டீலர்கள் கடைகளை மூடி விட்டு போய் விட்டனர். டாடா மோட்டார்ஸ் மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா  இரண்டுமே 66 சதவீத மோட்டார் சந்தையை வைத்திருக்கிற நிறுவனங்கள். இவற்றின் விற்பனை 40 சதவீதம் விழுந்திருக்கிறது.

பார்லே நிறுவனம் 10000 பேரை வீட்டுக்கனுப்ப போவதாக அறிவித்தது. 1929 ல் துவக்கப்பட்ட இந் நிறுவனத்தில் 1 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இதன் ‘பார்லே ஜி’ பிஸ்கட் உலகின் முதல் பிராண்ட் ஆக இருந்தது. ஐந்து ரூபாய் பிஸ்கட் சாதாரண மக்களின் நுகர்வு பண்டம் ஆகும். 5 ரூபாய் பிஸ்கட் மீது கூட ஜி.எஸ்.டி போடப்பட்டது. ஜி.எஸ்.டி அறிமுகத்திற்கு முன்பு 12 சதவீத வரி இருந்தது. மலிவு விலை பிஸ்கட்டிற்கு வரி குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் 18 சதவீதம் ஜி.எஸ்.டி போடப்பட்டது. சாமானிய மக்களின் வாங்கும் சக்தியும் சரிந்ததால் பிஸ்கட் விற்பனை பெரிதும் அடி வாங்கியிருக்கிறது. 
பல நிறுவனங்களில் மாதச் சம்பளம் தருவதே சிரமமாக உள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஆகஸ்ட் மாதம் சம்பளம் போட முடியவில்லை. பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாத சம்பளத்தை கடப்பதும் சிரமமாக உள்ளது. பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனம் ஓர் அரசு நிறுவனம். 25 லட்சம் முறை தரை இறங்கிய (Landings) சாதனை படைத்த நிறுவனம். ஆனால் இன்று சம்பளம் போட இயலாமல் திணறுகிறது. மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் என்கிற மிக உயர்ந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஹோமிபாபாவால் துவக்கப்பட்டதாகும். இங்கேயும் மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல். 70 ஆண்டுகளாக அந்த நிறுவனம் சந்தித்திராத சவால். ஏர் இந்தியா நிறுவனத்தில் ஆகஸ்ட்டிற்கு பின்னால் சம்பளம் போட நிதி கையிருப்பு இல்லை என அறிவிக்கப்பட்டது. ஜெட் ஏர்வேஸ் சீனியர் டெக்னீசியன் சைலேஷ் சிங் சம்பள நெருக்கடியால் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேன்சர் நோயாளியான அவருக்கு சிகிச்சைக்கான நிதி உதவி செய்து வந்த 40 சக ஊழியர்களின் சம்பளமும் நின்று போனதன் விளைவு.
