Friday, August 6, 2021

அன்று ஏன் வேலை நிறுத்தம்?

  

பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை நேற்று முன் தினம் 04.08.2021 அன்று நாடெங்கிலும் ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.

 அதற்கான காரணங்கள் என்ன? நியாயங்கள் என்ன? வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அவர்களை தள்ளிய ஒன்றிய அரசு கூறும் சால்ஜாப்புக்கள் செல்லுபடியாகக் கூடியதா?

 எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் வெளியிட்ட சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இல்லாமல் ஒன்றிய அரசு தனது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை யாரை வைத்து நடத்தப் போகிறது?

 மக்களைப் பற்றி என்றாவது இவர்கள் கவலைப்படுவார்களா?

 நன்றாக இருப்பதை நாசமாக்கும் ஆட்சியாளர்கள் உருப்படுவார்களா?

 முழுமையாக படித்த பின்பு இப்படிப்பட்ட கேள்விகள் உங்கள் மனதில் தோன்றுமானால் நீங்கள் ஒரு தேச பக்தர், மக்கள் மீது அக்கறை உள்ளவர்.

 ஒன்றிய அரசு செய்வது சரி என்று தோன்றினால் ????

 

அதை நான் புதிதாக வேறு சொல்ல வேண்டுமா என்ன?

 

சரி இப்பொது பதிவை படியுங்கள்.


 

 

 

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்

வேலூர் கோட்டம், பதிவு எண் 640/என்.ஏ.டி

சுற்றறிக்கை எண் 16/21                                                                                           04.08.2021

அனைத்து உறுப்பினர்களுக்கும்

அன்பார்ந்த தோழரே,

 

விவாதமின்றி நிறைவேறிய பொது இன்சூரன்ஸ் மசோதா,

பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்க தயாராகி விட்ட ஒன்றிய அரசு.

பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 04.08.2021 ஒரு நாள் வேலை நிறுத்தம்.

 

ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள பொதுக் காப்பீட்டு வணிக தேசியமய திருத்தச் சட்டத்தின் திருத்தங்கள்  குறித்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை  கீழே அளித்துள்ளோம். அனைத்து கிளைகளிலும் இன்று எழுச்சியுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்திய தோழர்களுக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். 

வாழ்த்துக்களுடன்,

தோழமையுள்ள

ஒப்பம் (எஸ்.குணாளன்)

பொதுச்செயலாளர்

-------------------------------------------------------------------------------------------------------

பொதுக் காப்பீட்டு வணிக தேசியமய திருத்த மசோதா 2021 ஐ மக்களவை 02.08.2021 அன்று நிறைவேற்றியுள்ளது. ஒட்டு கேட்பு மற்றும் இதர பிரச்சினைகளுக்காக எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை மக்களவையில் வெளிப்படுத்திக் கொண்டுள்ள சூழலில் எவ்வித விவாதமும் இல்லாமல் இந்த மசோதா நிறைவேறியுள்ளது. பொது வெளியில் மிகக் கடுமையான எதிர்ப்பிருந்த போதும் 30.07.2021 அன்று நிதியமைச்சர் மசோதாவை அறிமுகம் செய்தார். 2021-22 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்கிற போதே அரசின் நோக்கத்தை நிதியமைச்சர் தெளிவாக சொல்லி விட்டார். அரசின் பிரம்மாண்டமான தனியார் மயத் திட்டமாக ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் இரண்டு அரசு வங்கிகளையும் 2021-22 நிதியாண்டிலேயே தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்தார். பொதுக் காப்பீட்டு வணிக தேசியமய திருத்த மசோதா 2021 நிறைவேறியதன் மூலம் ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் அரசின் செயல்திட்டம் நிறைவேறும் என்பது மட்டுமல்ல, அனைத்து பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவதற்கான வழியும் ஒரேயடியாக உருவாக்கப்பட்டு விட்டது.

 

“எந்த ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் தனியார் மயமாக்க இந்த மசோதா கொண்டு வரப்படவில்லை” என்று விளக்க நிதியமைச்சர் மிகவும் சிரமம் எடுத்துக் கொண்டார்.   “பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் தனியாரின் பங்களிப்பை அதிகரிப்பது, இன்சூரன்ஸ் ஊடுறுவலை அதிகரிப்பதை, பாலிசிதாரர்களின் நலனை மேலும் பாதுகாத்து பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்கு உதவுவது”  ஆகியவையே பொதுக் காப்பீட்டு வணிக தேசியமய திருத்த மசோதா 2021 வின் நோக்கங்களாக சொல்லப்பட்டுள்ளது. பொதுக் காப்பீட்டு வணிக தேசியமய திருத்த மசோதா 1972 ல் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை சற்று கவனத்துடன் ஆய்வு செய்தால் அரசின் இறுதி இலக்கு தனியார்மயமே என்பதை உணர முடியும்.

