மது விலக்கு தொடர்பாக தமிழக அரசின் நிலை என்ன என்று சட்டசபையில் நாங்கள்
கேள்வி எழுப்பிய போது அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் “ஏன் தமிழகத்தில் மது விலக்கை
அமலாக்க முடியாது” என்று மணிக்கணக்கில் விளக்கம் கொடுத்து விட்டு, “இவற்றை நான் ஒன்றும்
புதிதாக சொல்லவில்லை. ஏற்கனவே முதல்வராக இருந்த கருணாநிதி சொன்னதுதான்” என்று
சொல்லி முடித்து விட்டார். ஆக இந்த இரண்டு கட்சிகளும் ஒரே நிலையைத்தான்
எடுக்கின்றன.
இதிலே நத்தம் விஸ்வநாதனுக்கு மது விலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் என்றுதான்
பெயர். அப்படியென்றால் தமிழகத்தில் மது விலக்கு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
எவ்வளவு பெரிய பிராடு வேலை இது?
இப்போதெல்லாம் மாவட்ட நிர்வாகத்தை நடத்துவது போன்ற வேலைகள் எல்லாம் மாவட்ட
ஆட்சியர்கள் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதில்லை. டாஸ்மாக் கடைகள்
பிரச்சினைகள் இல்லாமல் செயல்படுகிறதா என்று கண்காணித்து கல்லா கட்டுகிற வேலைதான்
இப்போது கலெக்டர்களுக்கு.
முதல்வரின் பிறந்தநாளை ஒட்டி அறுபத்தி எட்டு லட்சம் மரக்கன்றுகளை நடும்
திட்டத்தை அறிவித்துள்ளார்கள். நல்ல திட்டம்தான். ஆனால் அதை ஏன் முதலமைச்சர்
பிறந்தநாள் வரை செய்யாமல் வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் கேள்வியே.
கடந்த காலங்களில் கூட இப்படி மரக்கன்றுகளை நட்டதாக கணக்கு
காண்பித்துள்ளார்கள். அப்படி நடப்பட்டதாக சொல்லப்படும் கன்றுகள் எல்லாம்
வளர்ந்திருந்தால் இன்று தமிழகம் முழுதும் மரங்களாக இருக்கும். “எங்களை கொஞ்சம்
குளிர் காய விடுங்கள்” என்று தரையே புலம்புகிற அளவிற்கு இருந்திருக்கும்.
செலவுக் கணக்கு காண்பிக்க அரசாங்கத்திற்கு மிகவும் வசதியான திட்டம் இது.
நெடுஞ்சாலையில் நடப்பட்டதாக சொல்லப்படும் மரக்கன்றுகள் எங்கே என நான்
சட்டமன்றத்தில் கேட்ட போது “அவை காய்ந்து போயிருக்கலாம் அல்லது பட்டுப்
போயிருக்கலாம் அல்லது போதுமான வளர்ச்சி அடையாமல் இருந்திருக்கலாம் அல்லது
கால்நடைகள் மேய்ந்திருக்கலாம்” என்றுதான் பதில் வந்தது.
ஞாயிறன்று வேலூரில் நடைபெற்ற
தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும்
பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான
தோழர் அ.சவுந்திரராஜன் பேசியதிலிருந்து
மழையே அம்மாவின் ஆணைப்படி வந்ததென்ன்று சொன்ன ஒரு ஆட்சியர் இங்குதான் பார்த்தோம்.... பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்...நல்ல பழமொழிதான் இல்லையா?
ReplyDelete