கோவை ஃபவுண்டரிகளில் வேலை பார்த்து வந்த 40000 வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட் நோக்கி திரும்ப சென்றிருக்கிறார்கள்.  45 ஆண்டுகளாக இல்லாத வேலையின்மை என்ற புள்ளி விவரங்கள் அரசு கூறும் வளர்ச்சியை பார்த்து நகைக்கிறது. ஜி.டி.பி வளர்ச்சி குறித்த மதிப்பீடும் 4.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 
வென்டிலேட்டர் பொருளாதாரம்
இந்த பொருளாதார பாதை ஒரு பக்கம் கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்கு உதவுகி்றது. இன்னொரு பக்கம் சாமானிய, நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி மீது தாக்குதல் தொடுக்கிறது. பள்ளம் இல்லாமல் மேடு உண்டா! ஆனால் இதற்குள் ஒரு முரண்பாடும் இருக்கிறது. முதலாளித்துவ லாப வேட்டைக்கு சந்தை வேண்டும். வாங்குவதற்கு மக்களிடம் வக்கு இல்லாவிட்டால் எப்படி சந்தை உருவாகும்? விரிவாகும்? இதற்கு வேலை வாய்ப்பு பெருக வேண்டும். கூலி உயர வேண்டும். ஆனால் இதுவெல்லாம் நடந்தேறவில்லை.  சந்தைக்கு எங்கே போவது? அதற்கு முதலாளித்துவம் கண்டு பிடித்த வழிதான் “கடன் வாயிலான வளர்ச்சி”. வீட்டுக் கடன், கார் கடன், பிரிட்ஜ் கடன், சோபா கடன்... இப்படி எல்லாவற்றிற்கும் இ.எம்.ஐ... தவணைகள்... எதிர்கால வருமானத்தை இப்பவே செலவழிக்கிற வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு  பொருளாதாரத்தின் மார்பு ஏறி இறங்குவது உறுதி செய்யப்பட்டது. அன்றாட செலவுகளுக்கும் எதிர்கால வருமானத்தை பயன்படுத்துகிற ஏற்பாடு க்ரெடிட் கார்டுகள் போன்ற கருவிகள் மூலம் செய்யப்பட்டது. “ஒரு ரூபா மட்டும் செலுத்துங்கள்; ஓட்டிச் செல்லுங்கள் காரை” என்று மனோ ரீதியான விளம்பரத் தூண்டுதல்கள். ஆனால் இந்த செயற்கை சுவாசம் எவ்வளவு நாள் நீடிக்கும்?
இதற்காக வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன. “மலிவு பணக் கொள்கை” (Cheap Money Policy) கடைப்பிடிக்கப்பட்டது. ஜீரோ வரை கூட வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இது தொழிலை ஊக்குவிக்கும், சந்தையை விரிவாக்குமென்பது அவர்களின் கணக்கு. இது பார்ப்பதற்கு பெரிதாகத் தோன்றுகிற “சொத்து விலைக் குமிழிகளை” (Asset Price Bubbles) தற்காலிகமாக உருவாக்கியது. அவை விரைவில் உடைந்தும் போயின.  அமெரிக்காவில் 2008 ல் வெடித்தது “சப் ப்ரைம்” (Sub Prime) நெருக்கடி. இதற்கு “நிஞ்சா” (NINJA) என்பது செல்லப் பெயர். இதன் பொருள், வருமானம் இல்லை (No Income), வேலை இல்லை (No Job) சொத்து இல்லை (No Asset) என்றாலும் கடன்கள் அள்ளித் தரப்பட்டன. ஒரு கட்டத்திற்கு மேல் இந்த செயற்கை சுவாசம் காப்பாற்றவில்லை.  நிறுவன திவால்கள் தேசத்தின் திவால்களாக மாறியது.  இதைத்தான் மேற்பூச்சு (Tinkering) என்கிறார் பிரபாத் பட்நாயக். மேற்பூச்சு ஒரு கட்டத்திற்கு மேல் வெளிறிப் போய்விடும். கட்டடத்தின் உயிரை அது காப்பாற்ற முடியாது. இதுதான் உலகம் முழுவதுமான அனுபவம்.  எனவே இந்நெருக்கடி அமைப்பு சார் நெருக்கடி. நவீன தாராளமய கட்டமைப்பிற்குள் தேடுகிற எந்த தீர்வும் நிலைத்து நிற்காது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
பத்மாசுரன் கை
