ஜனவரி 19 தியாகிகள் தினம்
தஞ்சைத் தரணியில் செங்கொடி இயக்கம் தாக்குதல்கள் பலவற்றையும் சந்தித்து முன்னேறி வந்திருக்கிறது. செங்கொடி விவசாயிகளின் இயக்கத்தை நிலப்பிரபுக்களும் அரசும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கச் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்.
இரணியன், சிவராமன், களப்பால் குப்பு முதல் பூந்தாழங்குடி பக்கிரியோடு கீழ்வெண்மணித் தியாகிகள் வரை எத்தனையோ தியாகச் செம்மல்களைத் தந்த மண் தஞ்சை மண்.
இந்தத் தியாகத் தழும்பேறிய தஞ்சை மண்ணின் விவசாய இயக்கத்தின் வீரப்புதல்வர்கள் 1982 ஜனவரி 19 அன்றும், இந்திய நாடு முழுவதிலுமுள்ள தொழிலாளி வர்க்கத்துடன் தோளோடு தோள் சேர்ந்து போராடினார்கள்.
இப்படித் தொழிலாளர்களோடு இணைந்து நின்று போராடிய விவசாய இயக்கத் தோழர்கள் மீது தமிழக அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது.அதில் பலியான தியாகச் செம்மல்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் மூவருக்கும் சிஐடியு செங்கொடி தாழ்த்திய அஞ்சலியை உரித்தாக்குவோம்.
பின்னணி
1980ஆம் ஆண்டில் பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையின் விளைவாக இந்திய உழைப்பாளி மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானார்கள். அத்தியாவசியப் பண்டங்களின் விலைவாசி உயர்வினால் தாங்கமுடியாத துயரத்திற்கு மக்கள் தள்ளப்பட்டார்கள். பல்லாண்டுகளாக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி, தியாகங்களை செய்து பெற்ற ஊதியங்களை வெட்டவும், பஞ்சப்படியை முடக்கவும், வாழ்க்கைத் தரத்தை குறைக்கவும், தொழிற்சங்க ஜனநாயக உரிமைகள் மீது மத்திய அரசு தாக்குதல் தொடுத்தது.
ஏகபோக முதலாளிக்கும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் மற்றும் சமூக விரோத சக்திகளுக்கும் மத்திய அரசு கொடுக்கும் சலுகைகளின் காரணமாக ஏற்பட்ட செல்வக்குவிப்பும் நெருக்கடியை மேலும் கடுமையாக்கியது. மறுபுறத்தில் சர்வதேச நிதி நிறுவனத்திடம் கடன் பெறுவதற்கு அவர்கள் விதித்த நிபந்தனைகளை இந்திரா காந்தி ஏற்றுக் கொண்டதனால் நமது நாட்டின் சுயாதிபத்திய உரிமை அடகு வைக்கப்பட்டது.
இந்தச் சூழலில், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வாலிபர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்காக போராடுவது என சிஐடியு உள்ளிட்ட இடதுசாரி தொழிற்சங்க அமைப்புகள் முடிவு செய்தன.
1981 ஜூன் 4 மும்பை மாநாடு
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்க மையங்களும், தொழில்துறை அனைத்திந்திய சம்மேளனங்களும் இணைந்து 1981 ஜூன் 4 ஆம் தேதி நடத்திய சிறப்பு மாநாட்டில் தேசிய பிரச்சாரக் குழு (National Campaign Committee) அமைக்கப்பட்டு நாடெங்கிலுமிருந்து உழைப்பாளி மக்களை திரட்டி வரலாற்று சிறப்பு மிக்க பேரணியை 1981 நவம்பர் 23இல் தில்லியில் நடத்துவது என முடிவு செய்தது.
நவம்பர் 23 பேரணி
நவம்பர் 23 பேரணி தொழிற்சங்க-தொழிலாளிவர்க்க ஒற்றுமையின் வெளிப்பாடாக அமைந்தது. இது நம் நாட்டுத் தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும். அந்த அணிவகுப்பில் பல்வேறு தொழில்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும், அனைத்து மாநிலங்களிலிருந்தும், பலப்பல மத்திய தொழிற்சங்கங்களையும், சம்மேளனங்களையும் சார்ந்த தொழிலாளர்களும், ஊழியர்களும் மிகப்பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்து தலைநகரில் ஒரு பொதுவான பேரணியில் பங்குகொண்டது முன்எப்போதும் நடந்திராத ஒரு நிகழ்ச்சியாகும். இந்த பேரணியின் அணி வரிசையில் பொதுத்துறை-தனியார்துறை-ரயில்வே-பாதுகாப்பு-மத்திய-மாநில அரசு ஊழியர் அமைப்புகள், இரும்பு-நிலக்கரி-சுரங்கம்-சணல்-ஜவுளி-இன்ஜினியரிங்-முறைசாரா தொழிலாளர்கள் என சாரைசாரையாக திரண்டுவந்து தலைநகரை செங்கடலாக மாற்றினர்.
