Thursday, October 24, 2024

கொல்லப்பட்ட கடைசி தருணத்திலும் கம்பீரம்

 பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து எடுத்தது. இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கத்தலைவர் யாஹ்யா சின்வர் அவர்களின் இறுதி உயில். தமிழாக்கம் செய்தவர் தோழர் ராஜ சங்கீதன்.

LAST MOMENTS OF YAHYA SINVAR என்ற இந்த காணொளியை யூடூயுபில் பாருங்கள். ஒரு கை வெட்டப்பட்டு வாழ்வின்  இறுதித்தருணத்தில் இருக்கையில் பறந்து வரும் ட்ரோன் மீது ஒற்றைக் கையால் தடியை வீசி எரியும் தீரத்தை பார்க்க மறவாதீர். கீழேயுள்ள படத்தில் சொல்லப்பட்டது போல அமெரிக்க அடிமையாக பாலஸ்தீனத்திற்கு எதிரான சவுதி அரேபிய மன்னரின் அரியணையை விட சின்வரின் சோபா கம்பீரமானது. 

பாலஸ்தீனத்தின் வரலாற்றில் அம்மக்களின் துரோகியாக, எதிரியாக மோடியும்  பதிவு செய்யப்படுவார். 



ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் எழுதியிருந்த இறுதி உயில் சுருக்கம்:

