Thursday, February 4, 2016

காலையில் கிடைத்த நற்செய்தி



இன்று காலை செய்தித்தாளை புரட்டிய போது கண்ணில் பட்ட செய்தி மனதில் மகிழ்ச்சியை உருவாக்கியது.

எங்கள் சத்துவாச்சாரி பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு உருவான தீர்வு அது.

சத்துவாச்சாரி என்பது வேலூரின் மிக முக்கியமான பகுதி. சத்துவாச்சாரி ஒரு காலத்தில் வேலூரை அடுத்த ஒரு கிராமம். பல்லாண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஃபேஸ் 1, ஃபேஸ் 2,  என்று வீட்டு மனைகளை விற்க ஆரம்பித்த பின்பு வளரத் தொடங்கியது.

மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட காவல் தலைமை அலுவலகம்,  நீதிமன்றம் என்று பல முக்கிய அலுவலகங்களும் சத்துவாச்சாரிக்கு வந்த பின்பு அந்த பகுதிதான் இன்று வேலூரின் முக்கியமான பகுதியாக உள்ளது. பழைய சத்துவாச்சாரி ஊருக்கும்  புதிய பகுதிக்கும் இடையே உள்ளது பெங்களூர் சென்னை நெடுஞ்சாலை. சத்துவாச்சாரி ஊருக்குள்ளும் பல தனியார் மனைப்பிரிவுகள் உருவாகி அந்த பகுதியும் வெகுவாக வளர்ந்து விட்டது. பேஸ் 3, பேஸ் 4 ஆகியவையும் வந்து விட்டது.

ஆர்.டி.ஓ அலுவலக சாலை என்பதுதான் மிகவும் முக்கியமான சாலை. பெரும்பாலான கடைகள் அங்கேதான் அமைந்திருக்கிறது. சத்துவாச்சாரியின் எந்த பகுதியிலிருந்தும் அங்கேதான் பெரும்பாலான மக்கள் வருவார்கள். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது, தங்க நாற்கர சாலை வரும் வரை.

நால்வழிப் பாதை வந்த பின்பு ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதியை கடப்பது என்பது மிகச் சிரமமான ஒன்றாக மாறி விட்டது. ஒரு மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. அதன் கீழே உள்ள வழியாக வாகனங்களும் பாதசாரிகளும் சாலையைக் கடக்கலாம். ஆனால் ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் அமைந்திருக்க வேண்டிய அந்த மேம்பாலம் முன்னூறு மீட்டர்கள் தாண்டி வேறு ஒரு இடத்தில் அமைக்கப்பட்டது. வேலூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை உறுப்பினராக இருந்த காங்கிரஸ்காரர் (தற்போது த.மா.கா) வீட்டிற்குச் செல்ல வசதியாக அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இங்கே ஆர்.டி.ஓ அலுவலக சாலைக்கு செல்கிற அங்கிருந்து வருகிற பாதசாரிகள் நான்கு வழிச் சாலையைத்தான்   கடக்க வேண்டும். வேகமாக வருகிற வாகனங்களால் இடிபட்டு இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தங்க நாற்கர சாலை கொலைகார சாலையாக மாறி விட்டது.

இந்தப் பகுதியில் ஒரு மேம்பாலமோ அல்லது சுரங்கப் பகுதியோ அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி எத்தனையோ அமைப்புக்கள் பல விதமான போராட்டங்கள் நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. இரண்டு முறை சாலை மறியல் போராட்டமும் நடத்தி பல தோழர்கள் கைதாகியுள்ளனர்.

ஒரு வழியாக அங்கே ஒரு சுரங்கப்பாதை அமைப்பது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. சில அடிப்படை வேலைகளை முடித்த பின்பு சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கி ஆறு மாதத்தில் முடியும் என்று அதிகாரிகள் சொல்லியுள்ளனர்.

வேலை வேகமாக நடக்கட்டும். பணிகள் முடியட்டும், விபத்துக்கள் நிற்கட்டும். மனித உயிர்கள் பாதுகாக்கப்படட்டும்.

பின் குறிப்பு: நேற்று எழுதிய பதிவு இது. ஆனால் பகிர முடியமல் போய் விட்டது.

4 comments:

  1. நற்செய்தி பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வீதி விபத்தில் இருந்து மனித உயிர்களை காக்க சுரங்கப்பாதை அமைவது நல்ல செய்தி.

    ReplyDelete
  3. சுரங்கப் பணி தொடங்கி, ஆறுமாதத்தில் நிறைவுறும்? நம்ப முடியவில்லை. ஆறு வருடத்துக்குள்ளாவது முடிந்து பாதசாரிகளுக்கு நல்லது நடந்தாச் சரி.

    நீங்களும் இதன் முன்னேற்றத்தை ஆகஸ்ட் 15க்குள் தெரிவித்துவிடுங்கள்.

    ReplyDelete