Friday, February 12, 2016

தமிழகத்திலும் முயன்றால் என்ன?



கேரளப் பயண அனுபம்தான் இது.

மூணாற்றில் ஒரு இடத்தில் கண்ணில் பட்டது. கேரள கலாச்சார மையம் என்று போர்ட் போட்டு “கதகளி, களறிப் பயிட்டு” காணலாம் என்று நான்கு மொழிகளில் அறிவிப்பு செய்திருந்தார்கள். எங்கள் வாகன ஓட்டுனரிடம் கேட்கையில் நான் உங்களை தேக்கடியில் அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னார்.

தேக்கடியில் இது போல ஒரு நான்கு இடங்களாவது இருக்கும். அதிலே ஒரு இடத்திற்குச் சென்றோம்.

ஒரு மணி நேரம் கதகளி நிகழ்ச்சி. அதற்கு ஒருவருக்கு கட்டணம் இருநூறு ரூபாய். அது போல களறிப் பயிட்டு ஒரு மணி நேர நிகழ்ச்சி. அதற்கு தனியாக இன்னொரு இருநூறு ரூபாய் கட்டணம். இரண்டிற்கும் தனித்தனி அரங்கங்கள்.

கதகளி நிகழ்ச்சிக்கான ஒப்பனை தொடங்கி, அதன் பெருமை பற்றி ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லி நிகழ்ச்சி நடந்தது. உண்மையிலேயே பாராட்டக் கூடிய விதத்தில்தான் நிகழ்ச்சி இருந்தது.

அடுத்து களறிப் பயிட்டு நிகழ்ச்சி உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் அடுத்தடுத்து பல சாகசங்களை செய்தார்கள். 





கொடுத்த பணத்திற்கு முழுமையான நிறைவளித்த நிகழ்ச்சி. ஒவ்வொரு அரங்கத்திலும் இருநூறு இருக்கைகள். அனைத்தும் நிரம்பி இருந்தன.  

இந்த நிகழ்ச்சியின் மூலமாக கதகளி, களறிப்பயிட்டு கலைஞர்களுக்கு தொடர்ச்சியாக நிகழ்ச்சி கிடைக்கிறது. எந்த கலைக்கு வாய்ப்பு கிடைக்குமோ, அந்த கலைதான் தொடர்ந்து ஜீவிக்கும் என்பது யதார்த்தம். கேரள சுற்றுலாத் தளங்களில் கேரளக் கலைகளை மற்ற மாநிலத்தவர் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது என்பதும் சிறப்பு,

தமிழகத்திலும் ஏன் இது போன்ற முயற்சிகளை எடுக்கக் கூடாது?

தெருக்கூத்து அரிதான கலையாக மாறியிருக்கிறது. கரகத்தில் கவர்ச்சியை சேர்க்கும் நிர்ப்பந்தம் இருக்கிறது. வீர விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால் களறிப்பயிட்டுக்கு நிகரானது சிலம்பம். சிலம்பம், சுருள், மான் கொம்பு என்று எத்தனையோ வித்தை தெரிந்தவர்கள் உள்ளார்கள். 

எங்கள் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு மாநாட்டின் போது சிலம்பம், புலியாட்டம், தெருக்கூத்து, கெக்கலிக்கட்டை ஆட்டம் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தோம். எங்கள் தோழர்களும் பொது மக்களும் அவ்வளவு ஆர்வமாக ரசித்தார்கள். தெருக்கூத்து கலைஞர்களில் மிக முக்கியமான வேஷம் கட்டிய இருவர் எண்பது வயதைக் கடந்தவர்கள். அந்த குழுவில் ஐம்பது வயதிற்கு கீழ் யாருமே இல்லை. 





இந்த கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் மேலும் பலர் கற்றுக்கொள்ள வருவார்கள் அல்லவா?

தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களான ஊட்டி, கொடைக்கானல், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அரசு முயற்சிக்கலாமே?

4 comments:

  1. ஒரு அருமையான விஷயத்தை தமிழகத்திலும் அறிமுகபடுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்கள். வாழ்த்துக்கள்.
    இதன் மூலம் இன்னொரு பயன்.
    //தெருக்கூத்து கலைஞர்களில் மிக முக்கியமான வேஷம் கட்டிய இருவர் எண்பது வயதைக் கடந்தவர்கள். அந்த குழுவில் ஐம்பது வயதிற்கு கீழ் யாருமே இல்லை.//
    தமிழகத்தின் சிந்தனை போக்கு வயது அதிகமானவர்களை கேவலமாக பார்க்கும் சிந்தனை போக்கை தவறு என்று உணரணவும் வைக்கும். இவற்க்கு முன்னுதாரணம் காட்ட மேலை நாடுகளை கொண்டுவரவேண்டிய தேவையில்லை. இந்திய கேரளத்தையே காட்டியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. அது பயிட்டு, பைட்டு இல்ல பயிற்று. பயிற்சி, பயிற்று என்பன நல்ல தமிழ்ச்சொற்கள். களரி தமிழகத்துக்கும் உரியது. ஒரு காலத்தில் குமரிமாவட்டத்து நாடார்கள் தான் விற்பன்னராக இருந்தார்கள். இன்னமும் குமரி, நாஞ்சில் நாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டு வருவது தான்.

    ReplyDelete
  3. உண்மையிலே மேலை நாடுகளை எத்தனையோ பெருமைக்குரிய விடையங்கள் எம்ம்மிடம் இருந்தாலும் நாம் அவற்றை பாதுகாக்க பெருமைப்படுத்த தவறி விட்டோம் .இப்படிபட்ட கலைகள் கூட எமது அதரவு இல்லாமையால் அழிந்து வருகிறது .கலைஞர்கள் இக் கலைகளை தமது சந்ததிக்கு கற்பிப்பதில்லை ஆதரவு இல்லாமையால் .இதனால் தான்
    வயோதிபர்கள் தமது காலம் வரை இதை மேற்கொள்கிறார்கள் ,அவர்களின் மறைவுக்கு
    பின்னர் இக்கலைகள் மறைந்துவிடும் .நாதசுரக் கலை கூட மறைந்து வருகிறது என ஒரு செய்தி படித்தேன் .எப்போது தமிழர்கள் தங்கள் கலைகள் ,கலாச்சாரங்கள் பெருமைக்குரியவை என்று நினைக்க தொடங்குகிறார்களோ அப்போதுதான் தமிழனுக்கு விடிவு காலம் .

    ReplyDelete
  4. உண்மை தான் சார்..ஆனா நம்ம கலைகளை நாம் கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை..பறை தான் நம் இசைக்கருவி அதை துக்க இசையாக மாற்றி விட்டோம்..

    ReplyDelete