Tuesday, September 10, 2024

பாலஸ்தீனம் என்ற அருவெறுப்பான சொல்

 


அரண்செய் Haseef Mohamed தோழரின் பதிவு..

❤
❤
இந்த மனிதருக்குள் எவ்வளவு அற்புதமான எழுத்தாற்றல் இருக்கிறது பாருங்களேன்..
'பாலஸ்தீனம் என்ற அருவெறுப்பான சொல்
---------------------------------------------------------
ஆம்ஸ்டர்டாமிலும், ஆண்ட்வெர்ப்பனிலும் பாலஸ்தீன ஆதரவு சுவரொட்டிகளை பார்த்தபிறகு பாரிசிலும் அதைத் தேடினேன். தர்பூசணிக் கொடிகளுடன் மிகப்பெரிய போராட்டத்தை பார்க்க ஆவலாக இருந்தேன். ஒருவேளை, ஈஃபிள் டவருக்கும், லூவார் மியூசியத்திற்கும் மெட்ரோவில் இல்லாமல் சாலையில் சென்றிருந்தால் சில சுவரொட்டிகளையாவது பார்த்திருக்கலாம்.

இந்தியாவிலிருந்து நான் புறப்பட்ட சமயம், காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமலேயே இஸ்ரேலுக்கு 147 மில்லியன் டாலர் ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவெடுத்திருந்தது. அன்றைய தினம், நுசேய்ரட் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அல்ஜெசீரா செய்தி வழங்கிக்கொண்டிருக்க, மேற்கு ஊடகங்கள் வழக்கம்போல் இஸ்ரேல் அரசுக்கு மக்கள் தொடர்பு பணியை செய்தி கொண்டிருந்தன.

ஜெர்மனியின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டிரையர், ரோம சாம்ராஜ்யத்தின் பழமையான நகரங்களில் ஒன்று. காரல் மார்க்ஸ் பிறந்த வீட்டை பார்க்க வேண்டும் என்பதைத் தவிர, அந்த நகரத்தில் எனக்கு வேறு எந்த திட்டமும் இல்லை. இதற்காகவே, பாரிசிலிருந்து 7 மணி நேரம் பயணித்து இங்கு வந்திருக்கிறேன். ஒரு நாள் முழுவதும் மார்க்ஸ் வீட்டில் கழித்துவிட்டு அன்று இரவே சுவிட்சர்லாந்து புறப்பட வேண்டும் என்பது திட்டம். ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியினால் பராமரிக்கப்படும் அந்த வீடு, ஒரு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கட்சி முன் வைத்த கோதா வேலை திட்டத்தை மார்க்ஸ் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார். மார்க்சியத்தின் அடிப்படையை புரிந்துகொள்ள உதவும் நூல்களில் அதுவும் முக்கியமானது.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் உள்ளே நுழைந்த எனக்கு தொடக்கத்திலேயே ஏமாற்றம் காத்திருந்தது. வரவேற்பு புத்தகத்தில் சிலர் கம்யூனிச வெறுப்பைக் கக்கியிருந்தார்கள். அதில் பெரும்பாலும் சீனர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களில் ஸ்டாலின், மாவோ மீதான வெறுப்பு இழையோடியிருந்தது. சேவும், ஃபிடிலும் கூட அதற்குத் தப்பவில்லை. ஒட்டுமொத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்து ஆர்எஸ்எஸ் ஒரு அருங்காட்சியம் நடத்தினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது மார்க்சின் வீடு.

மார்க்ஸ் அமர்ந்திருந்த நாட்காலி, பயன்படுதிய பொருட்கள், அவர் கைப்பட எழுதிய சில பிரதிகள் ஆகியவற்றை பார்த்த திருப்தியுடன், மார்க்ஸ் முகமூடி அணிந்து ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டு மதியமே அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

மட்ட மத்தியானத்திலும் குளிர்ந்து கிடந்த அந்த நகரத்தின் குறுகிய வீதிகளில், புகைத்துத் தள்ளியபடியும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், கடை கடையாக ஏறி இறங்கி, அலைந்து திரிந்து கடைசியாக கோல்பிங் ஹாஸ்டலை அடையும்போது மாலை 5 மணி. வரவேற்பரை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பேக்பேக்கை எடுத்துக்கொண்டு, ரிசப்ஷனிஸ்டுக்கு ஒரு வணக்கத்தையும் வைத்துவிட்டு ரயில் நிலையத்திற்கு புறப்பட்டேன்.