 

GIBNA Act 1972 ல் மூன்று திருத்தங்களை மசோதா முன்மொழிகிறது. அவற்றிலே இரண்டு திருத்தங்கள் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆபத்தை தருவது. GIBNA Act 1972 ந் பிரிவு 10 B அரசு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில்  2குறைந்தபட்சம் 51 % பங்குகளை வைத்திருக்கும் என்ற அம்சத்தை உறுதிப்படுத்துகிறது. தற்போது இப்பிரிவு முற்றிலுமாக அகற்றப்பட்டு பெரும்பான்மை பங்குகளை அரசு விற்க ஏற்பாடு செய்கிறது. இது அப்பட்டமான தனியார்மயம்.

 

பிரிவு 24 B என்றொரு புதிய பிரிவை இணைத்துள்ளது இரண்டாவது திருத்தம். அதன்படி எந்த கம்பெனியில் அரசின் பங்குகள் 51 % க்கு குறைவாக உள்ளதோ, அந்த கம்பெனிகளுக்கு GIBNA Act  பொருந்தாது.  அந்த கம்பெனிகள் மீது அரசின் கட்டுப்பாடு இருக்காது, கை கழுவி விடப்படும் என்பதே இதன் பொருள்.

 

இந்த நடவடிக்கைகள் மூலம் அரசு நான்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் மறு இன்சூரன்ஸ் நிறுவனமான ஜி.ஐ.சி ரீ யையும் தனியாருக்கு விற்று விட முடியும். தனியார் மயமல்ல, தனியாரின் பங்களிப்பை அதிகரிப்பதுதான் என்ற நிதியமைச்சரின் வாதம் சற்று நகைப்புக்குரியதாகவே ஒலிக்கிறது.  ஒரு நிறுவனத்தின் பங்குகளில் அரசின் கையிருப்பு 51 % க்கு குறைவாக நீர்த்துப் போக வைக்கப்பட்டால் அது தனியார்மயம்தான் என்று கண்டறிய பெரிய விண்வெளி அறிவியல் எல்லாம் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அரசின் பங்குகளை 51 % க்கும் குறைப்பதன் மூலம் இன்சூரன்ஸ் ஊடுறுவலை அதிகரிக்க முடியும் என்ற வாதம் கொஞ்சமும் சாரம் இல்லாதது.

 

பொது இன்சூரன்ஸ் துறையின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. வணிகமும் தனி நபர் சொத்துக்களும் அதிகரிப்பதை ஆதாரமாகக் கொண்டது. இன்சூரன்ஸ் ஊடுறுவலில் தொடர்ச்சியான வளர்ச்சி உள்ளது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பொருளாதாரம் சிதைவுண்ட போதிலும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் களத்தில் காலூன்றி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தன் முடிவை நியாயப்படுத்த பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைக் காட்டிலும் தனியார் கம்பெனிகளின் சேவை மேம்பட்டதாக உள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். பிரிமிய வருமானத்திலும்  கேட்புரிம பட்டுவாடாவிலும்   இன்றும் கூட முதல் ஐந்து இடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள்தான் உள்ளது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. 2020 மற்றும் 2021 ல் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது மட்டும்தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீது பதியப்பட்ட புகார்கள் 82 % என்றால் பொதுத்துறை நிறுவனங்கள் மீது பதிவு செய்யப்பட்டவை 18 % மட்டுமே.

 

5000 க்கும் குறைவான மக்கட்தொகை கொண்ட ஆறாம் தட்டு உட்பட நான்காம் தட்டு, ஐந்தாம் தட்டு நகரங்களில் கிளைகளைத் துவக்கி மிகப் பெரிய சேவையை செய்வது பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களே.  இவை அரசின் வழிகாட்டுதல் படி துவக்கப்பட்டவை. சுமார் 40 % கிளைகள் மூன்றாம் தட்டு, நான்காம் தட்டு,  ஐந்தாம் தட்டு, ஆறாம் தட்டு, நகரங்களில்தான் செயல்படுகின்றன. அதே நேரம் தனியார் கம்பெனிகளோ மெட்ரோ நகரங்களில் மட்டுமே செயல்படுகின்றன. ஐந்தாம், ஆறாம் தட்டு நகரங்களில் அவர்களுக்கு ஒரு கிளை கூட கிடையாது. மூன்றாம் தட்டு, நான்காம் தட்டு நகரங்களில் உள்ளவை கூட வெறும் 3 % மே.

