Monday, October 14, 2024

டாடாவை வெளியேற்றிய குற்றவாளிகள் யார்?

 


டாடா நானோ மேற்கு வங்கத்திலிருந்து வெளியேறியது யாராலே?

 சாம்சங் போராட்டத்திற்கு எதிரான பல்வேறு அபத்தமான பதிவுகளில் டாடா மோட்டார்ஸ் வெளியேறியது போல சாம்சங்கும் வெளியேற வேண்டுமா என்றொரு கேள்வி முன்வைக்கப்பட்டது.

 கொஞ்சம் கூட புரிதல் இல்லாத கருத்து அது.

 டாடா நானோ வெளியேறியதற்கு எந்த தொழிற்சங்கப் போராட்டமும் காரணம் கிடையாது. அது முழுக்க முழுக்க இடது முன்னணிக்கு எதிரான சதிச்செயல்.

 அந்த சதியை பற்றி பேசும் முன்னர்  இடது முன்னணி அரசு மேற்கு வங்கத்தில் எப்படி செயல்பட்டது என்பது பற்றியும் டாடா நிறுவனத்திற்கு விதித்த நிபந்தனைகள் பற்றியும் டாடா நானோ தொழிற்சாலைக்கு ஏன் சிங்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.

 1972 முதல் 1977 வரை மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த சித்தார்த்த சங்கர் ரே தலைமையிலான காங்கிரஸ் அரசு, தற்போதைய மம்தா ஆட்சியைப் போலவே ஒரு அரைப் பாசிச ஆட்சியையே நடத்தியது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விவசாயமும் தொழில் வளமும் இல்லாமல் மின்சாரமே அரிதாகிப் போன மாநிலமாகவே மேற்கு வங்க மாநிலம் இருந்தது.

 அதிகாரங்களையும் நிதியையும் தன் கையிலே குவித்து வைத்துள்ள மத்திய அரசாங்கம் முறைத்துக் கொண்டு நிற்கிற போது ஒரு மாநில அரசின் பணிகள் என்பது சிரமமானது. சவாலானது. ஆனால் அந்த சவாலை எதிர் கொண்டது இடது முன்னணி ஆட்சி.

 பானர்ஜி, சட்டர்ஜி, பட்டாச்சார்ஜி உண்டு ஆனால் எனர்ஜி மட்டும் கிடையாது என்று ஜோக்கடிக்கும் நிலையில் இருந்த மேற்கு வங்க மாநிலத்தை உண்மையிலேயே மின் மிகை மாநிலமாக மாற்றி மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் அளிக்கும் மாநிலமாக மாற்றிய பெருமை இடது முன்னணி ஆட்சிக்கே உண்டு. இத்தனைக்கும் மேற்கு மாநிலத்திற்கான மின் திட்டங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்வோடு ஏராளமான தடைகளை போட்டது இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்கள்.

 இந்தியாவில் இடதுசாரிகளைத் தவிர வேறு எந்த ஒரு கட்சியாலும் செய்ய முடியாத மகத்தான சாதனையை செய்தது மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசு. இந்தியாவில் முதன் முதலாக தேர்தல் மூலம் உருவான தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் தலைமையிலான கேரள கம்யூனிச ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலச்சீர்திருத்தங்களை மேற்கு வங்க அரசு அமலாக்கியது.

 இடது முன்னணி தனது ஆட்சிக்காலத்தில் முப்பது லட்சத்து நாற்பதாயிரம் குடும்பங்களுக்கு பதினோரு லட்சத்து முப்பதாயிரம் ஏக்கர் நிலங்களை வினியோகம் செய்துள்ளது. இந்தியாவில் செய்யப்பட்ட நில வினியோகத்தில் அறுபது சதவிகித நிலம் மேற்கு வங்க மாநிலத்தில் கொடுக்கப்பட்டதுதான். மூன்று லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட்டது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்காக ஒரு அமைச்சர் இருந்தார் என்றால் மேற்கு வங்க இடது முன்னணி அரசிலோ நிலத்தை ஏழை மக்களுக்கு அளிப்பதற்காக ஒரு அமைச்சர் இருந்தார்.

