Thursday, October 10, 2024

கோயிலுக்குள் கிரிக்கெட்

 




 

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடினார்கள் என்றொரு சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. கோயில் நிலத்தை விற்று விட்டார்கள், நகைகளை திருடி விட்டார்கள், வருமானத்தை  தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள், பக்தர்களை மதிப்பதில்லை  என்று ஏராளமான பிரச்சினைகள்  எல்லாம் சர்ச்சையாகாமல் கிரிக்கெட் விளையாடுவது மிகப் பெரிய சர்ச்சையாகியிருப்பது கொடுமை. எது முக்கியமோ அது பின்னுக்குப் போய் விட்டது.

 நிற்க

 இப்பதிவின் நோக்கம் வேறு.

 எட்டு ஆண்டுகள் முன்பு நான் எழுதி தீக்கதிர் நாளிதழின் இணைப்பிதழான வண்ணக்கதிர் இதழில் வெளியான “சமரசம்” என்ற சிறுகதையில் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடுவது பற்றி குறிப்பிட்டிருப்பேன். நான் பார்த்த காட்சியைத்தான் கதைக்குள் கொண்டு வந்திருந்தேன். அந்த கதையை இங்கே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 நிற்க

 அந்த கதையின் முக்கியமான பொருள் கோயிலுக்குள் கிரிக்கெட் ஆடுவது அல்ல.

                                                                              சமரசம்

 

-         வேலூர் சுரா

 


கல்யாண மண்டபத்தில்  நுழையும் போதே பெரும் இரைச்சல்களுக்கு மத்தியிலும் கூட  நாகஸ்வர இசை கம்பீரமாக  காதுகளை  வருடிச் சென்றது. இந்த ஊரில் இவ்வளவு சிறப்பாக யாரும் வாசித்ததில்லையே என்ற மனதின் கேள்வியோடு இருக்கையை தேடுகையில் தோடி ராகத்து ஆலாபனையை முடித்து “தாயே யசோதா” என்று பாடலைத் துவக்கி இருந்தார். யார் இந்த வித்வான் என்று நான் கழுத்தைத் திரும்பி நாகஸ்வர கோஷ்டிக்கான தனி மேடையை பார்க்கும் முன்பே

 “நேத்து ரிசப்ஷனுக்கே எதிர்பார்த்தேன். பரவாயில்லை முகூர்த்தத்துக்கு வந்துட்ட,  முகூர்த்தத்திற்கு  இன்னும் நேரமிருக்கு, முதலில் டிபனை முடிச்சிடு”

 என்று என் நண்பன் மூர்த்தி கையைப் பிடித்து மாடியில் இருந்த டைனிங் ஹாலுக்கு அழைத்து சென்று விட்டான்.  என்னுடைய அலுவலக நண்பனின் ஒரே மகளின் திருமணம்.

 செவிக்கு உணவு கிடைக்க வாய்ப்பில்லாத குளிர்சாதன அறையாக இருந்ததால் வயிற்று உணவில் கவனம் செலுத்தினேன்.  சுவையான உணவை அருந்திய நிறைவோடு படிகளில் இறங்கி வருகையில் ஆபேரி ராகத்தில் நகுமோ ஒலித்துக் கொண்டிருந்தது.

 இப்போது அந்த நாகஸ்வரக்காரரை தெளிவாகப் பார்க்க முடிந்தது.

 “அட, நம்ம சிக்கல் சண்முகசுந்தரம்!”

 அதுதான் அவர் பெயரா என்று தெரியாது.  ஒரு சம்பவத்தைப் பார்த்து நானே சூட்டிய பெயர்.

 ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு போயிருந்த நேரம். தஞ்சையிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் செல்லும் ஊர். பெயரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லாதே என்று சொல்வார்கள் அல்லவா? அதனால் இங்கே எந்த ஊர் என்பது அவசியம் இல்லை.

 தைப்பூசத் திருவிழா நடந்து கொண்டிருந்த காலம் அது.  ஊருக்கு வந்து விட்டு கோயிலுக்கு போகாவிட்டால் எப்படி என்ற என் அப்பாவின் வற்புறுத்தலால் நானும் சென்றிருந்தேன். கால வெள்ளத்தின் வேகத்தில் என் புரிதல்களும் கொள்கைகளும் மாறி இருந்தாலும் இளமைக் காலத்தின் பெரும் பகுதியை செலவழித்த இடமாயிற்றே என்றுதான் புறப்பட்டேன்.

