Friday, August 13, 2021

*எதிர்க் கட்சிகள் செய்தது சரியா?*


 

*நாளொரு கேள்வி: 12.08.2021*

 

வரிசை எண் : *438*

 

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *. சுவாமிநாதன்*

#########################

 

*எதிர்க் கட்சிகள் செய்தது சரியா?*

 

கேள்வி: பொது இன்சூரன்ஸ் தேசிய மய சட்டத் திருத்தம் நிறைவேறும் போது எதிர்க் கட்சிகள் ஏன் வாக்கெடுப்பை நடத்தக் கோரவில்லை? திருத்தங்கள் முன் மொழியவில்லை? உண்மையான எதிர்ப்பை காண்பிக்கவில்லை என்று சிலர் சொல்வது சரியா

 

*.சுவாமிநாதன்*

 

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க் கட்சிகளின் *கடும் எதிர்ப்பு* வெளிப்பட்டுள்ளது. அவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவது ஆளும் கட்சியை *தப்பிக்க விடுவதாகும்.* எல்லோரும் மோசம் என்ற கருத்தை உருவாக்க முயற்சிப்பது பிரதான குற்றவாளியை விட்டு விட்டு *மற்றவர்களை கூண்டில் ஏற்றி* விசாரிப்பதற்கு சமம்.  

 

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் *ஒரு அம்சத்தில் உடன்பட்டன.* அதாவது சட்ட வரைவை நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவது என்ற நிலைபாட்டில்... பா.. விற்கு எப்போதும் உதவுகிற இரண்டு கட்சிகள் - பிஜு ஜனதா தளம், ஓய் . எஸ். ஆர் காங்கிரஸ் கூட இந்த நிலைக்கு வந்தன. பொதுவாக ஜனநாயக விரோதம், விவசாயிகள் போராட்டத்தை அணுகுவதில் காட்டுகிற ஆணவம், பெகாசஸ் உளவு மூலம் எதிர்க் கருத்து உள்ளவர்களை அச்சுறுத்தல் ஆகிய பிரச்னைகளால் அரசாங்கம் மக்களிடம் தனிமைப்பட்டிருப்பதன் வெளிப்பாடே இந்த எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை. பொது இன்சூரன்ஸ் அதிகாரிகள், ஊழியர்களின் *ஒன்றுபட்ட குரல் எழுந்ததும்* - எதிர்க் கட்சிகள் மத்தியில் *ஏதோ ஒரு புள்ளியில் இணைய வேண்டிய அரசியல் தேவை* இருந்ததும் ஒன்றுக்கொன்று கச்சிதமாக பொருந்தி விட்டன. இது போராட்டத்தின் இயக்கவியல்

 

பா.. இத்தகைய எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் தனியார் மய சட்ட வரைவை நிறைவேற்றியே தீருவேன் என மூர்க்கத்தனமாக செயல்பட்டு இருக்கிறது. நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற *குறைந்த பட்ச கோரிக்கையை கூட* ஏற்கத் தயாராக இல்லை. இதுவே அம்பலப்படுத்தப்பட வேண்டிய முக்கியமான அம்சம்

 

மாநிலங்களவையின் கட்சிக் கணக்குகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 245 பேர் கொண்ட அவையில் 13 காலி இடங்கள். அப்படியெனில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 232. இதில் பெரும்பான்மை எனில் 117 பேர் ஆதரவு இருந்தால் போதும். *பகிரங்கமாக அரசுக்கு இருந்த ஆதரவு எவ்வளவு?* பா. . 94, அதிமுக 6,  ஐக்கிய ஜனதா தளம்  5, நியமன உறுப்பினர்கள் 3, தமிழ் மாநில காங்கிரஸ் 1, பா. . 1 மொத்தம் 110. இன்னும் 7 ஒட்டுக்கள்தான் தேவை. *சில கட்சிகள் தீர்க்கமாக முடிவை அறிவிக்கவில்லை.* உம்:- பகுஜன் சமாஜ் (3), அசாம் கணசங் பரிஷத் (1) டி.ஆர்.எஸ் (7). இவை மொத்தம் 11. இன்னும் சுயேச்சைகள், வட கிழக்கு மாநில கட்சிகள்  உள்ளன. இவர்களெல்லாம் அந்த பக்கம் சாய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது

 

*பிஜு ஜனதா தளம் (9), ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (5)* ஆகியன இரண்டும் மசோதாவை தெரிவுக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென்று சொன்னது திருப்பு முனைதான். ஆனால் அவை சொன்ன காரணம், ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாகும் என்று பட்ஜெட்டில் சொல்லி விட்டு இப்போது ஐந்து நிறுவனங்களையும் தனியார் மயமாக்க சட்டத்தில் வழி செய்திருப்பதை ஏற்க முடியாது என்பதுதான். *இந்த நிலை, மசோதாவை தள்ளிப் போட உதவலாம்.* ஆனால் ஒரு நிறுவனம் தனியார் மயமானால் பரவாயில்லை என்ற நிலையை இடதுசாரிகள், எதிர்க் கட்சிகள் எடுக்க முடியுமா

 

ஆகவே ஒருமித்த கருத்துடனான திருத்தங்களுக்கு வாய்ப்பு குறைவாக இருந்தது. பிஜு ஜனதா தளம், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகியன திருத்தங்கள் முன் மொழிந்தால் ஒரு நிறுவனம் மட்டும் தனியார் மயமாகலாம். என்றுதான் சொல்வார்கள். அதை ஏற்க இயலுமா? ஆகவே *தெரிவுக் குழுவுக்கு அனுப்பு என்ற ஒற்றைக் கோரிக்கைதான்* எதிர்க் கட்சிகளின் ஒன்றுபட்ட நிலைக்கு உதவக் கூடியதாய் இருந்தது. அக் கோரிக்கைதான் நிறைய கட்சிகளை ஈர்த்து நிறுத்தும் என்பதே

 

கடைசி வரை அவைக்குள் முக்கிய எதிர்க் கட்சிகள். போராடி இருக்கிறார்கள். இடதுசாரிகள், தி. மு. , காங்கிரஸ், திரிணாமுல் ஆகிய கட்சிகள் வலுவாக இதை எதிர்த்துள்ளார்கள். *,"எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கூட நிதியமைச்சர் பதில் அளிக்காமல்"* அவசர அவசரமாக மசோதாவை குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றி இருக்கிறார் என்பதை *பைனான்சியல்எக்ஸ்பிரஸ்* செய்தி தெரிவிக்கிறது

 

இந்த எதிர்ப்பு ஆளும் கட்சியின் கார்ப்பரேட் ஆதரவை, ஜனநாயக மறுப்பை அம்பலப்படுத்தி உள்ளது. அதற்கு பொது இன்சூரன்ஸ் ஊழியர்களின் போராட்டம் காரணமாக அமைந்துள்ளது

 

இந்த பரவலான எதிர்ப்பு மக்கள் மன்றத்திற்கு இந்த பிரச்னையை எடுத்துச் செல்ல பெரும் அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறது. நியாயத்திற்கான போராட்டத்தில் சோர்வுக்கு இடமில்லை. *60000 அதிகாரிகள் ஊழியர்கள் குரல் இவ்வளவு வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலித்திருக்கிறது* என்றால் சோர்வு எதற்கு வர வேண்டும்

 

*"ஓரடி பின் வாங்குவதால் தீமையை கடந்து விட முடியாது"* என்பது விவேகானந்தரின் வார்த்தைகள். அதை ஒரு அங்குலம் கூட பின் வாங்காமல் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் நடத்திக் காட்டி இருக்கிறார்கள்.

 

இவ்வளவு எதிர்ப்பை அரசு எதிர் பார்த்திருக்காது. ஆனால் நடந்திருக்கிறது. எதிர் காலத்திலும் அரசு எதிர் பார்க்காத எதிர்ப்பை ஒவ்வொரு கட்டத்திலும் அது எதிர் கொள்ள வேண்டியிருக்கும்

 

*செவ்வானம்*

 


No comments:

Post a Comment