Sunday, October 20, 2024

லட்டு பாபு ஒரு டவுட்டு.

 



முன் குறிப்பு : இது கடவுளுக்கோ மதத்துக்கோ எதிரானதில்;லை. கடவுளின் பெயரால் வணிகம் செய்வோரை கேள்விக்குள்ளாக்கும் பதிவு.

 


திருப்பதி கோயிலில் ஆகம விதிகளை நான் கட்டிக் காப்பேன் என்று “ஒஸ்தி” படத்து இன்ஸ்பெக்டர் சிம்பு  போல  பேசியுள்ள  நம்ம திருப்பதி லட்டு புகழ் சந்திரபாபு  நாயுடுவிடம் சில கேள்விகள் கேட்க  விரும்புகிறேன்.

 தமிழ்நாட்டில் மதுரை  மீனாட்சியம்மனுக்கு வருடத்திற்கு ஓரே ஒரு முறைதான் சித்திரைத் திரு விழா சமயத்தில் கல்யாணம் செய்வார்கள்.அதுவும் கோயிலுக்குள்தான் நடக்கும்,

 ஆனால் திருப்பதியில் வருடத்திற்கு ஒரு முறைதான் கல்யாணம் நடத்துவது என்ற கட்டுப்பாடெல்லாம் கிடையாது. பக்தர்கள் பணம் கட்டினால் ஒவ்வொரு நாளும் ஒரு முறையென்ன பத்து முறை கூட கல்யாணம் நடத்துவார்கள். இது கூட பரவாயில்லை ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற பெயரில் ஊர் ஊராகக் கூட கடவுளின் உற்சவ மூர்த்திகளை எடுத்துக் கொண்டு போய் கல்யாணம் நடத்துகிறார்கள்.

 அது எப்படியென்றால் எந்த ஊரிலாவது ஸ்ரீனிவாச கல்யாணம் நடத்த வேண்டுமென்றால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு தொகை கட்ட வேண்டும். ஸ்ரீனிவாச கல்யாணத்திற்காக உற்சவ மூர்த்திகளை திருமலையிலிருந்து கொண்டு வந்து திருமணம் நடத்தி விட்டு எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். முன்பு ரூபாய் ஐந்து லட்சமோ, பத்து லட்சமோ கட்டணம் என்று இருந்ததாக ஞாபகம். அந்த பணத்தை கட்டும் தனி நபரோ அல்லது அமைப்போ, தங்கள் ஊரில் பணம் வசூல் செய்து ஸ்ரீனிவாச கல்யாணம் நடத்தி விட்டு மீதப் பணத்தை தங்களின் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம்.  வேலூரில் அப்படித்தான் நடந்தது என்பதை நான் அறிவேன்.

 முதலில் இந்தியாவிற்குள் மட்டும் நடத்திக் கொண்டிருந்த ஸ்ரீனிவாச கல்யாணம் பிறகு வெளி நாடுகளுக்கும் விரிவடைந்து விட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் அமெரிக்காவில் நான்கு நகரங்களில் நடந்ததாக தேவஸ்தான இணைய தளம் சொல்கிறது. வெளிநாடுகளுக்கு வாங்கும் கட்டணம் எவ்வளவு என்று தெரியவில்லை.

 என்னுடைய கேள்விகள் மிகவும் எளிதானவை.

 வருடத்திற்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட நாளில் நடத்த வேண்டிய கல்யாண விழாவை வருடம் பூரா நடத்தல\லாமா?

 சுவாமியின் உற்சவ மூர்த்திகளை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லலாமா?

 நாடு விட்டு நாடும் எடுத்துச் செல்லலாமா?

 உற்சவ மூர்த்திகளை வெளியூருக்கு, வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்கிற போது திருப்பதிக்குள் நடத்த வேண்டிய கல்யாணம் மற்றும் கோயிலின் இதர விழாக்களுக்கும் தேவைப்படும் உற்சவ மூர்த்திகளுக்கு எங்கே செல்வீர்கள்?

 ஒரு வேளை உற்சவ மூர்த்திகளுக்கே பிரதி எடுத்து வெளியூர்களுக்கு வெளி நாடுகளுக்கு அனுப்புகிறார்களா?

 இவை அனைத்தும் ஆகம முறைப்படி சரிதானா? அப்படி ஆகம விதிகள் நெகிழ்வுத்தன்மை கொண்டதா?

 இதெல்லாம் எனக்கு தெரியாது, ராஜசேகர் ரெட்டி,  ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் அறிமுகமானது என்று லட்டு பாபு தப்பிக்க முடியாது. ஆம். இவை அறிமுகமானதே தன்னை ஆந்திராவின் சி.இ.ஓ என்று லட்டு பாபு அழைத்துக் கொண்டிருந்த ஆட்சிக்காலத்தில்தான்.

 மொத்தத்தில் பக்தியின் பெயரால் காசு பார்க்கும் வேலையன்றி வேறெதுமில்லை.

மேலே உள்ள படம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் நடைபெற்ற ஸ்ரீனிவாச கல்யாணத்தின் போது எடுத்தது.

1 comment:

  1. திருமலை திருப்பதியில் கல்யாண உற்சவம் செய்வதற்காக என்றே ஆறு ஏழு செட் விக்கிரகங்கள் உண்டு. எல்லாம் செமை பிசினஸ். உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன், தினமும் கல்யாண உற்சவம் மலையில் நடக்கிறது. இது போக வசந்தோற்சவம், வீதிஉலா, ஊஞ்சல் என அந்த ஒரு செட் விக்கிரகம் படு பிசி. எனவே டூப்ளிகேட் உற்சவ மூர்த்திகள் மெயின் சாமி ஆவாகனத்துடன் ஊர் ஊராக பலகாலமாக கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக போனபடி இருக்கிறார்கள். லோக்கல் ஆன்மிக வாதிகளிடம் விசாரிக்கவும்.

    ReplyDelete