ம்துரையில் நடைபெற்ற தமிழர் உரிமை மாநாட்டில் தமுஎகச அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசன் பேசிய அற்புத உரையை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நன்றி - தீக்கதிர் 29.01.2018
இந்தியாவின் வரலாற்றை வைகை நதிக்கரையிலிருந்தும் எழுத வேண்டும்
சு.வெங்கடேசன் பேச்சு
நன்றி - தீக்கதிர் 29.01.2018
இந்தியாவின் வரலாற்றை வைகை நதிக்கரையிலிருந்தும் எழுத வேண்டும்
சு.வெங்கடேசன் பேச்சு
மதுரை, ஜன.28 -
இந்தியாவின் வரலாற்றை கங்கை நதிக்கரையில் இருந்து மட்டுமல்ல, வைகை நதிக்கரையி லிருந்தும் எழுத வேண்டும் என்று தமுஎகச மாநிலபொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் குறிப்பிட்டார்.மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர் கூறியதாவது:தமிழர் உரிமை மாநாட்டை தமிழகத்தின் நான்கு மண்டலங்களிலும் நடத்தி நிறைவு செய்யத்தான் தீர்மானித்திருந்தோம். எதிரிகள் மடப்பள்ளிகளில் இருந்து இப்படி சோடாப்பாட்டிலோடு வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. மத்திய அரசு தற்பொழுது வழங்கியுள்ள பத்ம விருதுகள் சாதனையாளர்களுக்கா? அல்லது காவிக்கும்பலுக்கு காவடி தூக்கியவர்களுக்கா? என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் வேதங்களின் பூமி மற்றும் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது தமிழ் என்ற இரண்டு ஆய்வுகளுக்காகவே நாகசாமி என்ற தொல்லியல் அறிஞருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது. அலுவல் மொழியாக ஆங்கிலத்தை அண்ணா சட்டமன்றத்தில் முன்மொழிந்தபோது, ஆங்கிலத்தை மட்டுமே நம்பினால் தமிழைக் காப்பாற்ற முடியாது. ஐந்து ஆண்டுகளுக்குள் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற திருத்தத்தை நமது தலைவர் சங்கரய்யா கொண்டுவந்தார். அந்தத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தகைய வரலாற்று மனிதன் இந்த மேடையில் முழங்கினார். இத்தகையபெரும் வரலாற்றின் தொடர்ச்சி நாங்கள்.
ஆய்வைத் திட்டமிட்டு மூடுவதன் மூலம் கீழடியில் கிடைக்கும் புதிய ஆதாரங்களை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு. அதே நேரத்தில் குஜராத்திலும், ராஜஸ்தானிலும் ஆய்வு தொடர்கிறது. கீழடியில் கிடைக்கும் பொருட்களை இங்கேயே ஆவணப்படுத்தும் விதமாக தமிழக அரசு நிலம் ஒதுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ஏற்று தமிழக அரசும் நிலம் ஒதுக்கிவிட்டது. ஆனால், மத்திய தொல்லியல் துறையோ இந்த நிலத்தை ஏற்றுக்கொண்டோம் என்ற பதில் அறிவிப்பைக்கூட வெளியிட மறுக்கிறது.
இந்திய வரலாற்றை கங்கைக் கரையில் இருந்து மட்டும்தான் எழுதுவீர்களா? உண்மையின் வரலாற்றை வைகைக்கரையில் இருந்துதான் எழுதவேண்டும். தமிழனின் நாகரிகத்தை மீண்டும் தோண்டி எடுப்போம். எழுத்துக்களின் தாயகமாக தமிழகம் இருந்துள்ளது. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் கல்வெட்டுக்களில் 65 ஆயிரம் தமிழகத்தில் கிடைத்துள்ளது. இதில் 32 இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள 98 கல்வெட்டுக்களில் மிகவும் பழமையான பிராமி எழுத்துக்கள் உள்ளன. அதில் 24 இடம் வைகை நதிக்கரையில் உள்ளது. தேனி மாவட்டம் புள்ளிமான் கோம்பையில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்தூண் ஒன்று உள்ளது. அதில் அந்துவன் என எழுதப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு மதுரையில் வீசிய புயல் மழையால் தேனூரில் உள்ள ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது, வேர்களுக்கு நடுவில் இருந்த மண்சட்டியை சிறுவர்கள் உருட்டி விளையாடியபோது அது உடைந்துவிட்டது. அதற்குள் நிறையத் தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது.
