Thursday, October 17, 2024

சாம்சங் போராட்டத்திற்கு ஆதரவாக ஓர் உடன்பிறப்பு

 வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன், திமுக உடன்பிறப்பான திரு ரவிசங்கர் அய்யாக்கண்ணுவின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளார். அதனை நானும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன் போராடிய சி.ஐ.டி.யு சங்கத்தை. சாம்சங் முதலாளியை மிஞ்சிய சாம்சங் விசுவாசிகளாய் வசைபாடிய உடன்பிறப்புக்கள் அனைவரும் இப்பதிவை படித்தால் நாணுவார்கள் என்று நம்புகிறேன்.

 இதோ தோழர் பிரதாபனின் பதிவு

 



எனக்கு ரவிசங்கர் அய்யாக்கன்னு அரசியல்  நிலைப்பாடுகளில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருந்திருக்கிறது. ஆனால் சாம்சங் போராட்டம் தொடர்பாக அவரின் போராட்டத்தின் கருத்து என்பது உழைக்கும் வர்க்கத்தின் சார்பாக நிற்கிறது. எனவே அவரின் பதிவை நான் இங்கு பகிர்கிறேன்.

அவர் பகிர்ந்து கொண்ட ரவிசங்கர் அய்யாக்கண்ணுவின் பதிவு கீழே

.உலகை உற்று பார்க்க வைத்த போராட்டம்!!!ஒரு குழந்தை பிறந்தால் அது உயிரோடு இருக்கிறது என்பதே அந்தக் குழந்தையின் இருப்புக்கு ஒரு சாட்சி தான். அந்தக் குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்பதாலோ அரசு பிறப்புச் சான்றிதழ் தர தாமதம் செய்கிறது என்பதாலோ அது பிறக்கவேயில்லை என்று ஆகாது

என்று ஆயிரத்திற்கு மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் ஒன்று கூடி வேலை நிறுத்தம் செய்தார்களோ, அன்றே சாம்சங் தொழிலாளர் சங்கம் வளர்ந்து கண் முன்னே நிற்கும் இயக்கமாக மாறி விட்டது. அதற்கு அரசின் பதிவு என்பது தானாக நடந்திருக்க வேண்டிய ஒரு சடங்கு. ஆனால், அது சாம்சங் நிறுவனத் தலையீட்டின் காரணமாக இழுத்தடிக்கப்பட்டதால், சங்கப் பதிவு தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது

இன்று நடைபெற்ற சாம்சங் தொழிலாளர் சங்கப் பேரவை நிகழ்விற்குப் பிறகு  அவர்கள் எடுக்கும் நிலைப்பாடு, அளிக்கும் விளக்கம், வழக்கின் முடிவு அனைத்தையும் தெரிந்து கொண்டு விரிவாகவும் தொடர்ந்தும் எழுதுவோம் என்றிருந்தேன். இப்போது அந்த வழக்கு நாளை தான் விசாரிக்கப்படும் என்கிறார்கள்

இந்தப் போராட்டத்திற்கு எதிராகப் பேசியவர்கள்

சாம்சங் வேறு மாநிலத்திற்கு ஓடி விடும் என்றார்கள். ஓடிவிட்டதா?

தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றார்கள். இழந்தார்களா?

கம்யூனிஸ்ட்கள் நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள் என்றனர். ஓடி விட்டார்களா?

போராட்டம் வன்முறையில் முடிந்தால் என்ன ஆவது என்று பக்குவமாய் பயமுறுத்தினார்கள். ஒரு துளி ரத்தமாவது சிந்தப்பட்டதா?

முதல் 30 நாட்கள் வரை பெரிதாக ஊடக கவனம் பெற்றிராத போராட்டம், தமிழ்நாடு அரசின் அணுகுமுறை காரணமாக கடந்த ஒரு வாரம் முழுக்க பேசுபொருளாகி இருக்கிறது

பன்னாட்டு நிறுவனமே என்றாலும் தொழிற்சங்கம் தேவை, தொழிலாளர் போராட்டமும் ஒற்றுமையும் அதைச் சாதித்துக் காட்டும், அதற்கு நம்பித் தேடிப் போக வேண்டிய நிறுவனம் CITU என்கிற மிகப் பெரிய விளம்பரத்தை ஒரு பைசா செலவில்லாமல் தமிழ்நாடு அரசு செய்து தந்திருக்கிறது

தொழிற்சங்க நடைமுறைகளைப் பொருத்தவரை தொழிற்சங்கப் பதிவு என்பது நாம் ஒரு வீட்டையோ திருமணத்தையோ பிறப்பையோ அரசிடம் பதிவது போன்றது