பாரிசிலிருந்து கிளம்பும்போதே, சூரிக்கிற்கு டிக்கெட் போட்டுவிட்டேன். டிரையரிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6 மணிக்கு சூரிக்கை அடையும். டிக்கெட் போடும் அவசரத்தில், புறப்படும் மற்றும் சேரும் நேரங்களை மட்டும் கவனித்த நான், இடையில் இரண்டு ரயில்கள் மாற வேண்டும் என்பதையோ, உயிரை உருக்கும் பனியில், ஒரு இரவு முழுவதும் காத்திருக்க வேண்டும் என்பதையோ கவனிக்கத் தவறிவிட்டேன்.
ரயில் பெட்டிகள், காற்று நுழையாதபடி சீல் வைத்ததைப்போல் அடைக்கப்பட்டிருந்தால் உள்ளே கதகதப்பாக இருந்தது. இரண்டு பெட்டிகள் கடந்து ஒரு இடத்தை கண்டுபிடித்து அமர்ந்தேன். இடையில் இருந்த மேசையைக் கடந்து எதிரே ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். களைந்துபோன தலைமுடி, காதில் கடுக்கன், முகத்தை தவிர வெளியில் தெரிந்த பாகங்கள் அனைத்திலும் பச்சை குத்தியிருந்தவன் திடீரென்று கையை நீட்டி தன்னை அறிமுகப்படுத்தினான். அவன் கையை முந்திக்கொண்டு வாயிலிருந்து புறப்பட்ட சாராய வாடை என் மூக்கை அடைந்துவிட்டது. தயங்கியபடி நான் கையைக் கொடுக்க ஜெர்மனில் இடைவிடாது பேசத் தொடங்கினான். என் பதிலுக்காக காத்திருக்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான். மொழி புரியாவிட்டாலும் அவன் வார்த்தையில் வன்மம் இருப்பதை முகபாவத்தினால் அறிந்துகொண்டேன். ஐரோப்பிய திரைப்படங்களில் பார்த்த நியோ-நாஜிக்கள் நினைவுக்கு வந்தனர். நான் சுற்றுலாபயணியா அல்லது தஞ்சம் கோரி வந்த அகதியா என்பது அவனுக்கு தெரிய நியாயம் இல்லை. என்னை பிந்தையதாக கருதினால், இவன் பேச்சோடு நிற்கப்போவதில்லை என்பது என் அச்சம். தூர தேசத்தில், தனிமையாக மேற்கொள்ளும் பயணத்தில், தவிர்க்க முடிந்த பிரச்னைகளை தவிர்ப்பதே புத்திசாலித்தனம். சட்டென்று எழுந்து பேக்பேக்கை அள்ளிக்கொண்டு அடுத்த பெட்டியை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அவன் அப்போதும் பேசுவதை நிறுத்துவதாக தெரியவில்லை.

பேசெல் ரயில் நிலையத்தை அடைந்தபோது நள்ளிரவு 12 மணி. அடுத்த ரயில் காலை 4.30 மணிக்கு என்பதால், இரவு முழுவதுதையும் அங்கேயே கழிக்க வேண்டும். வெளியில் கொஞ்சமும் இரக்கமின்றி பனி கொட்டிக்கொண்டிருந்தது. இதை அனுபவிக்கத்தான் இந்த சயமத்தில் என் பயணத்தை திட்டமிட்டேன் என்பதால், யாரையும் கடிந்துகொண்டு என்னை நானே சமாதானம் செய்துகொள்ளவும் வழியில்லை.

சூடாக ஒரு ஃகாபி கிடைத்தால் சொர்க்கத்தையே பார்த்துவிடலாம். ஆனால், நரகத்தை கண்முன் காட்டியதுபோல் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

தெர்மல் உடை, அதற்குமேல் ஒரு டீ ஷர்ட், அதற்கும் மேல் ஒரு ஸ்வெட்டர், தடித்த ஜாக்கெட், கழுத்தை சுற்றி மப்ளர், கையில் குளோஸ், காலில் உள்ளன் சாக்ஸ், அதற்கு மேல் ஷூ, காதை மறைத்தபடி பியனி என சிறு ஓட்டை கூட இல்லாமல் ஒட்டுமொத்தமாக மறைத்திருந்தாலும் ஊசியைப் போல் ஊடுருவி உடம்பை குத்திக்கொண்டிருந்தது பனி.

