Wednesday, August 18, 2021

இந்தியர் தவிப்பிற்கு மோடியே காரணம் . . .


 ஆப்கானில் இந்தியர்கள் தவிப்பிற்கு

😳😳😳😳😳😳😳😳😳😳😳😳
மோடி அரசே காரணம்
😡😡😡😡😡😡😡
—- சீத்தாராம்யெச்சூரி
ஆப்கான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் அவர்கள் நாட்டு பிரஜைகளை திரும்ப அழைத்து சென்றுள்ளனர். ஆனால் ஒன்றிய அரசின் முறையான திட்டமிடல் இல்லாததும், ஆப்கானில் எத்தனை இந்தியர்கள் உள்ளனர் என்கிற விபரமே ஒன்றிய அரசிடம் இல்லாததும் அங்குள்ள இந்தியர்கள் தவிப்பிற்கு காரணமாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் கோவையில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
காந்திபுரத்தில் தனியார் அரங்கத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் தலைமையில் செவ்வாயன்று துவங்கிய மாநிலக்குழு கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத் உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசின் கையாலாகாத தன்மையால் இந்த பணிகள் தொய்வடைந்துள்ளது.
டிசம்பர் 31க்குள் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்துவதே இலக்கு என ஒன்றிய அரசு தெரிவித்தது. அது தற்போது சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது.
இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால் அப்படி ஏதும் இப்போது நடக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை தடுப்பூசி தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். தமிழகத்தின் முதல்வர்கூட செங்கல்பட்டு, குன்னூர் நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கேட்டார். இந்த கோரிக்கையை ஒன்றிய அரசு செவிமடுக்கவில்லை.
மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளையும் அனுமதிக்கவில்லை. தடுப்பு மருந்து இருப்பு குறித்து தெளிவான தகவலை ஒன்றிய அரசு தெரிவிப்பதில்லை.
இது மூன்றாவது அலையை மோடி அரசு வரவேற்பது போல் இருக்கிறது.
கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார தேக்கம், வேலையின்மை அதிகரித்துள்ளது. சிறுகுறு தொழில் அதிகம் உள்ள கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து எந்த புள்ளி விபரங்களும் இந்த அரசிடம் இல்லை. நோ டேட்டா கவர்மென்ட்டாக மோடியின் ஒன்றிய அரசு உள்ளது.
அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து இந்த அரசிற்கு எந்த கவலையும் கிடையாது.
பெட்ரோலிய பொருட்களுக்கு கலால் வரியை ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆயுள் பத்திரத்தின் கடனை அடைப்பதற்காகவே கலால் வரியை உயர்த்தி வருவதாக தெரிவித்திருக்கிறார்.
அந்த அரசின் மொத்த எண்ணை கடன் தொகை 1.56 லட்சம் கோடி மட்டுமே. ஆனால் 2020 மற்றும் 2021ல் இந்த ஒன்றிய அரசு கலால் வரியின் மூலம் 3.71 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர்.
கடந்த 7 வருடத்தில் 15.6 லட்சம் கோடி ரூபாய் கலால் வரியின் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. இதுபோதாதென்று மீண்டும் மீண்டும் ஏற்றி வருகிறார்கள். பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் மீது போடப்பட்ட வரியை குறைப்பதன் மூலமாகவே அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க முடியும். இதேபோன்று வருமான வரி கட்டாத குடும்பத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ7500 வழங்க வேண்டும்.
உணவு கிடங்குகளில் தேங்கிக்கிடக்கும் உணவு தானியங்களை உடனடியாக ஏழைஎளிய மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பெகாசஸ் ஒட்டு கேட்பு
பெகாசஸ் ஒட்டுகேட்டு விவகாரம் தனிநபர் உரிமையை பறிக்கும் செயல் மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தையே பட்டவர்த்தனமாக சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
2019 மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகள், நீதிபதிகள், முன்னாள் தேர்தல் ஆணையர், சிபிஐ இயக்குநர், ஊடகவியலாளர்கள் வேவு பார்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றுதான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தோம். ஆனால் இந்த அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில்தான் நாடாளுமன்றத்தில்18 மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் எந்த விவாதமும் இன்றி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மையை பயன்படுத்தி சர்வாதிகாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக இது ஜனநாயகம் கிடையாது.
ஆனால் இதுகுறித்தெல்லாம் ஒன்றிய மோடி அரசிற்கு கவலை இல்லை. இவர்களின் அஜண்டா நடைபெற உள்ள உத்திர பிரதேச தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது. இந்துத்துவ வாக்கு வங்கியை எப்படி பலப்படுத்துவது என்பது மட்டுமே.
இவர்களுடைய அனைத்து பிரச்சாரமும் உண்மைக்கு புறம்பாக வெறும் பொய்யாகவே இருக்கிறது. மக்களின் உணர்வுகளை தூண்டித்தான் ஆதாயம் அடைய நினைக்கிறார்கள்.
அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் இவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசம் வெறும் 0.78 சதவீதம்தான்.
இவர்களின் இந்துத்துவ பிரச்சாரத்தை இந்திய மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதை நடைபெற்ற பல மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டத்தை தீவிரப்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதன்தொடர்ச்சியாக வருகிற 20 ஆம்தேதி இருபதுக்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் பங்கேற்கும் இணையவழி கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் உள்ள நிலையில் இந்த போராட்டங்கள் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு நடத்துவது குறித்து பொறுப்புணர்ச்சியோடு ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்.
அதேநேரத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களை கொண்டு பாஜக நாடு முழுவதும் 126 இடங்களில் யாத்திரை நடத்துகிறது.
22 மாநிலங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
கொரோனா பரவல் மூன்றாம் அலை அச்சுறுத்துகிற நிலையில் பொறுப்புணர்வோடு நடக்க வேண்டிய ஒன்றிய அரசு தான் வகுத்த விதிமுறைகளையே மீறி இதுபோன்ற யாத்திரைகளை நடத்துவது அதிர்ச்சியை அளிக்கிறது. இது (சூப்பர் ஸ்பிரெட்) கொரோனா மெகா பரவலுக்கே வழிவகுக்கும்.
ஆப்கானில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த யெச்சூரி,
ஆப்கான் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியா அதிக உதவி செய்துள்ளது.
தற்போதைய சம்பவத்தை தொடர்ந்து உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனித்துவிடப்பட்டுள்ளது.
உலகம் கேட்பது அமெரிக்க ஏன் அவசரமாக ஆப்கானை விட்டு வெளியேறினார்கள் என்பதாக இருக்கிறது. ஆனால் அமெரிக்கா ஏன் ஆப்கானிற்குள் சென்றார்கள் என்பதுதான்.
தற்போது ஆப்கானில் இந்தியர்களை கொண்டுவருவதில் பெரும் தொய்வு ஏறபட்டுள்ளது. ஆப்கானில் என்ன நடைபெறுகிறது என்பதை இரண்டு வாரத்திற்கு முன்னரே உலக நாடுகள் கணித்துவிட்டது.
அப்போதே அந்த நாடுகள் தங்களின் பிரஜைகளை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டது. ஆனால் ஆப்கானில் எத்தனை இந்தியர்கள் உள்ளனர் என்கிற விபரங்களே இல்லாமல் ஒன்றிய அரசு இருப்பது கவலையளிக்கிறது.
ஆப்கான் காபூலில் இருந்து இந்தியர்களை காக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது. சரியான திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம். உடனடியாக ஆப்கானில் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கு ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை பயங்கரவாத நாள் என்று பாஜக அறிவித்துள்ளது. தேசப்பிரிவினையின் போது லட்சக்கணக்கான மக்கள் அங்கும் இங்கும் புலம்பெயர்ந்தனர். கணக்கில் அடங்காத மரணங்கள் இந்த சம்பவத்தால் ஏற்பட்டது.
இந்த பிரிவினை கோரிக்கையை முன்வைத்ததே இந்து மகா சபாதான்.
இந்து மகாசபையின் 1938ல் நடைபெற்ற மாநாட்டில் இந்த முன்மொழிவை கொடுத்தது சாவர்க்கர். இந்துக்களை முதன்மைப்படுத்தி இந்துஸ்தான் என்றும், இஸ்லாமியர்களை முதன்மைப்படுத்தி இஸ்லாமிய நாடு என கோரிக்கை வைத்தார். இதனை 1939ல் தொடர்ந்து வலியுறுத்தினார்.
இதனையடுத்தே முகம்மது அலி ஜின்னா 1940ல் பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். இந்தியா மதச்சார்பற்ற கொள்கையின்பால் உறுதியோடு நின்றது. இந்திய அரசியல் சாசனம் மதச்சார்பின்மையையே பேசுகிறது. இந்த மதச்சார்பற்ற கொள்கையை மேலும் உயர்த்திப்பிடிப்பதே இப்போது நமது முன் உள்ள சவால்கள் என்றார்.
ஜி.ராமகிருஷ்ணன்
முன்னதாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், கோவையில் நடைபெறும் இரண்டு நாட்கள் மாநிலக்குழு கூட்டத்தில் மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து செப்டம்பர் மாதம் நடைபெறும் போராட்டங்களை வெற்றிகரமாக்குவது குறித்தும், 2022 கேரள மாநிலம் கண்ணனூரில் நடைபெறும் அகில இந்திய மாநாடு, அதற்கு முன் நடைபெற வேண்டிய கிளை மாநாடுகள், இடைக்குழு, மாவட்ட, மாநில மாநாடுகள் நடைபெறுவது குறித்து இந்த மாநிலக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது , மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.
# தீக்கதிர்

No comments:

Post a Comment