Wednesday, October 9, 2024

சாம்சங் - உங்களின் வாட்டர்லூவா ஸ்டாலின்?

 



சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக பலர் இருக்கின்றனர்.

சாம்சங் நிர்வாகம், 

சாம்சங்கின் துணைப்படையாக மாறிய தமிழ்நாடு போலீஸ்,

சாம்சங்கின் கொள்கை பரப்பு செயலாளர்களான திமுக அமைச்சர்கள்,

வாக்களித்த மக்களை விட முதலாளிகளே முக்கியமாக கருதும் திமுக அரசு.

முதலாளிகளின் பிரதிநிதிகளாக கருதிக் கொண்டு போராடும் தொழிலாளர்களையும் இடதுசாரிகளையும் கொச்சைப்படுத்தும் சமூக வலைத்தள மேதாவிகள்.

தமிழ்நாடு அரசு தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் இந்திய அரசியல் சாசனத்தையும் நிலை நாட்டும் என்ற நம்பிக்கை மனதின் ஓரத்தில் கொஞ்சம் இருந்தது.

ஒரு கோரிக்கையைத்தானே ஏற்கவில்லை, பரவாயில்லை, வேலைக்கு செல்லுங்கள் என்று மந்திரிகள் சொன்ன போதும் கூட போராட்டத்தில் ஈடுபடாத உதிரிகளோடு உடன்பாடு ஏற்பட்டதாக நாடகம் நடத்திய போதும் கூட திமுக மந்திரிகளின் வழக்கமான அதிகப்பிரசங்கித்தனம் என்றுதான் தோன்றியது.

பட்டத்து இளவரசன் உதயநிதியின் அறிக்கையைப் பார்த்த உடன், மந்திரிகளை ஆட்டி வைக்கும் கயிறு முதல்வரிடம்தான் உள்ளது என்பது  தெளிவாக தெரிந்தது. சாம்சங் நிர்வாகத்தின் விருப்பப்படித்தான் முதல்வரின் செயல்பாடு அமைந்துள்ளது என்பதும் புரிகிறது.

தொழிற்சங்கம் அமைப்பது என்பது தொழிலாளர்களின் உரிமை. இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமை. இந்தியாவில் செயல்படும் பன்னாட்டுக் கம்பெனிகள், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட முடியாது. சி.ஐ.டி.யு சங்கத்திற்கு பதிலாக ஒருவேளை சாம்சங் தொழிலாளர்கள் தொ.மு.ச சங்கத்தை உருவாக்கியிருந்தாலும் இதே அறிக்கையை திமுக அரசு கொடுத்திருக்குமா?

தொழிற்சங்கத்தால் தொழில் நிறுவனங்கள் மூடப்படுகிறது என்ற பழைய பொய்ப் பிரச்சாரத்தை தூசி தட்டி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அபத்தம் குறித்து தனியாக எழுத வேண்டும்.

சங்கிகள் களம் இறங்கி போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக நச்சை கக்கிக் கொண்டிருக்கின்றனர். காவிக்கயவர்களுடன் ஒரே கோட்டில் திமுக நிற்கிறதா? சங்கிகள் பேசினால் அது அயோக்கியத்தனமாகத்தான் இருக்கும் என்பது கூட திமுகவிற்கு தெரியாதா?

தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் திமுக கூட்டணிக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் 2024 மக்களவைத் தேர்தலிலும் அமோக ஆதரவளித்தார்கள். அந்த கூட்டணியில் உள்ள திமுக அல்லாத அனைத்து கட்சிகளும் போராடும் தொழிலாளர்களுடன் நிற்கின்றனர். 

இதையெல்லாம் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்ந்து இந்த மண்ணின் சட்டத்தை நிலை நாட்ட முயற்சிக்க வேண்டும். சாம்சங் நிறுவனத்தின் அராஜகத்தை கட்டுப்படுத்த வேண்டும். 

வாக்கே இல்லாத சாம்சங் நிர்வாகம் அளிக்கும் நிதிக்காக அவர்களுக்கு ஆதரவாக  செயல்பட்டால் "நெப்போலியனின் வீழ்ச்சி வாட்டர்லூ போரில்" நிகழ்ந்தது  போல உங்களின் வீழ்ச்சி சாம்சங்கிலிருந்து தொடங்கும்.

இனியும் அவகாசம் இருக்கிறது. இப்போதாவது உருப்படியாக செயல்படவும்.

பிகு: போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டு இன்சூரன்ஸ் ஊழியர்கள் சார்பில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் போராட்ட பந்தலுக்கு நேரில் சென்று தோழமை ஆதரவளித்து போராட்ட நிதி கொடுத்த போது எடுத்த புகைப்படங்கள் மேலே உள்ளது. 

2 comments:

  1. விரைவில் பதிவிடவும் சிஐடியு வால் அழிந்தது தொழில்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற முட்டாள்களின் கார்ப்பரேட் ஆதரவு மூடத்தனத்தை தோலுரித்து நிச்சயம் எழுதுவேன் அனாமதேய .........

      Delete