தொழிற்சங்க அங்கீகாரம் என்பது இரண்டு வகைப்படும்

ஒன்று, தொழிற்சங்கத்துக்கு நிறுவனம் அளிக்கும் அங்கீகாரம். இது ஒரு நிறுவனம் தொழிற்சங்கத்தைத் தொழிலாளர்களின் முறையான பிரதிநிதி என்று ஏற்றுக் கொண்டு தொழிலாளர் நலன் சார்பாக அவர்களுடன் தொடர்ந்து உரையாட முன்வருவதைக் குறிக்கும்ஒரு சங்கத்தைப் பதிவு செய்து ஒரு ஆண்டு ஆன பின்னர் தங்களுக்கு அங்கீகாரம் தருமாறு நிறுவனங்களை வேண்டலாம் என்று 1926ஆம் ஆண்டின் இந்திய தொழிற்சங்கச் சட்டம் கூறுகிறது. ஆனால், ஒரு நிறுவனம் ஒரு தொழிற்சங்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற சட்டப்படியான கட்டாயம் தமிழ்நாட்டில் கிடையாது.

அப்படி என்றால் நேற்று CITU குறிப்பிட்ட அங்கீகாரம் என்பது எத்தகையது? 7 பேர் கூடி ஒரு சங்கத்தைப் பேப்பரில் பதிவு செய்து விட்டால், அதை எல்லாரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று பொருளாகி விடுமா? 1000 பேர் உள்ள தொழிற்சாலையில் 500 பேராவது அச்சங்கத்தின் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு, தங்களுடன் தான் தொழிலாளர்கள் நிற்கிறார்கள் என்பதைப் பேச்சுவார்த்தையின் மூலமோ வேலை நிறுத்தத்தின் மூலமோ நிரூபித்துக் காட்ட வேண்டும். இது நடப்பதற்கு முன்னரே நிறுவனங்கள் ஊழியர்களையும் மிரட்டியும் விரட்டியும் கெஞ்சியும் கொஞ்சியும் போட்டிச் சங்கங்களை உருவாக்கியும் குறுக்குச் சால் ஓட்டிப் பார்க்கும்

அப்படித் தான் சென்ற வாரம் தமிழ்நாடு அரசு, சாம்சங் நிறுவனம் போட்டியாக உருவாக்கிய "பணியாளர் குழு"(Workmen committe)வுடன் பேசி உடன்பாடு ஏற்பட்டதாக அறிவித்தது. இந்த Workmen committee என்பது பிள்ளையார் சதுர்த்திக்கு ஊரில் உள்ள சிறுசுகள் கூடி கமிட்டி என்கிற பெயரில் விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்வதைப் போன்றது தான். இதற்கு சட்டப் பாதுகாப்பு ஏதும் கிடையாது. இன்று இருக்கும் குழு நாளை இருக்காது. அவர்களால் முதலாளிகளை எதிர்த்து ஒரு குசு கூட விட முடியாது

போன வாரமே CITU போராட்டத்தைக் கைவிட்டிருந்தால் தான் தன்னை நம்பி வந்த தொழிலாளர்களை நட்டாற்றில் கை விட்டது போல் இருந்திருக்கும். இப்போது அவர்கள் மீது எந்த வித பழிவாங்கல் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்கிற உறுதிமொழியை அரசின் முன் பெற்றிருக்கிறது. வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்குச் சம்பளமும் கிடைக்கலாம். சங்கம் வைக்கிற கோரிக்கைகளை ஏற்கிறார்களோ இல்லையோ அதற்கு எழுத்து மூலமாவது நிறுவனம் பதில் அளிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. சங்கத்தோடு பேசவே மறுத்த சாம்சங் நிறுவனத்தை தொடர்ந்து தமிழ்நாட்டையே சாட்சியாக வைத்து சங்கத்தோடு பேச வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தியிருப்பது தான் சாம்சங் தொழிற்சங்கத்தின் வெற்றி.

நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் போராடியிருந்தால் அச்சங்கத்தால் இந்த வெற்றியைப் பெற்றிருக்க முடியுமா? மற்ற தொழிற்சங்கங்களோ அரசியல் கட்சிகளோ தமிழ்நாடு அரசோ தலையிட்டு தொழிலாளர்களுக்கு வலுவைக் கூட்டியிருக்குமா? 200 ஆண்டு தொழிற்சங்க வரலாற்றின் சட்ட நுணுக்கங்களை எல்லாம் முன்வைத்து வாதாடி இருக்குமா? இந்த வலு எல்லாம் தொழிலாளர்களுகுக் கிடைக்கக் கூடாது என்று தான் சாம்சங் நிறுவனம் வெளியாட்களை அனுமதிக்க மாட்டோம் என்றது

வெளிநாட்டில் இருந்து வெள்ளைக்காரன் வந்தான், வேலை தந்தான், குடிக்க கூழும் கஞ்சியும் கொடுத்தான் என்றில்லாமல், கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்

அதானியின் நிறுவனம் ஆப்பிரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கிறேன் என்று அடாவடி செய்தால் அப்போதும் உங்கள் நிலைப்பாடு இதே போன்று தான் இருக்குமா?