 ஏதோ ஒரு சோழ மன்னனின் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம். ஏதோ தஞ்சை பெரிய கோயில் போல பிரம்மாண்டம் என்றெல்லாம் கற்பனை செய்யாதீர்கள். அவ்வளவு பெரியதெல்லாம் கிடையாது. ஆனால் மதில் சுவருக்கும் ஆலயத்துக்கும் இடைப்பட்ட பகுதி பிரகாரம் என்ற பெயரில் மிகவும் பெரிதாக இருக்கும். மாதத்தில் ஒரிரு நாட்களைத் தவிர மற்ற நாட்களெல்லாம்  பக்தர்கள் வர மாட்டார்கள். அதனால் கோயில்தான் எங்களின் விளையாட்டு மைதானமே. ஒரே சமயத்தில் மூன்று நான்கு கிரிக்கெட் மாட்சுக்கள் கூட நடந்து கொண்டிருக்கும். எப்போதாவது கிடைக்கும் சுண்டலுக்காவும் புளியோதரைக்காகவும்  அடித்துக் கொண்டதை நினைத்தால் இப்போது வெட்கமாகக் கூட இருக்கிறது. 

 எதையோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்.  நீ வயதானவனாக மாறிக் கொண்டிருக்கிறாய் என்று மகன் கிண்டலாகச் சொல்வது சரிதானோ?

 கோயில் பிரகாரத்தில் ஒரு பெரிய மேடை போட்டு நாகஸ்வரக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. “அபாரமான ஞானஸ்தன்” என்று சொல்லும் அளவிற்கு அந்த வித்வான் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். ஆனாலும் கூட்டத்தில் சலசலப்பு.  ஒரே நிறத்தில் டி.ஷர்ட் அணிந்த வாலிபர்கள் சிலர் ஏதோ குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். தங்களின் ஜாதியை அடையாளப்படுத்துகிறபடி டி,ஷர்ட் போடுவது, கையில் கயிறு கட்டிக் கொள்வது என்று ஒரு விபரீதப் போக்கு உருவாகியுள்ளதாக கொஞ்ச நேரம் முன்பாக அப்பா கவலையோடு சொன்னது நினைவுக்கு வந்தது.

 ஒரு நடிகரின் பெயரைச் சொல்லி அவர் நடித்த படத்தின் பாடலை வாசிக்குமாறு கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னொரு கும்பல் இன்னொரு நடிகருக்காக கூப்பாடு போட்டது. பெரியவர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

 வித்வான் வாசிப்பதை நிறுத்தினார். நாகஸ்வரத்தை கீழே வைத்தார். மைக்கை தன் பக்கம் இழுத்து

 “இது கோயில். இங்கே என்னால் சினிமா பாட்டுக்கெல்லாம் வாசிக்க முடியாது.  நான் வாசிக்கிறதை கேட்க பிடிக்கலைனா நீங்க தாராளமா போயிடலாம்”

 “எங்க ஊருக்கு வந்துட்டு எங்களையே வெளியே போக சொல்றியா.  நாங்க வசூலிச்சு கொடுத்த காசை வாங்கிட்டு எங்க இஷ்டப்படி வாசிக்க மாட்டியா”

 என்று அந்த கும்பலின் தலைவன் போல இருந்தவன் கத்த

 “நீங்க என்னத்தை வசூலிச்சீங்க? அதை மட்டும் வச்சுட்டு நாக்கைக் கூட வழிக்க முடியாது. பப்ளிக்கில சீன் போடறீங்களா?”

 என்று இன்னொரு கும்பல் எகிற  அது கோஷ்டி மோதலாக மாறும் நிலை.

 கோயில் தர்மகர்த்தா கையெடுத்து கும்பிட்டு இரண்டு கோஷ்டியையும் அடக்கி விட்டு

 “போனா போகுது. ஒரு ரெண்டு பாட்டு பசங்க விருப்பப்படி வாசிச்சுடுங்க தம்பி”  என்று வித்வானிடம் கேட்க

 “இல்லைங்க. இது கோயில். சரிப்பட்டு வராது  அது மட்டுமில்லை நான்  சினிமா பாட்டுக்கெல்லாம்   வாசிக்கறது  கிடையாது”

 என்று நிதானமாக அதே நேரம் உறுதியான குரலில் மறுக்க

 கூச்சல் குழப்பத்திற்கிடையே தங்கள் வாத்தியங்களை உறையில் போட்டு மேடையிலிருந்து கீழிறங்கி போய்க்கொண்டே இருந்தார்கள்.

 அவனுக்கு ஓவர் திமிருப்பா!

