நீண்ட
நாட்களுக்குப் பிறகு திரைப்படப் பதிவு.
கடந்த
சனிக்கிழமை அரங்கில் பார்த்த படம். ஒரு நிமிடம்
கூட சலிப்படைய வைக்காமல் நகைச்சுவை, காதல், குடும்ப உறவுகள், மோதல்கள், ஜாதிய உணர்வுகள்
உருவாக்கும் வலி என அனைத்தையும் சரியாக கலந்து கொடுத்துள்ள திரைப்படம்.
கிராமத்து
கிரிக்கெட் போட்டிகளை களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் நாயகர்களான “அட்ட கத்தி”
தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்கிடையிலான ஈகோவும் அது எப்படி காதலுக்கு இடையூறாக
மாறி தகர்க்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யமான
காட்சிகளோடு கொடுத்துள்ளார் புது இயக்குனர் பச்சைமுத்து தமிழரசன்.
பழைய
திரைப்படப்பாடல்களை பயன்படுத்திக் கொள்வது என்று சுப்ரமணியபுரத்தில் ஆரம்பித்த கலாச்சாரம்
இப்படத்திலும்.
“பொட்டு
வச்ச தங்கக்குடம், இந்த ஊருக்கு நீ மகுடம்” என்ற விஜயகாந்த் பாடல் அப்போது ஹிட் ஆனதா
என்று தெரியாது. இப்போது மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
தினேஷின்
மனைவியாக வருபவரின் பாத்திரம் சிறப்பாக உருவாக்கப் பட்டுள்ளது. வேலைக்குச் செல்லாமல்
கிரிக்கெட் விளையாட வந்த கணவனை ட்ராக்டரில் ஏற்றி அழைத்துச் செல்கையில் கிரிக்கெட்
பிட்சை அழிப்பதில் தொடங்கி தன் கணவனைப் போலவே கிரிக்கெட்டில் மூழ்கி குடும்பப் பொறுப்புக்களை
கவனிக்காதவன் மகளின் கணவனாகக் கூடாது என்பதில் காண்பிக்கும் அக்கறையும் அப்பாத்திரத்தை
வலுவாக்கிறது. அம்மா வீட்டுக்கு கோபத்துடன்
பிரிந்து போன மனைவியின் நினைவாக அவரது புடவைகள் மீது படுத்துக் கொள்கிற கணவனை வீடு
திரும்பிய பின் “ஒரே புடவை மேல படுக்க மாட்டியா, தினம் ஒரு புடவை மீது படுத்திக்கிட்டா
யார் துவைச்சு மடிக்கிறது?” என்று கேட்பது சுவாரஸ்யமான காட்சி.
அவர்களின்
மகளாக வருபவரும் கவனிக்க வைக்கிறார். காதலனுடன் சண்டை போடும் காட்சியில் பஸ்ஸில் ஏறச்சொல்லி
சத்தம் போடும் கண்டக்டரை அதட்டுவதெல்லாம் புது விதமான காட்சி.
துணைப்
பாத்திரங்களில் வருபவர்களும் ரசிக்க வைக்கிறார்கள். தினேஷின் மாமாவாக வரும் குடிமகன்
(அவர் யாரென்று தெரியவில்லை. விக்கிரமனின் “உன்னை நினைத்து” படத்தில் ஜப்பானில் டெலிபோன்
பூத் நடத்துவாரே, அவரா?), விளையாடாத கிரிக்கெட்
கேப்டன் காளி வெங்கட், அதிரடி கமெண்டுகளை அள்ளி
வீசும் பால.சரவணன் ஆகியோர் படத்துக்கு பக்க பலம்.
“ஜாலி
ஃப்ரண்ட்ஸ்” என்ற அணிக்கு எல்லாமுமாக இருக்கிற காளி வெங்கட், காலனியைச் சேர்ந்த ஹரிஷ்
கல்யாணை அணியில் இணைக்க வேண்டும் என்று முயன்றதற்காக
அணியிலிருந்தே வெளியேற்றப்படுவதும் அவர் “அடேங்கப்பா அணி” என்று புதிய அணியை உருவாக்கி
போட்டி போடுகிறார்கள்.
முக்கியமான
போட்டியில் தினேஷும் ஹரிஷ் கல்யாணும் அவுட்டாகி விட காளி வெங்கட்டின் பெண் அடித்து
விளையாடுவது எதிர்பார்த்ததுதான். ஆனால் காளி வெங்கட்டும் ஆட்டத்தில் கலக்குவது எதிர்பாராத்
ஆச்சர்யம்.
படத்தின்
கிளைமேக்ஸை ஊகிக்க முடிந்தாலும் சிறப்பான ஒன்று. காலனித் தெருப் பையன் என்ற காரணத்தால்
ஹரிஷ் கல்யாணை ஒதுக்குகிற அணி, பலவீனமான நிலையில் அதே காலனித் தெருவிலிருந்து மூன்று,
நான்கு பையன்களை இணைத்துக் கொள்வதும் அவர்கள் பிரகாசிப்பதால் அந்த அணியினரால் கொண்டாடப்படுவதும்
தொடர வேண்டும் என்பதால் கடைசி பந்தில் அந்த அணியை வெல்ல வைப்பது நெகிழ்ச்சியானது.
நிச்சயம்
பார்க்க வேண்டிய திரைப்படம் “லப்பர் பந்து”
பிகு:
இதை கண்டிப்பாக எழுதியே வேண்டும். இந்த படத்தை
கொண்டாடும் சங்கிகள், தமிழரசன் பச்சைமுத்து போல மென்மையாக சொல்ல வேண்டும் என்று பா.ரஞ்சித்,
மாரி.செல்வராஜ் ஆகியோருக்கு உபதேசிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஒரு
நேர்காணலில் இதே கருத்தை பேட்டி கண்டவர் கேட்க அதற்கு இயக்குனர் சொன்ன பதில் மிகவும்
முக்கியமானது.
“அவர்கள்
பாதிக்கப்பட்டவர்கள், நான் வேடிக்கை பார்த்தவன், நான் இப்படித்தான் எடுப்பேன், அவர்கள்
ஆக்ரோஷமாகத்தான் (AGGRESSIVE) ஆகத்தான் எடுப்பார்கள். அப்படித்தான் எடுக்க முடியும்.
No comments:
Post a Comment