மேலேயுள்ள
படத்தை மொட்டைச்சாமியார் குறித்த அனைத்து பதிவுகளிலும் பயன்படுத்தி வருகிறேன். திரைப்பட
வில்லன்களைக் காட்டிலும் கொடூரமான தோற்றம் உடைய யோகி ஆதித்யநாத் செயலிலும் கொடூரமான
ஆள் என்பதன் சான்றாக கீழேயுள்ள நூல் அறிமுகம் அமையும்.
நேற்று
முன் தினம் பெங்களூர் சென்று நேற்று திரும்பினேன், பயணத்தின் போது படித்து முடித்த
நூல் இந்தியாவை உலுக்கிய ஒரு சம்பவத்தைப் பற்றியது. ஒரு அபுனைவு நூலை சமீப காலத்தில்
இவ்வளவு விரைவாக வாசித்து முடித்ததே இல்லை.
அதன்
தாக்கம் குறையாத காரணத்தால் உடனடியாகவே இதனை எழுத முற்பட்டேன்.
நூல்
அறிமுகம்
நூல் : கோரக்பூர் மருத்துவமனை துயர சம்பவம்
ஒரு
மருத்துவரின் நினைவலைகள்
ஆசிரியர் : டாக்டர்
கஃபீல் கான்
தமிழில் : ச.சுப்பாராவ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
சென்னை
– 18
விலை : ரூபாய் 320.00
2017
ம் வருடம் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி இரவு இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு கருப்பு
நாள். அந்த துயர நாளில்தான் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரத்தில் உள்ள பி.ஆர்.டி
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து போகின்றன.
மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தீர்ந்து போனதால் இந்த மரணங்கள் நேர்கின்றன.
குழந்தைகளின்
உயிரைக் காக்க போராடிய மருத்துவர் டாக்டர் கஃபீல் கான், ஆட்சியாளர்களால் வேட்டையாடப்படுகிறார்.
அவர் எழுதிய நினைவலைகள்தான் இந்த நூல்.
விடுப்பில்
இருக்கும் டாக்டர் கஃபீல் கான், மருத்துவமனையில் நிலைமை சரியில்லை என்று அறிந்ததும்
அங்கே விரைகிறார். மருத்துவமனையில் திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போய் விட்டதால் வெண்டிலேட்டர்கள்
வேலை செய்யவில்லை. மூளையழற்சி நோய் பரவியிருந்த காலமாததால் பலரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆக்ஸிஜன்
இல்லாத காரணத்தால் மரணங்கள் தொடர்கின்றன. அந்த மருத்துவமனையில் தகுதிகாண் பருவத்தில்
இருக்கும் டாக்டர் கஃபீல்கான், பிரச்சினை குறித்து மூத்த மருத்துவர்களிடம் அலைபேசியில்
பேசுகிறார். யாரிடமிருந்தும் சரியான அசைவு இல்லை. அதனால் அவரே அலைந்து திரிந்து ஆக்ஸிஜன்
சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்கிறார். பக்கத்தில் இருந்த துணை ராணுவப்படையிடம் கூட
உதவி கேட்கிறார். அந்த இரவில் அவர் அலைந்ததை படிக்கையில் நமக்கு பதற்றமாகிறது. ஓய்வின்றி
அவரும் மற்ற மருத்துவ மாணவர்களும் செவிலியர்களும் உயிர்களைக் காக்க போராடுகின்றனர்.
ஆனாலும்
மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஊடகங்கள் சூழ்ந்து கொள்கின்றனர். ஆக்ஸிஜன் குறைபாட்டுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்பதும் டாக்டர் கஃபீல்கான்
பல உயிர்களைக் காத்த நாயகன் என்பதும் ஊடகங்களில் முன் வைக்கப்படுகிறது.
அதன்
விளைவு என்ன?
மருத்துவமனைக்கு
வந்த முதலமைச்சர் யோகி, யார் டாக்டர் கஃபீல்கான் என்று கேட்டு இவரைப் பார்த்து “உன்னைப்
பார்த்துக் கொள்கிறேன்” என்று மிரட்டி விட்டு செல்கிறார். அது வெற்று மிரட்டல் அல்ல
என்பது தொடர்ச்சியான சம்பவங்கள் மூலம் நிரூபணமாகிறது.
மருத்துவப்
பணியில் அலட்சியம் காண்பித்தார், ஊழல் செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார்.
எந்த ஊடகங்கள் அவரை நாயகன் என்று சொன்னதோ அவை அவரை வில்லனாக சித்தரிக்கின்றன. அவரது
குடும்பத்தினர் மிரட்டப்படுகின்றனர். இழிவு படுத்தப்படுகின்றனர்.
வசதியான
குடும்பத்தில் வாழ்ந்த டாக்டர் கஃபீல்கான் ஏழு மாதங்கள் வரை சிறையில் அடைபட்டுள்ளார்.
சிறையில் அவர் அனுபவித்த இன்னல்கள் படிப்பவர்கள் நெஞ்சை பாதிக்கும். ஆக்ஸிஜன் குறைபாடு
என்ற அரசு நிர்வாகத்தின் கோளாறு தெரியக்கூடாது என்பதற்கான பலியாடாக தான் மாற்றப்பட்டதாக
டாக்டர் கஃபீல்கான் பின்பே உணர்கிறார்.
உச்ச
நீதிமன்றம் சென்ற பின்பே அவருக்கு பிணை கிடைக்கிறது. அவர் வீடு திரும்பிய கணம் உணர்ச்சிமயமானது.
பிணை கிடைத்தும் அவரது இன்னல்கள் தீரவில்லை. ஆம் அவரது மூத்த சகோதரரின் தொழில் முடக்கப்
படுகிறது. இளைய சகோதரர் துப்பாக்கியால் சுடப்படுகிறார். தொண்டைக் குழிக்கு கீழே சிக்கியுள்ள
தோட்டாவை எடுக்க அறுவை சிகிச்சை நடத்த விடாமல் காவலர்கள் அலைக்கழித்தார்கள் என்றால்
அவர் மீது எவ்வளவு வெறியாக முதலமைச்சர் இருந்திருக்கிறார் என்பது புரியும்.
இத்தனை
போராட்டங்களுக்குப் பிறகும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
அவர் போராட்டம் உறுதியாக தொடர்கிறது. இக்காலகட்டம் அவரது மருத்துவ சேவையை மாநிலங்கள்
கடந்து விரிவு படுத்தியிருக்கிறது.
“உயிர்களைக்
காக்க போராடியதற்கு ஏன் தண்டனை?” என்ற கேள்வியை டாக்டர் கஃபீல்கான் தனக்குள் அடிக்கடி
எழுப்புகிறார். அதே கேள்வியை நாம் உ.பி அரசிடம் கேட்க வேண்டும். அரசின் அலட்சியம் அம்பலமானதும்
மக்களால் கொண்டாடப்பட்டவர் இஸ்லாமியர் என்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை என்பதை
சொல்ல மாட்டார்கள் என்ற போதிலும் . . .
நேரடியாக
தமிழில் எழுதப்பட்ட நூல் போலவே உணர முடிந்தது என்றால் அதற்கு தமிழாக்கம் செய்த மதுரைக்
கோட்டத் தோழர், எழுத்தாளர் தோழர் ச.சுப்பாராவ் அவர்களின் அபாரமான ஆற்றல்தான் காரணம்.
வாழ்த்துக்கள் தோழர். . .
Thanks Comrade
ReplyDeleteDr Khan shifted to Bangalore for practice
ReplyDelete