நம்ம ஊரு பசங்க நாசமாத்தான் போகப்போறாங்க!

 என்று இரண்டு நாட்கள் ஊரெங்கும் இதே போல இரண்டுவிதமான பேச்சுக்கள்தான்.

 தில்லானா மோகனாம்பாள் சிக்கல் சண்முக சுந்தரம் மாதிரி  கறாரான பேர்வழியாக  உள்ளாரே என்பதால் நான் அவ்வாறு அவருக்கு பெயர் சூட்டியிருந்தேன்.

 அந்த நிகழ்வுக்குப் பிறகு இன்றுதான் அவரைப்பார்த்தேன்.

 தாலி கட்டுதல், மொய் அளித்து புகைப்படமெடுத்தல் முதலிய சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர் தொலைபேசி அழைப்புக்களுக்காக மண்டபத்திற்கு வெளியே சென்று நிதானமாக பேசி விட்டு உள்ளே வந்தால் எனக்காக ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

 “கண்ணோடு காண்பதெல்லாம்”  என்று திரைப்படப்பாடலை வாசித்துக் கொண்டிருந்தார் சிக்கல் சண்முகசுந்தரம். அந்த ஒரு பாட்டோடு நிற்கவில்லை, வரிசையாக புது புது பாட்டாக வாசித்துக் கொண்டே இருந்தார்.

 சினிமா பாட்டுக்கு வாசிக்க மாட்டேன்னு அன்னிக்கு பாதிக் கச்சேரியில எழுந்து போனவரா இப்படி என்று நினைக்க நினைக்க கோபமாக வந்தது. அவரிடமே கேட்டு விடுவோம் என்று காத்திருந்தேன். கேட்டும் விட்டேன். அவர் பெயர் சண்முகசுந்தரமில்லை, மீனாட்சி சுந்தரம்.

 “சார் நீங்க இப்படி வெளிப்படையா பேசினதில சந்தோஷம். அன்னைக்கு தகறாரு செஞ்சது ஏதோ விடலைப் பசங்கன்னுதான் முதல்ல நினைச்சேன். ஆனா அவங்க ஜாதி சங்கத்து ஆளுங்க.  பெரிய நெட்வொர்க் போல. நான் எந்த கோயில்ல வாசிச்சாலும் அவங்க ஆளுங்க கலாட்டா செஞ்சிக்கிட்டே இருந்தாங்க. அவங்க செய்யற கலாட்டாவை கோயில் நிர்வாகமும் தடுக்கலை. கோயிலுக்குள்ள இருக்கற சாமியும் தடுக்கலை”

 “ஓ அதனாலதான் உங்க கொள்கைல சமரசம் செஞ்சுகிட்டு சினிமா பாட்டுக்கெல்லாம் வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?”

 என்று கேட்டேன்.

  “அம்மி கொத்த சிற்பி எதுக்குன்னு நான் சினிமா பாட்டுக்கு வாசிக்காம இருந்தேன்.  அதை மக்கள் ரசிச்சு கேட்கறபோது எதுக்கு பிடிவாதம் பிடிக்கனும்தான் நான் மாத்திக்கிட்டேன். அதை விட முக்கியமான காரணம் ஒன்னு இருக்கு”

 அதை தெரிந்து கொள்ள ஆவலோடு இருந்தேன்.

 “ஒரு தொழிலாளிக்கு வேலை போனா என்ன கஷ்டப்படுவாங்கங்கறது உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். என் நிலைமையும் அது போலத்தான் ஆச்சு. கோயில் கச்சேரிங்க குறைஞ்சு போச்சி. என் குடும்பம் மட்டுமல்ல, என்னை நம்பி இருக்கிற மத்த கலைஞர்களுக்கும் பிழைப்பு இல்லை. வேற வித்வானோடு வாசிக்க அவங்களும் தயாரா இல்லை. அதனாலதான் கல்யாண கச்சேரிகளுக்கு வாசிக்க ஆரம்பிச்சேன். முகூர்த்தம் முடியவரை என் விருப்பம். அதுக்கப்பறமா மக்கள் விருப்பம். பிழைப்பும் சுமாரா ஓடிக்கிட்டிருக்கு”

 என்றவர் கடைசியாக ஒன்றைச் சொன்னார்.

 “என் சுய மரியாதைக்கு பாதுகாப்பே இல்லாத இடத்தில வாசிக்கறதை மட்டும் நிறுத்திட்டேன். ஆமாம் கோயில் கச்சேரி எதையும் ஒத்துக்கறதே இல்லை” 

 

No comments:

Post a Comment