Monday, September 2, 2024

வலுவான எல்.ஐ.சி, வலிமையான இந்தியா . . .

 


எல்.ஐ.சி யின் 68 வது ஆண்டு விழா தொடங்கி விட்டது. 

நிறுவனத்திற்கு 68 வயதாகியிருக்கலாம். ஆனால் அதன் சிந்தனையும் செயல்பாடுகளும் இளைஞர்களுக்கானது, அவர்களின் வண்ணமயமான எதிர்காலத்திற்கானது. அதைத்தான் மேலே உள்ள படம் உணர்த்துகிறது.

இன்சூரன்ஸ் வார விழா இந்தியா முழுதும் உள்ள எல்.ஐ.சி ஊழியர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது எங்கள் நிறுவனம் என்ற உடமை உணர்வோடு ஊழியர்கள் திகழ்வதை வேறு எங்கேயாவது இந்த அளவில் பார்த்துள்ளீர்களா?

அதற்குக் காரணம், எல்.ஐ.சி தோன்றுவதற்கு முன்பே உதயமாகி எல்.ஐ.சி யின் தோற்றத்திற்கே காரணமான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இல்லையேல் எல்.ஐ.சி இன்றைக்கு உள்ள வலுவான நிலையில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிப்பது என்ற முடிவை முறியடித்தது, எல்.ஐ.சி யின் 50 % பங்குகளை விற்பது என்ற மல்கோத்ரா குழுவின் பரிந்துரையை முறியடித்தது ஆகியவையே எல்.ஐ.சி யின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எல்.ஐ.சி யின் காவல் அரண்.

5 கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்ட எல்.ஐ,சியின் சொத்து மதிப்பு இன்று 52 லட்சம் கோடியை கடந்துள்ளது. அந்த நிதிதான் மக்கள் நலத் திட்டங்களுக்குச் செல்கிறது. அந்த நிதிதான் பங்குச்சந்தையைக் கூட பாதுகாக்கிறது. எல்.ஐ.சி இல்லையேல் இந்தியப் பொருளாதாரம் இல்லை.

அதனால்தான் எங்கள் சங்கம் சொல்கிறது. 

"எல்.ஐ.சி வலுவாக இருந்தால்தான் இந்தியா வலிமையாக இருக்கும்"

எனவே எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனமாக வலுவாக இருப்பதற்கு எங்களோடு இணைந்து குரல் கொடுங்கள் என்று மக்களை அணுகும் விதத்தில் எங்கள் வேலூர் கோட்டத்தில் நாளை 03.செப்டம்பர் 2024 அன்று தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவுள்ளோம்.

வலிமையான இந்தியாவை உருவாக்கும் வலுவான எல்.ஐ.சி யை சீரழிக்க ஒன்றிய அரசாலோ, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களோ அல்லது முதலாளித்துவ ஊடகங்கள் தொடங்கி எலும்புத் துண்டுகள் வாங்கி அவதூறு பரப்பும் சில்லறை பத்திரிக்கைகள் வரை யாராலும் முடியாது.

ஏனென்றால் எல்.ஐ.சி ஒரு மக்கள் நிறுவனம். 

பிகு: நேற்றே எழுதியிருக்க வேண்டிய பதிவு. கணிணி சிக்கல் செய்ததால் தாமதம்.

No comments:

Post a Comment