காப்பீட்டு ஊழியர் இதழிற்காக எழுதியது
நூல்
அறிமுகம்
நூல் : சபக்தனி
ஆசிரியர் : சம்சுதீன் ஹீரா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
சென்னை
– 18
விலை : ரூபாய் 270.00
கோவைக்
கலவரங்கள் பற்றி “மௌனத்தின் சாட்சியங்கள்” எழுதி நம் மனசாட்சியை உலுக்கிய தோழர் சம்சுதீன்
ஹீரா வின் இரண்டாவது நாவல் “சபக்தனி” அதென்ன பெயர் சபக்தனி? பாத்திரத்தின் பெயரா? நாவலின்
கடைசி வரிகள் சொல்லும் விடையை, வேதனையை தோய்த்தெடுத்து . . .
திருப்பூரை
களமாகக் கொண்டு எழுதப்பட்டது இந்த நாவல். இரண்டு கொலைகளோடு நாவல் தொடங்குகிறது. டாலர்
நகரமாக திருப்பூர் மாற காரணமாக இருந்த உழைப்பாளிகள் மீது நிகழ்த்தப்பட்ட சுரண்டல்களை
உண்மைச்சம்பவங்களோடு நாவலின் முற்பகுதி பேசுகிறது என்றால் சாகசவாதத்தால் ஈர்க்கப்பட்ட
ஒரு இளைஞன் அனுபவிக்கும் இன்னல்களை பிற்பகுதி விவரிக்கிறது.
நக்சல்பாரி
இயக்கத்தவர்களோடு பரிச்சயம் உள்ள தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் ஷேக் பரித் – ஜெமீலா தம்பதியினரின் மூத்த மகன்,
சிறுவன் அனாஸ் சி.பி.ஐ, சி.பி.எம் கட்சித் தோழர்களோடு பழகுகிறான். தன் கேள்விகளுக்கான
பதில்களை அவன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறான். கட்சிகளும் தொழிற்சங்கங்களும்
செய்யும் பணிகளை அறிந்து கொள்கிறான். அவர்களோடு இணைந்து செயல்படத் தொடங்குகிறான். மே
தினப் பேரணியில் பெருமையோடு கலந்து கொள்கிறான்.
பஞ்சப்படிக்காக
நூறு நாட்களைக் கடந்து நடக்கும் போராட்டம் உழைப்பாளி மக்களின் வாழ்வை எப்படி புரட்டிப்
போடுகிறது என்பதையெல்லாம் நெகிழ்ச்சியோடு பதிவு செய்யும் நாவல், இன்னொரு முக்கியமான
சம்பவத்தையும் பதிவு செய்கிறது.
அது
?
பஞ்சப்படி
தர முடியாது என்று பனியன் கம்பனி முதலாளிகள் ஊர்வலம் போனார்கள் என்பதும் “பஞ்சப்படி
வேணுமா பஞ்சப்படி? மஞ்சப்பொடி கூட தர மாட்டோம்” என்று முழக்கமிட்டுப் போனார்கள் என்பதுதான்
அந்த சம்பவம். போராட்டங்களுக்கு எதிரான முதலாளிகள், தங்கள் லாபத்தை தக்க வைக்க போராடினார்கள்
என்ற முரண்பாட்டை நாவல் அழுத்தமாக பதிவு செய்கிறது.
குடும்ப
பாரத்தை சுமக்க படிப்பை துறந்து பட்டறை வேலைக்கு போகிற அனாஸின் அரசியல் ஆர்வம் அதிகமாகிறது.
அதி தீவிர சித்தாந்தம் கொண்டவர்கள் அளிக்கும்
நூல்களைப் படிக்கும் அனாசிற்கு தொழிற்சங்க இயக்கமே சமரச இயக்கம் என்றும் அவை புரட்சியை தாமதிக்கிறது என்ற கருத்துக்கு வருகிறான்.
ஒரு புரட்சிகர இயக்கத்தில் இணைகிறான். இதற்கிடையில் பனியன் கம்பெனியில் இணைந்து சிறந்த தொழிலாளி என்ற பெயரும் எடுக்கிறான்.
