Monday, February 22, 2016

போலி தேச பக்த களவாணிகள்

கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ்காரர்கள், நாத்திகர்கள், ஜிஹாதிகள் (மனம் சொல்ல நினைத்தது முஸ்லீம்கள்) ஆகியோர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று திருவாய் மலர்ந்துள்ளார், காவி மடத்தின் அராஜக, அநாகரீகப் பேர்வழி ஹெ.ராஜா. தந்தை பெரியாரை இழிவு படுத்திய இந்த மனிதனை இன்னும் தமிழகத்தில் உலாவ அனுமதித்து உள்ளதால் இவர் இதையும் பேசுவார். ஏன் இதற்கு மேலும் போய் தோழர் து.ராஜா, தனது மகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பேசி இருக்கிறார்.

ஜெர்மானிய நாடாளுமன்றத்தை தனது கூலிப்படைகள் மூலம் எரித்து விட்டு அந்த பழியை கம்யூனிஸ்டுகள் மீது சுமத்தி பொய்ப்பிரச்சாரம் செய்த கொடுங்கோலன் ஹிட்லரின் வாரிசுகள் மீண்டும் மீண்டும் அதே கபட நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தியாவிற்கு எதிராக முழக்கம் இட்ட சதிகாரர்கள் பாஜகவின் ரௌடி மாணவர்கள் அமைப்பான ஏ.பி.வி.பி கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அம்பலமான பிறகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய காவிக்கூட்ட அடியாட்கள்  கூட ஆம் ஆத்மி கட்சிக் குல்லா அணிந்தபடிதான் வேடமிட்டு வந்தார்கள். ஐம்பத்தி எட்டு வருடங்கள் முன்பாக இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்ட கோட்ஸேவின் கேவலமான உத்தியை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

*சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள்,

*பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருப்போம் என்று எழுதிக் கொடுத்தவர்கள்,

*மகாத்மா காந்தியை கொலை செய்தவர்கள்,

*மத வெறியை தொடர்ந்து தூண்டி விட்டு மக்கள் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள்,

*பாபர் மசூதியை இடித்த இந்திய தாலிபன்கள்

*கடவுளின் பெயரால் ரத்த ஆற்றை ஓட விட்டவர்கள்,

*தொழுநோயாளிகளுக்கு சேவை செய்தவரை உயிரோடு எரித்துக் கொன்றவர்கள்

*குஜராத்தில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று இந்தியாவின் மானத்தை கப்பலேற்றியவர்கள்.

*அதே கொடூரத்தை இன்றளவும் இந்தியா முழுதும் செய்து கொண்டிருப்பவர்கள்,
*இந்திய மக்களின் சொத்துக்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுக் கொண்டிருப்பவர்கள்,

*பன்னாட்டு முதலாளிகள் கொழிக்க இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களை சிதைப்பவர்கள்

எல்லாவற்றையும் விட

இந்தியா பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், மத நம்பிக்கை உள்ள, மத நம்பிக்கை இல்லாத மக்களின் தேசம் என்பதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாதவர்கள்.

இந்தியாவின் சிறப்பாக உள்ள பன்முகத் தன்மையை சிதைக்கத் துடிப்பவர்கள்.

இவர்களா தேச பக்தர்கள்?

இந்திய ஒற்றுமையை உடைக்க நினைக்கும் இந்த களவாணிகள்தான் மிகப் பெரிய தேசத் துரோகிகள்.

எந்த அப்சல் குரு கொல்லப்பட்டதை கண்டித்தார்கள் என்று சொல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை தேசத்துரோகிகள் என்று இவர்கள் குற்றம் சுமத்துகிறார்களோ, அதே அப்சல் குரு மரண தண்டனை தவறு என்று வெளிப்படையாக விமர்சித்த மஹபூபா சையதுடன் காஷ்மீரில் ஆட்சி அமைக்கச் சொல்லி தொடர்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் பாஜக தலைவர்களுக்கு என்ன பெயர்?

பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிட்டது தவறு என்று சொல்லுகிறவர்கள், தனது நண்பன் அதானி உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வாங்கச் சொல்லி பாகிஸ்தான் அரசோடு தரகு வேலை பார்த்த மோடியை என்னவென்று சொல்வார்கள்?

இவ்வளவு திமிரோடு இவர்கள் பேச என்ன காரணம்?

பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டார்கள். இருக்கிற ஐந்தாண்டு காலத்தில் அனைத்து அமைப்புக்களிலும் தங்கள் கூட்டத்தை ஊடுறுவச் செய்து அனைத்தையும் காவி மயமாக்க முயற்சிக்கிறார்கள். அப்படித்தான் பல்கலைக்கழக வளாகங்களில் தங்களின் ரௌடி அணியாக உள்ள ஏ.பி.வி.பி யை எப்படியாவது நிலை நாட்ட எல்லாவற்றையும் செய்கிறார்கள். அந்த சில்லறைத்தனமான வேலை எடுபடாத காரணத்தால் காண்பவர்கள் அனைவரையும் தேசத்துரோகிகள் என்று வசை பாடுகிறார்கள்.

தேசத்துரோகிகள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமானால்  வெளியே போக வேண்டியது மோடி, மோகன் பகவத் உள்ளிட்ட காவிப்படையினர் அனைவரும்தான்.

ஹெச்.ராஜாவும் கூட

No comments:

Post a Comment