சாம்சங் என்பது நமக்கு செல்பேசி, fridge, washing machine விற்கிற நிறுவனமாகத் தான் அறிமுகமாகி இருக்கிறதே தவிர, அதன் ரிஷிமூலம் நதிமூலம் எதுவும் நமக்குத் தெரியாது

சாம்சங் கொரியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனம். குடும்ப நிறுவனம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இருந்தாலும், தொழிற்சங்க நடவடிக்கைகளை மூர்க்கமாகத் தடுத்திருக்கிறது. இதன் காரணமாக, 2014ல் சாம்சங் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டு தன் உடலையே ஆயுதமாக வைத்துப் போராடக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு கான்சர் உருவாகும் கேட்டினைக் குறித்து வழக்கு நடந்திருக்கிறது. அதை Another Promise என்கிற பெயரில் ஒரு திரைப்படமாகவே வெளியிட்டிருக்கிறார்கள்.

சாம்சங்கின் தலைவர், குடும்ப வாரிசு கொரியாவின் அதிபருக்கு இலஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொண்டார் என்கிற வழக்கில் சிறைத் தண்டனையே பெற்றிருக்கிறார். தான் இலஞ்சம் கொடுத்ததற்காகவும் கொரியாவின் அரசியல் சாசனத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடுத்ததற்காகவும் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார்

கொரியாவில் இருந்து உருவான Hydundai உள்ளிட்ட பிற நிறுவனங்களைப் போலன்றி சாம்சங் தொழிலாளர்களை உறிஞ்சிக் குவித்த செல்வம் தான் அதை ஒரு நாட்டு அரசே அவ்வளவு எளிதில் தொட்டுவிட முடியாத சக்தியாக மாற்றி இருக்கிறது

கடும் போராட்டங்களுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு தான் கொரியாவில் சாம்சங் தொழிலாளர் சங்கத்தை அமைத்திருக்கிறார்கள். சொந்த நாட்டிலேயே தொழிற்சங்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட சாம்சங், முதலீடு செய்ய வந்த அந்நிய நாட்டில், "தங்கள் நிறுவனத்திற்கு என்று தனி கொள்கை இருக்கிறது, சங்கமே வைத்துக் கொள்ள மாட்டோம், அப்படியே அமைத்தாலும் வெளியாட்களை சங்கத்தில் பங்காற்ற விட மாட்டோம்" என்பது பாட்டி வடை சுட்ட கதை தான். அதை என்ன ஏது என்று கூட விசாரிக்காமல், அப்படியே கிளிப்பிள்ளை போல் ஒப்பித்தவர்கள் யாரும் சமூகநீதி என்கிற சொல்லைச் சொல்லவே லாயக்கற்றவர்கள். சாம்சங் தொழிற்சாலை அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது தானே? அது ஒன்றும் தனித்தீவில் இல்லையே?

சமூகநீதி என்பது சாதிகளுக்கு இடையேயான நீதி மட்டும் தானா? தொழிலாளர் உரிமை, பெண்ணுரிமை என்பதெல்லாம் அதில் வராதா

ஒரு கம்யூனிஸ்டாக இருந்தால் மட்டும் தான் தொழிலாளர் உரிமையைப் பேச வேண்டுமா? மற்றவர் உரிமைக்குக் குரல் கொடுக்க நாம் மனிதனாக இருந்தால் போதாதா?

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரியாவில் நடந்த சாம்சங் தொழிலாளர் போராட்டம் கூட அவ்வளவு பெரிய வெற்றியைத் தரவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் அரசு ஆதரவுடன் தொழிலாளர்கள் சாம்சங்கைப் பதில் சொல்லும் இடத்திற்கு நகர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்க வெற்றி. இந்த விசயத்தில் அரசு தொடக்கத்தில் சறுக்கினாலும் பிறகு சுதாரித்துக் கொண்டது பாராட்டத்தக்கது.

CITU வழிகாட்டலில் நடந்து முடிந்துள்ள சாம்சங் தொழிலாளர் போராட்டம் பல உலக நாடுகள் உற்றுக் கவனித்த போராட்டம். அடுத்து இது போல் உலகு எங்கும் இந்தியாவிலும் பல தொழிலாளர்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட வழிகாட்டியாக இருக்கப் போகிற போராட்டம்

ஆனால், இது ஒரு போராட்டத்தின் முதல் அத்தியாயம் தான். சாம்சங் தொழிலாளர் கோரிக்கைகளுக்கு எப்படிப் பதில் சொல்லப் போகிறது என்பதைப் பொருத்து இதன் அடுத்தடுத்த அத்தியாயங்கள் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்

இப்போராட்டத்திற்குத் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.

Ravishankar Ayyakannu

 

No comments:

Post a Comment