Friday, October 11, 2024

தொழிலாளர் போராட்டம் - மூடச்சங்கிகளின் பொய்க்கணக்குகள்

 


தொழிற்சங்கப் போராட்டம் தொழிலை மூட வைக்குமா?

 சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாக எந்த விபரமும் தெரியாத பல அரைவேக்காட்டு ஆப்பாயில்கள் “போராட்டம் நடந்தால் நிறுவனத்தை மூடி விடுவார்கள்” என்று பூச்சாண்டி காண்பிக்கின்றனர். சங்கி மூடர்களோ “சாம்சங் கொரிய நிறுவனம், அதனுடைய போட்டியாளர்களான விவோ போன்ற சீன நிறுவனங்களுக்கு ஆதரவாகவே கம்யூனிஸ்டுகள் பிரச்சினை செய்கிறார்கள் என்று வாந்தி எடுக்கிறார்கள். சாம்சங்கை விட தீக்கதிர் ஊழியர்களுக்கு ஊதியம் குறைவு. ஆகவே சி.ஐ.டி.யு தீக்கதிருக்கு எதிராகத்தான் போராட வேண்டும் என்று மெய் சிலிர்க்க வைக்கும் கருத்தை கவர்ச்சிப்படங்களுடன் காலத்தை ஓட்டும் வண்ணத்திரை பத்திரிக்கை ஆசிரியர் முன்வைக்கிறார்.

 இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏன் உலக அளவிலும்தான்.

 அவையெல்லாம் தொழிலாளர்களின் போராட்டங்கள் காரணமாகவா மூடப்பட்டது?

 சமீபத்தில் தமிழ்நாட்டில் மூடப்பட்ட இரண்டு நிறுவனங்கள். நோக்கியாவும் ஃபோர்டும்.

 அந்த இரண்டு நிறுவனங்களிலும் தொழிற்சங்கங்களே அமைக்கப்படவில்லை.

 பின் ஏன் மூடப்பட்டது?

 இரண்டு நிறுவனங்களிலும் எதிர்பார்த்த அளவு விற்பனை நடைபெறவில்லை. ஸ்மார்ட் போன் காலத்தில் நோக்கியாவின் பட்டன் போன் மதிப்பிழந்து விட்டது. அதனால் விற்பனை சரிந்தது. போதாக்குறைக்கு வருமான வரி மோசடி வழக்கு வேறு. வரி பாக்கியை கட்டாமல் நோக்கியா கடையை கட்டி விட்டது. அதே போல் ஃபோர்ட் கம்பெனிக்கும் மகேந்திரா கம்பெனிக்கும் சண்டை. ஃபோர்ட் வெளியேறி விட்டது. அங்கே தொழிற்சங்கம் இருந்திருந்தால் நியாயமான இழப்பீட்டையாவது பெற்றுக் கொடுத்திருக்கும்.

 அதையெல்லாம் தொழிற்சங்கத்தின் கணக்கில் எழுதுவது என்ன நியாயம்?

 கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தோழர் தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய “பஞ்சும் பசியும்” நாவலை சமீபத்தில் படித்தேன். நெசவாளர்களின் பிரச்சினையை பேசிய நாவல் அது. அப்போதைய அரசாங்கம் கொண்டு வந்த துணிக் கொள்கை உருவாக்கிய பாதிப்புக்கள் நெசவாளர்களை எப்படி பாதித்தது என்று விரிவாக எழுதியிருப்பார்.

 தமிழ்நாட்டில் ஏராளமான நூற்பாலைகள் மூடப்பட்டதற்கான காரணம் ராஜீவ் காந்தி கொண்டு வந்த புதிய துணிக் கொள்கை NEW TEXTILE POLICY) .தான். பாலியஸ்டர் துணிக்கான மூலப் பொருளை இறக்குமதி செய்ய கொடுத்த வரிச்சலுகை திருபாய் அம்பானியின் ரிலையன்ஸை வாழ வைத்தது. உள்நாட்டு சிறு முதலாளிகளை நசிய வைத்தது. கோவை முதலாளிகள் எப்படி பெரு மூலதனத்தோடு சமரசம் செய்து கொண்டு தங்களின் வளமான வாழ்வைத் தொடர்ந்து தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தினர் என்பதை தோழர் இரா,முருகவேள் எழுதிய “முகிலினி” படித்து அறிந்து கொள்ளுங்கள்.

 பி&சி மில்லை எம்.ஜி.ஆரின் ஸ்பான்ஸரான சாராயச் சக்கரவர்த்தி ராமசாமி உடையார் வாங்கி, அந்த இடத்தை ரியல் எஸ்டேட் வணிகம் செய்ய நினைத்ததுதான் அந்த தொழிற்சாலை மூடுவதற்குக் காரணம். போக்கிரி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, சிவாஜி என்று திரைப்பட சண்டைக் காட்சிகளுக்கு பயன்பட்டு வந்த இந்த இடம் இப்போது பிரம்மாண்டமான வணிக வளாகமாக மாறியுள்ளதாக சமீபத்தில் படித்தேன்.

ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் வாகனங்கள் விற்பனையாகவில்லை. அவர்கள் அறிமுகப்படுத்திய சொகுசு கார் ஸ்டாண்டர்ட் 2000 க்கு வரவேற்பில்லை, அபூர்வ சகோதரர்கள் படத்தில் "ராஜா கைய வச்சா" பாட்டுக்கு மட்டும் பயன்பட்டது அந்த காரின் சாதனை.

 அரசாங்கத்தின் கொள்கைகள்,

நிர்வாகத்தின் முறைகேடுகள்,

உற்பத்தி செய்யும் பொருளில் தரமில்லாதது,

உரிய காலத்தில் முன்னேற்றங்களை செய்யாதது,

நிதியை வேறு விதத்தில் திருப்பி விடுதல் ,

தலைமைப் பதவிக்கான சண்டை

 ஆகியவையே ஒரு தொழில் நிறுவனத்தின் வீழ்ச்சிக்கான காரணமாக இருக்க முடியும்.

 வாஜ்பாய் நல்லாட்சி செய்ததாக சங்கிகள் கதை அளந்து கொண்டிருக்கிறார்கள். அவரது ஆட்சிக்காலத்தில்தான் முக்கியமான ஒரு முடிவு எடுக்கப்பட்டது. சிறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களில் கிட்டத்தட்ட 1500 பொருட்களை இறக்குமதி செய்ய தடை இருந்தது. உள்நாட்டு தொழிலை பாதுகாப்பதற்கான ஏற்பாடு இது. அதை வாஜ்பாய் அகற்றினார். அப்போது ஒன்றிய தொழிலமைச்சர் கலைஞரின் மனசாட்சியான முரசொலி மாறன். அந்த முடிவை கம்யூனிஸ்டுகள் மட்டுமே எதிர்த்தார்கள். புற்றீசல் போல உள்ளே வந்த வெளிநாட்டுப் பொருட்களால் (அவற்றில் பெரும்பான்மையானது சீனத் தயாரிப்புக்கள்தான். சீன அடிமை என்று கம்யூனிஸ்டுகளை வசைபாடும் மூடச்சங்கிகள் நியாயமாக வாஜ்பாயின் சடலத்தைத்தான் சவக்குழியிலிருந்து தோண்டி எடுத்து திட்ட வேண்டும்) இந்தியப் பொருட்களின் விற்பனை குறைந்து மூடு விழா கண்டன.

 உலகப் பொருளாதார மந்தத்தின் போது அமெரிக்காவில் லேமன் பிரதர்ஸ் தொடங்கி 150 க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடிவிட்டுப் போனார்கள். அதற்கெல்லாம் தொழிலாளர்கள் போராட்டமா காரணம்! வங்கி முதலாளிகளின் பேராசை, மூடத்தனமான முடிவுகள்.

 ஏன் இந்தியாவில் கூட சமீபத்தில் க்ளோபல் ட்ரஸ்ட் பேங்க், செஞ்சுரியன் பேங்க் ஆகியவை மூடப்பட்டன? அங்கே என்ன தொழிற்சங்கம் இருந்தது? என்ன போராட்டம் நடத்தியது?

  டாடா மோட்டார்ஸ் போனது போல என்று ஒருவர் எல்லோருடைய பதிவிலும் பின்னூட்டம் போட்டுக் கொண்டிருந்தார். டாடா மோட்டார்ஸ் மேற்கு வங்கத்தை விட்டு ஏன் போனது என்று பிறகு விரிவாக எழுதுகிறேன்.

 “வீ ஆர் நாட் டாட்டா, பிர்லா” என்ற பார்த்திபன் படத்தில் அப்பாவிகளான பார்த்திபன், கவுண்டமணி ஆகியோரை பிடித்து குற்றவாளிகள் பிடிபடாமல் இருக்கிற கொள்ளை, கொலை, பாலியல் வன்புணர்ச்சி, செயின் அறுத்தல் என்று எல்லா கேஸ்களையும் அவர் மீது எழுதச் சொல்வார் ஊழல் இன்ஸ்பெக்டர் டீலக்ஸ் பாண்டியன்.

 அந்த ஊழல் இன்ஸ்பெக்டர் போல மூடப்பட்ட எல்லா நிறுவனங்களையும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் மீது பொய்க் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பொய்க்கணக்குகளை உடன் பிறப்புக்களும் நம்பி பரப்புவதுதான் கொடுமை.

எந்த ஒரு நிறுவனத்திற்கும் காவல் அரணாக திகழ்வது தொழிற்சங்கங்களே, அதற்கு எத்தனையோ உதாரணங்க:ளை சொல்ல முடியும். தொழிலாளர் போராட்டத்தால்தான் நிறுவனம் மூடப்பட்டது என்று முதலாளிகளின் நவீன ஜால்ராக்களால் பொய் சொல்லாமல், கதை கட்டாமல், ஏதாவது உதாரணம் கொடுக்க முடியுமா? 

 

1 comment:

  1. உள்நாட்டு முதல் வெளிநாட்டு வரை பல நிறுவனங்கள் மூடப்பட்ட வரலாறு தொழிற்சங்கங்களால் அல்ல நிர்வாகமின்மையால் என்ற உங்கள் கருத்துதான் உண்மை

    ReplyDelete