 நிலம் என்பது சாதாரண விஷயமில்லை. அடிமைகளாய், கூலிகளாய் துயரத்தில் உழன்று கொண்டிருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய உரிமை. மிகப் பெரிய வாழ்வாதாரம். மிகப் பெரிய நம்பிக்கை. நிலக்குவியல் அங்கே உடைக்கப்பட்டது. சாகுபடிக்கு வாய்ப்பிருக்கிற அரசு நிலங்களெல்லாம் ஏழைகளின் சொத்தானது. ஏழை விவசாயத் தொழிலாளி அங்கே சொந்த நிலமுடைய விவசாயியாக மாறினான். உழைப்புக்கான கருவிகள் வழங்கப்பட்டது, பாசன வசதிகள் பெருக்கப்பட்டது.

 அதனால்தான் மேற்கு வங்கம் விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. அரிசி விளைச்சலிலும் காய்கறி சாகுபடியிலும் மேற்கு வங்கம் இந்தியாவில் முதல் மாநிலமாக திகழ்கிறது என்றால் அதற்கு இடது முன்னணியின் முயற்சிகள் மட்டுமே காரணம்.

 இதை விட இன்னொரு மகத்தான சாதனை அதிகாரப் பரவல். மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பு முறையை அறிமுகம் செய்து பஞ்சாயத்துக்களை உண்மையிலேயே சக்தி மிக்கதாய் மாற்றி அமைத்த பெருமை இடதுசாரிகளையே சாரும். ஜமீன்தார்களும் மிராசுதார்களுமே பஞ்சாயத்து தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்பதை ஒரு ஏழை விவசாயி கூட  பஞ்சாயத்து தலைவராக முடியும் என்று மாற்றி அமைத்தது இடது முன்னணி ஆட்சிதான். தலித் மக்கள் சுய கௌரவத்தோடு தலை நிமிர்ந்து நிற்பதை உத்தரவாதப்படுத்தியதும் மேற்கு வங்க இடது முன்னணி அரசுதான். தீண்டாமை இல்லாத மாநிலமாக திகழ்வதும் இடது முன்னணி ஆட்சியால்தான்.

 தொழில்துறையில் முன்னேற்றத்தை உருவாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அத்தனை கம்யூனிச எதிரிகளும் சேர்ந்து சீரழித்தது ஒரு தனிக்கதை. அதன் பின்னணி பற்றி நாளை விவாதிப்போம்.

 டார்ஜிலிங்கில் கூர்க்காலாந்து பிரச்சினை பற்றி எரிந்த போது கூர்க்காலாந்து பிராந்திய கவுன்சிலை உருவாக்கி பனி படர்ந்த இமய மலையில் மீண்டும் அமைதி தவழ்வதை உருவாக்கியது இடது முன்னணி அரசு. தனி மாநிலம் பிரித்து தருகிறோம் என்று மம்தாவால் தூண்டி விடப்பட்டதை நம்பி இன்று அந்த மக்கள் ஏமாந்து நிற்பது வேறு கதை

 2009 – 10 ல் விவசாயத்துறை வளர்ச்சி தேசிய அளவில் 2.1 % ஆக இருந்த போது மேற்கு வங்கத்தில் 3.1 % ஆக இருந்தது. குஜராத்தில் விவசாய வளர்ச்சி எதிர்மறையாக இருந்த போதே 11%, 12% என்றெல்லாம் நமோ பஜனையாளர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்ததை கேஜ்ரிவால் அம்பலப் படுத்தியதை படித்திருப்பீர்கள்.

 அந்த ஆண்டில் அரிசி உற்பத்தி 14.3 மில்லியன் டன். இது நாட்டின் உற்பத்தியில் 16 %. அதே போல் காய்கறி உற்பத்தி 12.8 %.

 தொழிலாளிகளின் அரசாக இடது முன்னணி அரசாங்கம் இருந்த காரணத்தால்தான் ஒருங்கிணைக்கப் படாத தொழிலாளர்களுக்காக வருங்கால வைப்புத் தொகையை முதலில் அறிமுகம் செய்தது. தனது ஏழாவது ஆட்சிக்காலத்தில் மருத்துவக் காப்பீட்டையும் அறிமுகம் செய்தது. விவசாயத்தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்புத் திட்டத்தையும் மருத்துவக் காப்பீட்டையும் விரிவு படுத்தியது. இடது முன்னணி ஆட்சிக்காலம் முடிகிற போது அரசின் சமூக நலத்திட்டங்கள் முப்பத்தி எட்டு லட்சம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தது.  மூடப்பட்ட ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1500 அளிக்கத் தொடங்கியதும் இடது முன்னணி அரசு.