கட்சியின்
மாநாடுகளில் கலந்து கொள்வது, போலீஸோடு மோதுவது என்று அனாஸின் நடவடிக்கைகள் அதிகரிக்கிறது.
மாநாட்டில் கலந்து கொள்ள விடுப்பு தர மறுப்பதால் வேலையிலிருந்து விலகுகிறான். கட்சிக்காக
அப்போதுதான் துளிர் விட்ட காதலையும் துறக்கிறான். புரட்சி நெருங்கி விட்டது என்ற பரவசத்தில்
இருக்கும் அனாஸ், பாலியல் குற்றவாளியான ஒரு பணக்காரனை அழித்தொழிப்பு செய்ய திட்டமிடுகிறான்.
அதற்கு முன்பாக ஒரு பேருந்தையும் எரிக்க திட்டமிடுகிறார்கள்.
ஆனால்
அசந்தர்ப்பவசமாக போலீசிடம் சிக்கிக் கொள்கிறார்கள். மிகக் கடுமையான சித்தரவதைகளை அனுபவிக்கிறார்கள்.
மகன் கைது செய்யப்பட்டதற்காக முதலில் புலம்பும் தாய் பிறகு சட்டப்போராட்டத்தை துவக்குகிறார்.
காவல் நிலையத்தை தாக்கி கட்சி தன்னை விடுவிக்கும் என்ற அனாஸின் எதிர்பார்ப்பு கனவாகவே
மாறி விடுகிறது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி சிறைக்கு அனுப்பப்படுகிறான்.
சிறையில்
சந்திக்கும் கட்சித் தோழர் தெரிவிக்கும் செய்தி அனாஸிற்கு மிகப் பெரும் அதிர்ச்சியை
அளிக்கிறது. கட்சித் தலைமையின் அனுமதி இல்லாமல் அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால்
கட்சியிலிருந்து நீக்கப் படுவதான செய்திதான் அது.
சிறையில்
ஒரு சிறைவாசி சக சிறைவாசிகளுக்கு யேசுநாதரின் இறுதி நாளை விவரிக்கும் போது சிலுவையில்
அறையப்பட்ட யேசுநாதர், ஹீபுரு மொழியில் “ஏமி, ஏமி லாமா சபக்தனி” என்று சொல்கிறார்.
அதன் பொருள் “தேவனே, தேவனே, எனை ஏன் கைவிட்டீர்” என்பதாகும்.
திருப்பூர்
நகரத்து உழைப்பாளி மக்களின் போராட்டத்தை கச்சிதமாக பதிவு செய்துள்ள இந்நூல் காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைகளைப்
பற்றியும் பதற வைக்கும் முறையில் சொல்கிறது. ஆனால் அவற்றை விட மிக முக்கியமான செய்தி
உண்டு. சரியான அரசியல் நிர்ணயம் இன்றி வேகத்தில் செய்யப்படும் செயல் எதிர்பார்க்கும்
விளைவுகளைத் தராது என்பதே. அனாஸின் உழைப்பும் தியாகமும் வெற்றி பெறவில்லை என்ற ஆதங்கம்
மட்டும் மிச்சமாக இருக்கிறது.
முந்தைய
நாவலைப் போலவே விறுவிறுப்பான மொழி நடையில் தோழர் ஹீரா அளித்துள்ள “சபக்தனி” அவசியம்
படிக்க வேண்டிய நூல். மௌனத்தின் சாட்சியங்கள்
“யாசர்” போல அனாஸ் பாத்திரமும் நமது மனதில் நிலைக்கும்.
-
வேலூர் சுரா
பிகு
: இது வலைப்பக்கத்திற்காக மட்டுமே . . .
மௌனத்தின்
சாட்சியங்கள் வைஷ்ணவி போல (அனாஸை வழி நடத்த மட்டும் என்று சொன்னால் ஹீரா நம்பவா போகிறார்!
) ஒரு பாத்திரம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
முதலில்
நடைபெற்ற கொலைகளை ஆசிரியர் அப்படியே அம்போவென்று விட்டு விட்டார். அனாஸின் மீது பொய்
வழக்கு பதிவதற்காக அந்த இரண்டு கொலைகளை செய்திருக்க வேண்டாம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete