Wednesday, January 17, 2018

அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகிய சொற்கள் . . .


நினைவுகளை மலர வைத்த காணொளி

தமுஎகச அமைப்பின் மாநில துணைத்தலைவரான தோழர் கவிஞர் முத்து நிலவன்,  தன் பேத்தி செல்வி செம்மொழி  பாடி ஆடுகிற ஒரு காணொளியை பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதனை நானும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



குட்டிப்பெண் செம்மொழிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அந்த காணொளி பல நினைவுகளை மலர வைத்தது.

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் முன்பாக இதே ஜனவரி மாதம் முப்பதாம் தேதி, ஆறாவது எல்.ஐ.சி தமிழ் மாநில மகளிர் மாநாடு வேலூரில் நடைபெற்றது.

ஒரு நாள் மாநாடாக இருந்தாலும் மாநிலம் முழுதும் தோழர்கள் வந்ததால் பல ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. வேலூர் கோட்டத் தோழர்களின் அயறாத பணியால் அது சாத்தியமானது.

மாநாட்டை ஒட்டி மகளிர் சேர்ந்திசைக்குழு ஒன்றை உருவாக்கினோம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் அப்போதைய வேலூர் மாவட்டத் தலைவர் தோழர் முகில் தொடர்ந்து பயிற்சி அளிக்க சேர்ந்திசைக்குழுத் தோழர்கள் மூன்று பாடல்களை பாடி அசத்தினர்.

அதில் ஒன்றுதான் செம்மொழி பாடிய

“அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகிய சொற்கள் வெறும் பசப்பு . . .”






மாநில மகளிர் மாநாடு எங்கள் மகளிர் சேர்ந்திசைக்குழுவின் அரங்கேற்றமாகவும் அமைந்தது. அன்றைய நிகழ்வில்  பதினோரு தோழர்கள்  பாடினார்கள். இன்று சேர்ந்திசைக்குழுவில் புதிதாய் சிலர் இணைந்துள்ளனர். சிலரால் தொடர முடியவில்லை. ஆனால் குழு செயல்படுகிறது.  இதிலே தோழர் எஸ்.கற்பகம் கடந்த டிசம்பர் முப்பது அன்று காலமானார் என்பது துயரமானது. இம்மாநாட்டில் இறுதியாக நன்றியுரை கூறிய தோழர் லிடியாவும் இப்போதும் இல்லை.

தஞ்சைக் கோட்ட மகளிர் குழுவின் கலக்கலான நாடகம்,

இம்மாநாட்டில் தோழர் பாப்பா உமாநாத் அவர்களது படத்தை தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் திறந்து வைத்தது,

எகிப்து மற்றும் டுனீசியாவில் எழுந்த அரேபிய புரட்சி மற்ற நாடுகளில் தாக்கத்தை உருவாக்கியிருந்தபோது, கொள்கைகள் இல்லாத மாற்றம் நிலைக்காது என்று அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் மிகச் சரியாக எச்சரித்தது


என்று ஒன்றன்பின் ஒன்றாக  மாநாடு பற்றிய பல நினைவுகளை நிதானமாக அசைபோட வைத்தது செம்மொழியின் காணொளி. அதற்காக தோழர் முத்துநிலவனுக்கு மனமார்ந்த நன்றி. 

பி.கு : தோழர் பிரளயன் எழுதிய பாடலுக்கு முதலில் இசை வடிவம் அளித்தது தோழர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி என்ற தகவலை அளித்த தோழர் முத்துநிலவனுக்கு மீண்டும் நன்றி

No comments:

Post a Comment