Tuesday, January 16, 2018

பலூன் மீண்டும் பறக்கட்டும் . . .




நேற்று முன் தினம் காலமான தோழர் ஞாநி அவர்களுக்கான அஞ்சலியாக அவர் எழுதிய "பலூன் " நாடகத்தின்  நூல் வடிவம் பற்றிய அறிமுகம் இங்கே . . .

நூல்                                             :பலூன் 
ஆசிரியர்                                 : ஞாநி
வெளியீடு                               : அன்னம் பதிப்பகம்,
                                                          தஞ்சாவூர்.
விலை                                        : ரூபாய் 70.00

1981 ல் நிகழ்த்தப்பட்ட பலூன் நாடகத்தின் நூல் வடிவம் இது. சிக்காகோ கான்ஸ்பிரஸி என்று அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஒரு நாடகத்தின் அடிப்படையில் பேருந்து க்ட்டண உயர்வுக்கு எதிராக சென்னையில் நடத்தப்பட்ட பலூன் ஊர்வலத்தின் பின்னணியில் தயாரிக்கப்பட்ட  நாடகம் இது.

வெறும் நகைச்சுவைத் துணுக்குகளால் ஆன சபா நாடகங்கள் பிரபலமாக இருந்த கால கட்டத்தில் உருவானது இந்த நாடகம் என்பது முக்கியமானது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சிலர் கையில் பலூன் ஏந்தி ஊர்வலம் செல்கிறார்கள். அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்துவது மட்டுமல்லாமல் வழக்கும் தொடுக்கிறது

அந்த வழக்கு விசாரணைதான் நாடகத்தின் முக்கியமான காட்சிகள். காவல்துறை எப்படி பொய்சாட்சிகளை  ஜோடனை செய்கிறது,  நீதிபதி அரசு வழக்கறிஞருக்கு ஆதரவாகவே இருக்கிறார். அரசு வழக்கறிஞர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நீதிபதி குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வாய் திறந்தாலே கோபப்படுகிறார். அவர்களின் வழக்கறிஞர் நிலைமையும் அதுதான். 

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லும் மேடையாகவே நீதிமன்றத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர். அரசு ஒரு அடக்குமுறைக் கருவி, நீதிமன்றமும் அதில் ஒரு அங்கமே என்பதை இந்த நாடகம் அழுத்தமாக நிரூபிக்கிறது. போராட முன்வருகின்ற பெண்களை இந்த சமூகமும் அரசும் நிர்வாகமும் எப்படி பார்க்கும், அவர்கள் மீது எப்படி கட்டுக்கதைகளை அவிழ்த்து விடும் என்பதும் துல்லியமாக சித்தரிக்கப்படுகிறது. 

எதிர்பார்த்தது போலவே குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையே வழங்கப்படுகிறது. குற்றம் சுமத்தப் பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரின் உரிமமும் பறிக்கப் படுகிறது. 

நீதிமன்றங்கள் எல்லாம்
 கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ் அல்ல,
வெறும் கோர்ட் ஆஃப் லா 

என்ற வசனத்தோடு நாடகம் நிறைவு பெறுகிறது.

வழக்கில் தொடர்புடையவர்கள் இன்று எப்படி உள்ளார்கள் என்ற பிற்சேர்க்கையும் உண்டு. சமகால நிகழ்வுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் அது பொருந்தக்கூடியதாய் உள்ளது என்பது ஒரு சுவாரஸ்யம்.

அரசையும் நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சிக்கும் இந்த நாடகத்திற்கு எப்படி காவல்துறை அனுமதி கிடைத்தது என்ற செய்தி இன்னொரு சுவாரஸ்யம். 

அரசு நிர்வாகம், காவல்துறை, நீதிமன்றம் ஆகிய அமைப்புக்கள் சாதாரண மக்களுக்கானதில்லை என்பதை கூர்மையாகச் சொல்கிற நாடகம் "பலூன்".

இன்றைய சூழலில் பலூன் மீண்டும் பறந்திட வேண்டும், உயரத்தில் . 

1 comment:

  1. நினைவு கூர்ந்தற்கு நன்றி.அன்றைய நாடக குழுவில் அவருடன் இருந்த நாட்கள்தான் நினைவுக்கு வருகிறது.
    ஸ்ரீநாத்

    ReplyDelete