Thursday, October 24, 2024

கைவிடப்பட்ட உளவாளியின் கதறல்

 


விகாஷ் யாதவ் குறித்த முந்தைய பதிவின் தொடர்ச்சி இது. RAW அதிகாரியான விகாஷ் யாதவ், நிகில் குப்தா என்ற அமெரிக்கவாழ் இந்தியர் மூலம் குர்பந்வத்சிங் பண்ணும் என்ற காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல ஏற்பாடு செய்கிறார். வாடகைக் கொலைகாரனாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆள் அமெரிக்க உளவுத்துறை ஆள் என்பதால் திட்டம் அம்பலமானது. 

விகாஷ் யாதவை பாதுகாக்க இந்திய அரசு என்ன செய்கிறது.

கை விட்டு விட்டது.

விகாஷ் யாதவ் RAW விலிருந்து எப்போதோ ராஜினாமா செய்து விட்டார். அதனால் அவரது நடவடிக்கைக்கும் மத்தியரசுக்கும் சம்பந்தம் கிடையாது என்று அமித்ஷாவின் உள்துறை கைவிரித்து விட்டது. இனி இந்த பிரச்சினையிலிருந்து தப்பிப்பது விகாஷ் யாதவின் சாமர்த்தியம். அது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை.

விகாஷ் யாதவ் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வல்ல.

குல்பூஷன் ஜாதவ் என்ற கப்பற்படை அதிகாரி பல வருடங்கள் பாகிஸ்தானில் உளவு பார்த்து சில நாச வேலைகளும் செய்து மாட்டிக் கொண்டு மரண தண்டனை பெற்றார். அவர் உயிர் இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அவர் எப்போதோ கப்பற்படையிலிருந்து ஒய்வு வாங்கிக் கொண்டு விட்டார். அவரது நடவடிக்கைகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கை விரித்து விட்டது.

ஆஸ்திரேலியாவில் உளவாளி வேலை பார்த்த நால்வரை அந்த நாட்டு அரசாங்கம் துரத்தி விட்டதால் அவர்கள் உயிர் பிழைத்தனர்.

கத்தார் நாட்டு நீதிமன்றம் அந்நாட்டில் உளவு பார்த்த எட்டு இந்திய கப்பற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது. அவர்கள் மோடியின் முதலாளிகளான இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாலோ என்னவோ கத்தார் அரசின் கையில் காலில் விழுந்து அவர்களை விடுதலை செய்ய வைத்து விட்டது.

வரலாற்றில் ஆராய்ந்தால் எக்கச்சக்கமான சிக்கிக் கொண்ட  உளவாளிகளின் துயர ஓலத்தை கேட்க முடியும். 

இந்தியா என்றில்லை, எல்லா நாடுகளுமே உளவாளிகளை பயன்படுத்துகின்றன. உளவாளிகளின் பணி என்றைக்கும் நேர்மையானதல்ல. அழிவு வேலைகள் செய்வதோ அல்லது அழிவு வேலைகளுக்கான ஆயத்தங்களை செய்வதோதான். அதனால்தான் உளவாளிகள் சிக்கிக் கொள்ளும் போது அவர்களை ஏவி விட்டவர்கள், தங்களுக்கும் உளவாளிக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொள்கின்றார்கள். 

பணத்திற்காக, பதவிக்காக, சில அற்ப சந்தோஷங்களுக்காக, தேச பக்தி என்று உசுப்பேற்றுவதால் ஏற்படும் போலிப் பெருமிதத்திற்காக உளவாளி வேலை பார்க்கும் எவரும் நிம்மதியாக இருந்த முடியாது. மாட்டிக் கொள்ளும் வரை மிதப்பில் இருக்கலாம். மாட்டிக் கொண்டால் எதிர்காலம் நிர்மூலம்.

உளவாளிகள் எனும் அம்புகள் துயரத்தில் கதறும் அதே நேரத்தில் எய்தவர்கள் அடுத்த இளிச்சவாய் அம்புகளை தயாரித்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதான் சோகமான உண்மை. 


No comments:

Post a Comment