அணிவகுப்பில் பங்கேற்றவர்கள் இந்திரா அரசின்
தவறான கொள்கைகளுக்கு எதிராக தத்தம் மொழிகளில்
விலைவாசி உயர்வுக்கு எதிராக. பொதுவிநியோகத்தை பலப்படுத்து; விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாய விலை கொடு என கோரினர். இது விவசாயிகள்
சார்பாக ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கம் குரலெழுப்பி
யதாக அமைந்தது.
உழைக்கும் பெண்கள் தத்தம் தொழிற்சங்கப் பதாகை
களுடன் கலந்து கொண்ட மிகப்பெரிய அணிவகுப்பு தொழிற்சங்க இயக்கத்தின் இன்னொரு புதிய விழிப்பா
கும். இந்தப் பெண்கள் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா,
மகாராஷ்ட்ரா, கர்நாடகம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு
வங்கம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து வருகைபுரிந்தனர். இது தொழிற்சங்கங்களில் பெண்கள் பிரிவு சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டதன் அறிகுறி
யாகும். (இன்றைக்கும் சிஐடியுவின் மொத்த உறுப்பினர்க
ளில் பெண்கள் 20,34,935. இது 33.67 சதவிகிதமாகும்).
போராட்டத்தின் முத்தாய்ப்பாக 1982 ஜனவரி 19 அன்று ஒருநாள் அகில இந்திய கண்டன வேலை நிறுத்தம் மேற்கொண்டு , அரசு கொள்கைகளை நிராகரிக்குமாறு அறைகூவல் விடுக்கப்பட்டது.
நாசகர பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான ஒன்றுபட்ட போரை, ஒரே வர்க்கமாக எதிர்கொள்ள தொழிலாளி வர்க்கம் முழுவதும் ஒன்றுபட்டு செயல்படுவதற்கான மகத்தான அறைகூவல் இது.
எதேச்சதிகாரத்திற்கும், அடக்குமுறைகளுக்கும் தொழிலாளி வர்க்கம் அடிபணியாது என்பதை ஆட்சியாளர்களுக்கு எடுத்துக்காட்டிய நாள் ஜனவரி 19.
நாட்டின் தொழில்மையங்களையெல்லாம் ஸ்தம்பிக்கச்செய்த இந்தப் போராட்டத்தை ஒடுக்க இந்திரா காங்கிரசும், மத்திய அரசும் அதன் ஆதரவாளர்களும் எடுத்த நடவடிக்கைகள் அடக்குமுறை குறிப்பேடுகளில் புதிய அத்தியாயத்தைத் துவக்கின.
மிரட்டல்கள்
ஒரு நாள் வேலைநிறுத்தம் என்ற முடிவு வெளியான உடனேயே “தேசத்துரோகம்” என்று கூக்குரலிட துவங்கி விட்டனர் ஆட்சியாளர்கள். பிரதமர் நேரடியாகவே தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
u உள்துறை அமைச்சரும் அதேபாணியைத் தொடர்ந்தார்.
u இ.காங்கிரஸ் முதல் அமைச்சர்களின் மாநாட்டை கூட்டி அடக்குமுறைகளுக்கு திட்டமிடப்பட்டது.
u வேலைநீக்கம், சம்பளவெட்டு, சிறைவாசம் என மிரட்டல்கள்.
u கண்டதும் “சுட்டுத்தள்ளு” என உத்தரவிட்டார் பீகார் முதல்வர்.
u இதற்கும் மேலாக இந்திரா காங்கிரஸ் கட்சியினர், இளைஞர் காங்கிரசார், சஞ்சய் படை என்ற பெயரில் குண்டர்கள் கூட்டம் வன்முறைகளைத் தூண்டத் தயாரிப்பு செய்தனர்.
அரசின் பிரச்சாரக் கருவிகளான அகில இந்திய வானொலியும், தொலைக்காட்சியும் வேலைநிறுத்தத்தை எதிர்க்கும் அண்டப்புளுகு பிரச்சாரகர்களாக முழுவேகத்துடன் செயல்பட்டன. இதனைத் தொடர்ந்து, 50,000 க்கும் மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை என்று சொல்லிக் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
u எந்த தேசிய பாதுகாப்புச் சட்டம் எனும் ஆள்தூக்கிச்
சட்டத்தை எதிர்த்து வேலைநிறுத்தம் மேற் கொள்ளப்பட்டதோ அந்தக் கறுப்பு சட்டத்தையே பயன்படுத்தி நூற்றுக்கணக்கானவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, தொழிற்சங்கங்களின் பிரச்சார இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன.
இத்தனை நிர்ப்பந்தங்களையும், அச்சுறுத்தல்களையும், மிரட்டல்களையும் சந்தித்து ஜனவரி 19அன்று இந்திய தொழிலாளி வர்க்கம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய புதியதோர் போராட்ட வரலாறு படைத்தது.