அதில், ஏழு தங்கக்கட்டிகளை மட்டும் கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்தது. அத்தனை கட்டிகளிலும் 2,100 ஆண்டுகளுக்கு முந்தைய பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருந்தது. அதில், கோதை என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
2,100 ஆண்டுகளுக்கு முன்பு தெய்வச்சிலைகள் எதுவும் தங்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சங்கம் வைத்துதமிழ் வளர்த்த மதுரையில் தங்கம் வைத்தும் பெருமை சேர்த்தது.நதிக்கரை வரலாறு முழுவதும் வற்றாத ஜீவநதிக்கரையில் இருந்துதான் உருவானது. வைகை நதியில் 4, 5 மாதத்திற்கு மேல் நீர்வரத்துஇருக்காது. இந்த நதிக்கரையின் கீழடியில்தான் இவ்வளவு தொன்மையான நகரம் உருவாகி யுள்ளது. அப்படியென்றால் தமிழன் நீர்மேலாண்மை யில் எந்த அளவிற்கு சிறந்து விளங்கினான் என்பது தெளிவாகிறது. இங்கு கிடைத்துள்ள 5,800-க்கும் அதிகமான தொல்பொருட்களில் எந்தவிதமான சாதி, மத அடையாளங்களும் இல்லை. எனவேதான், நாங்கள் இந்த ஆய்வைத் தொடர நினைக்கிறோம். அவர்கள் முடக்க நினைக்கிறார்கள்.
திருக்குறளைப் படிக்கமாட்டோம் என்று மூத்த சங்கராச்சாரியார் சும்மா சொல்லவில்லை. அறம், பொருள், இன்பத்தோடு குறள் முடிந்துவிடுகிறது. அதற்கு அடுத்தபடியாக வீடு என்ற மோட்சநிலையை திருக்குறள் வகுக்கவில்லை என்பதாலேயே அவர்களால் வெறுக்கப்பட்டது. மனோன்மணீயம் சுந்தரனார் தமிழ்த்தாய் வணக்கம் என்று எழுதவில்லை. ‘வாழ்த்து’ என்று தான் எழுதினார். எந்த மொழியும்கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல. மனித னாலேயே உருவாக்கப்பட்டது என்பதை உணர்த்துவதற்காகவே இவ்வாறு எழுதினார். ‘இப்படை தோற்கின், எப்படை வெல்லும்’ என்ற வாசகத்தைக் கூட அவர்தான் நமக்குத் தந்தார்.
தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு வாகனத்தில் ‘தமிழ்நாடு’ என இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு மத்திய ஆட்சியின் பிடியில் இந்த அரசு இருக்கிறது என்பதற்கு இது உதாரணம்.மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் எல்லாம் சமஸ்கிருத கலப்பு வந்துவிட்டது. சமஸ்கிருதக் கலப்பு இல்லாமல் தனித்து இயங்கும் மொழியாக நமது தமிழ்மொழி திகழ்கிறது. பிராக்கிருதமும், பாலியும் நமது பானை ஓடுகளில் எழுதப்பட்டுள்ளது என்றால் சாதாரண மக்களும் மொழியைப் பயன்படுத்திஇருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. தமிழன் வடமொழியையும் அறிந்து வைத்திருந்தான் என்பதற்கு சிலப்பதிகாரத்திலேயே சான்று இருக்கிறது. இந்தி மொழிக்கு 9-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கல்வெட்டு மட்டுமே கிடைத்திருக்கிறது. அதுவும் வேறு எங்கும் கிடைக்கவில்லை. மகாபலி புரத்தில் தமிழன்தான் அதையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.
வரலாறு முழுக்கப் போராடி வந்த நமது அடையாளத்தை இழக்கமாட்டோம். இடது சாரிகள், பகுத்தறிவாளர்கள், திராவிட இயக்கச் சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.
No comments:
Post a Comment