காஷ்மீர்
பிரச்சினை குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய நூல் குறித்து இரண்டு வருடங்களுக்கு
முன்பே எழுதியிருந்தேன். அப்போது படிக்கத் தவறியிருந்தால் இப்போதாவதாவது படியுங்கள்.
புத்தகத்தைப்
பற்றி எழுதியதை மட்டுமல்ல, புத்தகத்தையும் கூட. இன்றைய தேதியில் மிகவும் அவசியமாக படிக்க
வேண்டிய ஒன்று
நூல் அறிமுகம்
நூல் : காஷ்மீர் பிரச்சினையும்
அரசியல் தீர்வுகளும்
ஆசிரியர் பேராசிரியர் அ.மார்க்ஸ்
வெளியீடு பாரதி புத்தகாலயம்’,
சென்னை - 600018
விலை ரூபாய் 20.00
நாற்பது வருடங்களுக்கு முந்தைய ஒரு திரைப்படப் பாடலில் “காஷ்மீர்,
பியூட்டிபுல் காஷ்மீர், வொண்டர்புல் காஷ்மீர்” என்று பாடப்பட்டது போல அழகை
ரசிக்கும் சூழலில் காஷ்மீர் இன்று இல்லை என்பதை இந்த நூலின் அட்டையே உணர்த்தி
விடுகிறது. பியூட்டிபுல் காஷ்மீரை பெல்லட்
காஷ்மீராக்கிய பெருமை மோடி அரசையே சாரும்.
முப்பத்தி
இரண்டு பக்கங்களில் காஷ்மீர் பிரச்சினையை தெளிவாக நமக்கு சொல்கிற நூல் இது.
காஷ்மீரின்
வரலாறு. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது அன்றைய காஷ்மீர் அரசு எடுத்த நிலை,
இந்தியாவின் தலையீட்டை கோரிய சூழல், அப்போது இந்தியா அளித்த வாக்குறுதிகள்,
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அன்றைய நேரு அரசு தொடங்கி தொடர்ச்சியாக வந்த
பிரதமர்கள் இழைத்த துரோகங்கள், பிரச்சினைகளை வளர்த்தெடுக்க பாகிஸ்தான் மேற்கொண்ட
முயற்சிகள் என்று எல்லா நிகழ்வுகளும் உள்ளது உள்ளபடி சொல்லப்பட்டுள்ளது. அதனை
படித்தால்தான் காஷ்மீரின் இன்றைய நிலையை புரிந்து கொள்ள முடியும்.
காஷ்மீரின்
தீவிரவாதத்தின் தோற்றுவாய் தொடங்கி இன்றைய நிலைமை வரை விவரிக்கிற பேராசியர்
மார்க்ஸ், தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான கொள்கைகள் கொண்டதல்ல
என்பதையும் அவற்றின் தலைவர்களின் அணுகுமுறை மாறுபட்டது என்பதையும் பதிவு
செய்கிறார்.
எப்போதெல்லாம் ராணுவம் அத்துமீறியதோ அப்போதெல்லாம் அங்கே
பிரச்சினை வெடிக்கிறது என்பதை கூறும் நூலாசிரியர், தற்போதைய காஷ்மீர் மக்களின் கொந்தளிப்பிற்கு காரணமான புர்கான்
வானி கொல்லப்பட்டதில் ராணுவம் சொன்ன பொய்களை அம்பலப்படுத்தி இளைஞர்கள்
தீவிரவாதத்தை நோக்கி உந்தப்படுவதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார்.
காஷ்மீர்
பிரச்சினைக்கான தீர்வு உடனடி சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை சொல்கிற பேராரியர்
மார்க்ஸ் தீர்வுக்கான சூழல் உருவாக வேண்டுமென்றால் உடனடியாக மேற்கொள்ள
வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதையும் பட்டியலிடுகிறார்.
அந்த
பரிந்துரைகள் கீழே உள்ளது
370 ம் பிரிவு முழுமையாக
செயல்பட வேண்டும். பழைய திருத்தங்கள் நீக்கப்பட வேண்ரும்.
ஆயுதப்படைகள் சிறப்புச்சட்டம்
நீக்கப்பட வேண்டும்.
மனித உரிமை மீறல்கள்
தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சிறப்பு நீதிமன்றத்தால்
விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
பண்டிட்டுகள் உரிய
பாதுகாப்புடன் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும்.
ஆனால்
இதைச் செய்யும் அரசியல் உறுதி ஆட்சியாளர்களுக்கு உள்ளதா என்பதுதான் மில்லியன்
டாலர் கேள்வி.
இக்கேள்விக்கான பதிலில்தான் பெல்லட் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீராக மாறுமா என்பது அடங்கியுள்ளது ஏனென்றால் காஷ்மீரின் அழகு ஏரிகளிலோ, இமயமலைச் சரிவுகளிலோ,
மணம் வீசும் மலர்களிலோ இல்லை. மக்களின் அமைதியில்தான் உள்ளது.
No comments:
Post a Comment