அன்று தேசம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வேலைநிறுத்தம் பெரும் வெற்றி பெற்றது. முதன் முறையாக தலைநகரான தில்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும், தில்லி பல்கலைக்கழகத்திலும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. கண்டதும் சுடு என்று உத்தரவிட்ட பீகார் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் முகத்தில் கரிபூசும் விதத்தில் அம்மாநிலத்தின் வேலைநிறுத்தம் பாராட்டுக்குரிய முறையில் வெற்றியடைந்தது. “ஹிந்து” போன்ற பத்திரிகைகள் இதைப்பற்றி குறிப்பிடுகையில் பீகார் மாநிலம் முழு அடைப்பாக தோற்றமளித்தது என்று விவரித்தன. கேரளா, மேற்குவங்கத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு வேலைநிறுத்தம் பந்த் ஆக மாறியது.பாண்டிச் சேரியிலும் பந்த், திரிபுராவும் இப்போராட்டத்தில் முன்னணியிலேயே நின்றது. தமிழகம் உட்பட இதர மாநிலங்களிலும் வேலைநிறுத்தம் பெரும் வெற்றிபெற்றது.
துப்பாக்கிச் சூடு - தடியடி
உத்தரப்பிரதேச மாநிலம் மொகல்சராய் அருகிலுள்ள
ஒரு கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியா
யினர்.
தமிழகத்தில் எம்ஜிஆரின் அதிமுக ஆட்சியில் தஞ்சை மாவட்டம் திருமெய்ஞானம் கிராமத்தில் போலீசார் நடத்திய
துப்பாக்கிச் சூட்டில் அஞ்சான், நாகூரான் ஆகிய இரு தோழர்களும், இரட்டைப்புளி கிராமத்திற்கு அருகே நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஞானசேகரன் என்ற தோழரும் பலியாயினர்.
இதோடு, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்
பிரதேசம், ஹரியானா, பீகார், குஜராத், மகாராஷ்டிரா, தமிழகத்தில் சென்னை வியாசர்பாடி, திருச்சி சிம்கோ மீட்டர் ஆகிய இடங்களில் போலீஸ் தடியடி நடத்தியது.
அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் பொதுப்பிரச்சனைகளின் அடிப்படையில் இந்திய உழைப்பாளி மக்கள் நடத்திய நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம் தொழிலாளிவர்க்கத்தின் வலிமையை எதிரி வர்க்கத்திற்கு எடுத்து காட்டியது மட்டுமல்ல, தங்களது எல்லையற்ற வலிமையை தாங்களே உணர்ந்து கொள்ளவும் உதவி செய்தது.
சிஐடியு நிதி உதவி
தொழிலாளி வர்க்கப் போராட்டத்துக்கு தோள் கொடுத்த
விவசாய இயக்கத்துக்கு உதவிடும் வகையில் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், 1983 டிசம்பர் இறுதியில் கோவையில் நடைபெற்ற சிஐடியு 4ஆவது மாநில மாநாட்டில் தமிழகத்தில் விவசாய இயக்கத்தை மேலும் முன்னெடுத்து செல்லும் வகையில் சிஐடியு உறுப்பினர் ஒவ்வொருவரும் ஆண்டிற்கு ஒரு ரூபாய் நிதிஅளிக்க வேண்டும் என்ற தீர்மானம் பலத்த கரவொலிக்கிடையே நிறைவேற்றப்பட்டு இன்று வரை அமலாக்கப்பட்டு வருகிறது.
தீப்பந்த ஊர்வலம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 19 தியாகிகள் தினத்தை மாநிலம் முழுவதும் சிஐடியு கடைப்பிடித்து வருகிறது. இந்தாண்டு தொழிலாளர்-விவசாயிகள் ஒற்றுமை தினமாக தீப்பந்த ஊர்வலம் நடத்தி பின்வரும் 7 அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்துவது என சிஐடியு மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.
u விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, அனைவருக்கும் பொது விநியோக முறையை விரிவுபடுத்து, அத்தியாவசியப் பண்டங்களில் முன்பேர ஊக வர்த்தகத்தை தடைசெய்;
u எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின்படி விவசாய விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலைகளை நிர்ணயம் செய்;
u ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கடன்களை தள்ளுபடி செய்;
u அனைத்துத் தொழிலாளர்க்கும் ஒருங்கிணைந்த சட்ட பாதுகாப்பு வழங்கு;
u அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 நிர்ணயம் செய்;
u 100 நாட்கள் வேலைஉறுதி திட்டத்தை அனைத்து கிராமப்புறங்களிலும் அமலாக்கு;
u அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதிப்
படுத்து;
ஜனவரி 19 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்
தொழிலாளர்-விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள் இணைந்து தீப ஒளி ஏந்தி உரத்த குரலில் முழங்கிடுவோம்.
வி.குமார்,
கட்டுரையாளர் : உதவி பொதுச் செயலாளர்,
சிஐடியு தமிழ் மாநிலக்குழு.
நன்றி - தீக்கதிர் 19 ஜனவரி 2018
போர்
ReplyDeleteஆமாம் போர்