Thursday, February 25, 2016

மெய் சிலிர்க்க வைத்த புகைப்படம்





நான்கைந்து நாட்களாக முக நூல் பக்கம் அவ்வளவாக வரவில்லை. வலைப்பக்க பதிவிற்கு இணைப்பு கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டிருந்ததால் இந்த புகைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது.

மனம் முப்பதாண்டுகளுக்கு முன்பு பறந்து சென்றது.

16.04.1986, வாழ்க்கையின் மிக முக்கியமான நாள். அன்றுதான் எல்.ஐ.சி நிறுவனத்தில் பயிற்சி உதவியாளராக அடியெடுத்து வைக்கிறேன். மொத்தம் 125 பேர் அன்று பணியில் இணைகிறோம். காலையில் நிர்வாகத்தின் அறிமுகக் கூட்டம். மாலை பயிற்சி வகுப்பு முடிந்ததும் சங்கத்தைப் பற்றிய ஒரு அறிமுகக் கூட்டம் உள்ளதாக மதியத்தில் ஒருவர் வந்து சொன்னார்.

மாலை ஐந்து மணிக்கு பயிற்சி வகுப்பு முடிகிறது. பத்து பதினைந்து பேர் வருகிறார்கள். அவர்களில் ஓரிருவர் நேர்முகத் தேர்வு நடக்கும் போது வாழ்த்து சொன்னவர்கள் என்பது நினைவில் இருந்தது. ஆனால் அவர்களின் பெயரெல்லாம் அப்போது தெரியாது. வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்த ஒருவர் பேச வருகிறார். அதற்குள்ளாக நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி ஒருவரிடம் கண்ணைக் காட்ட, அந்த நபர் அவசரம் அவசரமாக மைக்கை அங்கேயிருந்து அகற்றி எடுத்துப் போகிறார்.

வெள்ளை ஆடை அணிந்த அந்த மனிதர் பேசத் தொடங்குகிறார்.

“அந்த ஒலிபெருக்கியை அப்படியே வைத்து விட்டுச் செல்லுங்கள் என்று சொல்லியிருக்க முடியும். ஆனால் உங்கள் அத்தனை பேரையும் சென்றடையக் கூடிய சக்தி எங்கள் குரலுக்கு உண்டு” என்று பேசத் தொடங்குகிறார்.

அடுத்த நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் அவர் ஆற்றிய உரை இடியாய், பேரருவியாய், இனிய தென்றலாய், எல்லாமாமுமாக அமைந்திருந்தது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சுருக்கமான வரலாறாக, இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் நிலை குறித்த வகுப்பாக அமைந்திருந்த அந்த உரை புதிய வாசலுக்கு என்னை அழைத்துச் சென்றது. தொழிற்சங்க இயக்கத்திற்குள் என்னையும் இணைத்துக் கொள்ள அடித்தளமாய் அமைந்திருந்தது.

அந்த வெள்ளை ஆடை மனிதர் அன்றைய தென் மண்டல இணைச்செயலாளர், பின்பு தென் மண்டலப் பொதுச்செயலாளராக, தலைவராக, அகில இந்திய துணைத்தலைவராக செயல்பட்ட தோழர் எஸ்.ராஜப்பா.

எல்.ஐ.சி யிலிருந்து ஓய்வு பெற்று இருபதாண்டுகள் ஓடி விட்டாலும் அவரது தொழிற்சங்கப் பணி இன்னும் தொடர்கிறது. சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனை ஊழியர்களை அணி திரட்டி சங்கம் அமைத்துள்ளார். காஸ்மோபாலிடன் கிளப் போன்ற கிளப்கள், காபி டே போன்ற நிறுவன ஊழியர்களை தொழிற்சங்கத்தின் அணி வகுக்கும் பணியைச் செய்தவர். ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களை திரட்டும் பணியில் இப்போதும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர். எப்போதுமே உற்சாகமாகவும் புத்துணர்வோடும் இருப்பவர். அவரது உற்சாகம் நமது சோர்வை போக்கி விடும்.

என்றுமே அவர் ஒரு வழிகாட்டி.

அர்ப்பணிப்பு மிக்க உழைப்பிற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு உதாரணம் தோழர் எஸ்.ராஜப்பா.  

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் எஸ்.ராஜப்பா அவர்களை, அவரது எண்பதாவது பிறந்தநாளன்று சி.ஐ.டி.யு தலைவர்கள் வாழ்த்துகிற புகைப்படம்தான் மேலே உள்ளது.

கீழே உள்ள புகைப்படங்கள் அவர் வேலூரில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றபோது எடுக்கப்பட்டவை.

12.06.1988 ல் வேலூர் கோட்டச் சங்கத்தின் துவக்க விழாவை ஒட்டி நடைபெற்ற பொதுக்கூட்டம்



ஆகஸ்ட் 1996 ல் வேலூரில் நடைபெற்ற இருபத்தி நான்காவது தென் மண்டல மாநாட்டில்.



ஆகஸ்ட் 1998 ல் புதுவையில் நடைபெற்ற கோட்டச் சங்க மாநாட்டில்



2, செப்டம்பர், 2006 ல் எங்கள் சங்கக் கட்டிடம் சரோஜ் இல்லத்தில் ஓய்வறைகளை திறந்து வைத்த போது. 




கடந்த மாதம் தஞ்சையில் நடைபெற்ற தென் மண்டல மாநாட்டிலும் நான்கு நாட்களும் கலந்து கொண்டார்.

 

1 comment:

  1. எத்தனையோ மனிதர்கள் பிறருக்கு உழைப்பதே முன்னுரிமை என்று நினைத்துச் செயல்படுகிறார்கள். அத்தகையவர்களைப் பற்றி நீங்கள் எழுதியுள்ளதே நிறைவாக இருக்கிறது. அப்படி எழுதும்போது அவர்கள் செய்த முக்கியப் பணிகளைப்பற்றியும் எழுதலாம்.

    ReplyDelete