அந்த இரவைக் கழிக்க, ஓர் கதகதப்பான இடத்தை தேடி அலைந்து கொண்டிருந்தேன். ஸ்டேஷனின் நீள அகலங்களை அளந்தும் எதுவும் அகப்படவில்லை. நேரம் செல்லச் செல்ல கூட்டம் குறையத் தொடங்கியது. நள்ளிரவு நெருங்கியதும் அனைத்தும் அடங்கின. ஸ்டேஷனின் மைய மண்டபத்தை கடந்து வாசலுக்கு வந்து வெளியில் எட்டிப்பார்த்தேன். வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழ் சரிந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என்று எனக்குள் கூறிக்கொண்டு ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தேன்.

ஒரு பழைய கத்தீட்ரலைப்போல் காட்சியளித்த அந்த ரயில் நிலையத்தின் கூரைகளை ராட்சத தூண்கள் தாங்கிப்பிடித்திருந்தன. அடுத்த ரயிலைப் பிடிக்க, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு கிடையில் அந்தப் பெண் தனியாக அமர்ந்திருந்தாள்.
தோற்றத்தையும் ஹிஜாப்பையும் வைத்துப் பார்த்தபோது அவள் மத்திய கிழக்கு அல்லது வடக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவள் எனத் தோன்றியது. திடீரென்று வாசலைக் கடந்து ஒருவன் உள்ளே நுழைந்தான். அவன் தள்ளிக்கொண்டு வந்த டிராலியில் ஒரு கைக் குழந்தையும் அதை விட கொஞ்சம் பெரிய குழந்தையும் இடுக்கத்தில் படுத்திருந்தன. எந்த மறைப்பும் இல்லாத அந்த டிராலி பனியில் முழுவதும் நனைந்திருந்தது. கைக் குழந்தை ஆழ்ந்த உரக்கத்தில் இருக்க மற்றொரு குழந்தை கண்களை உருட்டிக்கொண்டிருந்தது.
அவன் நேராக அந்தப் பெண்ணின் அருகே சென்றான். நான் சிகரெட்டை அனைத்துவிட்டு அவன் பின்னே நடந்தேன். டிராலியை அவள் அருகே நிறுத்தியவன் சத்தமாக பேசத் தொடங்கினான். மொழி புரியாவிட்டாலும் அது குடும்பச் சண்டை என்று புரிந்தது. குழந்தைகளை சுட்டிக்காட்டி அவன் பேசினான். அதை கவனிக்காமல் உணர்வற்று இருந்தாள் அவள். இவை அனைத்தையும் அந்தக் குழந்தை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தது. திடீரென்று சைக்கிளை ஓட்டிக்கொண்டு ஒரு சிறுவன் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான். அந்தப் பெண்ணை நோக்கி வேகமாக வந்தவன், அவள் அருகே வட்டமடித்து நிறுத்தினான். அதுவரை அமைதியாக இருந்தவள், எழுந்துபோய் அவன் முதுகில் ஒன்று வைத்தாள். அந்த ஆண் அவளைத் தடுக்கப்போக அவனுக்கும் ஒன்று விழுந்தது. சட்டென்று அவர்களை விட்டு இரண்டு அடி பின்னோக்கிச் சென்ற அவள் சத்தமாக பேசினாள். தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சிணுங்கத் தொடங்கியது. விருட்டென்று டிராலியை தன் பக்கம் இழுத்து சுருண்டு கிடந்த துணியை குழந்தைகள் மீது போர்த்தினாள். அசட்டுச் சிரிப்புடன் அந்த ஆண் டிராலியை தள்ளுவற்கு முன்னே வந்தான். சைக்கிளிலிருந்து இறங்கிய சிறுவன் அதைத் தள்ளிக்கொண்டு நடக்கத் தயாரானான். அவன் காதிலிருந்து விலகியிருந்த பனிக்குல்லாவை சரி செய்து விட்டு வாசலை நோக்கி அவள் நடக்கத் தொடங்கினாள். அவள் பின்னால் அவர்களும் நடக்கத் தொடங்கினர். அந்தக் குடும்பம் வாசலைக் கடந்து செல்வதை ஒரு சிறுகதையைப் படித்து முடித்த திளைப்போடு நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு அரபு வசந்தம் அவர்களை இங்கு அடித்து வந்திருக்கலாம். கொந்தளிக்கும் கடல் பயணத்தில் அவர்கள் மட்டும் உயிரோடு கரை ஒதுங்கியிருக்கலாம். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அவர்கள் வாழ்க்கையே திசைமாறியிருக்கலாம். ஜனநாயகத்தை நிலைநாட்டும் சண்டையில் அகதிகளாக்கப்பட்டிருக்கலாம்.

