Thursday, October 3, 2024

56 வருடங்களுக்கு முன்பே . . .சூப்பர்

 


நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் பார்த்த செய்தி நெகிழ்ச்சியூட்டியது. 

ஹிமாச்சல் பிரதேசத்தில் 7, பிப்ரவரி, 1968 அன்று இந்திய விமானப்படை விமானம் ஒன்று ரோஹ்தாங் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 102 பேரும் இறந்து போய் விட்டனர். அந்த விபத்தில் சிக்கிய அனைவரும் இறந்து விட்டாலும் சிலரின் சடலங்கள் கிடைக்கவில்லை.

கடந்த வாரம் நான்கு சடலங்கள் கிடைத்துள்ளன. அதில் ஒரு சடலம் நாராயண் என்ற சிப்பாயினுடையது.


அவரது பேண்ட் பாக்கெட்டிலிருந்த சிறு புத்தகம் மூலம் விபரங்கள் அறிந்து சடலத்தை அவரது வீட்டில் சேர்த்துள்ளனர்.

பசந்திதேவி என்பவரை திருமணம் செய்து கொண்ட இரண்டு வருடங்களில் இந்த விபத்து நடந்துள்ளது.

தன்னுடைய மருமகளின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு நாராயணின் தாய் பசந்திதேவிக்கு தன் உறவுக்கார பையன் ஒருவரோடு மறுமணம் செய்து வைத்துள்ளார்.

பசந்திதேவி, அவருடைய இரண்டாவது கணவர் இரண்டு பேரும் காலமாகி விட்ட சூழலில் அவர்களுடைய மூத்த மகன் ஜெய்வீர்சிங் இறுதிச்சடங்குகளை செய்துள்ளார். தன் தாய்க்கு செய்யும் மரியாதை இது என்றும் தெரிவித்துள்ளார்.

56 வருடங்களுக்கு முன்பு தன் மருமகளுக்கு மறுமணம் பற்றி சிந்தித்து செயல்படுத்திய அந்த தாயின் செயல் பாராட்டுக்குரியது. 

பிகு: தன் தாய்க்கு இந்திய ராணுவம் குடும்ப ஓய்வூதியமோ இல்லை வேறு எந்த இழப்பீடும் தரவில்லை என்று ஜெய்வீர்சிங் குற்றம் சுமத்தியுள்ளார். அதனை ராணுவம் ஆய்வு செய்து உண்மையறிந்து தவறை சரி செய்திட வேண்டும்.  

No comments:

Post a Comment