Thursday, September 5, 2024

ஆசிரியர் தினமும் நேரு, காந்தி திலகரும்

 


பதிவுகள் ரொம்பவுமே சீரியஸாக இருந்து கொண்டிருப்பதால் மாறுதலுக்கு ஒரு பழைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு நிறுவனம் ஆசிரியர் தினத்தை கொண்டாடி நல்லாசிரியர் விருது வாங்கிய சில ஆசிரியர்களை கௌரவித்தது. அதிலே ஒரு ஆசிரியர் எனக்கு தெரிந்தவர். அந்த நிறுவனத்தில் உள்ளவர்களும் கூட நன்றாக தெரிந்தவர்கள்தான். அதனால் அந்த விழாவிற்கு சென்றிருந்தேன்.

அந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஆசிரியர்களின் மேன்மை குறித்து உணர்ச்சிகரமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒரு சம்பவத்தை வேறு மேற்கோள் காட்டினார்.

அவர் பேசியதை அப்படியே தருகிறேன்.

“இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆகஸ்ட் 14 ம் தேதி அன்று காந்தியும் நேருவும் பால கங்காதர திலகரிடம் செல்கிறார்கள். இந்த நாட்டை நீங்கள்தான் தலைமை தாங்க வேண்டும். ஜனாதிபதி பதவியா இல்லை பிரதமர் பதவியா எது வேண்டுமோ அந்த பதவியை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துக் கொண்டது போக மீதமுள்ள பதவிகள்தான் மற்றவர்களுக்கு. என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என வலியுறுத்துகிறார்.

ஆனால் திலகரோ மறுக்கிறார். நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் பணியே மேன்மையானது. பொறுப்பான இந்தியப் பிரஜைக்களை உருவாக்கும் பணியை   நான் மிகவும் நேசிக்கிறேன். இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய ஒரு ஆசிரியரால்தான் வழி காட்ட முடியும். அதனால் எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்று அவர்  மறுக்கிறார்.

பிரதமர் பதவியை விட, ஜனாதிபதி பதவியை விட  ஆசிரியராக இருப்பதுதான் முக்கியம் என்று பால கங்காதர திலகர் சொன்னதை நாம் மறக்கக் கூடாது”

அவர் அப்படியே பேசிக் கொண்டே போக நான் அந்த விழாவை விட்டு வெளியேறி விட்டேன். அதற்கு முன்பாக அந்த உயரதிகாரிக்கு ஒரு நிலை கீழே இருந்த அதிகாரிக்கு மட்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

அந்த குறுஞ்செய்தி

“:இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு 25 வருடங்கள் முன்பாகவே பால கங்காதர திலகர் இறந்து விட்டார்”                            

 

No comments:

Post a Comment