 விவசாயத்துறையை தன்னிறைவு பெற்ற துறையாக முன்னேற்றிய பின்பு, தொழிலாளர்களின் எதிர்காலத்தை உறுதி செய்த பின்பு தொழில் துறையை முன்னேற்ற கவனம் மேற்கொண்டது.

 இடது முன்னணியின் ஏழாவது ஆட்சிக்காலத்தில் மட்டும் சிறிய, பெரிய, நடுத்தர          தொழிலகங்களாக  36,000 கோடி  ரூபாய்  முதலீட்டிலான  1313  தொழிற்சாலைகள்  உருவாகின. இதில்  2010 ல்  மட்டும்  322  தொழிற்சாலைகள்  அமைக்கப்பட்டு  1,41,0000  புதிய வேலைகள்  உருவாகின.  மற்ற  இடங்களில்  எல்லாம்  சிறு தொழில்  அழிந்து  கொண்டிருக்கையில் மேற்கு வங்கத்தில் மட்டும் 4000 சிறு தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு இரண்டு லட்சத்து இருபதாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்தது.

 தகவல் தொழில்நுட்பத் துறையிலும் அனைத்து பெரிய நிறுவனங்களும் மேற்கு வங்கத்தில் அலுவலகங்களை துவக்கினர்.  2006 ல்  தகவல்  தொழில்  நுட்பத்துறையில்  36,000  ஆக  இருந்த  ஊழியர்  எண்ணிக்கை  2010 ல் 1,10,000 ஆக உயர்ந்தது.

 ஆனால் மேற்கு வங்க இடது முன்னணி அரசு இந்த வளர்ச்சி போதும் என்று இருந்து விடவில்லை. நிலத்தை பெற்ற விவசாயிகளின் மகனோ மகளோ படித்து விட்டு வருகையில் அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதால் தொழில் துறையில் மேலும் முன்னேற்றம் காண்பது அவசியம் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.

 அதற்கான முதல் நடவடிக்கைதான் டாடா நானோ தொழிற்சாலை.

 மேற்கு வங்கத்தில் பெரும்பாலானவை சாகுபடி நிலங்கள்தான். ஆகவே மூன்று போகங்களோ இல்லை இரண்டு போகங்களோ விளைச்சல் இல்லாத ஒரு போகம் மட்டுமே விளையக்கூடிய நிலத்தை கண்டறிய வேண்டியிருந்தது. அப்படி கிடைத்ததுதான் சிங்கூர்.

 சிங்கூரில் மேற்கு வங்க அரசு டாடாவிற்கு ஒதுக்கியது வெறும் 990 ஏக்கர் நிலம் மட்டுமே. நிலத்தின் கட்டுப்பாடு அரசின் வசமே இருக்கும். இழப்பீடு எப்படி தரப்பட்டது தெரியுமா?

 சந்தை விலையைப் போல ஒன்றரை மடங்கு. குத்தகைதாரருக்கு தனியாக இழப்பீடு. நிலம் கொடுத்தவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, அதைத் தவிர நிலம் கொடுத்தவர்களது குடும்பத்து பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுக்கள் மூலமாகவே நானோ நிறுவன ஊழியர்களுக்கு சீருடை தைக்கப்பட வேண்டும். உணவகமும் அவர்கள் அமைப்பார்கள்.

 சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் மற்ற மாநிலங்களில் விவசாய நிலங்கள் தேவையை விட பல மடங்கு அதிகமாக பறிக்கப்பட்டது. அடிமாட்டு விலை கூட விவசாயிகளுக்கு தரப்படவில்லை. மற்ற இழப்பீடுகளுக்கும் சிங்கூர் இழப்பீட்டிற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்தான்.