 

ஜிப்னா சட்டத்தை திருத்துவதன் மூலம் பொருளாதாரம் வேகமாக வளரும் என்று சொல்வது முற்றிலும் அபத்தமானது. இன்று நான்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். அவை மொத்தமாக செய்துள்ள முதலீடு 1,78,000 கோடி ரூபாய். அரசின் சமூக நல நடவடிக்கைகளை பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்துகின்றன. விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கு 12 ரூபாய் பிரிமியத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் காப்பீடு தரும் “பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோசனா” திட்டத்தை பொதுத்துறை மட்டுமே செயல்படுத்தி வருகிறது. குறைந்த பிரிமியம் என்பதால் தனியார் கம்பெனிகள் இதனை கண்டு கொள்ளவே இல்லை. பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சந்திக்கும் நஷ்டத்திற்கு இத்திட்டம்தான் முக்கியக் காரணம்.

 

ஒவ்வொரு நூறு ரூபாய் பிரிமியத்திற்கும் ரூபாய் 265 இழப்பீடு தருகின்ற “ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய யோசனா” திட்டத்தை நடத்தி வருவதும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களே. இதுவும் நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒரு வணிகத் திட்டம்.

 

பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்குவது இந்தியப் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை உருவாக்கும். அது மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 37 முதல் 51 வரையுள்ள அடிப்படை வழிகாட்டும் கொள்கைகள் படி அரசு செய்ய வேண்டிய சமூகக் கடமைகளுக்கும் சிக்கலை உண்டாக்கும். 51 % க்கும் குறைவான அளவில் பங்குகள் கையிருப்பு நீர்த்து போனால் இந்னிறுவனங்கள் “அரசு’ என்ற தன்மையை இழக்கும்.பணி நியமனத்திலும் பதவி உயர்விலும் தனியார் கம்பெனிகள் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டிய அவசியல் இல்லை என்பதால் சமூக நீதியும் பொருளாதார நீதியும் பெருமளவு பாதிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி/ஓபிசி மற்றும் சமூகத்தின் இதர நலிவடைந்த பிரிவினர் பாதிக்கப்படுவார்கள்.

 

தங்களின் கார்ப்பரேட் எஜமானர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நவீன தாராளமயக் கொள்கைகளை வரிந்தெடுத்துள்ள அரசுக்கு துரதிர்ஷ்டவசமாக இவையெல்லாம் முக்கியமான பிரச்சினைகளாக ஏனோ தெரியவில்லை. பெருந்தொற்றின் மூலம் உருவாகியுள்ள சிக்கலை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு சொல்கிறது. இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக உருவகப்படுத்தப் பட்ட பொதுத்துறை நிறுவனங்களை சிதைப்பதற்கான சந்தர்ப்பமாகத்தான் அரசு கருதுகிறது. உள்நாட்டு, வெளி நாட்டு தனியார் மூலதனத்தின் விருப்பங்களுக்கு ஏற்ப இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு “ஆத்ம நிர் பாரத்”  (சுயசார்பு இந்தியா” என்று பெயரிட்டுள்ளது மிகவும் குரூரமானது. இவற்றை கண்டிப்பாக நாம் எதிர்க்க வேண்டும்.

 

பொது இன்சூரன்ஸ் நிலைக்குழுவின் வழிகாட்டுதல்படி நம் அமைப்புக்கள் விரிவான பிரச்சார இயக்கத்தை துவக்கியுள்ளது. பொது இன்சூரன்ஸ் துறையில் உள்ள தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு 02.08.2021 அன்று கூடி சக்தி மிகுந்த எதிர்ப்பியக்கத்தை நடத்துவது என்று முடிவெடுத்து 04.08.2021 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள அறைகூவல் விடுத்துள்ளது. ஆயுள் இன்சூரன்ஸ் துறை தோழர்கள் அன்று மதியம் அனைத்து மையங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுமென்றும் பொது இன்சூரன்ஸ் தோழர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

வாழ்த்துக்களுடன்,

தோழமையுள்ள

ஒப்பம் .. ஸ்ரீகாந்த் மிஸ்ரா

பொதுச்செயலாளர்.

 

No comments:

Post a Comment