எது எப்படியோ, குறைந்தபட்சம் அவர்கள் தங்கியிருக்கும் வீடு, இந்தப் பனியை தாங்க போதுமானதாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது.

சார்பியல் கொள்கையையின் படி அந்த இரவின் ஒவ்வொரு நொடியும் யுகங்களாகவே நகர்ந்தன. தத்தித் தவழ்ந்து மணி இரண்டைத் தொட்டது. செய்வதறியாது அலைந்துகொண்டிருந்தவன் எதேச்சையாக நடைமேடை பக்கம் எட்டிப்பார்த்தேன். நான் பயணிக்க வேண்டிய ரயில் நின்றுகொண்டிருந்தது. அடுத்த நொடியே அட்ரினல் சுரந்து உடலெங்கும் வெப்பம் பரவியது. உறைந்துபோயிருந்த என் உறுப்புகள் பனியை உதிர்த்து விழித்துக்கொண்டன. உற்சாகமிகுதியில் ரயிலை நோக்கி ஓடினேன்.

பட்டனை தொட்டதும் கதவு திறந்தது. அது எழுப்பிய சத்ததில் தூங்கிக்கொண்டிருந்த சிலர் தலையைத் தூக்கிப் பார்த்தனர். பின் அதேவேகத்தில் படுத்துக்கொண்டனர். பேக்பேக்கை ஒரு சீட்டின் ஓரத்தில் தூக்கி எறிந்துவிட்டு அதன் மேல் என்னையும் எறிந்துகொண்டேன். குளிருக்கு இதமாக கைகளை அக்கத்தில் கொடுத்துவிட்டு கண்களை மூடினேன். காய்ந்த விறகைப் பற்றிக்கொண்ட நெருப்பைப் போல் தூக்கம் கவ்விக்கொண்டது.

ரயில் எஞ்சினின் அதிர்வும், டிக்கெட் பரிசோதகரின் குரலும் என் தூக்கத்தை கெடுத்தன. ஏறக்குறைய ஓய்வு பெரும் வயதைத் தொட்ட அந்த வெள்ளை மனிதர், வரிசையாக ஒவ்வொருவரிடமும் டிக்கெட்டை கேட்டுக்கொண்டிருந்தார். தூக்கம் கலைந்தாலும், எழுந்திருக்க மனமில்லாமல் அவரையே கவனித்துக்கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் இருந்த நான்கு இளைஞர்களை அவர் நெருங்கியபோது, எழுந்து அமர்ந்துகொண்டேன். மங்களான வெளிச்சத்தில் அவர்களின் முகம் சரியாகத் தெரியவில்லை. அவர்கள் அருகே வந்த பரிசோதகர் “டிக்கெட்” என்று கேட்டார். தலையை தொங்கப்போட்டிருந்த அவர்கள் சலனமின்றி அமர்ந்திருந்தனர். அவர் மறுபடியும் “டிக்கெட்” என்று கேட்டதும் ஒரு இளைஞன் மட்டும் தலையைத்தூக்கி அவர் முகத்தை பார்த்தான். யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் “பாலஸ்தீன்” என்று பதில் அளித்தான்.

அந்த வார்த்தை நிச்சயம் அவரை கோபமடையச் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு சத்தமா அவர் பேசியிருக்க மட்டார். நொடிக்கு நான்கு வார்த்தைகள் என்ற வேகத்தில் அவர் வாயில் ஜெர்மன் விளையாடியது. விட்டிருந்தால் அவர்களைப் பாய்ந்து கடிப்பது போல் இருந்தது அவர் பார்வை.

எந்த சலனமுமின்றி இருக்கையை விட்டு எழுந்த அந்த இளைஞர்கள் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு வாசலை நோக்கி நடந்தனர். வெறிபிடித்த நாயைய்போல் குரைத்துக் கொண்டிருந்த அந்த பரிசோதகரின் வார்த்தைகளை விட, மொழி பெயர்க்கப்படாத அவர்களின் பார்வை அத்தனை அர்த்தம் பொதிந்ததாகத் தோன்றியது. மெதுவாக தலையைத் திருப்பி ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். கொட்டும் பனி அனைத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது. ஈரமற்ற இதயங்கள் உள்ளே உறங்கிக்கொண்டிருந்தன.'

எழுத்தாளர் தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து
நகலெடுத்தது.



No comments:

Post a Comment