இப்போது என்ன செய்வது? புது மருந்து வேண்டுமே? முதலாளித்துவம் தனது நெருக்கடியை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நினைக்கிறது. “சுதந்திர சந்தை” புனிதத்தை இவ்வளவு காலம் சிலாகித்து பேசி மூன்றாம் உலக நாடுகளின் தலையில் அதைக் கட்டிய அமெரிக்கா இப்போது “மூடிய சந்தை கொள்கைக்கு” நகர்ந்துள்ளது. இறக்குமதி வரிகளை போட்டு சொந்த நாட்டு தொழில்களை - வேலைகளை பாதுகாப்பதாக அறிவித்துள்ளது. சீனாவும் பதிலடி கொடுத்துள்ளது. பல நாடுகளும் இதையே செய்துள்ளன. இந்த “மற்ற நாடுகள் மீது கைவைப்பது” (Beggar-thy- neighbour) என்ற “பத்மாசுர” உத்தியும் வேலை செய்யப் போவதில்லை.  மக்கள் கைகளில் ஓரளவேனும்  பணம் புழங்குகிற பொருளாதார வழிமுறையை உலக மயம் கைகழுவியதே பிரச்சனை. இது 1920 களில் முதலாளித்துவம் கடைப்பிடித்த கீன்ஸ் வழிமுறையே. முதலாளித்துவ பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ் அரசு செலவினத்தை அதிகரிப்பதன் வாயிலாக சந்தை உந்துதலை உருவாக்க முடியும் என்றார். “ ஒரு குழியைத் தோண்ட சொல்லுங்கள்.. அதற்கு கூலி கொடுங்கள்; பிறகு அதை மூடச் சொல்லுங்கள், அதற்கும் கூலி கொடுங்கள்” என்று அவரின் வழிமுறையை விளக்குகி்ற எளிமையான உதாரணங்கள் நிறைய உண்டு. ஆனால் உலகமயம் நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் அதற்கான சட்டங்களைக் கூட பல நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள எப்.ஆர்.பி.எம் சட்டம் (Fiscal Responsibility and Budget Management Act) இது அரசு செலவின அதிகரிப்பை அனுமதிப்பதில்லை. பொருளாதாரத்தில் அரசியல் தலையீட்டை குறைப்பது இதன் நோக்கம். இதுவே நவீன தாராளமயப்பாதை. இது முதலாளித்துவம் உருவாக்கிய பாரம்பரிய “பாதுகாப்பு ஏற்பாடுகளையும்” கூட (Safety Valves) தகர்த்துள்ளது.
நிதி மூலதனத்தின் விஸ்வரூபம்
இன்றைய பொருளாதார நெருக்கடியின் மைய காரணி சர்வதேச நிதி மூலதனத்தின் லாப வேட்டை ஆகும். உற்பத்தி சாரா சூதாட்ட மூலதனமாக அது பெரும் சீரழிவை உருவாக்கி வருகிறது. மக்களின் சேமிப்புகள் எல்லாம் இந்த சூதாட்டம் நோக்கித் தள்ளப்படுகின்றன. புதிய பென்ஷன் திட்டம் வந்தது அதனால்தான்... பி.எப் வட்டி விகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதம் வரை வீழ்ந்ததும் இதனால்தான்... அஞ்சலக சேமிப்பு பத்திரங்கள் மீதான வருமானம் பாதியாக குறைந்ததும் இதனால்தான்... ஊக பேரம் சுவிதா ரயில் டிக்கெட்டுகள் வரை பரவி இருப்பதும் இதனால்தான்... சந்தையின் கருணைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்பதே!  இதன் நிபந்தனைகளே அரசின் தலையீட்டை பொருளாதாரத்தில் குறைப்பது. சந்தையின் கருணைக்கே எல்லாவற்றையும் விட்டு விடுவது ஆகியன எல்லாம்...
மாற்று குறித்த உரையாடல்
இது காலத்தின் தேவை. கட்டாயம். இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது இதுவெல்லாம் வீதிகளில் விவாதிக்கப்பட வேண்டாமா? கோபமாக மாற வேண்டாமா? மாற்றுப் பாதை குறித்த கருத்து மலர வேண்டாமா? இடதுசாரி மாற்று மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். நவீன தாராளமய கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டு தீர்வுகள் தேடப்பட வேண்டும். நிலச் சீர்திருத்தம்,  வருமான மறு பங்கீட்டிற்கான மாற்று, வருமான திரட்டல் கொள்கையில் மாற்றங்கள், பொதுத் துறை பாதுகாப்பு,  சிறு தொழில் நலன், அந்நிய முதலீட்டிற்கு கடிவாளம் போன்றவை குறித்த விவாதங்கள் நடந்தேற வேண்டும்.
 
நன்றி - தீக்கதிர் 15.09.2019 

No comments:

Post a Comment