இந்த வார்த்தைகளை எழுதுகையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் எண்ணி பார்க்கிறேன். சந்துகளில் திரிந்திருந்த பால்யகாலம் தொடங்கி பல வருட சிறைவாசம் வரையான வாழ்க்கையையும் இந்த நிலத்தில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நினைவுகூருகிறேன்.
1962ம் ஆண்டில் நான் கான் யூனிஸ் முகாமில் பிறந்தேன். பாலஸ்தீனம் கிழித்தெடுக்கப்பட்டு நினைவாக மட்டுமே எஞ்சியிருந்த காலக்கட்டம் அது. அரசியல்வாதிகளின் மேஜைகளில் மறக்கப்பட்ட வரைபடமாக பாலஸ்தீனம் கிடந்தது.
நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் வளர்ந்தவன் நான். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வாழ்வது, நிரந்தர சிறைவாசம் என்பதை வாழ்க்கையின் தொடக்கத்திலேயே புரிந்திருந்தேன்.
இங்கு பிறக்கும் ஒவ்வொருவரும் தன் நெஞ்சில் உடையாத ஓர் ஆயுதத்தை ஏந்தியிருக்க வேண்டும். விடுதலைக்கான தூரம் நெடியது என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
முதன்முறையாக 1988ம் ஆண்டில் சிறைக்கு சென்றேன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருள் நிறைந்த அந்த சிறைகளின் ஒவ்வொரு சுவரிலும் தூரத்து அடிவானத்துக்கான ஒரு ஜன்னலை நான் கண்டேன். ஒவ்வொரு சிறையிலும் விடுதலைக்கான வழி காட்டும் வெளிச்சம் தெரிந்தது,.
பொறுமை என்பது பண்பல்ல, ஆயுதம் என்பதை சிறையில் கற்றுக் கொண்டேன். மிகவும் கடுமையான ஆயுதம் அது. ஒவ்வொரு துளியாக மொத்த கடலையும் குடிக்க முனையும் ஒருவரின் முயற்சிக்கு நிகரான ஆயுதம்!
என்னுடைய அறிவுரை இதுதான்: சிறைகளுக்கு அஞ்சாதீர்கள். விடுதலைக்கான நெடும்பாதையின் அங்கங்கள் அவை.
விடுதலை என்பது வலியில் பிறப்பது; பொறுமையில் பக்குவப்படுவது! 2011ம் ஆண்டு “வஃபா அல் அஹ்ரார்” ஒப்பந்தத்தில் நான் விடுவிக்கப்பட்ட போது, போராட்டத்தை விட்டுச் சென்றுவிட வில்லை. வலிமை பெற்றிருந்தேன். நம்பிக்கை அதிகமாகி இருந்தது. நாம் முன்னெடுப்பது சாதாரண போராட்டமல்ல என்பதையும் நம் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாம் சுமக்கும் விதி போராட்டம்தான் என்பதையும் புரிந்து கொண்டேன்.
என்னுடைய அறிவுரை, துப்பாக்கியையும் வழுவாத சுயமரியாதையயும் அழிவுறா நம் கனவையும் கைவிட்டு விடாதீர்கள் என்பதுதான். நம் போராட்டத்தை நாம் கைவிட்டுவிட வேண்டுமென எதிரி விரும்புகிறான். நம் நோக்கத்தை நெடிய பேச்சுவார்த்தை மூலம் நீர்த்துப் போக வைக்க விரும்புகிறான்.
ஆனால் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் உரிமை பெற்றிருக்கும் ஒரு விஷயத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தாதீர்கள். உங்களின் ஆயுதங்களை விட, உங்களின் உறுதி அவர்களை அச்சுறுத்துகிறது.
போராட்டவுணர்வு என்பது நமக்கான ஆயுதம் மட்டுமில்லை, நம் சுவாசத்தில் பாலஸ்தீனத்தின்பால் நாம் கொண்டிருக்கும் அன்பு அது; ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் தாக்குதலும் தொடர்ந்தாலும் இங்கு நாம் தொடர்ந்து நீடிப்பதற்கான பற்று அது!
உயிரிழந்த ஈகியரின் ரத்தத்துக்கு உண்மையாக இருங்கள். முட்களாலான பாதையில் நமக்கான விடுதலைப் பாதையை தங்களின் ரத்தம் கொண்டு போட்டவர்கள் அவர்கள்தான். அரசியல்வாதிகள் தரும் கணக்குகளுக்காகவும் அரசப் பிரதிநிதிகள் காட்டும் ஆட்டத்துக்காகவும் அவர்களின் ஈகையை விரயமாக்கி விடாதீர்கள்.
முன்னவர்கள் தொடங்கியதை முடிக்கத்தான் நாம் இங்கு இருக்கிறோம். என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் இந்த பாதையிலிருந்து நாம் விலகிடக் கூடாது. பூமியே நம்மை குறுக்கினாலும் உறுதிப்பாட்டின் தலைநகரமாகவும், தொடர்ந்து துடிக்கும் பாலத்தீன இதயமாகவும் காசா இருக்கும்.
2017ம் ஆண்டில் ஹமாசின் தலைவராக நான் ஆனபோது, வெறும் அதிகாரப் பரிமாற்றமாக அதை நான் பார்க்கவில்லை. கற்களால் தொடங்கி துப்பாக்கிகளால் தொடரும் ஒரு பெரும் போராட்டத்தின் தொடர்ச்சியாகதான் பார்த்தேன்.
விடுதலையை நோக்கி நாம் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு விலையை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்திருந்தேன். ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள். சரணடைவதால் நாம் கொடுக்கும் விலை இவற்றை விட மிக அதிகமாக இருக்கும். எனவே வேர், மண்ணை பிடித்திருப்பது போல், இந்த நிலத்தை பிடித்திருங்கள். வாழ வேண்டுமென முடிவெடுத்து விட்ட மக்களை எந்தக் காற்றாலும் பெயர்த்தெடுக்க முடியாது.
அல் அக்ஸா போர், உடல்களுக்கு எதிரான ஆன்மாக்களின் போர்; ஆயுதங்களுக்கு எதிரான உறுதியின் போர்!
நான் விட்டுச் செல்வது என் தனிப்பட்ட மரபு அல்ல, ஒரு கூட்டு மரபு! விடுதலைக் கனவு கொண்ட ஒவ்வொரு பாலஸ்தீனருக்கும், உயிர் துறந்த மகனை தோளில் சுமந்த ஒவ்வொரு தாய்க்கும், தோட்டா உயிர் குடித்த மகளை சுமந்த ஒவ்வொரு தந்தைக்கும் அந்த மரபை நான் விட்டுச் செல்கிறேன்.
போராட்டம் வீண் போகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். போராட்டம் என்பது துப்பாக்கியின் தோட்டா மட்டும் அல்ல, நாம் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான அடிப்படையும் அதுதான்.
உலகம் நீதி வழங்கும் என எதிர்பார்க்காதீர்கள். நம் வலியை வெறுமனே உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தற்கு நானே சாட்சி. நீதியை எதிர்பார்க்காதீர்கள்; வழங்குங்கள்! பாலஸ்தீனர்களின் கனவை நெஞ்சில் ஏந்துங்கள். ஒவ்வொரு காயத்தையும் ஆயுதம் ஆக்குங்கள். ஒவ்வொரு கண்ணீரிலும் நம்பிக்கையை பெற்றெடுங்கள்.
இதுவே என் உயில். உங்களின் ஆயுதங்களை ஒப்படைக்காதீர்கள். கற்களை கீழே போடாதீர்கள். ஈகியரை மறந்திடாதீர்கள். நீங்கள் உரிமை கொண்டிருக்கும் கனவை காவு கொடுத்து விடாதீர்கள்.
நாம் இங்குதான் இருப்போம். நம் நிலத்தில், நம் நெஞ்சங்களில், நம் குழந்தைகளின் எதிர்காலத்தில் நாம் இருப்போம்.
இறுதி வரை நான் நேசித்த நிலத்தையும் பெருமலை போல் என் தோள்களில் சுமந்த கனவையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
நான் வீழ்ந்தால், நீங்களும் வீழ்ந்திடாதீர்கள். என்றுமே வீழாத பதாகையை எனக்காக ஏந்துங்கள். என் ரத்தத்தை, ஒரு தலைமுறை வலிமை பெறுவதற்கான பாலமாக மாற்றுங்கள்.
சொந்த நிலம் என்பது சொல்வற்கான கதையல்ல, வாழ்வதற்கான யதார்த்தம் என்பதை மறந்து விடாதீர்கள்.
உயிரை ஈகை செய்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் பிறப்பார்கள்.
மீண்டும் போர் வருகையில் நான் உங்களுடன் இல்லாது போயிருந்தால், விடுதலைக்கான அலைகளின் முதல் துளி நான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment