Thursday, February 11, 2016

பிறக்கத்தான் வேண்டுமா? விடை மறுக்கப்படும் கேள்வி



பிறக்க வேண்டுமா? பிறக்கத்தான் வேண்டுமா? –
விடை மறுக்கப்படும் கேள்வி

எங்களது தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

வலியும் கோபமும் மிக்க கவிதையை எழுதிய எல்.எஸ்.ரொகாடோ,  அதனை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பேரா. ரொனால்ட் டி சௌசா,  தமிழாக்கம் செய்த தோழர் இ.எம்.ஜோசப், முழுமையான கவிதையை கண்டுபிடித்து தமிழாக்கம் செய்ய வைத்து பலரோடும் பகிர்ந்து கொண்ட தோழர் கே.சுவாமிநாதன் ஆகியோருக்கு நன்றி.

இந்த கவிதை எழுப்புகிற கேள்விக்கு இன்னும் விடை கொடுக்க இந்திய சமூகம் தயாராக இல்லை என்பதுதான் சோகம்.

ரோஹித் வெமுலா என்ற வாலிபனின் கனவுகள் அவனது சாம்பலோடு கருகிப் போனது பற்றிய குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் நடமாடிக் கொண்டிருக்கிற ஜென்மங்கள் வாழும் தேசம் இது என்பது எவ்வளவு பெரிய துயரம்!

 ----------------------------------------------------------------


அம்மா! நான் பிறக்க வேண்டுமா? பிறக்கத்தான் வேண்டுமா?- எல்.எஸ்.ரொகாடோ

அம்மா !நான் பிறக்கும் போது
உனது பிரசவ வலி நீண்டதாய்
இருந்ததாகக் கூறுவாய்...
நீடித்த வலியின் காரணம் அறிவாயா நீ!
கருவறையில் நான் இருக்கையிலேயே
நிம்மதியின்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன்...
பிறக்க வேண்டுமா! இந்த மண்ணில்
கண்டிப்பாக பிறக்கத்தான் வேண்டுமா என்று...

எல்லோருக்கும் தொடுவானம் நோக்கி ஓடிய பாதைகள்
எனக்கு மட்டும் அடைக்கப்பட்டன...
எல்லோரும் சற்றுப் படுத்திருங்கள்!
உங்கள் கண்கள் வானத்தை நோக்கி இருக்கட்டும்!
இமைகளைச் சற்று மூடுங்கள்!

இப்போது மெல்லச் சொல்லுங்கள்!
ஆம்! வானம் நமக்கொரு கூரை ...
தலைமுறை தரித்திரமே போர்வை
நிரந்தர ஏக்கமே தலையணை
வெறுங்கைகளை மார்பில் கட்டிக்கொண்டே
அதில்தான் இரவெல்லாம் உங்களின் துயில்
பகலெல்லாம் தவியான தவிப்பு தீரா வலியில் ...

ஒவ்வொரு மானுடனும்
ஆண் பெண் புணர்வில்
உருப்பெறுபவனே எனச் சொல்ல
வழியில்லை இங்கு உனக்கு...
வழிவழியாய் நடந்து சோர்ந்த பாதையை
மாற்றும் துணிவில்லை யாருக்கும் இங்கு..
எனவே, நீ உன்னையே சுற்றிச் சுற்றி
ஆம், உலகம் உருண்டை... உருண்டை..
என வியந்து வியந்து ஓடினாய்.

அம்மா, இது உனது மண்
நீர் தழும்பி வழியும் நிலம்
கரையினை உடைக்கும் நதிகள்
ததும்பிய நீர் வெளியேறும் ஏரிகள்
நீயும் மனித இனம்தான்
எனினும் நீ குருதி கொட்ட வேண்டும்!
ஒரு மடக்கு தண்ணீருக்காய்
நீ மன்றாடித் தீர வேண்டும்!

இந்த நாகரிகத்தின் முகத்தில் காரி உமிழ்கிறேன்
அம்மா , இது உன் மண்ணா ?
நீ இதில் பிறந்ததால் மட்டும்
அது உன் மண்ணாகி விடுமா?
உனக்கு நான் பிறந்ததால்
இது என் மண்ணாகி விடுமா?
இதை எனது மகத்தான மண்
என்று நான் அழைக்க வேண்டுமா?
அதை நேசிக்க வேண்டுமா?
மகத்துவத்தை கொண்டாட வேண்டுமா?

மன்னித்துவிடு அம்மா!
நான் மனம் திறந்து கேட்கிறேன்
நான் பிறக்கத்தான் வேண்டுமா?
இந்த மண்ணில் பிறந்தாகத்தான் வேண்டுமா?

( இன்று காலை ஆங்கில இந்து நாளிதழின் நடுப்பக்க கட்டுரை
"ரோகித் மற்றும் உண்மையான தேச விரோதிகள்" என்ற தலைப்பிலானது.

மாநிலங்களவை டாக்டர் ராதாக்ருஷ்ணன் விருதை 2015-17 க்கு
பெற்றுள்ள பேரா. ரொனால்ட் டி சௌசா எழுதியது. அதில் எல்.எஸ்.ரொகாடொவின்  கவிதை பற்றிய குறிப்பு முதல் வரியிலேயே இருந்தது. இக்கவிதையை இதற்கு  முன்பு நான் படித்ததில்லை. இணையத்தில் தேடினேன். கிடைத்தது.

என்ன வலி!
என்ன கோபம்!

தோழர் இ .எம்.ஜோசப் அவர்களிடம் மொழி பெயர்க்க வேண்டினேன்.
அதே வலி... அதே கோபம்... அவரது தமிழாக்கத்திலும்...)

-----------------------------------------------------------------
 பின் குறிப்பு : இணையத்தில் எவ்வளவோ மெனக்கெட்டும் தேடியும் மராத்தியக் கவி எல்.எஸ்.ரொகாடொ வின் புகைப்படத்தை கண்டு பிடிக்க 
முடியவில்லை.

1 comment:

  1. தோழர் ராமன்..இந்தப் பிரச்சனையில் அந்த இளைஞர் தற்கொலையைத் துண்டியர்கள் கைது செய்யப்பட வேண்டும் சட்டப்படி நடவடிக்கை என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை... அதே சமயம் அந்த வளாகத்தில் அப்சல் குருவை புகழ்ந்து இந்திய எதிர்ப்பு கோஷம் போடப்பட்டது உண்மையா இல்லையா என்பதைப் பற்றி பல CONFLICTING REPORT பார்க்க நேருகிறது...அது உண்மையானால் அதுவும் தவறுதானே....

    ReplyDelete