Thursday, August 5, 2021

தேஷ் பக்தாஸ் கண்டித்தனரா?

 பாராட்டுக்கு உரியவரும் பாதகம் செய்தோரும்.

 


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. மல்யுத்தத்தில் இன்று ரவிகுமார் தாஹியா  வெள்ளி வென்றுள்ளார். வாழ்த்துக்கள். நிச்சயம். நாளை மகளிர் ஹாக்கி அணி வெண்கலம் வெல்வார்கள் என்று நம்புகிறேன்.

 


இந்த ஒலிம்பிக் போட்டியைப் பொறுத்தவரை இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான அம்சம் ஹாக்கி அணிகளின் மறுமலர்ச்சிதான்.

 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடவர் அணி பதக்கம் வென்றுள்ளது. மகளிர் அணி முதல் முறையாக அரையிறுதியில் விளையாடியது. இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தாலும் நாளை வெண்கலம் வெல்லும் வாய்ப்பு  பிரகாசமாகவே உள்ளது,

 எப்படி வந்தது இந்த மாற்றம்? முன்னேற்றம்?

 அனைத்துப் புகழும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்னாயக்கையே சாரும்.

 இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்ஸர் செய்ய எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் முன் வராத போது, கிரிக்கெட்டிற்கு கொட்டிக் கொடுப்பவர்கள் ஹாக்கிக்கு கிள்ளிக் கொடுக்கக் கூட தயாராக இல்லாத போது ஹாக்கியை அரவணைத்துக் கொண்டவர் நவீன் பட்னாயக்.

 இந்திய அணிகளின் ஸ்பான்ஸ்ராக பொறுப்பேற்று பயிற்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வீரர்களை ஊக்கப்படுத்துவதோடு மட்டும் அவர் பணி நிற்கவில்லை. நவீன ஹாக்கி ஸ்டேடியம் ஒன்றையும்ஒடிஷா மாநில அரசு கட்டி வீரர்களை தயார்ப்படுத்தியது.

 இது மிக மிக முக்கியமானது.

 புல்தரையில் விளையாடப்பட்ட ஹாக்கி அஸ்ட்ரோடர்ஃப் என்று அழைக்கப்படும்  செயற்கை தளத்திற்கு மாறியதிலிருந்துதான் இந்திய அணியின் வீழ்ச்சி தொடங்கியிருந்தது. அதை மாற்ற அவர் எடுத்த இந்த முக்கியமான நடவடிக்கை இப்பொது பலனளித்துள்ளது.

 இந்தியாவின் தேசிய விளையாட்டிற்கு மீண்டும் வேகம் கிடைக்க காரணமான ஒடிஷா மாநிலத்தின் தலைமைச்செயலாளரும் முதலமைச்சரின் ஆலோசகர்களும் தமிழர்கள் என்பதால்  நமக்கும் பெருமை.

 இந்திய மகளிர் அணி நேற்று அரையிறுதியில் தோற்றுப் போனதற்காக ம் உண்மையான விளையாட்டுப் பிரியர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிற அதே நேரத்தில் இந்திய மகளிர் அணியின் தோல்வியை கொண்டாடியவர்களும் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 மகளிர் ஹாக்கி அணியின் மிக முக்கியமான வீரர் வந்தனா கத்தாரியா. உத்தர்காண்ட் மாநிலம்  ஹரித்வாருக்கு பக்கத்தில் உள்ள ரோஷனாபாத் என்ற கிராமத்தில் உள்ள அவர் வீட்டு முன்பாக இரண்டு அயோக்கியர்கள் பட்டாசு வெடித்து இந்திய அணியின் தோல்வியை கொண்டாடியுள்ளார்கள். (தந்தையின் மரணத்திற்குக் கூட வராமல் பயிற்சிக்கு முன்னுரிமை கொடுத்தவர் வந்தனா)

 


சத்தம் கேட்டு வெளியே வந்த வந்தனாவின் குடும்பத்தினரை ஜாதிய ரீதியில்  திட்டி “அதிகமான தலித்கள் இடம் பெற்றதால்தான் இந்தியா தோற்றுப் போனது. ஹாக்கி மட்டுமல்லாமல் எந்த விளையாட்டிலும் தலித்களுக்கு வாய்ப்பு தரக்கூடாது”  என்று சத்தம் போட்டு விட்டு ஆடைகளை அவிழ்த்து நடனம் ஆடியு:ள்ளனர்.

 இந்த அயோக்கியர்கள் மீது இதுவரை உத்தர்கண்ட் போலீஸ்  வழக்கு பதியவில்லை. மறக்க வேண்டாம், உத்தர்கண்டில் ஆட்சி செய்வது பாஜக.

 எந்த ஒரு சங்கியும் இந்த இழி செயலை, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீரரை அவமானப்படுத்தியதை, இந்தியாவின் தோல்வியை கொண்டாடியதை கண்டிக்கவில்லை.

 அவர்கள் கள்ள மவுனம்தான் சாதிப்பார்கள்.

ஏனென்றால் அவர்களின் தேச பக்தி  போலியானது.

நாட்டை விட ஜாதி மேலாதிக்கம்தான் அவர்களுக்கு முக்கியமானது.

 பிகு: மேலே உள்ள படத்தை பகிர்ந்து கொண்ட இளம் எழுத்தாளர் தோழர் கரீம், இந்த புகைப்படத்தில் நவீன் பட்னாயக்கிற்கு பதிலாக தாடிக்கார மோடியின் படத்தை போட்டோஷாப் செய்து வெளியிடுவார்கள் என்று எச்சரித்துள்ளார். அதனால் கவனமாக இருங்கள். அப்படி ஏதாவது படம் வந்தால் அது கண்டிப்பாக போட்டோஷாப் மோசடிதான்.

 

No comments:

Post a Comment