Monday, February 15, 2016

போலீசிற்கு புது வேலை – பிணம் புதைப்பது





திருநாள்கொண்டச்சேரி என்ற சிறிய கிராமம். அங்கே இறந்து போன ஒரு தலித் ஒருவரின் சடலத்தை கிராமத்தின் பொதுப்பாதை வழியே எடுத்துச் செல்ல அந்த ஊர் ஆதிக்க சக்திகள் அனுமதிக்கவில்லை. பொதுப்பாதையில்தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவு போடுகிறது. ஆனால் அந்த உத்தரவை செயல்படுத்த அரசு தயாராக இல்லை. நான்கு நாட்கள் ஆன பின்பும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் போலீசிற்கு புதிதாக ஒரு வேலை கொடுத்தது. பிணத்தை புதைக்கிற வேலையை கொடுத்தது. அவர்கள் அந்த சடலத்தை உறவினர்களிடமிருந்து பறித்துக் கொண்டு, வேகம் வேகமாக ஓடி சுடுகாட்டிற்குப் போய் புதைத்து விட்டார்கள். அவர்கள்தான் போலீசாயிற்றே, அவர்களாவது பொதுப்பாதையில் சென்றார்களா என்றால் ஆதிக்க சக்திகளை மீறும் தைரியம் அவர்களுக்கு இல்லை. வயல் வரப்புக்களில்தான் ஓடிப் போனார்கள்.

அந்த கிராமத்தின் நிலைமை என்னவென்று அறிந்து கொள்ள நானும் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜனும் அங்கே சென்றோம். அப்போது அங்கே இருந்த பெண்கள் தங்களின் பெரிய பிரச்சினையாக ஒன்றைச் சொன்னார்கள்.

“எங்கள் சேரிப் பகுதியில் யார் வீட்டிலும் கழிவறை கிடையாது. எங்கள் பகுதிக்கு பொதுக் கழிப்பறையும் கிடையாது. இத்தனை காலமாக வயல் வரப்புக்களையும் புதர்களையும்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இந்த பிரச்சினைக்குப் பிறகு ஊர்க்காரர்கள் நாங்கள் பயன்படுத்திய இடங்களில் வேலி போட்டு விட்டார்கள். என்ன செய்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை.”

இதை சொல்லி முடிப்பதற்குள் அவர்களுக்கு கண்ணீர் வந்து விட்டது. அதை என்னால் மறக்கவே முடியாது.

ஒரு கழிவறை வசதி கூட இல்லாத கிராமமாக இருக்கிறது என்று சொன்னால் அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார்கள் அமைச்சர்கள். அங்கே சென்று வந்த சட்டமன்ற உறுப்பினர் நான்தான் ஆதாரம் என்று சொன்னால் “உறுப்பினர் தன்னையே ஆதாரம் என்று சொல்வதை ஏற்க முடியாது” என்று சொல்லி நான் பேசியதை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறார்.

இப்படி கழிவறைப் பிரச்சினை உள்ளது என்று சொல்வதையே ஏற்க தயாரில்லாத அரசு எப்படி அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்?

அதனால் நம்முடைய மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் அவர்களுடைய எம்.பி நிதியிலிருந்து ரூபாய் இருபத்தி ஐந்து லட்சம் தருவது என்று முடிவு செய்து அறிவித்துள்ளோம். அவரும் அதற்கான கடிதத்தை அனுப்பி விட்டார்.  

நேற்று வேலூரில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும்
பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான
தோழர் அ.சவுந்திரராஜன் பேசியதிலிருந்து

கலெக்டருக்கு இப்போ வேற வேலை – நாளைய பதிவில்

No comments:

Post a Comment