 டாடா ஒப்புக் கொண்டது போன்ற நிபந்தனைகளை மற்ற மாநிலங்களும் விதித்தால் அது கார்ப்பரேட்டுகளுக்கு சிக்கலாகி விடும். ஆகவே அவர்கள் டாடா நானோ சிங்கூரில் வருவதை தடுக்கப்பார்த்தார்கள். 95 % விவசாயிகள் தங்கள் நிலங்களை மனமுவந்து கொடுத்த சூழலில் மம்தா பானர்ஜி கலவரத்தை தூண்ட நானோ தொழிற்சாலை மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

 எங்கள் சங்கத்தின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் 2007 ம் ஆண்டு கொல்கத்தா நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் அன்றைய தொழிலமைச்சரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்த தோழர் நிருபம் சென், மேற்கு வங்க தொழிற்கொள்கை  தொடர்பாக எங்களிடம் உரையாற்றினார்.

 அப்போது அவர் சொன்ன ஒரு வாசகம் இன்றும் மனதில் நினைவில் உள்ளது. From the Right Fundamentalists to the Ultra Left, every one joined hands to destabilize the Industrial Growth of West Bengal. மேற்கு வங்க மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை சீரழிக்க வலதுசாரி அடிப்படைவாதிகள் தொடங்கி இடது தீவிரவாதிகள் வரை கை கோர்த்துக் கொண்டனர்.

 இடது முன்னணிக்கு எதிரான கலவரத்தில் துப்பாக்கி தூக்கிய மாவோயிஸ்டுகள் நிலை என்ன ஆனது?

 மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த ஒரு வருட காலத்திற்குள்ளாக அவர்கள் அழித்தொழிப்பு செய்யப்பட்டார்கள். குறிப்பாக மாவோயிஸ்ட் கட்சியின் தலைமை கமாண்டராக இருந்த கிஷண்ஜி. இவர்தான் மேற்கு மித்னாபூரில் தோழர் புத்ததேப் பட்டாச்சார்யாவை படுகொலை செய்ய தாக்குதல் நடத்தியவர். அதே கிஷண்ஜி அதே மேற்கு மித்னாபூரில் மம்தா அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 குஜராத்திற்குப் போன டாடா நானோவிற்கு எவ்வளவு நிலம் கிடைத்தது?

 990  ஏக்கர்  நிலத்திற்கு  பதிலாக  20,000  ஏக்கர்  நிலம்  அங்கே  வாரி  வழங்கப்பட்டது.    அதுவும்  அடிமாட்டு  விலையை  விட  கேவலமாக. இருபது மடங்கு கூடுதல் நிலம் எதற்காக? ரியல் எஸ்டேட் வணிகம் செய்யத்தான்.

 சிங்கூரை விட்டு நானோ போனாலும் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் வரை நிலம் விவசாயிகளுக்கு திரும்பி வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு 2017 ம் ஆண்டுதான் மம்தா அந்த நிலங்களை திருப்பிக் கொடுத்தார்.

இப்போது டாடா நானோ உற்பத்தி நிறுத்தப்பட்டு அந்த தொழிற்சாலை முடங்கி விட்டது. அதற்கு எந்த தொழிற்சங்கப் போராட்டமும் காரணமில்லை. ஏராளமான கோளாறுகள் காரணமாக விற்பனை சரிந்து விட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலம் என்ன ஆனது என்பதை சரி பார்க்க அவகாசமில்லை. யாராவது சொன்னால் நல்லது. 

 மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசு வீழ்த்தப்பட்டதற்கு பிறகு அங்கே எந்த புதிய தொழிலும் வரவில்லை.

 டாடா நானோ வை மேற்கு வங்கத்திலிருந்து துரத்தி அம்மாநில தொழில் வளர்ச்சியை முடக்கிய வலதுசாரி அடிப்படைவாதிகள்தான் இப்போது சாம்சங் நிர்வாகத்துக்கு முட்டு கொடுத்து கம்யூனிஸ்டுகள் பற்றி பொய்ப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த பொய்களை பரப்பும் கருவிகளாக உடன்பிறப்புக்களில் ஒரு பகுதியினர் (தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்தும் திமுகவினரும் உண்டு) மாறியுள்ளதுதான் அவர்கள் செய்யும் வரலாற்றுப் பிழை.

 பிழையை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு,

 

 

No comments:

Post a Comment